Sunday, November 18, 2012


பொடிமாஸ் - 11/18/2012

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாருக்கும் ஜாதியத்தை எதிர்க்கும் வக்கு கிடையாது என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. பிராமணாள் ஹோட்டலையும், ஸ்ப்ளென்டர் ஐயரையும், பாரதி ராஜா பிராமணர்களும் தமிழர்கள் தான் என்று கூறியதையும் எதிர்க்கும் வீரியம் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு தேவர் குரு பூஜை சம்பவத்தையும், தர்மபுரி சம்பவத்தையும் எதிர்க்க வீரியம் கிடையாது. பிராமணர்களை எதிர்த்து பக்கம் பக்கமாக பதிவுகளை எழுதுபவர்கள் இதை கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. பிராமணர்களை பார்த்தாலே அவர்கள் யார் என்று தெரிந்துவிடும் என்பதால் அவர்களில் ஜாதியம் போற்றுபவர்களை கூட ஒரு வகையில் எளிதாக எதிர்கொண்டு விடலாம், ஆனால் ஜாதியம் போற்றும் இடைநிலை ஜாதி வெறியர்கள் தான் உண்மையில் ஆபத்தானவர்கள் என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தபுரத்தில் பிள்ளை சமூகத்தினர் தலித்துகள் மீது வன்கொடுமை செய்த போதும் இப்படித்தான் திராவிட கட்சிகள் கள்ள மௌனம் காத்தனர். பதிவுலக போராளிகளும் அப்படியே. அப்பொழுதும் அதை கண்டித்தது கம்யூனிஸ்ட்களே.

வலையுலக போராளிகளின் பச்சோந்தித் தனத்தை தோலுரித்த இச்சம்பவங்களுக்கு நன்றி.


கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக ட்விட்டினாலே பாய்ந்து வந்து கைது செய்து கடமையாற்றும் காவல் துறை, தனது அராஜக பேச்சால் பலரை தூண்டி, வன்முறை ஏற்படுத்தி, பல தலித்துகளின் வீடுகளை பொசுக்கி, அவர்களது உடைமைகளை திருட காரணமாக இருந்த காடுவெட்டி குரு போன்ற அரசியல் ரவுடிகள் அருகில் கூட செல்ல முடியாத நிலை கேவலமாக இருக்கிறது. ஜாதி வெறிபிடித்த காடுவெட்டிகள் காடுகளில் வாழும் மிருகங்களை விட கொடியவர்கள். இவர்களை போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பது நமது துரதிருஷ்டம். திருமா போன்ற தலைவர்கள் கூட அரசியல் காரணங்களுக்காக இந்த வெறியாட்டங்களுக்கு பாமக மற்றும் வன்னிய சங்கம் காரணம் இல்லை என்று கூறுவது வருத்தமான விஷயம். நல்லவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சி.


பால் தாக்ரே இந்த வாரம் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவருக்கு எனது அஞ்சலிகள். மற்றபடி அவரை தேசியவாதியாக சித்தரிப்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. He is anything but a nationalist. அவர் தென்மாநில மற்றும் வடமாநில மக்கள் மீது வெறுப்புகளையே அதிகம் மஹாராஷ்ட்டிர மாநில மக்கள் மனதில் விதைத்துள்ளார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இம்மாதிரி அரசியல்கள் ஆபத்தானது. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு போன்ற பிரச்சனைகள் உருவாக இம்மாதிரி அரசியல்வாதிகளே காரணம். இம்மாதிரி தலைவர்கள் எல்லாம் தலை தூக்கும் போதே நாம் நிராகரிக்க வேண்டும்.


ஆனால் அதே நேரத்தில் புதுவை ராம்ஜி என்பவர் எம். எஃப். ஹூஸைன் என்ற சிறந்த ஓவியர் இந்தியாவிலிருந்து விரட்டப்பட்டதற்கு பால் தாக்ரே தான் காரணம் என்று தனது பதிவில் கூறியுள்ளார். உண்மையில் அத்தகைய போராட்டத்தை எம். எஃப். ஹூஸைனுக்கு எதிராக நடத்தியதற்காக சிவ சேனைக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் வாழ தகுதி இல்லாதவர் எம். எஃப். ஹூஸைன் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.

கிழே உள்ளவை எம். எஃப். ஹுஸைன் படைத்த சர்ச்சையை கிளப்பிய சில ஓவியங்களின் தலைப்புகள்.

1. நிர்வாணமாக பார்வதி
2. நிர்வாணமாக துர்கை சிங்கத்துடன் கலவியில் ஈடுபடுவது
3. நிர்வாணமாக சரஸ்வதி
4. நிர்வாணமாக லக்ஷ்மி விநாயகருடன் கலவியில் ஈடுபடுவது
5. நிர்வாணமாக சீதை ராவணனுடன் கலவியில் ஈடுபடுவது

இதையெல்லாம் மேலோட்டமாக கலையுரிமை என்று எடுத்துக் கொள்ள முடியாது. நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினரை அனுசரித்து செல்வது எப்படி பெரும்பான்மையினரின் கடமையோ அப்படித்தான் பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது சிறுபான்மையினரின் கடமை. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா விதித்ததை சரி என்று கூறியவர்கள் எல்லாம் எம். எஃப். ஹுஸைனுக்கு ஜால்ரா தட்டுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவும் ஒரு வகை பச்சோந்தித் தனமே.


துப்பாக்கி படம் நேற்று தான் பார்க்க முடிந்தது. இங்கே ஒரு தியேட்டரில் தான் இந்திய படங்கள் திரையிடுவார்கள். ஜப் தக் ஹைன் ஜான், மற்றும் சன் ஆஃப் சர்தார் இரண்டும் வெளிவந்த காரணத்தால் துப்பாக்கி வார இறுதியில் மட்டுமே திரையிட்டார்கள். அதனால் ஒரு வார காலம் எந்த விமர்சனத்தையுமே படிக்க வில்லை. விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் பலரும் படத்தின் முக்கிய காட்சிகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள்.

படம் அட்டகாசமாக இருக்கிறது. கதை, திரைக்கதை, சண்டை காட்சிகள், வசனம், கேமரா, விஜய்யின் நடிப்பு என்று அனைத்தும் அட்டகாசம். விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக நான்கு படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். படத்தை பற்றிய மற்றொரு முக்கிய செய்தி, நான் பார்த்த காட்சி ஹவுஸ்ஃபுல். அமெரிக்கா வந்ததிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் சிவாஜி, எந்திரன், தசாவதாரம் தவிர்த்து மற்ற படங்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதை நான் பார்த்ததே இல்லை. இது மனதிற்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.துப்பாக்கி நிச்சயம் இளைய தளபதியின் உச்சம்.

என்ன, நல்ல படத்திற்கு திருஷ்டி பொட்டு போல சில சர்ச்சைகள் தொடங்கி விட்டன. ஆனால் எனக்கு இந்த படத்திற்கு வந்த எதிர்ப்புகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. படத்தில் வில்லனின் அடியாட்களை வெளி நாட்டு தீவிரவாதிகள் என்று காட்டி இருந்தால் கூட இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உள் நாட்டு ஸ்லீப்பர் செல்கள் என்று காட்டியதால் தான் இவ்வளவு எதிர்ப்பு. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். பார்ப்போம் இனியாவது திரையுலகினரிடம் மாற்றம் வருகிறதா என்று.


இந்த தேங்க்ஸ் கிவிங் வார இறுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் சந்திக்க இருக்கிறோம். நாங்கள் நான்கு பேரும் ஒரே நாள் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். நாங்கள் நால்வருமே இப்பொழுது அந்த நிறுவனத்தில் இல்லை என்றாலும் எங்கள் நட்பு தொடர்கிறது. பத்து ஆண்டுகள் ஆன நிலையில் நாங்கள் மீண்டும் சந்திப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் ஒருவனை பார்த்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த வார இறுதியை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அஹமதாபாத் டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐந்து விக்கெட்டுகளை நாளை லன்சுக்கு முன்பு வீழ்த்தி விட்டால் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். அம்பெயரிங் எர்ரர்ஸ் அதிகம் இருந்தது தெளிவாக தெரிந்தது. DRS ஒப்புக் கொள்ளாதது BCCI யின் பிடிவாதத்தையே காட்டுகிறது. ஆனால் க்யூரேட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு எதுவும் என்னிடம் இல்லை. நாம் இங்கிலாந்து சென்ற பொழுது நல்ல ப்ளாட் ட்ராக்குகளை ப்ராக்டீஸ் மேட்சுக்கு கொடுத்துவிட்டு க்ரீன் டாப் விக்கெட்டுகளை டெஸ்ட் மேட்சுகளுக்கு கொடுத்தனர். அப்பொழுது உலகின் முதல் ரேங்க் டீம் என்றால் எல்லாவித விக்கெட்டுகளிலும் விளையாட வேண்டும் என்று நக்கல் செய்தனர் அந்நாட்டு பத்திரிக்கைகள். என்னை கேட்டால் இன்னும் பிட்சை கொஞ்சம் உழுதுவிட்டு மேட்சை நடத்தலாம். Everything is fair in love and war.


தமிழக அரசியலில் மாற்றம் வருவதற்கான காட்சிகள் தோன்ற தொடங்கி இருக்கின்றன. மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தேவை என்ற பொழுதும் அது திமுகவிற்கு சற்று அதிகமாகவே தேவை எனலாம். தளபதி மிகுந்த எழுச்சியுடன் செயல் படுவதாகவே தெரிகிறது. கலைஞர் செய்திகளில் தொடர்ந்து அவர் நடத்தும், தலைமை தாங்கும் போராட்டங்கள், மாநாடுகள், சந்திப்புகள் போன்றவற்றை பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்ற செய்தி எனக்கு எரிச்சலாக இருக்கிறது. பாமகவை இரண்டு கட்சிகளும் மாறி மாறி கூட்டணி வைத்து வளர்த்துவிட்டது போல தேமுதிகவையும் வளர்த்துவிட முயல்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக, அதிமுகவிற்கு மாற்று திமுக, இரண்டையும் விரும்பாதவர்களுக்கு கூட்டணிகளை பொருத்து காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் என்ற நிலை தான் தமிழகத்திற்கு நல்லது.


நடிகர் கார்த்திக் அவர்களின் பரம ரசிகன் நான். நவரச நாயகன் என்ற பட்டத்திற்கு மிகவும் ஏற்புடையவர் அவர். அவர் நடித்த படங்களில் கோகுலத்தில் சீதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் இருந்து ஒரு காட்சி கீழே பார்த்து மகிழுங்கள். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து ரசித்து நடித்திருப்பார் கார்த்திக். மற்றொரு காட்சியில் சுவலக்ஷ்மி இவரை புகழ்ந்து ஒரு நிமிடத்திற்கு வசனங்கள் பேச அதை கேட்டு இவர் மௌனமாக கண்களால் பரவசப்படுவார் பாருங்கள், அட்டகாசம்.


2 Comments:

அஜீம்பாஷா said...

ரொம்ப அருமையான பதிவு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

SathyaPriyan said...

வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அஜீம் பாய். தொடர்ந்து வாருங்கள்.