Saturday, May 02, 2015


உத்தம வில்லன் - மரணத்தை வென்றவன்

தமிழ் திரைத்துறையில் முடி சூடா மன்னனாக விளங்கும் நாயகன் மனோரஞ்சன். அவனுக்கு ஒரே நாளில் அவனது வாழ்வை திசை திருப்பும் இரண்டு செய்திகள் வந்தடைகின்றன. ஒன்று, அவன் இன்னும் சில நாட்களில் மூளையில் இருக்கும் ஒரு கட்டியினால் இறப்பான் என்பது. மற்றொன்று, அவனது இளவயது காதலின் காரணமாக அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பது.

அதுவரை ஈகோ பிடித்தவனாக இருக்கும் நாயகன் அதன் பின்னர் தனது வாழ்வை அசை போடுகிறான். தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினருக்கு அவன் செய்ய மறுத்தவைகளை செய்ய முயல்கிறான். திரையுலகில் தன்னை அறிமுகம் செய்த தனது குருநாதரின் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்க ஆசைப் படுகிறான்.

இது இரண்டையும் எவ்வாறு செய்து முடிக்கிறான் அல்லது முடிக்காமல் போகிறான் என்பது தான் கதை. இப்படத்தின் திரைக்கதை இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று அவன் நடிக்கும் படம். இது கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சாகாவரம் பெற்றுவிட்டதாக நம்பப்படும் உத்தமன் என்பவனின் நகைச்சுவை கதை.

மற்றொன்று சமகாலத்தில் அவன் எதிர் கொள்ளும் உறவுச்சிக்கல்கள். இது பல பரிமாணங்களில் சொல்லப்படுகிறது. மனோரஞ்சனுக்கும் அவனது மகளுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மகனுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது காதலிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது குருநாதருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மாமனாருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

படிக்கும் பொழுது சிறிது ஆயாசமாக இருந்தாலும், திரைக்கதை நம்மை பார்க்கும் போது கட்டிப்போட்டு விடுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இதில் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் முயற்சியில் ஈடுபடாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தியதை தான்.

நடிகர்களில் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதலில் MS பாஸ்கர். என்னா நடிப்பு சார்? குறிப்பாக கமலிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியாகட்டும், அவர் தன்னிடம் தனது நிலையை சொல்லாமல் இருந்துவிட்டாரே என்று ஆதங்கப்படும் காட்சியாகட்டும், மனிதர் அமர்களப்படுத்தி விட்டார்.

அடுத்ததாக ஆன்ட்ரியா. கமலின் மீதுள்ள காதலையும், அதனை வெளி உலகுக்கு சொல்ல இயலாத தனது நிலையையும், அவரது உடல் நிலை கண்டு மறுகுவதும், அட்டகாசம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலிடம் ஊர்வசி அவரது கடந்த கால காதலை பற்றி கேட்கும் போது அவர் கொடுக்கும் expressions, simply out of the world.

அடுத்தது கமலின் மகன். யார் அது என்று தெரியவில்லை. முதலில் கமல் மீது அவன் காட்டும் வெறுப்பும், பின்னர் கமல் தனது உடல்நிலையை பற்றி அவனிடம் கூறும் அந்த கட்டத்தில் அவர் வெளிக்காடும் பாசமும், கமலின் பழைய உறவின் தொடர்ச்சியாக வரும் பார்வதியை சகோதரியாக கட்டித்தழுவும் நேசமும் மிகவும் அருமை.

அடுத்தது பார்வதி மேனன். கமலின் மகளாக வருகிறார். பார்வதியின் நடிப்புக்கு பூ மற்றும் மரியான் இரண்டுமே சாட்சி. இதிலும் அட்டகாசப் படுத்தி இருக்கிறார். மற்ற நடிகர்கள் ஊர்வசி, K. விஷ்வநாத், பாலசந்தர், ஜெயராம், நாசர் அனைவரும் அவர்களுக்கான திரையிடத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இறுதியாக கமல். கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்ல தேவையில்லாத ஒன்று. அவர் சரியாக நடிக்காவிட்டால் தான் அதை சொல்ல வேண்டும். தனது குழந்தைகளிடம் உரையாடும் போது குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கும் தந்தையாகவும், ஆண்ட்ரியாவுடன் உரையாடும் போது காதலனாகவும், ஊர்வசியுடன் உரையாடும் போது காதலே இல்லாத ஆனால் தனது மகனின் தாயை நேசிக்கும் கணவனாகவும், இப்படி ஒவ்வொரு காட்சியிலும் மொழியால், உடலசைவால், பார்வையால் வேறுபாடு காட்டி அசத்திவிட்டார். என்னை போன்ற அக்மார்க் கமல் ரசிகர்களுக்கு இது ஒரு ஃபுல் மீல்ஸ்.

படத்தில் அடுத்தபடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது வசனம். "இது தான் கதையா?" என்று ஏளனமாக கேட்கும் பாலசந்தரிடம் "இது கதை இல்லை சார், இது தான் காரணம்." என்பதாகட்டும், "என் சொத்தை விட நான் அதிகமா நேசிப்பது எனது டிரைவர், அவரையே தருகிறேன்." என்பதாகட்டும், "என்னோட காதலால் என்னோட கவுரவத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது" என்று ஆன்ட்ரியா கமலிடம் சொல்லும் காட்சியாகட்டும், "ஒரு அருமையான ஸ்க்ரீன்ப்ளே எழுதி எங்கப்பா யாருன்னு இந்த கோடம்பக்கத்துக்கு காட்டனும்" என்று கமலின் மகன் கூறும் வசனமாகட்டும், கமலும் அவரது காதலியும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்களாகட்டும், அனைத்தும் உணர்ச்சிக் குவியல்கள்.

கிப்ரானின் பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது அவரது பின்னணி இசை. உத்தமனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும், மனோரஞ்சனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பல இடங்களில் கமலின் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையில் அமைதியாக இருக்கிறது அவரது இசை. அடுத்ததாக நடனம். முதல் பாடலில் கெட்ட ஆட்டம் போடும் கமலுக்கு 60 வயது என்றால் எவன் நம்புவான்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. மனோரஞ்சனின் வாழ்க்கை ஒரு உணர்ச்சிக் குவியலாக இருப்பதால், உத்தமனின் வாழ்க்கையில் இருக்கும் ப்ளாக் ஹியூமர் சரியாக எடுபடவில்லை. அதே போல உத்தமனின் வாழ்க்கை பகுதிகளை சிறிது குறைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் புலி படு சொதப்பல். பட்ஜெட் காரணமா என்று தெரியவில்லை. மனோரஞ்சனின் வாழ்க்கை பகுதியில் அட்டகாசமாக இருக்கிறது ஒளிப்பதிவு. ஆனால் உத்தமனின் வாழ்க்கை பகுதியில் சில இடங்களில் டல்லாகவும், சில இடங்களில் பளிச் என்றும் இருக்கிறது லைட்டிங். ஒருவேளை எனக்கு தான் அப்படி தெரிந்ததோ என்னவோ.

இறுதியாக, இப்படம் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். படம் பார்க்கும் அனைவரையும் "எவ்வாறு மரணத்தை வெல்வது?" என்று இது சிந்திக்க வைக்கும். ஒரு கலைஞன் தனது கலை படைப்புகளால் மரணத்தை வெல்லலாம். ஒரு தலைவன் தனது தொண்டுகளினால் மரணத்தை வெல்லலாம். ஆனால் நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்ய முடியும்? நாம் மரணித்த பிறகு நமது உறவுகளிடம் நாம் விட்டு செல்வது நம்மை பற்றிய நினைவுகளையே. அந்த நினைவுகளை செம்மைப்படுத்தினாலே நம்மால் எளிதில் மரணத்தை வெல்ல முடியும் என்பதையே இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

Thank you Kamal for another wonderful experience.

15 Comments:

Ramani Arunachalam said...

Good review - esp last paragraph.

வருண் said...

சத்ய பிரியன்: உங்க விமர்சனம் உண்மையிலேயே இதயத்தில் இருந்து வருவதுபோல்தான் இருக்கு. You have thoroughly enjoyed the film for sure! ஐ அம் ஆனஸ்ட் ஹியர். :)

ஆனால் ரசனை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. That's just a simple fact but it complicates everything too.

BTW, my writing about UV is just a "story" not a "real story" if you care to know! Take it easy, SP!

Arasu said...

சத்யப்பிரியன் விமர்சனத்துடன் உடன்படுகிறேன். இதுவரை வந்த கமலின் திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கம் இதற்கு பெரிதும் உதவியிருக்கலாம். நாசர் அசத்தியிருக்கிறார். இடைவேளைக்குப்பின் கமல்/நாசர் நகைச்சுவை களைகட்டுகிறது. வில்லுப்பாட்டுக்கலைஞர் ஆறுமுகம் அவர்களை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி துவங்கியதிலிருந்து, கூத்து முடியும்வரை அசத்திவிட்டார்கள். நானும்கூட Shamithab படத்துக்கான இளையராஜா பாட்டு/பின்னணியிசையோடு ஒப்பிடுகையில் ஜிப்ரானின் பாடல்/இசை மிகச்சாதாரணம் என நினைத்தேன். ஆனால் உத்தமவில்லன் படத்தின் பின்னணியிசை, பாடல் காட்சியமைப்பு, அற்புத நடனங்கள் - எல்லாம் சேர்ந்து ஜிப்ரானின் இசையை கூடுதலாக ரசிக்க வைக்கின்றன. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நம்புகிறேன். “காதலா” பாட்டு நாளாக நாளாக சுவை கூடிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு மெல்லிய சுவைமிகுந்த திரைப்பாடல் கேட்டு ஆண்டுக்கணக்கில் ஆகிறது. எதிர்பார்ப்பின்றி படம் பார்க்கப்போனேன்.I realized that this is both an entertaining and artistic movie. As Varun said, there will be considerable individual variation in the perspectives, appreciation and criticism of a movie. I hope this is going to be a commercial success so that good quality movies like this are produced in Tamil cinema. It is not going to be easy for Kamal to raise to or above the standard set in Uthamavillain.

Arasu said...

”முக்காலமும் உணர்ந்த ஞானிகளும் மரணத்தை ஒருவகையில் வென்றவர்கள்” என்பது மூன்றாவது வழியாக மன்னரிடம், உத்தமன் சொல்கிறார்.

Senthil Kumaran said...

Welcome back Sathya.

படம் மிகவும் சுமார். படு மொக்கை. இந்த படத்தில் என்னதான் உங்களுக்கு பிடித்ததோ?

SathyaPriyan said...

//
Ramani Arunachalam said...
Good review - esp last paragraph.
//
மிக்க நன்றி Ramani.

//
வருண் said...
சத்ய பிரியன்: உங்க விமர்சனம் உண்மையிலேயே இதயத்தில் இருந்து வருவதுபோல்தான் இருக்கு. You have thoroughly enjoyed the film for sure! ஐ அம் ஆனஸ்ட் ஹியர். :)
//
நன்றி வருண். இப்படம் நெடு நாட்களுக்கு பின்னர் என்னை மிகவும் பாதித்த / கவர்ந்த ஒரு கமல் படம்.

//
Arasu said...
சத்யப்பிரியன் விமர்சனத்துடன் உடன்படுகிறேன்.
It is not going to be easy for Kamal to raise to or above the standard set in Uthamavillain.
//
நன்றி Arasu. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

//
Senthil Kumaran said...
படம் மிகவும் சுமார். படு மொக்கை. இந்த படத்தில் என்னதான் உங்களுக்கு பிடித்ததோ?
//
நன்றி Senthil Kumaran. படத்தினை பலரும் கழுவிக் கழுவி ஊற்றி இருக்கிறார்கள். எனக்கு இது ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. விரிவாக நிறைய எழுதலாம் என்றாலும் இப்பொழுது இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

SathyaPriyan said...

வருண் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம். பதிவுக்கு தொடர்புடையது என்பதால் அதையே இங்கும் பதிகிறேன்.

/*********************************/

வருண் என்றைக்கும் இல்லாத திருநாளாக இந்த இரண்டு நாட்களில் பலர் எனது பதிவுக்கு வந்தார்கள். என்னடா அதிசயம் என்று பார்த்தால் தாங்கள் இங்கும், முத்து சிவாவின் பதிவிலும் என்னை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி.

நீங்கள் ஸ்டேவென் கோவே அவர்களின் 7 Habits படித்திருப்பீர்கள். நாம் இறந்த பிறகு நமது இறுதி சடங்கில் நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் நம்மை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அதன் படி வாழ்ந்தால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்று அவர் குறிப்பிடுகிறார். இப்படம் அதன் அடிநாதத்தை தொட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

இப்படத்தில் திரைவாழ்க்கையில் உத்தமனாக காட்சி அளிக்கும் கமல், உண்மையில் பலருக்கும் வில்லனாக இருக்கிறார். கமல் இறந்துவிடுவார் என்று தெரிந்த பிறகு கமலை அவர்கள் மன்னிக்கிறார்கள். அதேபோல அவருக்கு சிலர் வில்லனாக இருக்கிறார்கள். அவர்களை கமல் தனது நிலையை உணர்ந்து மன்னிக்கிறார்.

தான் தவறு செய்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும், தனக்கு தவறு செய்தவர்களை மன்னிக்கவும் மரணம் என்ற நிலை வரை காத்திராமல் முன்பே உணர்ந்து நமது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பதை வேறு தளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார்.

/*********************************/

துளசி கோபால் said...

பலவிதமான விமரிசனங்களை நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன். இப்பவும் இங்கே வருண் மூலமாக வந்தேன்!

கமல் எங்களுக்குப்பிடித்தமான நடிகர் என்பதால் படத்தைப் பற்றிய ஆர்வம் இருக்கிறது என்றாலும் இப்போதைக்குப் படம் பார்க்கும் சாத்தியம் இல்லை.

உங்க விமரிசனம் வாசிக்கும்போது ஒரு எட்டு வருசங்களுக்கு முன்னால் நான் எழுதிய ஒரு கதையில் வரும் வசனம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியலை.

மரணம் அடுத்து நிற்கும்போதுதான் நல்லவனாக ஆகணும் என்பது இல்லை. கொஞ்சம் வயசானாலே இது வரணும். வரலைன்னா.... அந்த வாழ்க்கைக்குப்பொருளே இல்லைதானே?

பிதாஜி என்ன சொல்றார் பாருங்க!

//"அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை பிதா ஜி. கனகாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவில்லை. தூக்கத்தில் கூட ஊருக்குப் போகணும் என்று புலம்பல். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து கூட்டிப்போனால் நல்லது. என்னால் கண்டிப்பாகப் போகவே முடியாது. அதுவும் உங்களை இந்த நிலமையில்.........."


'அதான் சொல்கிறேன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'. இடைமறித்தார்.


" இதோபார் ஹரி. அப்பா சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டாயா? எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது? நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா? உன்னை நம்பி இரண்டு உயிர்கள்..... "//

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி டீச்சர்.

//
மரணம் அடுத்து நிற்கும்போதுதான் நல்லவனாக ஆகணும் என்பது இல்லை. கொஞ்சம் வயசானாலே இது வரணும். வரலைன்னா.... அந்த வாழ்க்கைக்குப்பொருளே இல்லைதானே?
//
நிச்சயமாக டீச்சர். அதைத்தான் இப்படமும் உணர்த்துகிறது.

கமல் பாலசந்தரை தனக்காக படம் இயக்கும்படி கேட்பார். அதற்கு பாலசந்தர் நான் ஏன் உன்னை இயக்க வேண்டும் என்பார். அதற்கு கமல்,

"என்னை மாதிரி திமிர் பிடிச்ச ஆளு சார். நாளைங்கறது future ல எங்கேயோ தூரத்துல இருக்குன்னு நினைக்கிறவன். திடீர்னு எல்லாத்தையும் புரட்டி போடுவது மாதிரி ஒரு நியுஸ் வருது. Well, actually ரெண்டு news வருது! காதல், பாசம், thank you, sorry இதெல்லாம் சொல்றதுக்கே நேரம் இல்லைன்னு புரிய ஆரம்பிக்குது."

இப்படி தொங்குகிறது கமலின் பதில்.

peace said...

படம் பார்க்கவில்லை. ஆப்பிள் நிறுவனரின் நினைவு வந்தது. சாவின் நெருக்கம் அறிந்து வாழ்ந்தது என்னால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் வாழும் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எடுத்துக்கொள் என்று தனது பதினேழாவது வயதில் படித்ததை, அந்த வயதிலிருந்தே கடைபிடித்ததாகச் சொல்வார். அந்த வயதில் அவருடைய முடிவு எப்படி ஏற்படும் என்று தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
Nice review. Will see the movie
www.palebluedotplanet.net

peace said...

படம் பார்க்கவில்லை. ஆப்பிள் நிறுவனரின் நினைவு வந்தது. சாவின் நெருக்கம் அறிந்து வாழ்ந்தது என்னால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் வாழும் வாழ்க்கையின் கடைசி நாள் என்று எடுத்துக்கொள் என்று தனது பதினேழாவது வயதில் படித்ததை, அந்த வயதிலிருந்தே கடைபிடித்தாகச் சொல்வார். அந்த வயதில் அவருடைய முடிவு எப்படி ஏற்படும் என்று தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
Nice review. will see the movie!
www.palebluedotplanet.net

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி peace.

Mythily kasthuri rengan said...

ஹலோ mr.S.P,
இது உங்கள் blog க்கு என் முதல் வருகை. எனது சென்ற பதிவிற்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு எனக்கு பதில் அளிக்கமுடியாத நேர நெருக்கடி. மன்னியுங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. வருணின் உத்தமவில்லன் பதிவுப் பரிந்துரைக்குப்பின் படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். இன்று தான் நேரம் வாய்த்தது. ஒரு முழுமையான விமர்சனமாக எழுத நினைத்திருக்கிறீர்கள். விமர்சனத்தில் கமல் ரசிகர் அதிகம் தெரிகிறாரோ:)
ஆமா, பூஜா தானே ஸ்டில்ஸ் எல்லாம் நிரம்பி வழிந்தார். அவர்க்கு இதில் என்ன வேடம்?ஒ! உத்தமன் ஜோடியோ? பாடல்கள் பெரிய ஹிட் இல்லை என்பதை இப்படியும் சொல்லலாமா!! lol நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இந்த கோடை விடுமுறையை அதற்கு பயன்படுத்தத் தூண்டுகிறது உங்கள் பதிவு:) பார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி!

SathyaPriyan said...

//
Mythily kasthuri rengan said...
இது உங்கள் blog க்கு என் முதல் வருகை.
//
முதல் வருகைக்கு முதலில் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

//
விமர்சனத்தில் கமல் ரசிகர் அதிகம் தெரிகிறாரோ:)
//
அப்படி இல்லை என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். எனது விஸ்வரூபம் திரை விமர்சனத்தை நேரமிருந்தால் படியுங்கள். அதை நான் எழுதியதற்காக பல கமல் ரசிகர்கள் என்னை கோபித்துக் கொண்டனர் :-)

இப்படத்தை நான் மிக முக்கியமான படமாக கருதுவதற்கு காரணம், இப்படம் எனதளவில் நான் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள விரும்புகிறேனோ அதை வலியுறுத்துகிறது. கீழே உள்ளது உத்தம வில்லன் பாடலின் வரிகள்.

"மாளாதது...
கலையும் கவியும்....
மாயாததென்றும் நம்...
அறிவும் அன்பும்...
சாகாவரம் போல்...
சோகம் உண்டோ?..
தீராக் கதையை...
கேட்பார் உண்டோ?.."

Mythily kasthuri rengan said...

சாகாவரம் போல்...
சோகம் உண்டோ?..
தீராக் கதையை...
கேட்பார் உண்டோ?.."


உண்மை தான் ! எத்தனை ஆழமான வரிகள்! அற்புதமான பாடல். என் தம்பி கேட்கிறான் "எப்டி இந்த பாட்டை எல்லாம் கேக்கற?" :)))

வாழ்கை அவனுக்கும் அந்த பக்குவத்தை தரட்டும்:)