Tuesday, December 04, 2012


நார்வே சம்பவம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

சமீபத்தில் நார்வே நாட்டில் இந்திய தம்பதியினர் தங்கள் குழந்தையை அடித்து கொடுமைபடுத்தியதை தொடர்ந்து கைது செய்யப் பட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாகவே இந்திய குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு, மேற்கு நாடுகளின் குழந்தை வளர்ப்பு முறை என்பது வேறு. வேளி நாடு வரும் இந்தியர்கள் முதலில் அந்நாட்டு சட்ட திட்டங்களை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். எப்படி வெளி நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை நம் நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாதோ, அப்படியே நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் பல விஷயங்களை வெளி நாட்டில் நினைத்து கூட பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகள் வெளி நாடுகளில் மிகவும் கொடுமையானதாக கையாளப்படும்.

வெளி நாடுகளில் குழந்தைகள் முதன் முறை பள்ளிக்கு போகும் போது அவர்களுக்கு ஆபத்தான நேரங்களில் போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் ஃபயர் டிபார்ட்மென்ட் ஆகிய துறைகளை எப்படி அழைப்பது என்பது தான் முதன் முதலாக கற்றுக் கொடுக்கப் படுகிறது. குடும்ப வன்முறையை எப்படி தைரியமாக கையாள வேண்டும் என்பதும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படுகிறது. அதனால் வெளி நாட்டில் வளரும் குழந்தைகள் ஆபத்தான நேரத்தில் போலீஸை அழைக்க தயங்குவதில்லை.

அதனால் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் முதலில் செய்ய வேண்டியது "அடியாத மாடு படியாது", "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்" போன்ற கதைக்குதவாத பழமொழிகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டியது தான். அடி என்பது ஒரு விதமான எஸ்கேப்பிஸம் என்பதை நமது பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகளை பொறுமையாக கையாள தெரியாதவர்கள் தான் அவர்களை அடித்து வளர்ப்பார்கள். குழந்தைகளை அடிப்பது என்பது தற்காலிகமாக ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நிரந்தர தீர்வை அளிக்காது.

சரி அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று கேட்கிறீர்களா? எனக்கு தெரிந்த வளர்ப்பு முறையை சொல்கிறேன்.

முதலில் குழந்தைகளின் படுத்தலுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

1. பசி
2. தூக்கம்
3. உடல் உபாதை

வெளியில் எங்கே செல்வதாக இருந்தாலும் முதலில் குழந்தைக்கு நன்றாக உணவளித்து விடுங்கள், அதே போல சரியான நேரத்திற்கு குழந்தையை தூங்க வைத்து விடுங்கள். வெளி உணவு/நீர் இவற்றை எவ்வளவு தூரம் தவிர்க்க இயலுமோ தவிர்த்து விடுங்கள். இது அனைத்தையும் செய்தாலே முதல் மூன்று காரணங்களால் குழந்தைகள் அழுவதை பெருமளவில் தவிர்த்து விடலாம்.

குழந்தைகள் செய்யும் மற்ற பிடிவாதங்களுக்கு நாம் என்ன செய்வது?

குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் இருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் குப்பையை குப்பை தொட்டியில் போட்டால் அவர்களும் போடுவார்கள். நீங்கள் உங்கள் மனைவியை அடித்தால், அவர்களும் அடிப்பார்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படி நடந்து கொள்வதே முதல் வழி.

அடுத்தது, அவர்கள் 24 மணி நேரமும் ஜான்ஸன் & ஜான்ஸன் விளம்பரத்தில் வரும் குழந்தைகள் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீக்குங்கள். நம்மை போலவே அவர்கள் பல நேரங்களில் சமத்து குழந்தையாகவும், சில நேரங்களில் மந்திகளாகவும் நடந்து கொள்வார்கள். அது இயல்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களின் பிடிவாதத்திற்கு இடம் அளிக்காதீர்கள். உதாரணத்திற்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட பொம்மை வேண்டும் என்று கடையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். அசையாமல் நின்று அவர்களின் கண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். சில நிமிடங்களில் அவர்களே அழுகையை விட்டு விட்டு நார்மல் ஆகி விடுவார்கள். ஒரு முறை அவர்களின் அழுகைக்கு பயந்து வாங்கிக் கொடுத்தால் அதுவே அவர்களுக்கு அழுதால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற செய்தி அளித்து விடும்.

அடுத்தது கன்ஸிஸ்டன்ஸி. உங்கள் குழந்தைக்கு 50 ரூபாய் பொம்மைக்கும், பத்தாயிரம் ரூபாய் க்ரிஸ்டல் பௌலுக்கும் வித்தியாசம் தெரியாது. முதல் பொருளை உடைக்கும் பொழுது சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டு அடுத்த பொருளை உடைக்கும் போது அவர்களை நீங்கள் அடித்தால் அவர்கள் குழம்பி போவார்கள்.

ஆபத்தான பொருட்கள், கத்தி, துப்பாக்கி, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றை குழந்தை எடுக்க முடியாத இடத்தில் வைத்து விடுங்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை ஏதாவது தவறோ அல்லது ஆபத்தான காரியமோ செய்யும் போதும் அதற்கு முதல் காரணம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நீங்கள் தான். குழந்தை மீது மட்டும் கோபிப்பதில் ஒரு பயனும் கிடையாது.

அதே போல வீட்டில் உள்ள ஒருவர் குழந்தையை கண்டிக்கும் போது வீட்டில் உள்ள மற்றவர்கள் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அடுத்து அடிக்காமல் எப்படி குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது?

குழந்தைகள் அவர்கள் செய்த தவறை பொறுத்து ஒரு வார காலத்திற்கோ அல்லது இரண்டு நாட்களோ கீழே உள்ள ஏதேனும் ஒன்றை தண்டனையாக கொடுக்கலாம்.

1. அவர்களிடம் பேசாமல் இருப்பது
2. அவர்கள் டிவி பார்ப்பதை தடுப்பது
3. அவர்கள் கேம்ஸ் விளையாடுவதை தடுப்பது
4. அவர்களின் சேமிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிப்பது
5. குடும்பத்தினருடன் உணவு சாப்பிடாமல் தனியாக சாப்பிட வைப்பது
6. வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது ஆகிய வேலைகளை கொடுத்தல்

மேலே உள்ள சில தன்டனைகள் அடியை காட்டிலும் மிகவும் ஆழமானது. நிலையான மாற்றத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தக் கூடியவை. நார்வே தம்பதியினருக்கு நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம். குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்போம். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.

2 Comments:

தக்குடு said...

பிரச்சனையின் மூலம் வரை சென்று ஆராயப்பட்ட அருமையான அலசல்!

iK Way said...

//மேலே உள்ள சில தன்டனைகள் அடியை காட்டிலும் மிகவும் ஆழமானது. நிலையான மாற்றத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தக் கூடியவை.//

'எனவே மிகவும் கவனம் தேவை இந்த தண்டனைகளை கையாள்வதில்' எனவும் சேர்த்து விடுங்கள்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/