Tuesday, April 24, 2012


S.Ve.சேகரின் கனவு நினைவானது - திருச்சிக்கு வந்தது புதிய பீச்

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகத்தில் S.Ve.சேகர் தினமுழக்கம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி கொடுப்பார். அதில் "நாட்டுக்கு புதுமையாக செய்வதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று பேட்டி எடுப்பவர் கேட்பார். அதற்கு பதில் சொல்லும் சேகர் அடுத்த மாதம் மெரினா பீச்சை தஞ்சாவூருக்கு மாற்ற இருப்பதாக கூறுவார். பின்னர் அவரே தொடர்ந்து "பீச்சை எடுத்தால் அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் திருச்சி மலைக் கோட்டை வருகிறது. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் தஞ்சை பெரிய கோவில் வரப் போகிறது. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அந்த இடத்தில் தில்லியில் உள்ள குதுப்மினார் வருகிறகு. அந்த இடம் காலியாகுமே என்று கவலையா? அது வடநாட்டவர் பிரச்சனை." என்று கூறி முடிப்பார்.

ஆனால் அப்படியெல்லாம் விபரீதமாக முடிவெடுக்காமல் திருச்சி மாநகர கமிஷனர் திரு.செல்வராஜ் அவர்கள் திருச்சி அம்மா மண்டப படித்துறையில் இருந்து காவிரி பாலம் வரை இருக்கும் பகுதியை பீச் போல வடிவமைத்திருக்கிறார். இது அமைச்சர் திரு.N.R.சிவபதி அவர்களின் திட்டம் என்று தெரிகிறது.

காவிரியில் நீர் முற்றிலும் வற்றி விட்டதாலும், இனி பாசனத்திற்காக ஆடி மாதம் மட்டுமே மேட்டூரிலிருந்து நீர் திறந்து விட்டப்படும் என்பதாலும் இந்த திட்டம் கை கூடி இருக்கிறது. பள்ளி விடுமுறை காலம் என்பதாலும், கோடை காலத்தில் வெய்யிலின் கொடுமையிலிருந்து திருச்சி மக்களை சில மணித்துளிகளாவது தப்புவிக்கும் நோக்கிலும் இது செயல் படுத்தப் பட்டுள்ளது.

இதற்கு பரவலாக திருச்சி மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். இப்பொழுதே மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக வருகிறதாம். மேலும் மாலை நேரங்களில் எப்பொழுதும் மக்கள் கூடும் காவிரி பாலத்தில் இதனால் கூட்டம் குறைவாக உள்ளது என்றும், இதனால் விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.

மக்கள் பொறுப்பாக நடந்து அந்த இடத்தை மாசு படுத்தாமல் இருந்தால் நல்லது. இந்த திட்டம் உறுவாக பாடுபட்ட திரு.செல்வராஜ் மற்றும் திரு.N.R.சிவபதி இருவருக்கும் திருச்சி மக்கள் சார்பில் எனது நன்றிகள்.

தொடர்புடைய செய்தி:

http://timesofindia.indiatimes.com/city/madurai/Cauvery-turns-Trichys-beach/articleshow/12846484.cms

9 Comments:

Senthil Kumaran said...

//
கோடை காலத்தில் வெய்யிலின் கொடுமையிலிருந்து திருச்சி மக்களை சில மணித்துளிகளாவது தப்புவிக்கும் நோக்கிலும் இது செயல் படுத்தப் பட்டுள்ளது
//
அது சரி. ஆனால் சாமான்யன் கூறுவது என்னவென்றால், இதையெல்லாம் புடுங்காமல் ஒழுங்காக மின்சாரம் கொடுத்தால் எங்களை நாங்களே வெய்யிலின் கொடுமையிலிருந்து காத்துக் கொள்வோம் என்பது தான்.

Senthil Kumaran said...

அப்புறம் அது ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி இல்லை. சிகாமணி.

SathyaPriyan said...

//
Senthil Kumaran said...

அது சரி. ஆனால் சாமான்யன் கூறுவது என்னவென்றால், இதையெல்லாம் புடுங்காமல் ஒழுங்காக மின்சாரம் கொடுத்தால் எங்களை நாங்களே வெய்யிலின் கொடுமையிலிருந்து காத்துக் கொள்வோம் என்பது தான்.
//
அதே சாமான்யன் தானே சார் சென்ற ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தது? நீங்கள் ஒப்புக் கொண்டால் ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் ஒன்றும் பாதகம் இல்லை. தமிழக வாக்காளர்களில் பெரும் சதவிகிதத்தினர் சென்ற திமுக ஆட்சி போக வேண்டிய ஆட்சி என்று தான் கருதினர். அந்த சாமான்யனின் குரலை செந்தில் குமரன் போன்றோர் எங்கும் உரைத்ததாக தெரியவில்லையே?

திமுக ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி இரட்டை இலைக்கு வாக்காக மாறியது. அம்மாவின் ஆட்சி சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் வாக்கு உதய சூரியனுக்கு தானே விழப் போகிறது. முரசுக்கா வாக்களிக்க போகிறோம்.

அம்மாவை ஜெயிக்க செய்தவர் கலைஞர் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாத வரை நான் என்ன சொன்னாலும் பயன் கிடையாது.

தேர்தல் முடிந்து ஓராண்டு காலம் முடியப் போகிறது. இவ்வளவு காலம் அஜீரணம் இருந்தால் உடலுக்கு நல்லதல்ல. நல்ல மருத்துவரை பார்க்கவும்.

//
அப்புறம் அது ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி இல்லை. சிகாமணி.
//
தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விடுகிறேன். தொடர்ந்து வாருங்கள்.

Anonymous said...

கடலை போட...வாங்க மெரினாவின் கிளை போல...

SathyaPriyan said...

//
ரெவெரி said...

கடலை போட...வாங்க மெரினாவின் கிளை போல...
//
இல்லை ரெவெரி. சென்னை மெரினாவிற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

திருச்சியிலே இருப்பவர்களுக்கு இது தான் மெரினா பீச். மாலையும், இரவும் கை கோர்க்கும் வேளையில் இங்கு வந்து விட்டால் போதும். கீழே அகண்ட காவிரிப் பிரவாகம். இங்கும் 'உள்ளேன் ஐயா!' என்று அட்டென்டன்ஸ் குடுக்க வரும் சிலு சிலு காற்று. இங்கும் அங்கும் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகள். ஆனால் சென்னை மெரினாவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இங்கே யாரும் தனிமை தேடி அலைவதில்லை. அதனால் தனிமை தரும் அநாகரீக அத்துமீறல்கள் இங்கு இல்லை. அதே நேரம் யாரும் அடுத்தவரின் சுவருகளில் அநாகரீகமாக நுழைவதில்லை. அடுத்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களை எளிதாக நீங்கள் அங்கே கேட்க முடியும். ஆனால் விரும்பி அவைகளை கேட்பவர்கள் குறைவு. காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.

பார்க்க எனது முந்தைய பதிவு.

http://sathyapriyan.blogspot.com/2007/04/blog-post_20.html

ஜீவன்பென்னி said...

//திருச்சியிலே இருப்பவர்களுக்கு இது தான் மெரினா பீச். மாலையும், இரவும் கை கோர்க்கும் வேளையில் இங்கு வந்து விட்டால் போதும். கீழே அகண்ட காவிரிப் பிரவாகம். இங்கும் 'உள்ளேன் ஐயா!' என்று அட்டென்டன்ஸ் குடுக்க வரும் சிலு சிலு காற்று. இங்கும் அங்கும் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகள். ஆனால் சென்னை மெரினாவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இங்கே யாரும் தனிமை தேடி அலைவதில்லை. அதனால் தனிமை தரும் அநாகரீக அத்துமீறல்கள் இங்கு இல்லை. அதே நேரம் யாரும் அடுத்தவரின் சுவருகளில் அநாகரீகமாக நுழைவதில்லை. அடுத்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களை எளிதாக நீங்கள் அங்கே கேட்க முடியும். ஆனால் விரும்பி அவைகளை கேட்பவர்கள் குறைவு. காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.//

நண்பர்களுடன் பாலத்தில் நின்று கொண்டு அளவளாவுவதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். நினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் வரிகள்.

Anonymous said...

//காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.
//
உங்கள் பதிவைவிட உங்கள் பின்னூட்டம் நூறு மடங்கு அழகு...நீங்கள் ஒரு நடமாடும் அழகு billboard...

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! திருச்சி காவிரிக் கரை செய்தி. படிக்க நன்றாக இருந்தது. நீங்கள் சொல்வதைப் போல //மக்கள் பொறுப்பாக நடந்து அந்த இடத்தை மாசு படுத்தாமல் இருந்தால் நல்லது.//

SathyaPriyan said...

//
ஜீவன்பென்னி said...
நண்பர்களுடன் பாலத்தில் நின்று கொண்டு அளவளாவுவதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். நினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் வரிகள்.
//
நன்றி ஜீவன்பென்னி. தொடர்ந்து வாருங்கள்.

//
ரெவெரி said...
உங்கள் பதிவைவிட உங்கள் பின்னூட்டம் நூறு மடங்கு அழகு
//

எனது பழைய பதிவான அழகுகள் ஆறு பதிவில் நான் எழுதியதே இது. சுட்டி அந்த பின்னூட்டத்திலேயே அளித்துள்ளேன் இருந்தாலும் கீழேயும்.

http://sathyapriyan.blogspot.com/2007/04/blog-post_20.html

//
தி.தமிழ் இளங்கோ said...
வணக்கம்! திருச்சி காவிரிக் கரை செய்தி. படிக்க நன்றாக இருந்தது. நீங்கள் சொல்வதைப் போல மக்கள் பொறுப்பாக நடந்து அந்த இடத்தை மாசு படுத்தாமல் இருந்தால் நல்லது.
//
ஆமாம் தி.தமிழ் இளங்கோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.