சூழ்நிலையின் காரணமாக ஆசியாவின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்ள தயாராயின. முதலில் சீனா இந்தியா மீது தனது இருமுனை தாக்குதலை தொடுத்தது. அக்ஸாய் சின் பகுதியிலும், அருணாசல பிரதேச பகுதியிலும் சீனர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அதில் அக்ஸாய் சின் பகுதியில் நடந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்தியப் படையினர் பின் வாங்கினர். மெல்ல மெல்ல இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் இந்தியப் படையினர் விரட்டியடிக்கப் பட்டனர். இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியப் படையினரை சுற்றி வளைத்து அவர்களுக்கு தேவையான தளவாடங்கள், உணவு போன்றவற்றினை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அருணாசல பிரதேச பகுதியிலோ நிலைமை ஓரளவிற்கு இந்தியாவிற்கு சாதகமாக இருந்தது. அப்பகுதியில் அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நடந்த தாக்குதலில் 200 சீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில் 9 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து நடந்த தாக்குதலில் இந்தியர்களை விட 9 மடங்கு அதிகம் சீனர்கள் கொல்லப் பட்டனர்.
அந்நிலையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் சீனப் பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். அவர் அனுப்பிய கடிதத்தில், இரு நாட்டு எல்லைகளையும் பேச்சு வார்த்தை மூலம் வகுத்துக் கொள்ளலாம் என்றும், அருணாச்சல பிரதேசத்தில் மக் மோஹன் எல்லையை அங்கீகரிப்பதாகவும், ஆனால் அக்ஸாய் சின் பகுதியில் மக் டோணால்டு எல்லையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், இரு தரப்பும் பரஸ்பர ஆக்கிரமிப்பை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது. (இந்தியா சீனப் பகுதிகளில் எந்த விதமான ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அக்ஸாய் சின் பகுதியை தனது பகுதி என்று கூறிய சீனா, அப்பகுதியில் இந்தியப் படையினர் இருந்தது இந்தியாவின் ஆக்கிரமிப்பு என்று உரக்க கூவியது.) இதை இந்தியத் தரப்பு ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மீண்டும் போர் தொடங்கியது. (இது நேருவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடதக்கது.)
இம்முறைத் தொடங்கபட்ட போர் இந்தியத் தரப்பினருக்கு சாதகமாக இல்லை. முன்னரே அக்ஸாய் சின் பகுதியில் கை ஓங்கி இருந்த சீனப் படையினர், மேலும் மேலும் முன்னேறி இந்தியப் படையினரை முற்றிலுமாக சுற்றி வளைத்தனர். அவர்கள் சீன எல்லை என்று அவர்கள் வகுத்த எல்லையை எளிதாக அடைந்தனர். பல நூறு இந்தியர்களின் உயிரைக் குடித்த பின் அக்ஸாய் சின் பகுதியில் யுத்தம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது.
அருணாச்சல பிரதேசத்திலோ சீனர்கள் அவர்கள் வகுத்த எல்லையுடன் நிற்காமல் மேலும் மேலும் முன்னேறி அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் பகுதி வரை கைப்பற்றினர். இந்நிலையில் போரை சமாளிக்க அமெரிக்காவின் உதவியை நாடியது இந்திய அரசு. அமெரிக்காவும் தனது படையுதவியை அளிக்க முன்வந்தது. அதே நேரத்தில் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக போரை முற்றிலுமாக நிறுத்த விரும்பியது சீன அரசு. அருணாச்சல பிரதேசத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை இந்தியா வசம் ஒப்படைத்து அப்பகுதியில் இருந்து சீனப் படையினரை வெளியேறவும் உத்தரவிட்டது. சீனாவின் இந்த முடிவிற்கு பின்னால் இருந்த காரணங்களை பற்றி சீனாவின் கம்யூனிஸ அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை. அது இன்று வரை ஒரு ரகசியமாகவே இருக்கிறது. அதே பொழுதில் அக்ஸாய் சின் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து விட்டது. அப்பகுதி முழுதும் சீனாவுடன் இணைக்கப் பட்டது. உலக நாடுகள் சீனாவின் இந்த செயலை "Blatant Chinese Communist Aggression Against India" என்றே கருதுகின்றன.
இந்தியா சந்தித்த இந்த தோல்வியே இந்தியர்களை வீறுகொண்டு எழ வைத்தது. நேருவின் வெளியுறவுக் கொள்கை அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்த பெரும் தோல்விக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. மேனன் அவர்களின் நிர்வாக குறைபாடே காரணம் என்று இந்திய மக்கள் குறை கூறினர். நமது இராணுவத்தை வலிமை உள்ளதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. போர் முடிந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியப் படையினரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப் பட்டது.
இந்தியா சீனாவிடம் சந்தித்த இந்த படுதோல்வியால் கவரப்பட்டு, இந்திய - சீன போர் முடிந்த முன்று ஆண்டுகளுக்குள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தது பாகிஸ்தான். இந்தியா தனது தோல்வியினால் துவண்டு விழாமல் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது என்பதை அறியாமல் இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு கிடைத்தது தக்க பதிலடி.
இன்னும் வரும்...