Friday, July 25, 2008


பெங்களூர் குண்டு வெடிப்பு

இன்றைக்கு காலையில் அலுவலகம் வந்து கொண்டிருந்த பொழுது எனது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு தெரியும் இது காலை நேரம் அவசரமாக நான் அலுவலகம் சென்று கொண்டிருப்பேன் என்று. ஏதேனும் முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே அழைப்பு வரும். எடுத்து பேசிய எனக்கு பெங்களூரில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பினை பற்றிய செய்தி கிடைத்தது.

அலுவலகம் வந்து குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பற்றிய செய்தி அறிந்த பொழுது அதன் பதை பதைப்பு இன்னும் அடங்கவில்லை. BTM, மதிவாலா, அடுகோடி, Richmond Circle என்று நான் நான்காண்டுகள் அதிகம் புழங்கிய இடங்களில் எல்லாம் குண்டு வெடித்திருக்கிறது.

நண்பர்கள் யாரை தொடர்பு கொண்டாலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகிலேயே அதே நேரத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். அவர்களது நல்ல நேரம் அவர்களை காப்பாற்றியது.

ஈராக்கில் குண்டு வெடித்தால் மிகவும் சங்கடமாக இருக்கும்; அதுவே மும்பாய், வாரனாசி, கோவை என்று எங்கு குண்டு வெடித்தாலும் மனம் பதறும்; அதே நேரத்தில் பெங்களூர் என்ற பொழுது பதற்றம் அதிகமாகி ஒரு சில நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன. நான்காண்டுகள் நான் வாழ்ந்த ஊர். எனது சகோதரர் மற்றும் பல நெருங்கிய நண்பர்கள் இருக்கும் ஊர். சும்மாவா சொன்னார்கள் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.

தொலைப்பேசி இணைப்பு முற்றிலுமாக கிடைக்க வில்லை. நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் நலத்தை விசாரித்து ஓரிருவரை கூகுள் டாக்கில் தொடர்பு கொண்டு அனைவரும் நலம் என்று தெரிந்து கொள்வதற்குள் போது போதும் என்றாகி விட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு அடுத்த ஒரு வார காலம் நல்ல வேட்டை. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸிற்கும், தேவகௌடாவிற்கும், குமாரசாமிக்கும் பாஜக மீது குற்றம் சுமத்த மற்றொரு நல்ல வாய்ப்பு. கர்நாடக பாஜக விற்கு வேறு என்ன செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்ற கவலை. சிறு முதலீட்டாளர்களுக்கு இதனால் சந்தை சிறிது ஆட்டம் கண்டு விடுமே என்ற கவலை. சராசரி வாக்காளனுக்கு விலைவாசி உயர்வை எப்படி சந்திப்பது என்ற கவலை.

இந்த நிலையில் இறந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பற்றி கவலைப்பட இங்கே யாரும் இல்லை.

இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகளையும், அவர்கள் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களையும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் குணமாக எனது வழிபாடுகளையும் செலுத்துகிறேன்.

சற்றுமுன் கிடைத்த செய்தி: அஹமதாபாத்தில் 16 இடங்களில் இன்று அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 18 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். மனித உயிரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

4 Comments:

சின்னப் பையன் said...

//நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு அடுத்த ஒரு வார காலம் நல்ல வேட்டை. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸிற்கும், தேவகௌடாவிற்கும், குமாரசாமிக்கும் பாஜக மீது குற்றம் சுமத்த மற்றொரு நல்ல வாய்ப்பு. கர்நாடக பாஜக விற்கு வேறு என்ன செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்ற கவலை. சிறு முதலீட்டாளர்களுக்கு இதனால் சந்தை சிறிது ஆட்டம் கண்டு விடுமே என்ற கவலை. சராசரி வாக்காளனுக்கு விலைவாசி உயர்வை எப்படி சந்திப்பது என்ற கவலை//

100% சரியா சொன்னீங்க...

//இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகளையும், அவர்கள் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களையும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் குணமாக எனது வழிபாடுகளையும் செலுத்துகிறேன்.
//

இறந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள்...:-(

கிரி said...

//நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் என்ன செய்யலாம் என்று காத்துக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு அடுத்த ஒரு வார காலம் நல்ல வேட்டை. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. காங்கிரஸிற்கும், தேவகௌடாவிற்கும், குமாரசாமிக்கும் பாஜக மீது குற்றம் சுமத்த மற்றொரு நல்ல வாய்ப்பு. கர்நாடக பாஜக விற்கு வேறு என்ன செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்ற கவலை. சிறு முதலீட்டாளர்களுக்கு இதனால் சந்தை சிறிது ஆட்டம் கண்டு விடுமே என்ற கவலை. சராசரி வாக்காளனுக்கு விலைவாசி உயர்வை எப்படி சந்திப்பது என்ற கவலை.//

அனைவரின் எண்ணத்தையும் பிரதிபலித்து இருக்கீங்க

பாதிக்கப்பட்டவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது

SathyaPriyan said...

//
ச்சின்னப் பையன் said...
100% சரியா சொன்னீங்க...

கிரி said...
அனைவரின் எண்ணத்தையும் பிரதிபலித்து இருக்கீங்க
//
உண்மை தானே ச்சின்னப் பையன், கிரி.

நானும் கூட அப்படித்தானே. ஈராக்கிலும், இலங்கையிலும், மும்பையிலும், கோவையிலும் நடக்கும் பொழுது ஏற்படும் சோகத்திற்கும், இன்று நான் அடைந்த பதைப்பிற்கும் வேறுபாடு எனக்கே தெரிகிறதே.

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பது எவ்வளவு உண்மை :-(

வருகைக்கு நன்றி.

Arunkumar said...

//
மனித உயிரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
//
very very sad truth !!!