Tuesday, December 18, 2012


நீதானே என் பொன் வசந்தம் - பாடல் விமர்சனம்

சென்ற பதிவில் நீதானே படத்தின் மிகப் பெரிய லெட்டவுன் ராஜா தான் என்று சொல்லிவிட்டேன் என்று ஒரு நண்பர் என்னை மிகவும் கோபித்துக் கொண்டார். ஏனென்றால் நான் ராஜாவின் வெறியன். அவரும் கூடத்தான்.

அவரை சமாதானப் படுத்த அனைவரும் பட விமர்சனம் எழுதி முடித்த பின்னர் நான் நீதானே படத்தின் பாடல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

பொதுவாகவே நான் பாடல்களை படம் பார்த்த பிறகு தான் விமர்சிக்க தொடங்குவேன். ஏனென்றால் படம் பார்த்த பிறகு தான், பாடல்களின் களம், அதை பாடும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள், படமாக்கிய விதம், திரைக்கதையில் பாடலுக்கு முன்பு என்ன வருகிறது, பாடல் முடிந்த பின்னர் என்ன வருகிறது என்று அனைத்தும் புரியும். அதன் பின்னர் வைக்கப் படும் விமர்சனமே சிறந்த விமர்சனம் என்பது எனது கருத்து. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மின்னலே படத்தின் ஆடியோ கேட்டுவிட்டு அனைவரும் வசீகராவின் பின்னால் ஓட, படம் பார்த்த பின்னர் அது அப்படியே வெண்மதியேவின் பின் திரும்பியது. அதே போலவே அலைபாயுதே பாடல்களின் பச்சை நிறமே அனைவருக்கும் முன்பு பிடித்திருந்தது. ஆனால் படம் பார்த்த பிறகு அனைவரையும் கவர்ந்தது சிநேகிதனே.

நீதானே பார்த்து விட்டு வந்த பிறகு எனது ஐபாடில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது அப்படத்தின் பாடல்கள் தான். பாடல்களை முழுதும் உள்வாங்க இன்னும் எனக்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.

1. புடிக்கல மாமு (சூரஜ் ஜகன், கார்த்திக், நா. முத்துகுமார்):

அட்டகாசமான கிடார் ப்ரீலூடுடன் தொடங்குகிறது பாடல். பாடல் முழுதும் பேஸ் கிடார் அட்டகாசம். சூரஜ் ஜகன் சரியான தேர்வு. எப்படி பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அவரது குரலில் ஒரு ரக்கட்னெஸ் தெரிகிறது. இன்டர்லூடில் கிடாரையும் ட்ரம்ஸையும் சேர்த்து வைத்து கதகளி ஆடி இருக்கிறார் ராஜா. முதல் மூன்று நிமிடங்களுக்கு உச்சந்தலையின் மேல் ஏறி உள்ளே சென்று விட்டவர் பின்னர் 'மடார்' என்று அடிப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சட்டென்று நிசப்தம். அதை கலைப்பது கார்த்திக்கின் குரல்.

வெறும் பெர்குஷன் பேஸ். சரியான குத்து. அதிலும் இன்டர்லூடில் ட்ரம்பெட் உபயோகித்து இருக்கிறார். குத்து பாடல்களுக்கு அதிகம் ட்ரம்பெட் உபயோகித்து நான் கேட்டதில்லை.

ராஜா சார், நிச்சயம் நீங்க இறங்கி விளையாட இந்த உலகம் பத்தாது.

2. வானம் மெல்ல (இளையராஜா, பெலா ஷென்டே, நா. முத்துகுமார்):

வால்மிகி படத்தில் வரும் 'கூட வருவியா' பாடல் தான் இளையராஜா இசையில் நான் முதலில் கேட்ட பெலா ஷென்டே பாடிய பாடல். தபெலா, புல்லாங்குழல், பெலா ஷென்டேவின் குரல் மூன்றும் சேர்ந்து அப்படியே மனதை கசக்கிவிடும். வேறு பாடல்கள் பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதன் பிறகு இப்போது நான் கேட்டது 'வானம் மெல்ல' பாடல். பிதாமகன் படத்தில் வரும் 'இளங்காத்து வீசுதே' பாடல் தரும் ஒரு விதமான ஸூதிங் சென்ஸை இந்த பாடலும் தருகிறது.

வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. அது அப்படியே ஆர்கெஸ்ட்ரேஷனாக மாறுகிறது. என்ன இன்ஸ்ட்ருமென்ட் என்பது எனக்கு தெரியவில்லை. அதிலிருந்து லீட் எடுக்கும் இளையராஜாவின் குரல்.... மனதை சொக்க வைக்கிறது என்றால் அது மிகை இல்லை.

பாடல் களத்துக்கு ஏற்ற வரிகள். 'பூக்கள் புக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?' விடலை காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது.

3. சாய்ந்து சாய்ந்து (யுவன், ரம்யா NSK, நா. முத்துகுமார்):

படத்தில் அதிக ஹைப் கொடுக்கப்பட்ட பாடல். ஒரு மாதிரியான கிரக்கத்துடன் பாடப்படும் ஸ்லக்கிஷ் மாடர்ன் பாடல். மின்சார கனவு படத்தில் SPB பாடும் தங்கத் தாமரை போல. பாடலை தூக்கி நிறுத்தியதும் இல்லாமல் தேசிய விருதையும் வாங்கி இருப்பார் பாடும் நிலா. ஆனால் இங்கே அவ்வாறான முயற்சிகளில் எல்லாம் யுவன் ஈடுபடவில்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

கிடார், க்ளாரினெட் இரண்டையும் உபயோகப்படுத்திய விதம், யுவன் மற்றும் ரம்யாவின் குரல், மற்றும் சரணத்துக்கு முன்பு வரும் இன்டெர்லூட் மூன்றும் அருமை.

நைட் எஃபெக்ட், மழை, அழகான நாயகி, முதல் காதலின் வெளிப்பாடு என்று அருமையான களத்தினால் ஒரு வேளை பாடல் தப்பிக்கலாம்.

மற்றபடி இது ஒரு அபவ் ஆவெரேஜ் பாடல். அவ்வளவுதான். பல முறை கேட்டால் பிடிக்கும்.

4. சற்று முன்பு (ரம்யா NSK, நா. முத்துகுமார்):

ரொம்பவே மாடர்னான ஒரு காதல் தோல்வி பாடல். வரிகள் அருமை. இந்தப் பாடலை கேட்டதிலிருந்து ரம்யா எனது ஃபேவரிட் பாடகியாகி விட்டார். பாடல் வரிகள், ரம்யாவின் குரல், ஆர்கெஸ்ட்ரேஷன் இவை மூன்றுக்கும் கடும் போட்டியே நடக்கிறது எது அதிகமாக கேவலை வெளிப்படுத்துகிறது என்பதில்.

இவை மூன்றையுமே தனித்தனியாக பிரித்து நாம் கேட்டோமானால் கூட அதுவும் இந்த கூட்டு முயற்சியின் தாக்கத்தை தான் ஏற்படுத்தும்.

சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இல்லையே, தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா? தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?...... அட்டகாசம்.

ராஜாவின் சந்தங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆளுமை இதுதான், வரிகள் வந்து தானாகவே விழும். குறிலை நெடிலாக்குவது, நெடிலை குறிலாக்குவது போன்ற வேலைகளுக்கேல்லாம் ராஜாவிடம் இடம் இல்லை.

5. காற்றை கொஞ்சம் (கார்த்திக், நா. முத்துகுமார்):

இதுவும் வோக்கல் ப்ரீலூடுடன் தொடங்குகிறது. பின்னணியில் வயலின். 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும் தூக்கமில்லை ஏனென்று கேளடி, சாத்திவைத்த கதவில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா, மீதி வைத்த கனவை நாமும் பேசி தீர்க்கலாம்.... நெடு நாட்களுக்கு பின்னர் காதலியை பார்க்க நினைக்கும் காதலனின் மனநிலையை அழகாக வெளிப்படுத்தும் வரிகள். நா. மு. நீங்கள் ஒரு பொன் குடம்.

6. என்னோடு வா வா (கார்த்திக், நா. முத்துகுமார்):

பஸ் ஹாரன் சத்தம் போன்ற ஒரு ப்ரீலூட். கூடவே க்ளாரினெட் வேறு. என்ன எழவுடா என்று கேட்க தொடங்கும் போதே கார்த்திக்கின் குரல் நம்மை கட்டிப் போடுகிறது. மெதுவாக நம்மை உள் இழுத்து கொள்கிறது. இதுவும் 80 களுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இன்டர்லூட் ஏனோ எனக்கு கண்ணுக்குள் நிலவு படத்தில் வரும் 'நிலவு பாட்டு' பாடலை நினைவு படுத்தியது. ஏனென்று தெரியவில்லை.

ஆனால் பாடலின் களம் படு சொதப்பல். படத்தின் முதல் பகுதியில் வந்திருக்க வேண்டிய பாடல். படத்தின் இறுதியில் அதிலும் காற்றை கொஞ்சம் பாடலுக்கு பின்பு வருவது படு மொக்கையான ப்ளேசிங். ராஜாவிடம் பாடல்களை வாங்கிய பிறகு எங்கே வைப்பது என்ற குழப்பத்தில் வைத்தது போல இருக்கிறது.

7. பெண்கள் என்றால் (யுவன், நா. முத்துகுமார்):

பாடலை முழுதுமாக ஒரு முறை கூட என்னால் கேட்க முடியவில்லை. படு மொக்கையான பாடல். மொத்த ஆல்பத்துக்கும் திருஷ்டி பொட்டு போல அமைந்து விட்டது.

8. முதல் முறை (சுனிதி சௌஹான், நா. முத்துகுமார்):

பியானோ, க்ளாரினெட், ட்ரம்ஸ் என்று கலந்து கட்டிய ப்ரீலூட். மீண்டும் ஒரு காதல் தோல்வி பாடல். மிகவும் டார்க்கான மாடர்ன் பாடலாக அமைந்து விட்டது.

வரிகள், ஆர்கெஸ்ட்ரேஷன் மற்றும் சுனிதியின் குரல் மூன்றுக்கும் இடையே இப்பாடலிலும் கடும் போட்டி. நீ தானே என் பொன் வசந்தம் வரிகளை உபயோகித்த விதம் அருமை. பாடலை கேட்க கேட்க அடி மனதில் யாரோ பீரங்கியை வைத்து வெடித்தது போல இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்டர்லூடில் வரும் வயலின் என்ன செய்கிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு மனதை ஏதோ செய்கிறது.

This is my pick of the litter.

80களுக்கு கொண்டு செல்லும் இரண்டு பாடல்கள், டார்க்கான மாடர்ன் பாடல்கள் இரண்டு, ஒரே பாடலில் ராக் மற்றும் குத்து, கிரக்கமான ஒரு பாடல், படு சொதப்பலாக ஒரு பாடல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் ராஜா.

மொத்தத்தில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்ட பிறகு "வெயிலா, மழையா, வலியா, சுகமா எது நீ? நீ தானே என் பொன் வசந்தம்...." என்று ராஜாவை பார்த்து நமக்கும் பாட தோன்றுகிறது.

7 Comments:

Senthil Kumaran said...

This is one of the best reviews I have ever read. Thank you so much. For some reason, I didn’t like the pidikkala mamu rock – kuthu transition. It sounded seamed.

Satru munbu and mudhal murai are my favorites too. Ramya is NSK’s granddaughter, FYI in case you do not know.

Nevertheless Raja was a bad choice for this movie. Screenplay was horrendous and did not leave anything for Raja to produce his mystical magic in BGM.

வருண் said...

///நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.///

இது உங்க பட விமர்சனம்.

படத்துக்கு *** கொடுப்பீங்களா?

பாடலுக்கு (இசைக்கு) எத்தனை? **??

படம் பிடித்ததற்கு நெறையா காரணங்கள் இருக்கலாம். Bcos, everyone has a unique experience in life. :)

SathyaPriyan said...

செந்தில் குமரன், வருண் வருகைக்கு நன்றி.

@செந்தில் குமரன்,

The last thing I can stand is someone booing Sachin and Raja :-)

@வருண்,

படத்திற்கு மூன்று ஸ்டார்களே அதிகம். செந்தில் குமரன் சொன்னது போல படு சொதப்பலான ஸ்க்ரீன்ப்ளே. ராஜா சரியான தேர்வு இல்லை என்பது தான் எனது கருத்து.

ஆனால் பாடல்கள் அருமை. குறிப்பாக சற்று முன்பு மற்றும் முதல் முறை இரண்டும் mind blowing. பாடல்களின் ஆர்கெஸ்ட்ரேஷனை கேட்டு பாருங்கள். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து செய்த இசையல்ல. ஒவ்வொரு நோட்ஸாக இசை கலைஞர்களுக்கு கொடுத்து உருவாக்கப்பட்டது.

காதல் தோல்வியின் அழுகையை, கேவலை வாத்தியங்கள் கொண்டே வெளிப்படுத்தி இருப்பார். உதாரணத்திற்கு ஏழாம் அறிவு படத்தில் 'யம்மா யம்மா காதல் பொன்னம்மா' பாடலும் இது மாதிரியான சூழ்நிலையில் தான் வரும். அதன் ஆர்கெஸ்ட்ரேஷனுடன் ஒப்பிட்டு பாருங்கள். அது எவ்வளவு கேவலமாகவும் இது எவ்வளவு அருமையாகவும் இருக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.

நான் இங்கே ராஜாவுடன் ஹாரிஸை ஒப்பிட முயற்சிக்கவில்லை. உதாரணத்திற்கு சொல்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. எனக்கு ராஜா. சிறு வயதில் சிபாக்கா கீத மாலாவிலும், தேன் கிண்ணத்திலும், நேயர் விருப்பத்திலும் கேட்டேன், இப்போது ஐபாடில் கேட்கிறேன்.

மாறாதது அவரின் இசை, கேட்கும் நான் இரண்டும் தான் :-)

SathyaPriyan said...

வருண்,

உங்களுக்கு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது, வேறு வேலையே இல்லாமல் இருந்தால் நான் 2008 ஆம் ஆண்டு எழுதிய ரங்க பவனம் என்ற தொடரை படித்து பாருங்கள். படித்த பிறகு படு மொக்கையாக இருந்தால் இப்போதே உங்களிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். எனக்கு ஏன் இப்படம் பிடித்தது என்பது தெரியும்.

தொடரின் முதல் பதிவின் சுட்டி கீழே.

http://sathyapriyan.blogspot.com/2008/03/i.html

எனது கதைக்கும் இந்த படத்திற்கும் இருக்கும் ஸ்ட்ரைகிங் ஒற்றுமைகளை நீங்கள் உணர்வீர்கள். படத்தில் நாயகன் IIM செல்கிறான், எனது கதையில் நாயகி. படத்தில் நாயகன் 500 இமெயில் அனுப்புகிறான், கதையில் நாயகி. இரு கதைகளிலுமே நாயகன் நான்கு வருடப் படிப்பு, நாயகிக்கு மூன்று வருடப் படிப்பு. வேறு வேறு கல்லூரி. இங்கே கல்லூரி முடிந்த பிறகு காரில் சந்திக்கிறார்கள், அங்கே கம்ப்யூட்டர் வகுப்பில்.

இக்கதையில் நடந்த பல சம்பவங்கள் எனது வாழ்வில் எனது நண்பர்களுக்கு, எனக்கு நடந்த சம்பவங்களின் தொகுப்பே.

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

அருள் said...

பாடல்கள் குறித்த விளக்கம் மிக நன்று.

படம் குறித்த எனது பதிவையும் படித்துப்பாருங்கள்

"நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!"

http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html