Friday, May 13, 2011


நல்லதொரு தொடக்கம்


2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், ஒன்றே ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது.

பணம், இலவசங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கும் முதுகெலும்பில்லாதவன் தமிழன் இல்லை என்பது தான் அது. இந்த தேர்தலில் மக்கள் மிகவும் சரியானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். பண பலம், ஆட்சி பலம் அனைத்தையும் கடந்து அதிமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பின் வரும் காரணிகளே வெற்றியை தீர்மானிக்கும் என்று நான் முன்னர் ஊகித்தேன்.

1. மின் வெட்டு
2. 2G ஊழல்
3. விலைவாசி உயர்வு
4. தமிழக மீனவர்கள் பலி
5. சட்டம் ஒழுங்கு
6. தமிழ் சினிமாவில் குடும்ப ஆதிக்கம்
7. மணல் கொள்ளை

சுமார் 80 சதவிகித ஓட்டு பதிவு என்ற உடனேயே எனக்கு எனது எண்ணம் வலுப்பட்டது.

ஆனாலும் 140 இடங்கள் அதிமுக விற்கு கிடைக்கும் என்றே நான் நினைத்தேன். அதிலும் முக்கிய திமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்று திமுக பிரதான எதிர் கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக விடம் இழந்து விட்டது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன், வடிவேலு, குஷ்பு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், வாசன், பீட்டர் அல்போன்ஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களின் பிரச்சாரம், திமுக ஊடகங்கள் செய்த விஜயகாந்தின் மீதான தாக்குதல் போன்ற பலவற்றையும் மீறி கிடைத்திருக்கும் இந்த வெற்றி சதாரணமானது அல்ல. அதிமுக தரப்பில் ஜெயலலிதா மற்றும் தா. பாண்டியன் தவிர்த்து வேறு ஒருவரின் பேச்சையும், பிரசாரத்தையும் காது கொடுத்து கேட்க முடியாது.

அவ்வாறு இருந்தும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு திமுக ஆட்சி மீதிருந்த வெறுப்பே காரணம்.

நிச்சயமாக அதிமுக வின் இந்த அமோக வெற்றி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. திமுக ஆட்சி நிச்சயமாக போக வேண்டிய ஆட்சி.

1. 2G ஊழல் எல்லாம் நகரத்தில் தான் எடுபடும்.
2. கிராமத்தில் ஒரு ரூபாய் அரிசியை வைத்தே ஜெயித்து விடலாம்.
3. நகரத்தில் ஒருவரும் வந்து ஓட்டு போடப்போவதில்லை.
4. இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம்.
5. மின் வெட்டிற்கு காரணம் முந்தைய அதிமுக ஆட்சி தான் என்று மக்களை நம்ப வைத்து விடலாம்.

என்றெல்லாம் திமுக தலைமை நினைத்ததை பொய்யாக்கி விட்டார்கள் தமிழ் மக்கள்.

திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞர், பின்வரும் குறள்களை ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முறையாவது படித்திருக்கலாம்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.


எது எப்படியோ திமுக வின் இந்த தோல்வியிலிருந்து அடுத்து வரப்போகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்று, நல்லாட்சி தருவார்கள் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களே. வாருங்கள், நல்லாட்சி தாருங்கள்.

பின்னர் சேர்த்தது: இங்கு அமெரிக்காவில், 10 மணிநேர பின்னடைவில் தான் செய்திகள் ஒளிபரப்பப்படும். இப்பொழுது தேர்தல் முடிவுகள் தெரிந்த நிலையில், நக்கீரன் கோபால் கலைஞர் டிவியில் தங்களது தேர்தல் கணிப்புகள் தான் சிறந்தது, திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று வடிவேலு ரேஞ்சிற்கு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

0 Comments: