Wednesday, January 09, 2013


பொடிமாஸ் - 01/09/2013

விஷ்வரூபம் DTH பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றிருந்தேன். அரசமரத்தை சுற்றிவிட்டு வயிற்றை தொட்டு பார்த்த கதையாக பழம் பழுக்கும் முன்பே ஒரு சிலர் அதை கடித்து விட்டனர். 30 லட்சம் பேர், 300 கோடி என்ற கதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிரிப்பே வந்தது. 30 லட்சம் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள், அதில் பாதிக்கு மேல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என்றால், எப்படி 300 கோடி வருவாயாகும்? ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்துக்கு 500 ரூபாய் தான் கட்டணம். அந்த கணக்கின் படி பார்த்தாலும் அதிக பட்சம் 225 கோடி ரூபாய் வசூல் தான்.

ஒரு படத்தின் பட்ஜெட்டோ, வருவாயோ அப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்காது. 2007 ஆம் ஆண்டு வந்து உலகையே ஆட்டி படைத்த பாராநார்மல் ஆக்டிவிட்டி படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய். என்னை பொருத்த வரை மக்கள் மனதில் ஒரு படம் காலம் கடந்து நின்றால் அது வெற்றிப் படம், வணிக ரீதியாக அது வெற்றி அடையாமல் இருந்தாலும் கூட.

அந்த வரிசையில் தமிழில் எனது மனதளவில் வெற்றிப் படங்களில் முந்நிலையில் இருப்பது உதிரிப் பூக்கள். கமலின் படங்களை எடுத்துக் கொண்டால் அன்பே சிவம் மற்றும் மகாநதி. இந்த வார இறுதியில் கூட ராஜமௌளி கமலை எடுத்த பேட்டியை பார்த்த பின்னர் சலங்கை ஒலி படத்தை தேடி பிடித்து பார்த்தேன். இது எத்தனையாவது முறை என்பது தெரிய வில்லை. ஆனால் அப்படியே என்னை கட்டிப் போட்டு விட்டது.

கமலின் பெரும்பாலான ரசிகர்கள் அவரது நடிப்பை பார்த்து அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள், அவரது வணிக வெற்றியை பார்த்து அல்ல. கமலை சுற்றி இருக்கும் அவருக்கு ஜால்ரா போடும் கூட்டம் இதை உணராத வரை, அவரும் இதை உணர போவதில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.


டில்லி கற்பழிப்பு சம்பவதை தொடர்ந்து பெண்கள் உடை விஷயத்தில் கருத்து தெரிவித்த பலர் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு கலாச்சாரத்தின் உடை என்பது அவர்கள் இருக்கும் நாடு, அதன் தட்ப வெட்பம் போன்றவற்றை கொண்டே அமையும்.

அமெரிக்கர்களையோ இல்லை ஐரோப்பியர்களையோ எடுத்துக் கொண்டால், அந்நாடுகளில் வாழும் பலர் வெள்ளை தோல் உடையவர்கள். மெலனின் என்ற வஸ்து அவர்கள் தோலில் குறைந்து இருக்கும். தோல் புற்று நோய் வராமல் பாதுகாக்க அதை அதிகரிப்பது அவசியம். அதனை இயற்கையாக அதிகப் படுத்த சூரியனின் வெப்பம் தேவை. ஆனால் அந்நாடுகளிலோ நல்ல சூரியன் வெப்பம் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்காது. அதற்காக கோடை காலத்தில் அவர்கள் உடலில் பெரும் பாலான இடங்களில் சூரியன் வெப்பம் தாக்கும் படி உடை உடுத்துகிறார்கள்.

அதே நேரத்தில் அரபு தேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கே தண்ணீர் குறைவு. மணல் புயல் அதிகம். மணல் அதிகம் கேசத்தில் சிக்கிக் கொண்டால் அதனை சுத்தம் செய்ய அதிக தண்ணீர் செலவாகும். அதற்காகவே அவர்கள் தலையை மூடி உடை உடுத்துகிறார்கள்.

இதை தெரிந்து கொள்ளாமல் அமெரிக்கர்கள் அவுத்து போட்டுக் கொண்டு அலைகிறார்கள் என்றோ, அரேபியர்கள் இழுத்து மூடிக் கொண்டு கற்காலத்தில் வாழ்கிறார்கள் என்றோ சொல்வது சரி கிடையாது.

இப்போது இந்திய சூழ்நிலைக்கு வந்தால், இந்தியா ஒரு செக்ஸ் ஸ்டார்விங் நாடு. இங்கே பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆன பிறகு தான் முதல் செக்ஸ் அனுபவம் ஏற்படுகிறது. அந்நிலையில் பல நாள் பட்டினி கிடப்பவன் முன்பு திருமண விருந்து சாப்பிடுவதை போல இந்திய பெண்கள் ரிவீலிங்காக உடை உடுத்தினால் அது பெண்களுக்கே ஆப்பாக வந்து முடிந்து விடுகிறது.

ஆனால் அதே நிலையில் இருக்கும் இந்திய பெண்கள் ஆண்களை ஏன் கற்பழிப்பதில்லை என்பது உளவியல் ரீதியாக பார்க்க வேண்டிய ஒரு செயல். இந்திய ஆண்களுக்கு மரபிலேயே ஷாவனிஸம் கலந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். ஷாவனிஸத்தின் வெளிப்பாடு வெறிச்செயல்.

1. கற்பழிப்பில் மட்டும் இல்லை, பெண்களுக்கு/குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு வன்முறையில் ஈடு பட்டாலும் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும்.

2. கற்பழிப்பை ஒரு விபத்தாக இந்திய சமூகம் பார்க்க தொடங்க வேண்டும்.

3. இந்திய ஆண்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிக மரியாதை செய்ய வேண்டும். அவர்களை அடிமை போல நடத்த கூடாது. இதை அவர்கள் செய்தால் அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு இயல்பாகவே மரியாதை செய்ய முயலும்.


திமுகவில் நடக்கும் வாரிசு மோதல்கள் வருத்தம் அளிக்கிறது. ஒரு வேளை திமுக உடைந்தால் அதிமுக-ஜெ மற்றும் அதிமுக-ஜா கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்படும். ஸ்டாலின் ஜெயித்து வருவார் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்னை கேட்டால் கட்சி உடைவது கூட நல்லது தான், ஏனென்றால் ஒரே கட்சியில் இருந்தால் அழகிரி ஸ்டாலினுக்கு தொடர்ந்த தலைவலியாக இருப்பார். கட்சி உடைந்து பின்னர் ஒன்று சேர்ந்தால் அழகிரியை ஒரேயடியாக அரசியலில் இருந்து ஒதுக்கி விடலாம். கனிமொழி, மாறன் போன்றவர்களை அழகிரியை விட அதிகம் அரவணைத்து போவது ஸ்டாலின் தான். தொண்டர்களும் அதிகம் ஸ்டாலின் பக்கம் தான். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


ஒவைசியின் பேச்சு குறித்த சர்ச்சை புயல் இப்போது கிளம்பியுள்ளது. இதெல்லாம் அடுத்த சர்ச்சை வரும் வரை தான். நல்ல வேளை தர்மபுரியில் நடந்தது போல ஒரு கூட்டம் இவரது பேச்சை கேட்டு கிளம்பாமல் இருந்தது. என்னை கேட்டால் இதையெல்லாம் இக்னோர் செய்து விட்டு போய்கொண்டே இருக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க இம்மாதிரி நாய்கள் அதிகம் குறைத்துக் கொண்டே இருக்கும்.


ஆர்லான்டோ பயணம் நல்ல முறையில் முடிந்தது. மேஜிக் கிங்டம், அனிமல் கிங்டம், யுனிவர்சல் ஸ்டூடியோஸ் என்று பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். புகைப்படங்களை பின்னர் தனி பதிவாக பதிகிறேன். மனைவியும், குழந்தையும் ஜனவரி மூன்றாம் தேதி இந்தியாவுக்கு சென்று விட்டனர். இம்முறை சற்று நெடிய விடுமுறை. பிப்ரவரி 17 ஆம் தேதி தான் வருகிறார்கள். அவர்கள் கிளம்புவதற்கு முன்பு எப்போது கிளம்புவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். டயாப்பர் மாற்றுவது, குழந்தையை குளிப்பாட்டுவது, அவனுக்கு சாப்பாடு கொடுப்பது, அவனை பார்க்குக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகள் இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் சென்ற பின்னர் தனியாக இருப்பது ஒரே கடியாக இருக்கிறது. அதுவும் நான் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வேன். அதனால் வீட்டில் இருக்கும் நாட்களில் படு போராக இருக்கிறது. வார இறுதியில் எங்காவது வெளியூருக்கு நண்பர்களை பார்க்க செல்லலாம் என்றால் மாண்டியை வெளியே விடுவது கஷ்டமாக இருக்கிறது.


இந்த வார இறுதியில் விஷ்வரூபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது வெளியீடு தள்ளி போய் விட்டது. அதற்கடுத்த வாரம் அர்னால்டு நடித்த லாஸ்ட் ஸ்டான்ட் படம் வெளி வருகிறது. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்ஸ் பாண்டியனோ இல்லை கண்ணா லட்டு திங்க ஆசையா படமோ இங்கே வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளிவந்தால் பார்த்து விடுவேன்.


இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் நிலவுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு சில இடங்களில் 54 டிக்ரீ செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சொல்கிறார்கள். வட இந்தியாவில் கடும் குளிரினால் 150 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. எல்லாம் க்ரீன் ஹவுஸ் எஃப்பெக்ட் செய்யும் வேலை. உலகம் தானாக அழிகிறதோ இல்லையோ அடுத்த இரு தலைமுறைக்குள் நாமே அழித்து விடுவோம் என்று நினைக்கிறேன்.


இது இந்த புத்தாண்டின் முதல் பதிவு. வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். 2012 ஆம் ஆண்டு நல்லபடியாக சென்றது. பல இனிப்பான சம்பவங்கள். அது போலவே 2013 ஆம் ஆண்டும் இருக்கும் என்று நம்புகிறேன். அது போலவே உங்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக இது அமைய வாழ்த்துகிறேன்.

5 Comments:

Avargal Unmaigal said...

பொடிமாஸ் மிகவும் சுவையாக இருந்தது..பாரட்டுக்கள்

Senthil Kumaran said...

//
புளியமரத்தை சுற்றிவிட்டு வயிற்றை தொட்டு பார்த்த
//

அண்ணாத்தே அது அரச மரம் இல்லையோ? புளிய மரத்தை பேய் தான் சுற்றும் என்று எனக்கு எங்கள் கூவாச்சி பாட்டி சொல்லிக் கொடுத்து இருக்கிறார் :-)

SathyaPriyan said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அவர்கள் சார்.

பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி செந்தில் குமரன். திருத்தி விட்டேன்.

அஜீம்பாஷா said...

என்னா வேகம் சல்லுன்னு ஒரே பதிவுலேயே எல்லா விஷயங்களையும் தொட்டு விட்டீர்கள். பதிவு அருமையாக இருந்தது நண்பரே.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஜீம் பாய்.