Saturday, August 01, 2015


இரு மரணங்களும் கொஞ்சம் வலியும்

சென்ற வாரத்தில் இரண்டு மரணங்கள். இறந்தவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள். ஆனால் ஒருவர் மரணத்துக்கு இந்த தேசமே அழுதது. மற்றொருவர் மரணத்தை இந்த தேசமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் வேதனை என்னவென்றால் பலரும் அந்த மரணத்தையும் எதிர்த்தார்கள் என்பது தான்.

எப்படி அப்துல் கலாம் போன்றவர்களை தமிழர், இஸ்லாமியர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க முடியாதோ, அது போலவே யகூப் மேமன் போன்றவர்களையும் அடக்க முடியாது. அப்துல் கலாம் இந்த தேசத்தின் சொத்து. அனைவருக்கும் பொதுவானவர். அது போலவே யகூப் மேமன் இந்த தேசத்தின் எதிரி.

அவன் ISI பணத்தினை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியவன். 300 அப்பாவிகளை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்த உதவியவன். திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்த உடன் கராச்சியின் உள்ள ISI உளவாளி ஜாலியாவாலாவின் உதவியுடன் குடும்பத்துடன் தப்பி சென்றவன். பாகிஸ்தானின் ISI ஆல் அவனுக்கு யூஸுஃப் அஹமத் என்ற போலி பெயரில் போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அவன் தாய்லாந்தில் ஒளித்து வைக்கப்பட்டான். இறுதி வரை அவனை பாதுகாக்க ISI முயன்றது.

அவன் தானாகவே முன் வந்து சரணடைந்தான் என்பதெல்லாம் கட்டுக் கதை. அவனை நேபாளத்தில் நேபாள போலீசார் கைது செய்தனர் என்பது தான் உண்மை. உண்மை இப்படி இருக்க, என்னமோ அவன் ஒரு மஹாத்மா போலவும் இந்தியா திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது என்பது போலவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முக நூலில் ஒருவர் ஒன்றை பகிர்ந்திருந்தார். சுதந்திர இந்தியாவில் இது வரை 174 பேர் தூக்கில் இடப்பட்டதாகவும், அதில் 15 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும். இதிலிருந்தே தெரியவில்லையா எது உண்மை எது திட்டமிட்டு சொல்லப்பட்ட பொய் என்பது.

அவன் இந்திய உளவுத்துறைக்கு தான் கைதான பிறகு ஒத்துழைப்பு கொடுத்தான் என்பதாலும் தனது குடும்பத்தினர் இந்தியா வர உதவி செய்தான் என்பதாலும் மட்டுமே அவன் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா? உயிரிழந்த 300 பேருக்கும், உடல் உறுப்புகளை இழந்த 2,000 பேருக்கும் இந்திய அரசும் நீதித்துறையும் நியாயம் அளிக்க வேண்டாமா?

பம்பாய் குண்டு வெடிப்பு என்பது பாகிஸ்தானின் ISI யால் திட்டமிடப்பட்டு இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுடன் விவாதிப்பதே சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு நிகர். ஒருவர் என்னடா வென்றால் பம்பாய் குண்டு வெடிப்பு பாஜக மற்றும் சிவசேனையின் மத அரசியலுக்கான பதிலடி என்று சொல்கிறார். பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் அங்குள்ள இந்துக்கள் குண்டு வெடிப்பு நடத்திக் கொண்டா இருக்கிறார்கள்? இதை சொல்வதன் மூலம் மசூதி இடிப்பை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் கூறுவது அப்பாவி மக்களுக்கெதிரான தீவிரவாதம் எதன் காரணமாக வந்தாலும், எதன் பெயரில் வந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டியதே. ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தவே முடியாது.

மற்றொருவர் யாரோ ஒரு பாஜக எம்பி இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போங்கள் என்று உளறினான் என்பதற்காக இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்று எழுதுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒவைசி, "சட்டம் தனது கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த தேசத்தின் 80 கோடி இந்துக்களையும் 15 நிமிடங்களில் அழித்து விடுவோம்" என்று சொன்னது பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.

இஸ்லாமியர்கள் ஹிந்து மத வெறியர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தங்களை ஒவைசி போன்ற மத வெறியர்களிடமிருந்தும், செக்யூலரிசம் பேசும் பன்னாடைகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்வது. இவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியர்கள் என்ற மத சாயம் பூசுபவர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் இறந்த இஸ்லாமியர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க மாட்டார்கள். ஆனால் அஃப்சல் குருவுக்கும், யகூப் மேமனுக்கும் ஆதரவாக வருவார்கள். ஒரு வேளை கசாப் பலரை கொல்லும் காட்சிகள் படமாக்கப் படவில்லை என்றால் அவனுக்கும் ஆதரவாக கிளம்பி இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் நீட்சியாகவே இவர்கள் இருக்கிறார்கள்.



அது சரி, யகூப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. கலாம் பற்றி பேச ஒன்றும் இல்லையா? என்று கேட்டால், பேச நிறைய இருக்கிறது. ஆனால் தேவை இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை. யாருமே பேசவில்லை என்றால் தான் நாம் பேச வேண்டும். இங்கு தான் எல்லோருமே கலாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே. குறிப்பாக ஜெயமோகனின் கலாம் குறித்த கட்டுரை அருமை. கீழே அதிலிருந்து சில பகுதிகள்.

"அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.
"

ஒரு சோறு பதம். அதனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முழுதும் படிக்க இங்கே செல்லுங்கள்.

http://www.jeyamohan.in/77432#

சாரு கேட்கிறார், "கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?" என்று. நியாயமான கேள்வி தான். ஆனால் எந்த நிலையில் இருந்து அப்படி வாழ்கிறோம் என்பது தான் ஒருவனது தன்மையை நிர்ணயிக்கிறது. சாதாரண மக்களாகிய நீங்களும் நானும் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் அதிகார மையத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு தவறு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் அதனை செய்யாமல் இருக்க அசாத்திய மன திடம் வேண்டும். அதற்காகவே கலாம் போற்றப்படுகிறார்.

ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிக்க கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் அவர் செய்த செயல்களை வைத்து தான் அவரை விமர்சிக்கலாமே தவிர அவர் செய்யாததை வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பது சரி என்று எனக்கு படவில்லை. எத்தனையோ பாரதரத்னாக்களை இந்திய மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானோர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் கலாம் நிச்சயம் இடம் பெறுவார். RIP Mr. Kalam.

4 Comments:

Packirisamy N said...

சிறப்பான கட்டுரை.
வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நம்மில் எத்தனை பேர் நல்லவர்களாக இருக்கிறோம் என்பது நம் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.பலரும் வேறு வழியின்றி நல்லவர்களாக இருக்கிறோம். அட! இவர் மட்டும் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்பதன் வெளிப்பாடே சாருவின் இந்தக் கூற்று

வேகநரி said...

மிகவும் அருமையான பதிவு.

SathyaPriyan said...

//
Packirisamy N said...

சிறப்பான கட்டுரை.
வாழ்த்துக்கள்!
//
நன்றி Packirisamy. தொடர்ந்து வாருங்கள்.

//
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
நம்மில் எத்தனை பேர் நல்லவர்களாக இருக்கிறோம் என்பது நம் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.பலரும் வேறு வழியின்றி நல்லவர்களாக இருக்கிறோம். அட! இவர் மட்டும் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்பதன் வெளிப்பாடே சாருவின் இந்தக் கூற்று
//
இருக்கலாம். நன்றாக சொல்லிருக்கிறீர்கள்.

ஆனாலும் கலாம் போன்று நேர்மையாக இருப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டம். ஒரு போலீஸ் விசாரணை தனக்கு தொந்திரவாக இருப்பதால் ஒரு முக்கிய வழக்கில் ஒத்துழைப்பு அளிக்காமல் அதனை வாபஸ் வாங்கியவர் சாரு. இவருக்கு நேர்மை பற்றி பேச தகுதி இல்லை என்பது தான் எனது கருத்து.

//
வேகநரி said...
மிகவும் அருமையான பதிவு.
//
நன்றி. என்னமோ யகூப் மேமன் அப்பாவி போலவும், இந்திய அரசாங்கம் சாலையில் சென்ற யாரோ ஒருவனை கைது செய்ததை போலவும் பேசுகிறார்கள்.

ம்... இதுவும் கடந்து போகும்.