Wednesday, October 29, 2008

அன்பே சிவம் தோல்விப் படமா?

இப்பொழுது தமிழ் பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்விளையாட்டு "சினிமா கேள்வி பதில்கள்". இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் பதில்களை பதிந்துள்ளனர். அதில் நானும் ஒருவன்.

அதிலும் குறிப்பாக "மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?" என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் "அன்பே சிவம்" என்று பதில் அளித்துள்ளனர்.



"மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? அன்பே சிவம்" என்று கூகுளிட்டேன். அது சுமார் 108 என்று விடையளிக்கிறது.

டாக்டர் புருனோ அவர்களோ அன்பே சிவத்தை பற்றி தனிப் பதிவே இட்டுவிட்டார். அப்படத்தினை பற்றிய எனது கருத்துக்களை பிரதிபலிப்பது போலவே அவரது பதிவு இருந்தது.

அன்பே சிவம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருக்கலாம், வனிக ரீதியாக பெரும் தோல்வி கண்ட படமாக இருக்கலாம், ஆனால் மனிதநேயத்தை அன்பே சிவத்தினை காட்டிலும் அழகாக வெளிப்படுத்திய தமிழ் படங்கள் குறைவே.

கமலிடமிருந்து அதன் பிறகு அப்படி ஒரு படம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் பதிவெழுதிய சுமார் 100 பதிவர்களை தாக்கிய படம் அது என்பதை எண்ணி பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு படத்தின் உச்ச கட்ட வெற்றி இது தான்.

அந்த வெற்றியை தந்த கமல், மாதவன், சுந்தர்.சி மற்றும் வித்யாசகர் கூட்டணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, October 20, 2008

சினிமா சினிமா சினிமா தான்

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அழகு பதிவொன்று எழுதும் போது நம்ம ஊர் காரர் தானே என்று நம்பி ஆட்டையில் இழுத்து போட்டு விட்டேன். அதை மனதில் வைத்துக் கொண்டு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் ராதா ஸ்ரீராம்.

சரி எவ்வளவோ செய்து விட்டோம் இதை செய்ய மாட்டோமா என்ன? நாமும் ஆட்டையில் கலந்தாச்சு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சிறு வயதில் எப்பொழுது படம் பார்க்க தொடங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் அப்பொழுது எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. அதனால் அப்பொழுது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பும் படங்களே நான் முதலில் பார்த்த படங்கள். சாந்தா சக்குபாய், தாய் சொல்லை தட்டாதே, ஸ்ரீ வள்ளி போன்ற படங்கள் நினைவில் இருக்கின்றன.

அரங்கில் சென்று பார்த்த படம் "திறமை" என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியிலிருந்து எனது மாமா வந்திருந்தார். அவருடன் சென்றேன்.

பெரிதாக ஒன்றும் உணரவில்லை. தமிழ் சினிமா என்பது பின்னாளில் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தினை பிடித்துக் கொள்ளும் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா எது?

குசேலன். படம் படு திராபை. ஆனாலும் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஏனென்றால் தொடர்ந்து பீமா, அழகிய தமிழ் மகன், குருவி என்று இங்கே அரங்கில் சென்று படம் பார்த்து ஆப்புகள் வாங்கி பழக்கமாகி விட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்ற வாரம் முன்னரே பல முறை பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை மைக்கேல் மதன காமராஜன் படம் பார்த்தேன். வீட்டிலேயே தொலைக் காட்சியில் பார்த்தேன்.

எல்லோரும் பாக்யராஜ் அவர்களையே திரைக்கதை வித்தகர் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் கமலின் திரைக் கதை நேர்த்தி என்னை அதிசயிக்க வைத்தது. ஒவ்வொரு கமலாக கதைக்குள் நுழைத்த விதம், பிசகில்லாமல் பிசகு நடக்கும் நிகழ்வுகள், நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை என்று ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு அனுபவம் தரும் படம் அது.

மற்றபடி இங்கே அரங்கில் வெளியிடப்படும் படங்களை எக்காரணம் கொண்டும் இணையத்திலோ அல்லது DVD யிலோ பார்ப்பது இல்லை.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

எவ்வளவோ இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அன்பே சிவம். கம்யூனிஸம் என்றால் ஏதோ கொடி பிடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு உணர்வு என்பதை புறிய வைத்த படம்.

தமிழ் அல்லாமல் ஹிந்தி சினிமாவில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது Rang De Basanthi. இன்றைய இந்திய சமூகத்தை தோலுரித்து காட்டிய படம்.

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. சொன்னால் பதிவு தொடர் பதிவாகி விடும்.


5 (அ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பூ கற்பு பற்றி சொன்ன கருத்திற்கு வந்த எதிர்ப்புகள். அவர் சொன்னதை முழுதும் புறிந்து கொள்ளாமல் அவருக்கு வந்த எதிர்ப்புகள் என்னை மிகவும் வருத்தமடைய செய்தன.

ஒருவனுக்கு ஒருத்தி, தமிழ் கலாசாரம் என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் நாம் வசதியாக தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு AIDS இருப்பதை மறந்து விடுகிறோம்.


5 (ஆ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரம். பல காட்சிகளை சொல்லலாம். உதாரணத்திற்கு பல்ராம் நாயுடு கோவிந்தை விசாரணை செய்யும் காட்சியில், "இங்க என்ன first night ஆ நடக்குது light போடுடா." என்று சொல்லும் அந்த ஒரு காட்சிக்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

அதே போல பல்ராம் நாயுடுவும் கிருஷ்ணவேனியும் காரில் பயணிக்கும் பொழுது கோவிந்த் பின்னால் ஓடி வருவார். அப்பொழுது கிருஷ்ணவேனியின் கையில் தண்ணீர் புட்டி இருக்கும். பல்ராம் நாயுடு ஓட்டுனரை பார்த்து "ஆக்ஸிலரேட்டர் இருக்குல்ல அழுத்து" என்பார். அப்பொழுது சரியாக கிருஷ்ணவேனியின் கையில் உள்ள புட்டி பின்னால் செல்லும், அதே நேரத்தில் கோவிந்தை விட்டு கார் வெகு வேகமாக அகலும். கோவிந்தின் உருவம் சிறியதாகும்.

இப்படி பல இடங்களில் அதிசியத்து போனேன். Simply amazing.


6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வேறு வேலை. தினமலர், குமுதம், குங்குமம் என்று எதை எடுத்தாலும் முதலில் படிப்பது அது தான். முன்பு கிசு கிசுக்களையும் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலமாக நடிக நடிகைகளும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்ற எண்ணம் மேலோங்க அத்தகைய செய்திகளை இப்பொழுது விரும்பி படிப்பதில்லை.

7.தமிழ் சினிமா இசை?

அதனை தவிர்த்து வேறு இசையை நான் அறியேன். சிறு வயது முதல் தமிழ் திரை பாடல்கள் தான் எனக்கு உற்சாக டானிக்.

ரஹ்மான் தவிர்த்து, ஹாரிஸ், யுவன், வித்யாசாகர் என்று பலரும் கலக்கிக் கொண்டிருந்தாலும் எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கில மொழி படங்கள் அதிகம் பார்ப்பது இல்லை. ஹிந்தி படங்கள் அதிகம் பார்ப்பேன்.கடந்த மூன்றாண்டுகளில் நான் பார்த்த பல ஹிந்தி படங்கள் என்னை மிகவும் பாதித்தன.

Black, Cheeni Kum, Rang De Basanthi, Tare Zameen Par, Swades, Kabhi Alvida Na Kehena என்று எத்தனையோ படங்கள், சமீபத்திய Rock On வரை.

இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு என்னையும் அறியாமல் பெருமூச்சு வருகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வராமல் இல்லை. ஆனால் அமிதாப், ஷாருக், ஆமீர் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இவை. தமிழில் கமல் தவிர்த்து ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் இது போன்ற படங்களை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கமலும் கூட 100 கோடி, 200 கோடி என்று கோடிகளின் விளையாட்டில் இறங்குவதை பார்க்கும் பொழுது வருத்தமே மேலோங்குகிறது.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

சத்தியமாக இல்லை. ஒரு வாடிக்கையாளனுக்கும், பொருள் தயாரிப்பாளனுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவின் நடிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தமிழக அரசியலில் தேடிக் கொண்டிருக்கும் வரை, தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தங்கள் அபிமான நடிகர்களின் கட்-அவுட் மீது பாலாய் கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும் வரை தமிழ் சினிமாவின் எதிர் காலம் ஒன்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா ஒன்றும் அத்தியாவசிய சேவை கிடையாது. ஒரு வருடம் மருத்துவத்தையோ, கல்வியையோ, போக்குவரத்தையோ, காவல் துறையையோ செயல் படாமல் செய்தால் ஏற்படும் விளைவுகளுடன் ஒப்பிடுகையில் சினிமாவை தடை செய்தால் ஏற்படும் விளைவுகள் துச்சம்.

தமிழ் சினிமாவை தொழிலாக கொண்ட பலர் வேலை வாய்ப்பை இழப்பார்கள். நேரடி மற்றும் பெரிய பாதிப்பு அவர்களுக்கு தான்.

ஊடகங்களுக்கு மறைமுக பாதிப்பு இருக்கும். அவர்கள் வேறு celebrity க்களை தேடி செல்வார்கள். அவர்களின் செய்திப் பசிக்கு பலியாக பலர் காத்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை.

என்னை போன்ற வாடிக்கையாளனுக்கு தமிழ் சினிமாவில் பொழுது போக்கு கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது ஹிந்தி சினிமா அல்லது ஆங்கில சினிமா. பொழுது போக்கிற்கு பஞ்சமா என்ன?

அதிலும் அமெரிக்காவில் Whitewater Rafting, Skiing, Kayaking, Trekking, Biking என்று எவ்வளவோ பொழுது போக்குகள் உள்ளன. பொழுது போக்குகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. நமக்கு தான் நேரம் குறைவு.


"கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி மாமா!, பதில் சொல்லி பாருங்க அப்போதான் அதோட கஷ்டம் புறியும்." என்று பஞ்சதந்திரத்தில் கமல் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பது இந்தப் பதிவினை எழுதும் பொழுது தான் புறிந்தது.

எப்படியோ பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். மற்றபடி இந்தப் பதிவு என்னை எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பினை அசை போட வைத்தது. பல படங்களை பார்க்கும் பொழுது நடந்த நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நண்பர்கள் பலரை மீண்டும் நினைவூட்டியது. மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமானது.

அதனை ஏற்படுத்தி கொடுத்த ராதா ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் மீண்டும் அழைக்கப் போவதில்லை. பதிவினை படிப்பவர்கள் யாருக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் எழுதுங்கள்.

மீண்டும் நன்றி.

Friday, October 17, 2008

அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா?

அமெரிக்க நிதி நிறுவனங்களை சுனாமியாய் தாக்கி வரும் இந்த பொருளாதார நெருக்கடியின் மூலமான Housing Crisis அடுத்து இந்தியாவில் வரும் என்றே இந்தியாவில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் பலரும் எதிர் பார்க்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள் யாரிடம் சமீப காலமாக பேசினாலும் இதனை பற்றிய விவாதம் எழுந்து விடுகிறது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாய் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவுகளுடன் சேர்த்து ஆட்களையும் குறைக்க தொடங்கியுள்ளனர். அதனால் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wall Street ஆட்டம் கண்டதால் மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீட்டுக்கட்டு மாளிகையில் ஒரு சீட்டை சிறிது அசைத்தால் மொத்த மாளிகையும் தொடர்ந்து பொல பொலவென்று விழுவது போல அங்கங்கே chain reactions நடக்க தொடங்கியுள்ளன.

நான் ஒரு பொருளாதார நிபுணன் கிடையாது என்றாலும் இதனை பற்றிய எனது கருத்துக்களை சொல்லலாம் என்பதினாலேயே இந்தப் பதிவு. அமெரிக்க நிலைமையையும் இந்திய நிலைமையையும் ஒவ்வொன்றாக கீழே ஒப்பிட்டுளேன். ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

Sub-Prime Crisis என்றால் என்ன என்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு எளிமையாக சொன்னால் கடனை திருப்பி கொடுக்கவே முடியாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு கூட வீட்டு விலை பல மடங்கு ஏறிவிடும் என்று ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு கடன் கொடுப்பதே அது.

முதலில் அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். 1997 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அப்போதைய அதிபர் கிளிண்டனிடமிருந்து FannieMae மற்றும் FreddieMac நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. Sub-Prime கடன்களுக்கு வித்திட்டவர் அவர் தான்.

நிதி நிறுவனங்கள் முதலில் இதற்கு மறுத்தாலும், பின்னர் வீட்டின் விலை பல மடங்கு ஏறுவதால் கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும் வீட்டினை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கடனை கொடுக்க தொடங்கின. 0% down payment கொடுத்து, நிரந்தர வருமானமோ, இல்லை சேமிப்போ எதுவுமே இல்லாதவர்கள் கூட வீடு வாங்கலாம் என்ற நிலை வந்தது. அவர்கள் மாதம் கட்ட வேண்டிய பணத்தினை குறைக்க 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் கொடுக்கப்பட்டன.

வீட்டுக் கடன்களை வசூலிக்க 20 - 30 ஆண்டுகள் ஆகும் என்பதால் பலருக்கும் கடன் கொடுத்து தங்களிடம் உள்ள பணம் பெருமளவில் குறைந்து விட்ட நேரத்தில் புதிதாக வாங்குபவர்களுக்கு பணத்தினை கொடுக்க முடியாத நிலையில் இருந்த வங்கிகள் Lehman Brothers போன்ற நிறுவனங்களை நாடின.

Lehman Brothers போன்ற நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கடன்களை வாங்கி அதனை சிறு சிறு CDO க்களாக மாற்றி பல வளரும் நாடுகளில் முதலீடு செய்தன. பணத்தின் மீதுள்ள ஆசையினால் AIG போன்ற insurance நிறுவனங்கள் அதனை insure செய்தன.

அதனுடன் மட்டுமே விட்டிருந்தால் கூட பரவாயில்லை. புதிதாக வீடு வாங்குபவர்களை மட்டுமே நம்பினால் சந்தை பெரிதாகாது என்ற எண்ணத்தில் முன்னரே வீடு வாங்கியவர்களுக்கும் அவர்களின் வீட்டின் மதிப்பின் படி கடன்கள் கொடுக்கப்பட்டன. அதாவது ஒருவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு வீட்டினை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் அவரது வீட்டின் மதிப்பு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து விட்டதென்றால் அவருக்கு மேலும் இரண்டு லட்சம் டாலர்கள் கடனாக கொடுக்கப்பட்டன. இதற்கு பெயர் Home Equity Loan.

இதனால் பலரும் வீட்டின் மதிப்பில் 100 சதவிகிதமோ அல்லது குறைந்த பட்சம் 80 சதவிகிதமோ கடன் வைத்திருப்பவர்களாக ஆனார்கள்.

இது எல்லாமே ஒழுங்காக நடந்திருக்கும் முறையாக திருப்பிக் கொடுக்கும் மக்களுக்கு மட்டுமே கடன் கொடுத்திருந்தால்.

ஆனால் sub-prime கடன்களினால், 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் reset ஆக மாதம் கட்ட வேண்டிய பணம் உயர்ந்து பலரும் bankruptcy file செய்து வீட்டின் சாவியினை வங்கியிடம் கொடுத்துவிட்டார்கள். ஆரம்பித்தது ஆப்பு. Supply அதிகமானது, demand குறைந்தது. வீடுகளின் விலையும் குறைந்தது.

சரி இதுவே இந்தியாவில் எப்படி என்று பார்க்கலாம். இந்தியாவில் முதலில் 0% down payment என்ற கடன் முறையே கிடையாது. வீட்டின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கடனாக கொடுக்கப்படும். மேலும் ஆளுக்கு தகுந்த வட்டி விகிதம் எல்லாம் கிடையாது. அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் மட்டுமே. கடன் கொடுப்பவர் தங்கள் நலனுக்காக வட்டியை கூட்டியோ குறைத்தோ கொடுக்க முடியாது.

கடன் வாங்குபவர்களுக்கு நிரந்தர வேலை அவசியம். அப்படி இல்லையென்றால் வேறு சொத்துக்கள் இருக்க வேண்டும். வட்டி விகிதம் அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம். Interest Only, Arm Loans இதெல்லாம் கிடையவே கிடையாது. மேலும் bankruptcy file செய்வதெல்லாம் இந்தியாவில் எளிதும் கிடையாது. கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டிற்கு குண்டர்கள் வருவார்கள்.

இந்த Home Equity என்பதும் இந்தியாவில் கிடையவே கிடையாது. 10 லட்சம் மதிப்புள்ள வீடு 20 லட்சம் ஆனாலும் யாரும் புதிதாக 10 லட்சம் கடன் வாங்கப் போவதில்லை. அப்படியே கடன் வாங்க முற்பட்டாலும் அவர்களுக்கு திருப்பி செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதை கொண்டே வங்கிகள் கடன் கொடுக்கும்.

அடுத்த கட்டமாக இந்தியாவில் நகரத்தில் உள்ள நிலங்கள் குறைவு, மக்கள் தொகை அதிகம். மக்களுக்கு வசிக்க வீடு தேவை. அதனால் அவ்வளவு எளிதாக தேவைக்கு அதிகமான வீடுகள் எல்லாம் விற்பனைக்கு வராது. அப்படியே excess supply ஏற்பட்டாலும் பெரிய Real Estate முதலைகள் அனைத்து புதிய வீடுகளையும் வாங்கி வைத்து விற்காமல் Virtual Demand Hiking என்ற சூது விளையாட்டை செய்ய முடியும்.

மேலும் இந்தியாவில் "Real Estate is driven by Black Money". வேளச்சேரியில் இரண்டு கோடி ரூபாய் விற்கும் ஒரு மூன்று பெட்ரூம் அபார்ட்மென்ட் விற்பனையாளரிடம் சென்று கேட்டால், NRI க்கள் வாங்குகிறார்கள் என்றும், IT மக்கள் வாங்குகிறார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் இது இரண்டாகவும் இருக்கும் எனக்கு தெரியும் மாத சம்பளம் வாங்கும் எவ்வளவு மக்களால் அதனை வாங்க முடியும் என்று. உண்மையில் அதனை வாங்குபவர்கள் சினிமாக் காரர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், இவர்களின் பினாமிகள். இவர்கள் Return on Investment இற்காக இந்த வீடுகளை வாங்குவதில்லை. அவர்களின் நோக்கமே வேறு. மேலும் அவர்கள் கடன் வாங்கி வீடுகளை வாங்குவதும் இல்லை.

அதனால் வீட்டின் விலை குறைந்தாலும் வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அதனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் வீட்டின் விலை பல மடங்கு இந்தியாவில் இறங்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஒரு சில இடங்களில் ஒரு சில சதவிகிதம் இறங்கலாம். பலர் வேலை வாய்ப்பை இழந்தால் வாடகை பெருமளவில் குறையலாம். மற்றபடி அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார வீழ்ச்சியினை போல ஒன்றை இந்தியாவும் சந்திக்கும் என்பது ஒரு மாயத் தோற்றமே.

Wednesday, October 15, 2008

Population Zero

சென்ற வாரம் National Geographic தொலைக்காட்சியில் Aftermath Population Zero என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதாவது ஒரு நாள் காலை மனிதர்கள் எல்லாம் உலகிலிருந்து மறைந்து விட்டால் என்ன ஆகும் என்பது தான் நிகழ்ச்சியின் கரு.

வட அமெரிக்காவை மட்டும் மூலமாக எடுத்துக் கொண்டு அட்டகாசமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மணி நேர நிகழ்ச்சி. முதலில் உணவு இல்லாமல் தவிக்கும் வளர்ப்பு பிராணிகள், விலங்கியல் பூங்காவிலிருந்து மின்சார வேலி பழுதானதால் உடைத்துக் கொண்டு வெளி வரும் வன விலங்குகள் என்று ஆரம்பமே படு அமர்க்களம். உணவினை தேடி வீதிக்கு வரும் சிங்கமும் நாயும் சந்தித்துக் கொள்கின்றன. எலிகள் பெரிய பெரிய மளிகை கடைகளில் தஞ்சம் புகுகின்றன.

சுமார் 7 நாட்கள் வரை தானியங்கி முறையில் இயங்கும் அணுமின் நிலையங்கள் எட்டாவது நாளில் தனது செயல்பாடை இழந்து உலகமே சந்தித்திராத அணுச்சிதைவு நடக்கின்றது. அருகில் உள்ள மரங்கள், விலங்குகள் அனைத்தும் இறக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் நடந்த குண்டு வெடிப்பை காட்டிலும் சுமார் 1000 மடங்கு அதிகமான சேதம் ஒவ்வொரு அணு உலையிலும் நடக்கிறது.

நதிகள் அணைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு பயணிக்கின்றன. இரவில் விளக்குகள் இல்லாத காரணத்தினால் பறவைகள் பறக்கும் பொழுது விளக்குகளை நட்சத்திரமாக எண்ணி குழப்பிக் கொள்ளாமல் தங்கள் இலக்குகளை அடைகின்றன.

230 ஆண்டுகளில் அணு உலை வெடிப்பினால் நிகழ்ந்த சேதங்கள் அனைத்தும் துடைக்கப்படுகின்றன. Global Warming முற்றிலும் ஒடுக்கப்படுகின்றது. காற்றும் நீரும் தூய்மையடைகிறது. குறிப்பாக Manhattan நகரமே அடர்ந்த காடாக மாறுகிறது.


மேலே மனிதர்கள் மறைந்த சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர் இருக்கும் Manhattan மாநகரம்.

Statue of Liberty உடைந்து போகிறது. மனிதர்கள் வானத்தில் விட்டு சென்ற 25000 த்திற்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் வெடித்து சிதறுகின்றன. நதிகள் அணைகளை உடைத்துக் கொண்டு பயணிப்பதால் பல பாலை வனங்கள் சோலைகளாகின்றன. பல புதிய ஏரிகள் உருவாகின்றன.

பல புதிய விலங்கினங்களும் உருவாகின்றன. ஓநாயும் நாயும் புணர்ந்து புதிய வகை உயிரினங்கள் வருகின்றது. ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத Stainless Steel பொருட்களும், கை தொலைபேசிகளும், மற்ற பிளாஸ்டிக் பொருட்களும் மனிதர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களாக நம்மை மிரட்டுகின்றன.

"It took thousands of years for Human to conquer the earth from the nature. It only takes a couple of hundred years for the nature to regain it back" என்று முடிகிறது அந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை பார்த்த பின் எனக்கு தோன்றியது இது தான். "Nature is above everyone. Toughest species survive." இது தான் அந்த நிகழ்ச்சியில் நான் கற்றுக் கொண்ட பாடம். பொருளாதார வீழ்ச்சியில் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு தேவையான பாடமாகவும் அது அமைந்தது.