திருச்சியில், புதுக்கோட்டையில், தஞ்சையில் கடந்த பத்து தினங்களாக மின்வெட்டு இல்லை என்று தெரிகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இது தான் நிலை என்று நினைக்கிறேன். மின்வெட்டு நடக்கும் பொழுது ஆட்சியை குறை கூறி குத்து பரோட்டா மொத்து பரோட்டா எல்லாம் போட்ட உடன் பிறப்புகள் இப்பொழுது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன். பூஜ்ஜியம்.
ஒன்று நிச்சயம் தெரிகிறது. இவர்களின் எண்ணம் மின்வெட்டு நீங்க வேண்டும் என்பது இல்லை. மின்வெட்டு தொடர்ந்து ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து மீண்டும் ஆட்சிக்கு திமுக வர வேண்டும் என்பது தான். என்ன அதனை அரசியல் என்ற பெயரில் செய்து தொலைக்காமல் வேறு ஏதேதோ பெயரில் செய்து தொலைப்பதுதான் எரிச்சலை தருகிறது.
பதிவர் வவ்வால் இதனை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள். பதிவின் சுட்டி கீழே.
http://vovalpaarvai.blogspot.in/2012/04/blog-post_25.html
முல்லை பெரியார் அணை குறித்த உச்ச நீதி மன்றத்தின் ஐவர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை கேரள அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அணை குறித்த கேரளாவின் பொய்களை உடைத்ததோடு புதிய அணை கட்டினாலும் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்தி விட்டது. குழுவில் இருந்த ஐவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்ம கோவி. கண்ணன் அவர்கள் பெர்ஸ்பெக்டிவ் குறித்த அருமையான பதிவு ஒன்றை இட்டுள்ளார். பல நேரங்களில் அடுத்தவர் நிலையிலிருந்து நாம் யோசித்து பார்த்தால் பல முரண்பாடுகளை தவிர்க்கலாம். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இந்த நிலை பெரிதும் கை கொடுக்கும். இப்பொழுது தமிழ்மணத்தில் நடக்கும் சண்டைகளுக்கு கூட இது பொருந்தும்.
பதிவின் சுட்டி கீழே. அவசியம் படியுங்கள்.
http://govikannan.blogspot.com/2012/05/blog-post_06.html
தமிழ்மண சண்டைகள் என்றதும் சமீபத்தில் தமிழ்மண நிர்வாகத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நியாபகம் வருகிறது. மதம் சம்பந்தப்பட்ட அவதூறு பதிவுகளை நீக்குவதென்று தமிழ்மண நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பது நல்ல முடிவு. மத பிரசாரங்களை தவிர்த்தாலே அவதூறுகளை தவிர்த்து விடலாம். அதனால் மத பிரசார பதிவுகளையும் நீக்குவார்கள் என்று நம்புவோம். மத பிரசார பதிவுகளை இடுவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். "என் மனைவி பத்தினி" அன்று கூறுவதற்கும் "என் மனைவி மட்டுமே பத்தினி" என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் மதத்தை உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்.
என்னை பொறுத்தவரையில் நித்தியானந்தா மதுரை ஆதீனமானது நல்ல விஷயம் தான். நித்தியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆதீனங்களை பற்றியும் தெரிய வேண்டாமா? அதற்கு இம்மாதிரி செயல்கள் ஒரு வாய்ப்பு. மக்கள் இம்மாதிரி நிறுவனங்களிடம் பணத்தை கொட்டுவதற்கு பதில் உதவும் கரங்கள் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தினால் உண்மையிலேயே புண்ணியம் கிட்டும்.
நாகர்கோவிலில் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவினால் ருக்மிணி என்ற 34 வயது பெண், இரு குழந்தைகளின் தாய், இறந்து விட்டார். சென்ற வருடம் மார்ச் மாதம் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்ய ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்த ருக்மிணிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு பதிலாக விஷ வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் ஒராண்டுக்கு மேலாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் இந்த வாரம் இறந்து விட்டார். இன்னும் எத்தனை ருக்மிணிகள்?
நேற்று தான் வித்யா பாலனின் கஹானி படம் பார்த்தோம். என்ன படம் சார்? இப்படி ஒரு படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டன. படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். அடுத்து வழக்கு எண் 18/9 பார்க்க வேண்டும். DVD வருவதற்கு எப்படியும் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் என்று ஓடாமல் இம்மாதிரி படங்களையும் வரவேற்றால் இம்மாதிரி படங்களும் வெளி நாட்டில் வெளியிடப்படும்.
கலைஞர் டிவியில் திருக்குறள் கதைகள் என்று அனிமேஷன் கார்ட்டூன்களை ஒளிபரப்புகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குறள். அதனை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு கதை. மிகவும் நன்றாக இருக்கிறது. குழந்தைகள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதனை பரிந்துரைக்கிறேன். இது சனிக்கிழமை ஒளிபரப்பபடுகிறது.
பஹாமாஸ் பயணக் கட்டுரையை படித்த வலையுலக நண்பர்கள் பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும், தனி மடலிலும் புகைப் படங்களை எப்பொழுது பதிவேற்றுவேன் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு நன்றிகள். விரைவில் வலையேற்றுகிறேன்.
6 Comments:
சத்தியப்ரியன்,
//இப்பொழுது ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன். பூஜ்ஜியம். //
ரொம்ப மேலோட்டமாகத்தான் படிப்பீங்க ,போல அந்த பரோட்டா சுட்ட அன்றே தெளிவான விளக்கம் கொடுத்து , மேலும் மின் வெட்டு குறையும் ஏன் ,எப்படி என விளக்கி நான் போட்ட பதிவின் சுட்டியும் கொடுத்தேன்.அப்பதிவு போட்டே பத்து நாள்களாகிவிட்டது.
ஒரு வேளை உடன்பிறப்புகள் பதிவு மட்டுமே படிக்கிறிங்களோ :-))
மேலும் மின்வெட்டு குறைவதையும் அதற்கான காரணங்களையும் இப்பதிவில் காணலாம்
குறையும் மின்வெட்டு
-----
//என்னை பொறுத்தவரையில் நித்தியானந்தா மதுரை ஆதீனமானது நல்ல விஷயம் தான். நித்தியை பற்றி மக்களுக்கு தெரிந்துவிட்டது. ஆதீனங்களை பற்றியும் தெரிய வேண்டாமா? அதற்கு இம்மாதிரி செயல்கள் ஒரு வாய்ப்பு//
அப்படி நடந்தால் நல்லது தான் ஆனால் நம் மக்கள் ரொம்ப்ப நல்லவர்கள் ஐந்து ஆண்டுகள் போனால் ஊழல் செய்த அதே அரசியல்வாதியே நல்லவராக தெரிவார், மீண்டும் ஆட்சிக்கு வருவார், அதே போல சில ஆண்டுகளில் மறந்து விடுவார்கள், நான்கைந்து அன்ன தானம், கும்பாபிஷேகம் செய்தார் எனில் தேவதூதர் இவரைப்போய் தப்பாக சொல்லிட்டோமே என காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள் மக்கள் :-))
-------
அரசு மருத்துவ மனையில் நடந்த சம்பவம் செய்தியில் படித்தேன் , கண்டிப்பாக மருத்துவர்களின் தவறு தான். ஆனால் இது போன்ற சம்பவங்களில் தண்டனைக்கிடைப்பதில்லை. மேலும் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டரை தவறாக கொடுத்தது சிலிண்டர் கொடுத்த நிறுவனம் தான் என அப்போதே சொல்லி நழுவியதாக படித்தேன்.
மேலும் நைட்ரஸ் ஆக்சைடு விஷ வாயு அல்ல ,மயக்க மருந்து, அதனை ஆக்சிஜன்னுக்கு பதில் அதிகமாக கொடுத்தால் கோமா ஆகிவிடும்.
நீங்கள் தமிழ்மணத்தில் இல்லாததால் உங்கள் பதிவை நான் படிக்க வில்லை. இப்பொழுது படித்துவிட்டேன். நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பதிவின் சுட்டியையும் எனது பதிவில் சேர்த்துவிட்டேன்.
கஹானி நல்ல படம். இம்மாதிரியான ஹீரோயின் ஓரியன்டட் படங்கள் எல்லாம் தமிழில் வரப்போவதில்லை. மொத்தத்தில் நல்ல பதிவு.
நானும் போன வாரம் கஹானி பார்த்தேன். மிக அருமையான படம். உங்கள் ப்ளாக் கலர் மிக டார்க்காக இருப்பதால் படிக்க மிக கஷ்டமாக இருக்கிறது.
நீங்கள் சொன்ன வாய்முஹூர்த்தம்,இன்று மீண்டும் மின்வெட்டு!
//
Senthil Kumaran said...
மொத்தத்தில் நல்ல பதிவு.
//
நன்றி.
//
அமுதா கிருஷ்ணா said...
உங்கள் ப்ளாக் கலர் மிக டார்க்காக இருப்பதால் படிக்க மிக கஷ்டமாக இருக்கிறது.
//
எனது ப்ளாக் வடிவை பற்றி இதற்கு முன்னரும் சிலர் அவ்வாறு கூறி இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு இந்த வடிவு பிடிப்பதினால் மாற்றவில்லை. இருந்தாலும் மாற்ற முயற்சிக்கிறேன்.
முதல் வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா. தொடர்ந்து வாருங்கள்.
//
வலைஞன் said...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
நன்றி
வலையகம்
//
என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் திரட்டியில் இணைய முயற்சிக்கிறேன்.
//
krish said...
நீங்கள் சொன்ன வாய்முஹூர்த்தம்,இன்று மீண்டும் மின்வெட்டு!
//
வருகைக்கு நன்றி. பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை.
Post a Comment