Thursday, February 02, 2012


பொடிமாஸ் - 02/02/2012

2G விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகச்சரியான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. விதிகளுக்கு மீறி வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டதுடன், அவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு பெரிதாக அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக உரிமம் வழங்க ஏல முறையை பரிந்துரை செய்திருக்கிறது. 2G விவகாரத்தில் அரசுக்கு நஷ்டமே ஏற்படவில்லை என்று முழு பூசணியை சோற்றில் மறைக்கப் பார்த்த கபில் சிபில் போன்றோர் தங்களது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. என்ன விதிகளுக்கு மீறி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற முடியாது என்றும் ஒரு தீர்ப்பை சேர்த்திருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றபடி தீர்ப்பளித்த நீதிபதிக்கும் வழக்கு தொடர்ந்த சுப்ரமணியம் சுவாமிக்கும் எனது நன்றிகள்.இரண்டு நாட்களாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் நடந்த குடுமிப்பிடி சண்டையை பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. இணையத்தில் வெளிவந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் தவறு பெரிதாக விஜயகாந்தின் மீது இல்லை என்றே தெரிகிறது. ஆனால் என்ன நாக்கை மடித்து, கையை சுழற்றி பேசுவதெல்லாம் அவர் திரைப்படத்தில் செய்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டசபைக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை காப்பாற்றுவது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களது கடமை. ஆனால் இதில் உச்சகட்ட காமெடியே சட்டசபையில் எதிர் கட்சியினருக்கு தரும் மரியாதையை பற்றி கருணாநிதி விமர்சித்தது தான். 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்களுக்கு ஈடான சம்பவங்கள் வேறு எந்த சட்டசபையிலும் நடந்திருக்க முடியாது. என்ன நமது மக்களின் மறதியின் மீதான அவரது நம்பிக்கை அவரை அவ்வாறு பேச தூண்டி இருக்க கூடும். 1992 முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியையே மறந்து வாக்களித்தவர்கள், 1989 ஆம் ஆண்டு நடந்ததையா நினைவில் வைத்துக் கொள்ள போகிறார்கள்.

அதே நேரத்தில் ஜெயலலிதா ஆத்திரத்தில் நிதானம் இழந்து பேசியது கேவலமாக இருக்கிறது. அதிமுகவினருக்கு மட்டும் அல்ல, விஜயகாந்திற்கும், கருணாநிதிக்கும் கூட அவர்தான் முதல்வர். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதி ஆட்சியில் தொடங்கி செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டங்களாக பார்த்து செயலிழக்க செய்வது, திமுகவினர் மீது வழக்குகளை தொடுப்பது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அமைச்சர்களை மாற்றுவது அல்லது அவர்களது இலாக்காக்களை மாற்றுவது என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்காமல் 2016 இல் மீண்டும் ஒரு தேர்தல் வரும் என்பதை நினைவில் கொண்டு ஒழுங்கான ஆட்சி தந்தால் அவருக்கும் நல்லது தமிழக மக்களுக்கும் நல்லது.துக்ளக் தர்பார் என்றதும் இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் சோ பேசியது நினைவிற்கு வருகிறது. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆனால் யாருக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ இந்திய அதிபருக்கு தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.எதிர்பார்த்தது போலவே நமது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அது ஆச்சரியம். ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அவர்களை மண்ணை கவ்வச் செய்திருக்கிறது. மூன்றாவதிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துகள்.திரையுலகினர் பங்கேற்கும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் அருமையாக இருக்கிறது. தெலுங்கு அணி அட்டகாசமாக விளையாடுகிறது. நாம் ஓரளவிற்கு நன்றாக விளையாடுகிறோம். நமது அடுத்த போட்டி தெலுங்கு அணியினருடன். இதில் நாம் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம். இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.இந்த மாதத்தில் மூன்று படங்களை நான் பெரிதும் எதிர் பார்க்கிறேன். முதல் படம் பிரகாஷ்ராஜின் தோணி. அருமையான கதைக் களம், நமது ராஜாவின் பின்னணி இசை, பிரகாஷ்ராஜின் முதல் இயக்கம் தமிழில் என்று ஆவலை தூண்டுகிறது இப்படம். அடுத்தது பசங்க பாண்டிராஜின் மெரினா. டிரைலர் நன்றாக வந்திருக்கிறது. சிவ கார்த்திகேயனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கட்டாயம் பார்த்துவிட வேண்டும். மூன்றாவது காதலில் சொதப்புவது எப்படி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனின் குறும் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரது மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் எனக்கு பிடித்த நடிகர் சித்தார்த்தும் இருக்கிறார். நிரவ் ஷா கேமரா. முதல் இரண்டு படங்களும் இங்கே அமெரிக்காவில் வெளிவருமா என்று தெரியவில்லை. அப்படியே வெளி வந்தாலும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூ ஜெர்ஸி, சான் ஃப்ரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் மட்டுமே வெளி வர சாத்தியங்கள் அதிகம். ஆனால் இங்கே சித்தார்த்துக்கு ஒரு சிறிய மார்க்கெட் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தினர் பலர் அவரது ரசிகர்கள். அதனால் ஒரு வேளை அவரது படம் வெளி வந்தாலும் வரலாம். இந்த மூன்று படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.சமீபத்தில் தான் திருக்குறள் மேலாண்மை என்ற தளத்தினை பற்றி எனக்கு தெரிந்தது. வேறு எதையோ தேடும் பொழுது இது கிடைத்தது. திருக்குறளில் உள்ள நிர்வாக மேலாண்மை கருத்துக்களை தெளிவாக விளக்குகிறார் இவர். நீங்களும் சென்று பாருங்களேன். அருமையாக இருக்கிறது.

http://kuralmanagement.wordpress.com

0 Comments: