Monday, January 28, 2013


பொடிமாஸ் - 01/28/2013

இந்த வாரம் படம் பார்க்கும் வாரம் என்று எனக்கு ஆகிவிட்டது. விஷ்வரூபம் இரண்டு முறையும், Race 2 ஒரு முறையும் பார்த்து விட்டேன். Race 2 வழக்கமான அப்பாஸ் மஸ்தான் படம். யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்று பார்க்கும் போதே நமக்கு தலை சுற்றுகிறது. நல்ல திரைக்கதை. மேக்கிங் கூட நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். சுமார் 200 பேர் அமரக்கூடிய அரங்கில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். அமெரிக்கா அளிக்கும் ஒரு சில வித்தியாசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது கூட ஒன்றும் இல்லை, 'சில்லென்று ஒரு காதல்' படம் நான் மட்டுமே தனியாக அமர்ந்து பார்த்தேன். காலியான அரங்கின் புகைப்படம் கீழே உங்கள் பார்வைக்கு.விஷ்வரூபம் குறித்த எனது விமர்சனத்துக்கு நண்பர்கள் பலர் கோபித்துக் கொண்டார்கள். படத்தை இரண்டு முறை காசு கொடுத்து அரங்கில் பார்த்தவன் என்ற முறையிலும், கமலின் தீவிர ரசிகன் என்ற முறையிலும் எனக்கு இப்படத்தை விமர்சிக்க முழூ உரிமை உள்ளது. நான் முன்னரே சொன்னது போல மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் கமல். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் மேக்கிங் மட்டும் போதுமா?

2000 ஆண்டுக்கு பின்னர் வெளி வந்த தமிழ் படங்களில் மேக்கிங்கில் மிரட்டிய தமிழ் படங்கள் எனது நினைவில் இருந்து ஆளவந்தான், ஹே ராம்!, விருமாண்டி, ராவணன், எந்திரன், நான் ஈ போன்றவை. இதில் விருமாண்டி, எந்திரன், நான் ஈ மூன்றும் வெற்றி. மற்ற படங்கள் தோல்வி. இதுவே மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை வெற்றியடைய செய்யாது என்பதற்கு சாட்சி.

ஒரு நண்பர் எழுதிய விஷ்வரூப விமர்சனத்தில் படத்தில் எங்கெல்லாம் கமலின் ஜீனியஸ் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் திரைக்கதை தோய்வடைகிறது என்று சொன்னார். அதையே தான் நானும் சொல்கிறேன். கமலின் ட்ரான்ஸ்ஃபார்மெஷனுக்கு பிறகு கமலின் ஜீனியஸ் தலை தூக்க ஆரம்பித்ததில் திரைக்கதை அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. இதை ஒரு காம்ப்லிமென்டாகவும் எடுத்துக் கொள்ளலாம், விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது எடுத்துக் கொள்பவரின் மனநிலையை பொருத்தது.

திரைக்கதையில் எனக்கு எழுந்த சில கேள்விகள் கீழே.

1.கமல் ஏன் ஆப்கான் போகிறார்?
2.அமெரிக்க கைதிகளை விடுவிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர்கள் நேட்டோ படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவர் அங்கு இருக்கிறாரே?
3.ஒசாமாவை பிடிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர் ஆப்கானை விட்டு வெளிவந்து அமெரிக்காவில் இருக்கும் போது தானே ஒசாமா கொல்லப்படுகிறான்.
4.கமல் ஏன் அமெரிக்க படையினருக்கு ஆப்கானில் இருந்து தகவல்களை அனுப்புகிறார்?
5.ஆப்கானில் எதிரிகளின் நடுவில் இருக்கும் போது அமெரிக்கர்களுக்கு தகவலகளை அளித்த கமல், நியூயார்க்கில் இருக்கும் போது ஏன் அளிக்காமல் தானே ஆபத்தை தடுக்க முயல்கிறார்?
6.நியூயார்க் போன்ற நகரத்தில் நியூக்ளியர் வெப்பன் டெட்டொனேட் செய்யப் படும் நேரத்தில் இப்படித்தான் மொக்கை தனமாக FBI நடந்து கொள்ளுமா?
7.தனது விமானம் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் எந்த மாக்கானாவது அதே நகரில் நியூக்ளியர் வெப்பனை டெட்டொனேட் செய்வானா?
8.நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் நியூயார்க் நகரத்தில் ஊடுருவியது கமலுக்கு தெரிந்திருக்கும் போது அது FBI க்கு தெரியாமல் போனது எப்படி?
9.ஆண்ட்ரியா படத்தில் என்ன செய்கிறார், கமல் புகழ் பாடுவதை தவிர?

இந்த கேள்விகளை எல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் முக்கியமான கேள்வி, கமல் உளவாளி என்பது ஓமருக்கு எப்படி தெரிந்தது? படத்தின் முக்கிய ப்ரொடகானிஸ்ட் மற்றும் ஆன்டகானிஸ்ட் இருவருக்கும் ஏற்படும் உறவு சிக்கலை விளக்கும் பகுதி இது தான். அதையே திரைக்கதையில் அவர் கூறவில்லை. படத்தின் முக்கியமான முடிச்சுகளை கூட பார்வையாளர்களின் கற்பனைக்கு விடுவது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு உதவாது.

ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் விடை படத்தின் இரண்டாம் பகுதியில் தான் கிடைக்கும் என்றால், இந்த படம் விஷ்வரூபத்தின் இரண்டாம் பகுதிக்கு 95 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டிரைலர் அவ்வளவு தான்.

எது எப்படியோ, திரைக்கதையில் கோட்டை விட்டாலும் கமல் தான் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களுள் ஒருவர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.


தீவிரவாதம் செய்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் அவர்கள் மார்கத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்றும் சொல்பவர்கள் தீவிரவாதம் செய்பவர்களை பற்றி படமெடுத்தால் அது இஸ்லாமியர்களை குறி வைத்து எடுக்கப்படும் படம் என்று கூறுவது சரியான நகைமுரண். இந்த சண்டையில் யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் உண்மையில் தோற்றது இஸ்லாமே. படத்தின் தடையை வெறுக்கும், கலாச்சார தீவிரவாதத்தை வெறுக்கும், மத நல்லிணக்கத்தை போற்றும் பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களுக்காக உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.


மனைவி குழந்தை இல்லாமல் தனியாக இருப்பதால் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து நேரத்திற்கு சாப்பிடுகிறேனா என்று விசாரிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்றால் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உணவை தர தயாராக இருக்கிறார்கள். அதிலும் அழைத்த ஒரு நண்பருக்கு ப்ரணவ் வயதில் ஒரு மகனும், பிறந்து இரண்டு மாதங்களே ஆன மகளும் இருக்கிறார்கள். பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பத்திரமாக கார் ஓட்டும் படி அறிவுருத்துகிறார்கள். நாடு விட்டு நாடு வந்தால் பாசத்துக்காக ஏங்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? இங்கே அன்புக்கு ஒரு குறைச்சலும் இல்லை.


இந்த வார நீயா நானா ஒரு சரியான ஐ ஓப்பனர். எவ்வளவு பேர் ஏமாந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், கிராமத்தினர், நகரத்தினர், இளம் வயதினர், வயசானவர்கள் என்று சகலரும் ஏமாந்திருக்கிறார்கள். There is nothing called free lunch. "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பார் எனது தந்தை. அடுத்தவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை திருடி விட்டு எப்படி இவர்களால் சாப்பிட முடிகிறது?


இது என்னுடைய 200 வது பதிவு. 2006 ஆம் ஆண்டில் பதிவெழுத தொடங்கிய போது இருந்த உற்சாகம் இப்போதும் சற்றும் குறையவில்லை. ஏழு ஆண்டுகளாக பதிவுலகில் இருக்கிறேன் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகில் பெற்ற நட்புகள் பல. நான் பதிவெழுத தொடங்கிய போது எனது நட்பு வட்டத்தில் இருந்த பலர் இப்போது பதிவுலகில் இல்லை என்றாலும், அதனால் அவர்கள் இப்போது எனது தொடர்பில் இல்லாமல் போனாலும் அவர்கள் என் மீது ஆரம்பத்தில் காட்டிய நம்பிக்கையையும், அளித்த உற்சாகத்தையும் என்றும் என்னால் மறக்க முடியாது. பள்ளி முடிந்த உடன் அற்று விட்ட தாய் மொழியில் எழுதும் அனுபவத்தை மீண்டும் எனக்கு புதுப்பித்து கொடுத்த பதிவுலகுக்கு எனது நன்றிகள் கோடி.

12 Comments:

ஸ்கூல் பையன் said...

பொடிமாஸ் நன்று... 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

அமர பாரதி said...

I have the same feeling and I also have same wuestions and more. But why everybody keeps saying that the buget is 95 /100 crores? Please dont say that Kamal's payment is 50 crores. Even though the budget is too much. Long long never ending scenes. First hals is completely dry and the desert is like documentary. Also those caves are repeatedly boring and what about songs with something pleasant to the eyes?

Senthil Kumaran said...

பொடிமாஸ் அட்டகாசம். 200 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

200வது பதிவிற்கு எனது வாழ்த்துகலும் பாராட்டுகளும்

ஆதி மனிதன் said...

200th post...Congrats Sathya...keep writing.

Anonymous said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சத்யா...

நம்ம வீட்ல நம்மள தனியா விடுறதே கிடையாது...அவ்வளவு நம்பிக்கை நம்ம மேல....

மகளுக்காக தமிழில் எழுதத்தொடங்கினேன்...அப்படியே தொடர்கிறது...அவள் எப்பவாவது வாசித்தாலும்...நேற்றைய இஸ்லாம் பதிவை அவள் வாசித்து அவளிடம் வாங்கிக்கட்டிகொண்டேன்...

தொடர்ந்து எழுதுங்கள்...தைரியமாய் கருத்தை வெளியில் வைப்போர் வெகு சிலரே...நிறைய எழுதுங்கள்...

SathyaPriyan said...

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

வருண் said...

****தொடங்கிய போது இருந்த உற்சாகம் இப்போதும் சற்றும் குறையவில்லை.***

தொடர்ந்து வாழும்வரை இதே உற்சாகத்துடன் எழுதுங்க, தோழரே! :)

வருண் said...

***கமலின் தீவிர ரசிகன் என்ற முறையிலும் எனக்கு இப்படத்தை விமர்சிக்க முழூ உரிமை உள்ளது.***

கமலஹாசனுக்கு நீங்க ஒரு வித்தியாசமான ரசிகர்தான். நூறோட ஒண்ணு நூத்தியொண்ணு னு சொல்றாப்பிலே இல்லாமல் மனதில் தோன்றியதை அப்படியே அரசியல் செய்யாமல் சொல்லிடுறீங்க! :)

Arunkumar said...

thala, Congrats for the 200th post. Keep Rocking ! There are fans like me who wait for your post/podimas/opinions and read it :-)

aanalum, DC area ellam oru kulurunnu solringa.. hmm, rendu naalu ingittu vandhuttu ponga :-)

Cheers,
Arun

krish said...

வாழ்த்துக்கள்.KEEP WRITING.

SathyaPriyan said...

//
தொடர்ந்து வாழும்வரை இதே உற்சாகத்துடன் எழுதுங்க, தோழரே! :)
//
ரொம்ப நன்றி வருண்.

//
thala, Congrats for the 200th post. Keep Rocking ! There are fans like me who wait for your post/podimas/opinions and read it :-)
//
அண்ணாத்தே, உண்மையிலேயே பதிவின் கடைசி பத்தியை உங்களை எல்லாம் நினைத்து தான் எழுதினேன். நீங்கள், நாட்டாமை ஸ்யாம், கார்த்திகேயன் முத்துராஜன், ப்ரியமான நேரம் ப்ரியா, வெட்டிப்பயல் பாலாஜி, CVR, மணிக்கூண்டு மாயவரம் சிவா அண்ணன் மற்றும் பலர்.

//
aanalum, DC area ellam oru kulurunnu solringa.. hmm, rendu naalu ingittu vandhuttu ponga :-)
//
ஐயையோ! இதுக்கே எலும்பெல்லாம் கூசுது. உங்கள எல்லாம் நினைச்சா .... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடில......

//
வாழ்த்துக்கள்.KEEP WRITING
//
ரொம்ப நன்றி krish.