Monday, January 28, 2013

பொடிமாஸ் - 01/28/2013

இந்த வாரம் படம் பார்க்கும் வாரம் என்று எனக்கு ஆகிவிட்டது. விஷ்வரூபம் இரண்டு முறையும், Race 2 ஒரு முறையும் பார்த்து விட்டேன். Race 2 வழக்கமான அப்பாஸ் மஸ்தான் படம். யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்று பார்க்கும் போதே நமக்கு தலை சுற்றுகிறது. நல்ல திரைக்கதை. மேக்கிங் கூட நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். சுமார் 200 பேர் அமரக்கூடிய அரங்கில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். அமெரிக்கா அளிக்கும் ஒரு சில வித்தியாசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது கூட ஒன்றும் இல்லை, 'சில்லென்று ஒரு காதல்' படம் நான் மட்டுமே தனியாக அமர்ந்து பார்த்தேன். காலியான அரங்கின் புகைப்படம் கீழே உங்கள் பார்வைக்கு.



விஷ்வரூபம் குறித்த எனது விமர்சனத்துக்கு நண்பர்கள் பலர் கோபித்துக் கொண்டார்கள். படத்தை இரண்டு முறை காசு கொடுத்து அரங்கில் பார்த்தவன் என்ற முறையிலும், கமலின் தீவிர ரசிகன் என்ற முறையிலும் எனக்கு இப்படத்தை விமர்சிக்க முழூ உரிமை உள்ளது. நான் முன்னரே சொன்னது போல மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் கமல். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் மேக்கிங் மட்டும் போதுமா?

2000 ஆண்டுக்கு பின்னர் வெளி வந்த தமிழ் படங்களில் மேக்கிங்கில் மிரட்டிய தமிழ் படங்கள் எனது நினைவில் இருந்து ஆளவந்தான், ஹே ராம்!, விருமாண்டி, ராவணன், எந்திரன், நான் ஈ போன்றவை. இதில் விருமாண்டி, எந்திரன், நான் ஈ மூன்றும் வெற்றி. மற்ற படங்கள் தோல்வி. இதுவே மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை வெற்றியடைய செய்யாது என்பதற்கு சாட்சி.

ஒரு நண்பர் எழுதிய விஷ்வரூப விமர்சனத்தில் படத்தில் எங்கெல்லாம் கமலின் ஜீனியஸ் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் திரைக்கதை தோய்வடைகிறது என்று சொன்னார். அதையே தான் நானும் சொல்கிறேன். கமலின் ட்ரான்ஸ்ஃபார்மெஷனுக்கு பிறகு கமலின் ஜீனியஸ் தலை தூக்க ஆரம்பித்ததில் திரைக்கதை அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. இதை ஒரு காம்ப்லிமென்டாகவும் எடுத்துக் கொள்ளலாம், விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது எடுத்துக் கொள்பவரின் மனநிலையை பொருத்தது.

திரைக்கதையில் எனக்கு எழுந்த சில கேள்விகள் கீழே.

1.கமல் ஏன் ஆப்கான் போகிறார்?
2.அமெரிக்க கைதிகளை விடுவிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர்கள் நேட்டோ படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவர் அங்கு இருக்கிறாரே?
3.ஒசாமாவை பிடிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர் ஆப்கானை விட்டு வெளிவந்து அமெரிக்காவில் இருக்கும் போது தானே ஒசாமா கொல்லப்படுகிறான்.
4.கமல் ஏன் அமெரிக்க படையினருக்கு ஆப்கானில் இருந்து தகவல்களை அனுப்புகிறார்?
5.ஆப்கானில் எதிரிகளின் நடுவில் இருக்கும் போது அமெரிக்கர்களுக்கு தகவலகளை அளித்த கமல், நியூயார்க்கில் இருக்கும் போது ஏன் அளிக்காமல் தானே ஆபத்தை தடுக்க முயல்கிறார்?
6.நியூயார்க் போன்ற நகரத்தில் நியூக்ளியர் வெப்பன் டெட்டொனேட் செய்யப் படும் நேரத்தில் இப்படித்தான் மொக்கை தனமாக FBI நடந்து கொள்ளுமா?
7.தனது விமானம் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் எந்த மாக்கானாவது அதே நகரில் நியூக்ளியர் வெப்பனை டெட்டொனேட் செய்வானா?
8.நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் நியூயார்க் நகரத்தில் ஊடுருவியது கமலுக்கு தெரிந்திருக்கும் போது அது FBI க்கு தெரியாமல் போனது எப்படி?
9.ஆண்ட்ரியா படத்தில் என்ன செய்கிறார், கமல் புகழ் பாடுவதை தவிர?

இந்த கேள்விகளை எல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் முக்கியமான கேள்வி, கமல் உளவாளி என்பது ஓமருக்கு எப்படி தெரிந்தது? படத்தின் முக்கிய ப்ரொடகானிஸ்ட் மற்றும் ஆன்டகானிஸ்ட் இருவருக்கும் ஏற்படும் உறவு சிக்கலை விளக்கும் பகுதி இது தான். அதையே திரைக்கதையில் அவர் கூறவில்லை. படத்தின் முக்கியமான முடிச்சுகளை கூட பார்வையாளர்களின் கற்பனைக்கு விடுவது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு உதவாது.

ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் விடை படத்தின் இரண்டாம் பகுதியில் தான் கிடைக்கும் என்றால், இந்த படம் விஷ்வரூபத்தின் இரண்டாம் பகுதிக்கு 95 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டிரைலர் அவ்வளவு தான்.

எது எப்படியோ, திரைக்கதையில் கோட்டை விட்டாலும் கமல் தான் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களுள் ஒருவர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.


தீவிரவாதம் செய்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் அவர்கள் மார்கத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்றும் சொல்பவர்கள் தீவிரவாதம் செய்பவர்களை பற்றி படமெடுத்தால் அது இஸ்லாமியர்களை குறி வைத்து எடுக்கப்படும் படம் என்று கூறுவது சரியான நகைமுரண். இந்த சண்டையில் யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் உண்மையில் தோற்றது இஸ்லாமே. படத்தின் தடையை வெறுக்கும், கலாச்சார தீவிரவாதத்தை வெறுக்கும், மத நல்லிணக்கத்தை போற்றும் பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களுக்காக உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.


மனைவி குழந்தை இல்லாமல் தனியாக இருப்பதால் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து நேரத்திற்கு சாப்பிடுகிறேனா என்று விசாரிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்றால் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உணவை தர தயாராக இருக்கிறார்கள். அதிலும் அழைத்த ஒரு நண்பருக்கு ப்ரணவ் வயதில் ஒரு மகனும், பிறந்து இரண்டு மாதங்களே ஆன மகளும் இருக்கிறார்கள். பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பத்திரமாக கார் ஓட்டும் படி அறிவுருத்துகிறார்கள். நாடு விட்டு நாடு வந்தால் பாசத்துக்காக ஏங்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? இங்கே அன்புக்கு ஒரு குறைச்சலும் இல்லை.


இந்த வார நீயா நானா ஒரு சரியான ஐ ஓப்பனர். எவ்வளவு பேர் ஏமாந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், கிராமத்தினர், நகரத்தினர், இளம் வயதினர், வயசானவர்கள் என்று சகலரும் ஏமாந்திருக்கிறார்கள். There is nothing called free lunch. "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பார் எனது தந்தை. அடுத்தவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை திருடி விட்டு எப்படி இவர்களால் சாப்பிட முடிகிறது?


இது என்னுடைய 200 வது பதிவு. 2006 ஆம் ஆண்டில் பதிவெழுத தொடங்கிய போது இருந்த உற்சாகம் இப்போதும் சற்றும் குறையவில்லை. ஏழு ஆண்டுகளாக பதிவுலகில் இருக்கிறேன் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகில் பெற்ற நட்புகள் பல. நான் பதிவெழுத தொடங்கிய போது எனது நட்பு வட்டத்தில் இருந்த பலர் இப்போது பதிவுலகில் இல்லை என்றாலும், அதனால் அவர்கள் இப்போது எனது தொடர்பில் இல்லாமல் போனாலும் அவர்கள் என் மீது ஆரம்பத்தில் காட்டிய நம்பிக்கையையும், அளித்த உற்சாகத்தையும் என்றும் என்னால் மறக்க முடியாது. பள்ளி முடிந்த உடன் அற்று விட்ட தாய் மொழியில் எழுதும் அனுபவத்தை மீண்டும் எனக்கு புதுப்பித்து கொடுத்த பதிவுலகுக்கு எனது நன்றிகள் கோடி.

Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - விமர்சனம்

இப்போதுதான் விஸ்வரூபம் பார்த்து விட்டு வருகிறேன். இரவு எட்டு மணி சிறப்பு காட்சி. இந்தப் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன எழவு இருக்கிறது என்று தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்தப் படத்தில் என்ன எழவு இருக்கிறது என்பதே தெரியவில்லை.

எல்லோரும் வாயையும், சூ**யும் பொத்திக் கொண்டு இருந்திருந்தால் ஒரே வாரத்தில் பொட்டிக்குள் சென்று இருக்கும்.

அருமையான களம், நல்ல பட்ஜெட், அட்டகாசமான தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரையும் வைத்து படு சொதப்பலான படம் எடுக்கும் பிரிவில் ஆஸ்கார் ஏதேனும் இருந்தால் அது உலக நாயகனுக்கு நிச்சயம்.

படம் தமிழகத்தில் வெளியாகாததால், படத்தின் கதையெல்லாம் சொல்லி உங்களை இம்சிக்கவில்லை. மன்மதன் அன்பு, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற காவியங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு இப்படத்தை பரிந்துரைக்கிறேன்.

பின்னர் சேர்த்தது:

படத்தில் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா என்று நண்பர் ஒருவர் கேட்டார். நிறைய விஷயம் இருக்கிறது. ஒளிப்பதிவு, சண்டை காட்சிகள், வெடிக்கும் காட்சிகளில் ஒலிப்பதிவு, ஆப்கானிஸ்தான் செட்கள், அவர்களின் உடையலங்காரம், ராஹுல் போஸின் நடிப்பு, நியூ யார்க் கார் சேஸ் காட்சிகள் என்று பல. ஆனால் இவை அனைத்தையும் ஒற்றை ஆளாக இருந்து தூக்கி அடிப்பது, திரைக்கதை. லாஜிக்கலாக பல ஓட்டைகள் மற்றும் பல கேள்விகள் எழுகின்றன. அவை எழாமல் இருக்க திரைக்கதை விறுவிறுப்பாக அமைய வேண்டியது அவசியம். ஆனால் திரைக்கதை இங்கே விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் எல்லா ஓட்டைகளும் நன்றாக தெரிகின்றன.

கமல் ரசிகர்களுக்கு:

கமல் ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகும் சீன் அட்டகாசம். சரியான மாஸ். கொடுத்த காசு அதற்கு மட்டுமே போதும்.

படத்தை உண்மையிலேயே பார்த்து விட்டீர்களா என்று ஒரு நண்பர் கேட்டார். படத்தின் மையத்தை தொடாததன் காரணம் இன்னும் படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பதே. படத்தின் டிக்கெட்டை கீழே கொடுத்துள்ளேன். தயவு செய்து நான் பார்த்த டிக்கெட் தானா என்று கேட்டு விடாதீர்கள்.



I Support Kamalhaasan


நாட்டில் போராடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஒரு சினிமாவை பிடித்துக் கொண்டு தொங்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன.

படத்தை தடை செய்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் நிலை மாறிவிடுமா? இல்லை படம் வெளியானால் தான் அவர்கள் நிலை மாறி விடுமா? இரண்டும் இல்லை. இன்று படம் வெளியாகவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்திற்கு பின்னர் படம் வெளியாகத்தான் போகின்றது.

சென்சார் போர்டு சான்று பெற்ற படங்களை தனிக் குழுக்கள் போராட்டம் என்று பயம் காட்டி தடை செய்யலாம் என்ற நிலை நிச்சயம் ஆரோக்கியமானது இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கிறார்கள். ஒரு படம் வந்து இந்த நல்லிணக்கத்தை கெடுத்து விடும் என்பதெல்லாம் சரியான பேத்தலாக இருக்கிறது.

போராட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களுக்கு படம் ஒரு சாக்கு. அவ்வளவு தான். அப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, இல்லை போராட்டமோ வந்தால் அதை அடக்குவது அரசின் வேலை.

இந்த நிலை தொடர்ந்தால் பெரும்பாலான படங்களின் நாயகர்களாக நடிக்கும் ஆண்களையே நல்லவர்களாக காட்டுகிறார்கள் என்று பெண்கள் அமைப்பும், வில்லன்களாக நடிக்கும் ஆண்களையே கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று ஆண்கள் அமைப்பும் போராட தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சினிமா என்பது பொதுபுத்தியை காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காலத்தில் சினிமாவில் வில்லன்களுடன் வரும் குறைந்த ஆடை உடுத்திய பெண்களை கிருத்துவர்களாகவே காட்டினார்கள். அவர்கள் பெயர் ஸ்டெல்லா, ரீட்டா என்று ஏதாவது தான் இருக்கும். அதற்காக படம் பார்க்கும் அனைவரும் கிருத்துவர்களை அப்படியா நினைத்துக் கொண்டார்கள்.

படத்தை பார்க்காமல் கருத்து தெரிவிப்பது சரி கிடையாது. அது படத்தின் தடையை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும் படத்தின் தடையை எதிர்ப்பவர்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்துவது போல காட்சிகள் இருந்தால் படத்தை இக்னோர் செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அரசு இயந்திரத்தில் லஞ்ச ஊழலையும், மருத்துவமும், கல்வியும் வியாபாரமாகி விட்டதையும், ஜாதி மத வெறிகளையும், உணவு பொருட்களில் கலப்படத்தையும், விவசாயம் அழிந்து கொண்டிருப்பதையும், மனிதம் செத்துவிட்டதையும் இக்னோர் செய்வோம், ஆனால் திரைப்படத்தில் எங்களுக்கு பிடிக்காத காட்சிகள் வந்தால் தெருவில் இறங்கி போராடுவோம் என்ற நிலை நகைப்பாக இருக்கிறது.

கீழே இருப்பது படத்தின் தடை குறித்து திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் எழுதிய ட்வீட்டுகள்.

Prakash Raj: BAN on Vishwaroopam. NOT FAIR. This cultural terrorism should stop. We should stand for the right to express. We are with you Kamal sir. When Tamil, Telugu and Hindi three censor boards of this democratic country has cleared Vishwaroopam. Where does this ban come from???
Spoke to distributors and people of Malaysia. It’s a Muslim country and the censor board has cleared Vishwaroopam, released the film today. People who saw the film in Malaysia say there is nothing against Muslims to worry. It’s a wonderful film by Kamal sir is someone listening?

Mahesh Bhatt: It clearly stated that once the Censor Board has cleared the film for public viewing, screening of the same cannot be prohibited. The Supreme Court order had quashed the decision of the Uttar Pradesh State Govt suspending the screening of the film ‘Aarakshan’ in UP.

Madhur Bhandarkar: I’m appalled by the TN Govt’s decision to ban Kamal Haasan’s Vishwaroopam. After the film has passed by the censor board. Not done!!!

Shirish Kunder: Kamal Haasan is no stranger to opposition in his creative endeavours.

Shekhar Kapur: For a man facing a ban on his film and loss of over 60cr, Kamal Haasan has the calm look of a man who completely who believes in what he is doing. I stand up for Kamal Haasan right to show the world Vishwaroopam and let the people decide, especially after Censor Board has passed the film. You?

ஆரூர் மூணா செந்திலின் பதிவில் கருத்து தெரிவித்த பதிவர் அஞ்சா சிங்கம் "பாருங்க ரஜினி ரசிகரை கமல் ரசிகராக மாத்தீட்டாங்க. அப்படியே நடுநிலை ஆளுங்களை இந்துத்துவா வாதிகளாக மாற்றும் வரை ஓயாமாட்டாங்க போல் இருக்கு." என்றார். அது கூட பரவாயில்லை. ஒரு வேளை "I support Kamalhaasan" என்பதை "I support Modi" என்று மாற்றி தொலைத்து விட்டால்?

Tuesday, January 22, 2013

சாவடிக்கும் குளிர்

இன்றும், நாளையும், நாளை மறு நாளும் ஆர்டிக் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் பணிப் புயல் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் பல பகுதிகளில் கடுமையான குளிர்.

இன்று -11 டிக்ரீ செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடுமையான குளிர் காற்று வேறு. குளிர் காற்றினால் வெப்பம் இன்னும் குறைந்து -19 டிக்ரீ செல்சியஸ் ஆக மாறியது.

இந்த குளிரில் வீட்டை விட்டு வெளியில் செல்வதே பெரும் பாடாக இருக்கிறது. இதில் மாண்டியை தினமும் மூன்று வேளை வாக்கிங் அழைத்து செல்வதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இன்று காலை வாக்கிங் செல்லும் போது குளிர் காற்று என் முகத்தில் தொடர்ந்து அடித்ததில் காது மடலும் முகமும் சிவந்து போய் விட்டன. இத்தனைக்கும் தெர்மல் வேர், தடியான ஜீன்ஸ், ஸ்வெட்டர், ஸ்வெட் ஷர்ட், பெரிய வுல்லன் கோட், கிளவுஸ், குல்லாய் என்று சுமார் ஒரு ஐந்து கிலோ பொதி மூட்டையுடன் தான் எனது பயணம் இருக்கிறது. அப்படி இருந்தும் இந்த நிலை.

எனது வீட்டிற்கு பின்பு ஒரு சிறு குளம் இருக்கிறது. அதன் நீர் முழுதும் உறைந்து போய் விட்டது. இன்று மாலை நான்கு சிறுவர்கள் அதில் ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டு இருந்தனர். அவ்வாறு விளையாடுவது மிகவும் ஆபத்தானது என்ற பொழுதும், சிறுவர்கள் அல்லவா?, கேட்க மாட்டார்கள். நாம் சிறு வயதில் பெரியவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோமா என்ன?

மதியம் சூடான உணவை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்தேன். ஒரு ஐந்து நிமிட நடை தான் இருக்கும். ஆனால் அதற்குள் உணவு ஜில்லென்று ஆகிவிட்டது. அதை மீண்டும் அலுவலகத்தில் இருந்த மைரோவேவ் அவனில் சூடு செய்து சாப்பிட வேண்டியதாகி விட்டது.

அவ்வளவு ஏன்? தம் கூட நிம்மதியாக அடிக்க முடியவில்லை. இப்போது தான் ஒரு தம் அடித்து விட்டு வீட்டின் உள் நுழைகிறேன். கை விரல்கள் குளிரில் அப்படியே விரைத்து போய்விட்டன. வீட்டுக்குள் வந்த ஐந்து நிமிடங்களுக்கு கையை மூடி திறக்க முடியவில்லை.

அமெரிக்கா வந்த எட்டு ஆண்டுகளில் இப்படி ஒரு குளிரை நான் பார்த்ததில்லை. ம்.... இதுவும் ஒரு அனுபவம். அனுபவங்களை அனுபவிக்கும் போதே ஆவணப்படுத்திவிட வேண்டும். அந்த நோக்கத்துடன் இதோ பதிவெழுதி விட்டேன்.

Wednesday, January 09, 2013

பொடிமாஸ் - 01/09/2013

விஷ்வரூபம் DTH பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன். அரசமரத்தை சுற்றிவிட்டு வயிற்றை தொட்டு பார்த்த கதையாக பழம் பழுக்கும் முன்பே ஒரு சிலர் அதை கடித்து விட்டனர். 30 லட்சம் பேர், 300 கோடி என்ற கதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிரிப்பே வந்தது. 30 லட்சம் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள், அதில் பாதிக்கு மேல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என்றால், எப்படி 300 கோடி வருவாயாகும்? ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்துக்கு 500 ரூபாய் தான் கட்டணம். அந்த கணக்கின் படி பார்த்தாலும் அதிக பட்சம் 225 கோடி ரூபாய் வசூல் தான்.

ஒரு படத்தின் பட்ஜெட்டோ, வருவாயோ அப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்காது. 2007 ஆம் ஆண்டு வந்து உலகையே ஆட்டி படைத்த பாராநார்மல் ஆக்டிவிட்டி படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய். என்னை பொருத்த வரை மக்கள் மனதில் ஒரு படம் காலம் கடந்து நின்றால் அது வெற்றிப் படம், வணிக ரீதியாக அது வெற்றி அடையாமல் இருந்தாலும் கூட.

அந்த வரிசையில் தமிழில் எனது மனதளவில் வெற்றிப் படங்களில் முந்நிலையில் இருப்பது உதிரிப் பூக்கள். கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் அன்பே சிவம் மற்றும் மகாநதி. இந்த வார இறுதியில் கூட ராஜமௌளி கமலை எடுத்த பேட்டியை பார்த்த பின்னர் சலங்கை ஒலி படத்தை தேடி பிடித்து பார்த்தேன். இது எத்தனையாவது முறை என்பது தெரிய வில்லை. ஆனால் அப்படியே என்னை கட்டிப் போட்டு விட்டது.

கமலின் பெரும்பாலான ரசிகர்கள் அவரது நடிப்பை பார்த்து அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள், அவரது வணிக வெற்றியை பார்த்து அல்ல. கமலை சுற்றி இருக்கும் அவருக்கு ஜால்ரா போடும் கூட்டம் இதை உணராத வரை, அவரும் இதை உணர போவதில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.


டில்லி கற்பழிப்பு சம்பவதை தொடர்ந்து பெண்கள் உடை விஷயத்தில் கருத்து தெரிவித்த பலர் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு கலாச்சாரத்தின் உடை என்பது அவர்கள் இருக்கும் நாடு, அதன் தட்ப வெட்பம் போன்றவற்றை கொண்டே அமையும்.

அமெரிக்கர்களையோ இல்லை ஐரோப்பியர்களையோ எடுத்துக் கொண்டால், அந்நாடுகளில் வாழும் பலர் வெள்ளை தோல் உடையவர்கள். மெலனின் என்ற வஸ்து அவர்கள் தோலில் குறைந்து இருக்கும். தோல் புற்று நோய் வராமல் பாதுகாக்க அதை அதிகரிப்பது அவசியம். அதனை இயற்கையாக அதிகப் படுத்த சூரியனின் வெப்பம் தேவை. ஆனால் அந்நாடுகளிலோ நல்ல சூரியன் வெப்பம் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்காது. அதற்காக கோடை காலத்தில் அவர்கள் உடலில் பெரும் பாலான இடங்களில் சூரியன் வெப்பம் தாக்கும் படி உடை உடுத்துகிறார்கள்.

அதே நேரத்தில் அரபு தேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கே தண்ணீர் குறைவு. மணல் புயல் அதிகம். மணல் அதிகம் கேசத்தில் சிக்கிக் கொண்டால் அதனை சுத்தம் செய்ய அதிக தண்ணீர் செலவாகும். அதற்காகவே அவர்கள் தலையை மூடி உடை உடுத்துகிறார்கள்.

இதை தெரிந்து கொள்ளாமல் அமெரிக்கர்கள் அவுத்து போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்றோ, அரேபியர்கள் இழுத்து மூடிக் கொண்டு கற்காலத்தில் வாழ்கிறார்கள் என்றோ சொல்வது சரி கிடையாது.

இப்போது இந்திய சூழ்நிலைக்கு வந்தால், இந்தியா ஒரு செக்ஸ் ஸ்டார்விங் நாடு. இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆன பிறகு தான் முதல் செக்ஸ் அனுபவம் ஏற்படுகிறது. அந்நிலையில் பல நாள் பட்டினி கிடப்பவன் முன்பு திருமண விருந்து சாப்பிடுவதை போல இந்திய பெண்கள் ரிவீலிங்காக உடை உடுத்தினால் அது பெண்களுக்கே ஆப்பாக வந்து முடிந்து விடுகிறது.

ஆனால் அதே நிலையில் இருக்கும் இந்திய பெண்கள் ஆண்களை ஏன் கற்பழிப்பதில்லை என்பது உளவியல் ரீதியாக பார்க்க வேண்டிய ஒரு செயல். இந்திய ஆண்களுக்கு மரபிலேயே ஷாவனிஸம் கலந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். ஷாவனிஸத்தின் வெளிப்பாடு வெறிச்செயல்.

1. கற்பழிப்பில் மட்டும் இல்லை, பெண்களுக்கு/குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு வன்முறையில் ஈடு பட்டாலும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும்.

2. கற்பழிப்பை ஒரு விபத்தாக இந்திய சமூகம் பார்க்க தொடங்க வேண்டும்.

3. இந்திய ஆண்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிக மரியாதை செய்ய வேண்டும். அவர்களை அடிமை போல நடத்த கூடாது. இதை அவர்கள் செய்தால் அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு இயல்பாகவே மரியாதை செய்ய முயலும்.


திமுகவில் நடக்கும் வாரிசு மோதல்கள் வருத்தம் அளிக்கிறது. ஒரு வேளை திமுக உடைந்தால் அதிமுக-ஜெ மற்றும் அதிமுக-ஜா கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும். ஸ்டாலின் ஜெயித்து வருவார் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்னை கேட்டால் கட்சி உடைவது கூட நல்லது தான், ஏனென்றால் ஒரே கட்சியில் இருந்தால் அழகிரி ஸ்டாலினுக்கு தொடர்ந்த தலைவலியாக இருப்பார். கட்சி உடைந்து பின்னர் ஒன்று சேர்ந்தால் அழகிரியை ஒரேயடியாக அரசியலில் இருந்து ஒதுக்கி விடலாம். கனிமொழி, மாறன் போன்றவர்களை அழகிரியை விட அதிகம் அரவணைத்து போவது ஸ்டாலின் தான். தொண்டர்களும் அதிகம் ஸ்டாலின் பக்கம் தான். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


ஒவைசியின் பேச்சு குறித்த சர்ச்சை புயல் இப்போது கிளம்பியுள்ளது. இதெல்லாம் அடுத்த சர்ச்சை வரும் வரை தான். நல்ல வேளை தர்மபுரியில் நடந்தது போல ஒரு கூட்டம் இவரது பேச்சை கேட்டு கிளம்பாமல் இருந்தது. என்னை கேட்டால் இதையெல்லாம் இக்னோர் செய்து விட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க இம்மாதிரி நாய்கள் அதிகம் குறைத்துக் கொண்டே இருக்கும்.


ஆர்லான்டோ பயணம் நல்ல முறையில் முடிந்தது. மேஜிக் கிங்டம், அனிமல் கிங்டம், யுனிவர்சல் ஸ்டூடியோஸ் என்று பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். புகைப்படங்களை பின்னர் தனி பதிவாக பதிகிறேன். மனைவியும், குழந்தையும் ஜனவரி மூன்றாம் தேதி இந்தியாவுக்கு சென்று விட்டனர். இம்முறை சற்று நெடிய விடுமுறை. பிப்ரவரி 17 ஆம் தேதி தான் வருகிறார்கள். அவர்கள் கிளம்புவதற்கு முன்பு எப்போது கிளம்புவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். டயாப்பர் மாற்றுவது, குழந்தையை குளிப்பாட்டுவது, அவனுக்கு சாப்பாடு கொடுப்பது, அவனை பார்க்குக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் சென்ற பின்னர் தனியாக இருப்பது ஒரே கடியாக இருக்கிறது. அதுவும் நான் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வேன். அதனால் வீட்டில் இருக்கும் நாட்களில் படு போராக இருக்கிறது. வார இறுதியில் எங்காவது வெளியூருக்கு நண்பர்களை பார்க்க செல்லலாம் என்றால் மாண்டியை வெளியே விடுவது கஷ்டமாக இருக்கிறது.


இந்த வார இறுதியில் விஷ்வரூபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது வெளியீடு தள்ளி போய் விட்டது. அதற்கடுத்த வாரம் அர்னால்டு நடித்த லாஸ்ட் ஸ்டான்ட் படம் வெளி வருகிறது. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்ஸ் பாண்டியனோ இல்லை கண்ணா லட்டு திங்க ஆசையா படமோ இங்கே வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளிவந்தால் பார்த்து விடுவேன்.


இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் நிலவுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு சில இடங்களில் 54 டிக்ரீ செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சொல்கிறார்கள். வட இந்தியாவில் கடும் குளிரினால் 150 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. எல்லாம் க்ரீன் ஹவுஸ் எஃப்பெக்ட் செய்யும் வேலை. உலகம் தானாக அழிகிறதோ இல்லையோ அடுத்த இரு தலைமுறைக்குள் நாமே அழித்து விடுவோம் என்று நினைக்கிறேன்.


இது இந்த புத்தாண்டின் முதல் பதிவு. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். 2012 ஆம் ஆண்டு நல்லபடியாக சென்றது. பல இனிப்பான சம்பவங்கள். அது போலவே 2013 ஆம் ஆண்டும் இருக்கும் என்று நம்புகிறேன். அது போலவே உங்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக இது அமைய வாழ்த்துகிறேன்.