Tuesday, March 13, 2007


கலா'நிதி' மாறன்

கடந்த வாரம் Forbes Magazine உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் என்றும் இல்லாதபடி இந்தியர்கள் பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தன.


முதலாவதாக, முதல் 20 பணக்காரர்களில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் ஐவர். அதற்கு அடுத்தபடியாக மூவர் இந்தியர்கள்.


ஆசியாவில் இதுவரை அதிகமாக இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஜப்பானியர்கள். ஆனால் இந்த ஆண்டு 24 ஜப்பானியர்கள், 20 சீனர்கள், 21 ஹாங்காங் தேசத்தவர்கள் ஆகிய அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டு 36 இந்தியர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.


இந்திய பங்கு சந்தையின் அபார வளர்ச்சியினால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 14 புதியவர்கள் இணைந்து இருக்கிறார்கள்.


இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களின் கூட்டு சொத்து மதிப்புத் தொகை 90 பில்லியன் டாலர்கள். அதாவது இன்றைய நிலவரப்படி 405000 கோடி ரூபாய்கள். இது இந்தியாவின் மொத்த கடன் தொகையில் 80 சதவிகிதம்.


இதை எல்லாம் விட தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில், திரு. கலாநிதி மாறன் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சன் குழுமத்தின் 90 சதவிகித பங்குகளை வகிக்கும் இவரது சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர்கள். அதிலும் பெரும்பாலும் வாரிசுகளாக இடம் பெற்றுள்ள அந்த பட்டியலில் "Self Made" ஆக இடம் பெற்றுள்ளார்.


இவரின் இந்த சாதனையை அரசியல் காரணங்களுக்காக பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இருட்டடிப்பு செய்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், சன் தொலைக்காட்சி கூட இதை அதிகமாக விளம்பரப்படுத்தவில்லை. எங்கே விளம்பரப்படுத்தினால் பிற ஊடகங்கள் ஊழல் சொத்து குவிப்பு என்று குற்றம் சாட்டிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவர் நமக்கு பிடிக்காத ஒரு கட்சியில் இருக்கிறார் என்பதற்காக (அவர் தி.மு.க. வில் அடிப்படை உருப்பினரா? என்பது எனக்கு தெரியாது. ஒரு ஊகத்தில் குறிப்பிடுகிறேன்.) அவரது சாதனைகளை நாம் பாராட்டாமல் விட்டு விட முடியுமா?


அவரது சாதனைகளை மூடி மறைக்க சிலர் கூறு குற்றச்சாட்டுகள் இதோ.


1. அவர் கலைஞரின் பேரன். அதனால் அவருக்கு இது இலகுவானது.


ஒருவர் இவ்வளவு சாதனைகள் படைப்பதற்கு கலைஞரின் பேரன் அல்லது ஒரு மூத்த அரசியல் வாதியின் பேரன் என்ற அந்தஸ்து போதுமானால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூத்த அரசியல் வாதியின் பேரன்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? கலைஞரின் மற்ற பேரர்கள் பேத்திகள் கூட இடம் பெறவில்லையே?


2. இவரது சொத்து மதிப்பாக சொல்லப்படும் பல ஆயிரம் கோடிகள் உண்மையில் கலைஞர் ஊழல் செய்து குவித்தது.


அடிப்படை அறிவு இருக்கும் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். சன் என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதன் financial results என்பது பக்காவாக auditing செய்யப்பட்டு வெளியிடப்படும் ஒன்று. அதில் இவ்வாறு முறைகேடான சொத்துக்களை எல்லாம் revenue வாகவோ profit ஆகவோ காட்ட முடியாது. கலைஞர் தான் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகளை ஓலையூர் பிச்சான்டி, மாயவரம் ராமசாமி, சேத்துப்பட்டு சிங்கமுத்து போன்ற யாராவது பினாமிகள் பெயரில் சேர்ப்பாரே தவிர தனது பேரனின் மீது சேர்த்து "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று கூற மாட்டார்.

3. கலைஞர் ஆட்சியில் இருந்த காரணத்தினால் அவர் பல கடினமான காரியங்களை இலகுவாக சாதித்துக் கொண்டார்.


சன் தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்து (1992) இன்றுவரை இந்த 15 ஆண்டுகளில், 9 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 6 ஆண்டுகள் தான் தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க ஆட்சி செய்த போதும் சன் பின்னடையவில்லை. ஒரு வாதத்திற்காக 1996 இல் இருந்து இன்று வரை தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருக்கிறது (அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி ஆட்சி செய்த காலத்தை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டாலும், மத்திய ஆட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாம் அந்த பட்டியலில் இடம் பெறலாம் என்றால் பா.ஜ.க ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும், இந்த காங்கிரஸ் ஆட்சியில் குவோட்ரோச்சியும் கூட இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டுமே.


ஆனாலும் ஆட்சியில் உள்ள செல்வாக்கை இவர் தனது சுயநலனுக்காக பயன்படுத்தவே இல்லை என்று நான் கூற வரவில்லை. ஆனால் அதை இவர் மட்டுமே செய்யவில்லை. அம்பானி போன்றவர்கள் பலமுறை இதை செய்திருக்கிறார்கள்.

4. தி.மு.க இல்லையென்றால் சன் இல்லை


இதை ஒரு வகையில் ஒப்புக் கொள்ளலாம். சன் வளர்ந்து வந்த காலகட்டங்களில் தி.மு.க. வும் அதன் தலைவர்களும் பெரிதும் உதவி இருக்க கூடும். ஆனால் இப்பொழுது சன் தி.மு.க. விற்கு பலமே அல்லாது தி.மு.க. சன்னிற்கு பலம் இல்லை. தேர்தல் நேரத்தில் பிரச்சார அறிவிப்பு, பிரச்சாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்தல், இலவச விளம்பரங்கள், ஆட்சியில் இருக்கும் போது சாதனைகளை பெரிதாக்கி காட்டுதல், ஆட்சியில் இல்லாதபோது எதிர் கட்சியினரின் செயல்பாட்டுக் குறைகளை பெரிதாக்கி காட்டுதல் போன்ற அனைத்தையும் இலவசமாக தி.மு.க. விற்கு சன் தருகிறது.

5. தமிழ் சினிமாவில் சன் தொலைக்காட்சியின் அராஜகப் பிடி


இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தென்னாடுடைய சிவன் நரியை பரியாக்கி, பரியை நரியாக்கியதை போல சில நல்ல படங்களை தோல்வி அடைய செய்து, சில திராபை படங்களை வெற்றியடைய செய்த பெருமை (???) சன் தொலைக்காட்சியையே சேரும். ஆனாலும் தமிழ் சினிமாவிற்கு சன் தொலைக்காட்சியினால் ஆதாயம் ஒன்றும் இல்லை என்பதில் சிறிதளவும் உண்மை இல்லை. பல படங்களுக்கு சன் நல்ல விலை கொடுத்து வாங்கி விடும் என்ற நம்பிக்கையில் தான் பூஜையே போடுகிறார்கள்.


6. சுமங்கலி கேபிள் விஷன் மூலம் பிற சிறு கேபிள் துறையினரை மிரட்டுதல்.


வன்மையாக கண்டிக்கபட வேண்டியது. மாற்று கருத்திற்கு இடம் இல்லை.

7. தி.மு.க. ஆட்சியில் அரசு விளம்பரங்கள் அனைத்தும் சன்னிற்கே அளிக்கப்படுகின்றன


இது உண்மையா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதில் தவறென்ன இருக்கின்றது? சன் தொலைக்காட்சி மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் விட அதிக நேயர்களை கொண்டிருகிறது என்பது உண்மையல்லவா? அதிக நேயர்களைக் கொண்டிருக்கும் ஒரு தொலைக்காட்சிக்கு முன்னுரிமை அளிப்பது தவறா?

8. Lack of Business Ethics


இதற்கு சமீபத்திய உதாரணம் அசத்தபோவது யாரு? நிகழ்ச்சி. மேலோட்டமாக பார்கும் பொழுது இது சன் நிறுவனத்தினரின் கேவலமான நடத்தை போல தோன்றும். இதற்கு ஒப்பீடாக சொல்லக் கூடிய ஒரு உதாரணம் பார்ப்போம். ஒரு மாணவர் கேம்பஸ் தேர்வில் இன்போஸிஸ் நிறுவனத்தில் தேர்ச்சி பெருகிறார். அவருக்கு நல்ல பயிற்சி அளித்து, அவரது தகுதியை அந்த நிறுவனம் வளர்கிறது. ஒரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் அங்கே பணி செய்த பிறகு அவர் வேறு நிறுவனத்திற்கு (உதாரணம் : விப்ரோ) சென்று விடுகிறார். உடனே விப்ரோ நிறுவனத்திற்கு Business Ethics இல்லை என்று தாம் தூம் என்று குதித்தால் எப்படி? There is no ethics in business. Only success or failure. அப்படியே ethics பற்றி பேச வேண்டும் என்றால், தங்களை வளர்த்து விட்ட நிறுவனத்தை விட்டு செல்பவர்களுக்கு தான் இல்லை என்று சொல்லலாம். மாறாக சன்னை குற்றம் சொல்வது தவறான ஒன்று.

இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் பதில் அளிப்பது இயலாத செயல். நான் அவரது PRO வும் கிடையாது.


ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து, தொழிற்துறையில் எந்தவித முன்னனுபவமும் இல்லாமல், கல்வியை மட்டுமே மூலதனமாக கொண்டு, Petrochemicals, Automobile, Steel, Cement போன்ற உற்பத்தி தொழிற்துறையில் இல்லாமல், தகவல் தொழில்நுட்ப துறையிலும் இல்லாமல், Media & Entertainment துறையில் கால் பதித்து, இந்தியாவில் அந்த துறையில் உள்ள ஜாம்பவான்களான Zee, Star போன்றவற்றின் தலைவர்களால் கூட எட்ட முடியாத உச்சத்தை எட்டி இருக்கிறார் என்றால் அதை சக இந்தியனாக, தமிழனாக பாராட்ட வேண்டியது எனது கடமை.


Hats Off Mr.Maran!


பின்குறிப்பு: எனக்கு எந்த கட்சி சார்பும் கிடையாது. மாறனின் வளர்ச்சி பற்றி பலர் பல கருத்துக்களை கொண்டிருக்கலாம். நான் மேற் கூறியவை எனது கருத்து மட்டுமே. பதிவின் சாரம் கருதி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். வருகைக்கு நன்றி மட்டுமே கூறுவேன்.

10 Comments:

Arunkumar said...

I like Maran as a business man and a good Union Minister. So, Hats off to him.

gulf-tamilan said...

அவரது சாதனைகளை நாம் பாராட்டாமல் விட்டு விட முடியுமா?
Hats Off Mr.Maran!!!
unmai unmai!!!

stalin said...

yes, Mr Maran has to be congratulated for achieving this growth. It may be true that he got some favours because DMK was in power. But,Not all politicians son or grand son has achieved this glory anywhere in India.so, definitely it is because of his hardwork and that needs to be congratulated.

Mookku Sundar said...

ஹலோ அருண்குமார், அது தயாநிதி மாறன். கலாநிதியின் தம்பி. !!!!!!

சத்யா, நல்ல அலசல். சன் டீவியில் பணிபுரிந்த நண்பர் செல்வம் அவரைப் பற்றி பிரமிப்பாக பேசுவார். திமுகவுடன் தொடர்பில்லாத குடும்பத்தில் இருந்திருந்தால் இந்த அளவு வளர்ச்சி பெற்று இருப்பாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்...
இந்த அளவு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பாரா..?? :-(

Dubukku said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/13/forbesmaran/

மயிலாடுதுறை சிவா said...

சத்யா

நல்ல அலசல். நம் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தனையோ பேர் அமெரிக்காவில் படித்தும் "கலாநிதி" போல உயரவில்லை என்பது வெட்ட வெளிச்சம்.

ஓர் தமிழனாக அவர்களின் வெற்றிகளை பாராட்டுவது ஓர் நல்ல செயல்...தொடரட்டும் உங்களது பணி...

மயிலாடுதுறை சிவா...

Priya said...

நல்ல போஸ்ட் சத்யா. மாறனின் சாதனைகள் கண்டிப்பாக பாராட்டப் பட வேண்டியவை. ஒரு backgound ஓட பிறந்துட்டா சொந்த முயற்சில பண்ற சாதனைகாளுக்கு கூட இந்த மாதிரி குற்றச்சாட்டுக்கள் வரது சகஜம் தான். உங்களால முடிஞ்ச அளவு நல்லா justify பண்ணியிருக்கிங்க.

//முதல் 20 பணக்காரர்களில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் ஐவர். அதற்கு அடுத்தபடியாக மூவர் இந்தியர்கள்.
//
பெரிமைப் படக் கூடிய விஷயம். இந்த பணக்கார இந்தியர்கள் இந்தியால ஏழைகளின் எண்ணிக்கைய குறைக்க உதவிப் பண்ணினாங்கனா சந்தோஷம்.

SathyaPriyan said...

Arunkumar, gulf-tamilan, stalin, Mookku Sundar, Dubukku, மயிலாடுதுறை சிவா, Priya வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.

-L-L-D-a-s-u said...

மாறனுக்கு பாராட்டுகள். நடுநிலையான கருத்துகள் . வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் மாறன் திறமையான தொழிலதிபர்.

பி.கு : உங்கள் பதிவு தீநரி உலவியில் சரியாகத் தெரியவில்லை. கவணிக்கவும் .. இதை சரிபடுத்த ஒரிரு நாட்களுக்குமுன் ஒரு பதிவு வந்திருந்தது.

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி -L-L-D-a-s-u.