Thursday, February 21, 2013

வந்தே மாதரம்!!!


இன்றைய குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இனி வரப்போகும் குண்டு வெடிப்புகளில் இறக்கப் போகிறவர்களுக்கும் எனது அஞ்சலிகள்.

2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ. http://sathyapriyan.blogspot.com/2011/07/blog-post.html அதையே மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் வெட்கமே இல்லாமல் பிரதமரும், உள்துறை அமைச்சரும் 'தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று மீண்டும் மீண்டும் கூறும் போது ஒரே பதிவை மீண்டும் மீண்டும் பதிய நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை இது போன்ற பதிவை யாரும் பதியவே கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Friday, February 15, 2013

குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது பாராட்டுகள்

தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவதில் புதிய சாதனை செய்து இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரையும் அதன் ஆசிரியரையும் மனம் நெகிழ பாராட்டுகிறேன். செய்தியை படித்த திமுக மற்றும் திக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் ஈடு பட்டு அதில் தர்மபுரியை போல, மதுரையை போல அப்பாவி பொது மக்கள் சிலர் இறந்து போனால் நமக்கென்ன. நமக்கு எதற்கு சமூக பொறுப்பு? நமக்கு தேவை பரபரப்பு தலையங்கம் தானே.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.


Wednesday, February 13, 2013

காதலர் தின நல்வாழ்த்துகள்





இது எனது முதல் முயற்சி. துப்புபவர்கள் பின்னூட்டத்தில் துப்பவும். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துகள்.

Sunday, February 10, 2013

பொடிமாஸ் - 02/10/2013

டோண்டு சாரின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் வலையுலகமே அதை கண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக எனக்கு தெரிந்து தேன் கூடு சாகரன் அவர்களின் மறைவுக்கு தான் வலையுலகம் இப்படி அதிர்ந்தது. டோண்டு - போலி டோண்டு - இரவுக் கழுகார் - ஸ்பெஷல் ஆப்பு - விடாது கருப்பு - ஸல்மா அயூப் - முரளி மனோஹர் - எல்லாவற்றுக்கும் மேலாக "தலித் கம்னாட்டி" இதையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருந்தால் டோண்டு கடந்து வந்த பாதையின் வீரியம் உங்களுக்கு விளங்கும்.

ஆனால் ஒன்று, இந்த போலி விவகாரத்தை பெரிதாக வளர்த்து விட்டதும் அவரே, அதனால் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவரே என்று மட்டும் நான் நிச்சயம் நம்புகிறேன். இந்த விவகாரத்தை அவர் சிறிது நாசூக்காகவும், டிப்ளமடிக்காகவும் கையாண்டிருக்க வேண்டும், ஆனால் செய்ய தவறி விட்டார். அவரும் பல பதிவர்களும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்த மன உளைச்சலுக்கு போலி டோண்டு எவ்வளவு காரணமோ, அதே அளவு அவரும் காரணம்.

Sir, You should have been remembered for your prodigious command over English, alluring memory power, abundant experience you carry, art of ruthlessly combining confrontation with negotiation, stubborn nature and many more.

Alas, it’s preposterous that you have been remembered for your jingoistic arguments with “Poli” Dondu and blatant display of abysmal craving for the lime light aka hits to your blog. The rationales behind which though are still unknown, I believe it is a sheer victory for “Poli” Dondu.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:

பொருள்: எல்லா பற்றுகளையும் விட்டு விட்டு என்னை தஞ்சம் அடை. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் காத்து உனக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்.

டோண்டு சார், உங்கள் பெருமாள் பாபம் செய்தவர்களுக்கு கூட வைகுண்ட பதவி அளிக்கிறார். உங்களுக்கா அளிக்க மாட்டார். அங்கும் யாராவது பாப்பானை திட்டினால் அவனுடன் சண்டைக்கு போகாமல் அங்காவது நிம்மதியாக இருங்கள். RIP, good Sir.


இந்த வாரம் Parker மற்றும் Bullet to the head இரண்டு படங்களும் பார்த்தேன். இரண்டுமே ஒரு முறை பார்க்கலாம். வழக்கமான ஆக்க்ஷன் படங்கள். அடுத்த வாரம் Die Hard வெளியாகிறது. Skyfall DVD யும் வெளியாகிறது. இரண்டையும் பார்த்துவிட வேண்டும். இன்னும் ஒரு வார காலம் எவ்வளவு அராஜகம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விட வேண்டும். ஆறு வார விடுப்புக்கு பின் தங்கமணி அடுத்த வாரம் வருகிறார். அதன் பிறகு கப் சிப் காரா பூந்தி தான்.


கடந்த வாரம் அலுவல் நண்பர் ஒருவருடன் (ஆந்திராவை சேர்ந்தவர்) பேசிக் கொண்டிருந்த போது அவர் "விஷ்வரூபம் தெலுங்கில் பார்க்க வேண்டும், படம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். நான் "நன்றாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்" என்று சொன்னேன். அவர் "குழந்தைகளை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார். அதற்கு நான், "படத்தில் கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெஞ்சில் குத்தி கொல்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன, நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று சொன்னேன். உடனே அவர், "அதெல்லாம் பாதகம் இல்லை, செக்ஸ் காட்சிகள் இல்லையே?" என்றார்.

எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. வன்முறையையை விடவா, சக மனிதனை வெட்டிக்கொல்வதை விடவா செக்ஸ் ஆபத்தானது? செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தை என்று கூறியே குழந்தைகளை வளர்ப்போம், பின்னர் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது அதனை கண்டித்து பதிவெழுதுவோம்.


அஜ்மல் கசாபை தொடர்ந்து அஃப்சல் குருவையும் போட்டாகி விட்டது. நமது அரசாங்கத்துக்கு இப்போது தான் முதுகெலும்பு இருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிகிறது. இதை செயல்படுத்திய அரசாங்கத்துக்கு எனது நன்றிகள். பாராளுமன்ற தாக்குதலில் இறந்த ஏழு அப்பாவிகளின் குடும்பத்தினரும் இனி துளியாவது மகிழ்ச்சி அடைவார்கள். வழக்கம் போலவே ஒரு கூட்டம் இந்த தூக்கிற்கும் எதிராக கூச்சல் போட தொடங்கி இருக்கிறது. இந்த தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்கள் எல்லோரும் மேனகா காந்தி வகை பார்ட்டிகள். தெரு நாயினால் கடித்து குதறப்படும் சிறுமியின் பாதுகாப்புக்கு வராமல், நாயின் பாதுகாப்புக்கு வரும் கூட்டம் அது.


Dell நிறுவனம் தனது வீழ்ச்சியை சமாளிக்க இயலாத காரணத்தால் பங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறி முழூ தனியார் நிறுவனமாக மாற இருக்கிறது. இதற்காக ஒரு தனியார் எக்விட்டியிடம் சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்கி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு Steve Jobs Apple நிறுவனத்தில் சேர்ந்த போது பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் Steve Jobs இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு Michael Dell பின்வருமாறு கூறினார்.

What would I do? I'd shut it down and give the money back to the shareholders.

அப்போது Apple நிறுவனம் வீழ்ச்சியின் உச்சியிலும், Dell நிறுவனம் வெற்றியின் உச்சியிலும் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்.

06-Aug-1997Today
Apple (price per share)$25.25$474.98
Dell (price per share)$81.62$13.63
Apple (market cap)$2.58B$446.03B
Dell (market cap)$27.3B$23.68B

"யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை.


சென்ற வாரம் முழுதும் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் படங்களாக ஒளிபரப்பி தள்ளினார்கள். ஒரு நாள் நினைத்ததை முடிப்பவன், மறு நாள் குடியிருந்த கோவில், அதற்கு மறு நாள் பெரிய இடத்து பெண் என்று ஒரே ரகளையாக இருந்தது. அடிமை பெண் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

இதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, MGR படங்கள் எல்லாமா பார்ப்பீர்கள்? என்று வியப்புடன் கேட்டார். அவர் தலைவர் படங்களை பார்த்ததே இல்லையாம். அவரிடம் தலைவர் பற்றி என்ன கூறுவது. சிரித்துக் கொண்டேன். ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவிக்க வேண்டும்.

அதிலும் பெரிய இடத்து பெண் படத்தில் "கட்டோடு குழலாட ஆட" பாட்டில் இரண்டு மாமன் பெண்களுடன் விரசமே இல்லாமல் கெட்ட ஆட்டம் போடுகிறார் தலைவர். என்ன ஆர்கெஸ்ட்ரேஷன், என்ன கொரியோக்ராஃபி, அடடா அருமையிலும் அருமை. P. சுசீலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான். புரட்சி தலைவரின் படங்களே பார்க்காத எனது நண்பரை போன்றவர்களுக்கு ஸ்டார்டராக "அன்பே வா" படத்தை பரிந்துரைக்கிறேன். நடிகர் திலகம் படங்களில் பரிந்துரைப்பது "ராஜபார்ட் ரெங்கதுரை".

Monday, February 04, 2013

நேற்று ஏற்பட்ட ஒரு அதிபயங்கர அனுபவம்

தங்கமணி ஊரில் இல்லாததால் வாரா வாரம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் வேலை இல்லை. எப்போதாவது தேவைக்கு தகுந்தது போல் பால், முட்டை, பிரட் போன்றவற்றை மட்டும் வாங்கி வருவேன். நேற்று அப்படித்தான் பால் வாங்க எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு கடைக்கு சென்று இருந்தேன்.

உள்ளே நுழையும் போதே வாசலில் இருக்கும் ரெட்பாக்ஸ் கியாஸ்கில் ஒரு நாலைந்து டீனேஜ் பெண்கள் DVD வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களை கடக்கையில் ஒருத்தி எனது பெர்ஃபூம் வாசனையை முகர்ந்து விட்டு "Nice smell" என்றாள். நான் நன்றி கூறி, அதன் பிராண்டை சொல்லி விட்டு அவர்களை கடந்து சென்றேன்.

உள்ளே சென்று நான் பால் எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவர்கள் உள்ளே வந்து விட்டார்கள். அவர்களும் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை நான் அப்போது கவனிக்க வில்லை. பால் எடுத்துவிட்டு ஃப்ரோஸன் சிக்கன் விங்ஸ் ஏதாவது எடுக்கலாம் என்று அந்த பகுதிக்கு செல்ல தொடங்கினேன். அப்போது தான் அவர்களை கவனித்தேன். முதலில் என்னிடம் பேசியவள் எனது அருகில் வந்து "You look cool" என்றாள். நான் வழிந்தபடி மீண்டும் நன்றி கூறிவிட்டு விலக முயன்றேன்.

அந்த நேரத்தில் நான் சற்றும் எதிர் பார்க்காத வரையில் எனது அருகே மிகவும் நெருங்கி வந்து, என்னை உரசியபடி நின்று, தனது மூச்சை நன்றாக உள் இழுத்து "It's kinda seducing. Is this a body spray or a cologne?" என்று கேட்டாள். அதுவரை எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'அது' சட்டென்று கட்டுக்கடங்காமல் விழித்துக் கொண்டது. நீங்கள் கண்டபடி யோசிக்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன். அந்த 'அது' தயிர் சாதம் தான்.

நான் அதன் பின் என்ன செய்தேன் என்பதை சொல்லும் முன்பு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கே அமெரிக்காவில் டீனேஜ் பெண்கள் ஆறடி உயரத்தில் கட்டுடல் கொண்ட அமெரிக்க ஆண்களை விடுத்து தொப்பையும் தொந்தியுமாக உள்ள நம்மை போன்றவர்கள் மீது விழுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் நம் புஜ பல பராக்கிரமத்தின் மீது கொண்ட மோகம் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் உண்மையிலேயே ஒரு அப்பாவி. அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எனக்கு தெரிந்த ஒரு சில காரணங்கள் கீழே.


1.அவர்களுக்கு தம்மோ, இல்லை பியரோ தேவை. அதை யாராவது 21 வயது ஆனவர்கள் (தம் என்றால் 18) வாங்கிக் கொடுக்க வேண்டும்.
2.யாரோ ஒரு கேசு கிடைக்காத போலீஸ் கார நாதாரி இவர்களுக்கு காசு கொடுத்து பலி ஆடுகளை பிடிக்க அனுப்பி இருக்க வேண்டும்.
3.தனக்கு கோபமூட்டிய தனது பாய் ஃபிரண்டுக்கு எரிச்சலூட்ட அவனுக்கு முன்னால் வேறொரு ஆணிடம் அவள் ஃப்ளர்ட் செய்ய வேண்டும்.

அவர்கள் பலி ஆட்டை பிடிக்க சுற்றும் முற்றும் பார்க்கும் போது "நம்ம க்ரூப்லயே பலசாலி, புத்திசாலி, தைரியசாலி யாரு? நம்ம மன்னாரு..." என்ற ரீதியில் பேக்கு மாதிரி நம்மாட்கள் போய் சிக்கிக் கொள்வார்கள்.

சரி இப்போது நமது கதைக்கு வருவோம். எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த தயிர் சாதம் கண்டபடி விழித்துக் கொண்டதால், சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்காவது கேமராவில் எசகு பிசகாக ஏதாவது பதிவாகி போலீஸ் டீனேஜ் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி நம்மை தூக்கிக் கொண்டு போய் ஜெட்டியோடு உட்கார வைத்து கொட்டையடித்து விடுவார்களோ என்ற பயம் தான் முதலில் வந்தது.

பின்னர் சுதாசரித்துக் கொண்டு அவளிடமிருந்து சற்று விலகி "I'm more than twice your age kid" என்று கூறினேன். சொன்ன அடுத்த விநாடி அவள் என்னை ஒரு முறை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு விலகி சென்றாள். நானும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். நான் நடந்து வரும் போது அவர்கள் குசு குசு வென்று பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது. இரவு தங்கமணியிடம் நடந்ததை கூறினால் அவர் நம்பவே இல்லை. இவர்களும் நமது ஆணழகை புகழ மாட்டார்கள், மற்றவர்களையும் புகழ விட மாட்டார்கள். இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எசமான் குத்துங்க........... நீங்களாவது நம்புங்க பாஸு. நான் சொன்னதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.