Tuesday, May 21, 2013


பொடிமாஸ் - 05/21/2013

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெல்ல முடியாமல் போனதை பற்றி லான்ஸ் க்ளூஸ்னரிடம் கேள்வி கேட்ட போது, "அதனால் என்ன? யாராவது செத்து விட்டார்களா?" என்று திருப்பி கேள்வி கேட்டாராம். உண்மையோ, பொய்யோ, நாம் அறியோம். ஆனால் இப்போது ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் குய்யோ முறையோ என்று ஓசையிடும் நபர்களை பார்த்தால் இது தான் சொல்ல தோன்றுகிறது.

IPL மேட்சுகளில் பெட்டிங் பிரச்சனை பற்றி ஆளாளுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிடுகிறார்கள். IPL மேட்சுகளில் எல்லாம் பெட்டிங் இல்லாமல் இருந்தால் தான் அது செய்தி. இது போன்ற மேட்சுகள் எல்லாம் முன்கூட்டியே கொரியோக்ராஃப் செய்யப்பட்டு நமது அட்ரினல் பம்பை ஏற்றுவது போல இருக்க வேண்டும். சும்மா டொச்சு போல முதல் டீம் 200 ரன், இரண்டாவது டீம் 90 ரன் என்று இருந்தால் எவன் பார்ப்பான்.

துப்பாக்கி படத்தில் விஜய் கடைசியில் தோற்பாரா ஜெயிப்பாரா என்றா யோசிப்போம்? அவர் ஜெயிப்பார் என்று தான் குழந்தைக்கு கூட தெரியுமே. எப்படி ஜெயிப்பார் என்று தானே யோசிப்போம்.

IPL என்பது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு பிசினஸ். யாரும் விளையாட்டுக்கு சேவை செய்ய அதை பல ஆயிரம் கோடி செலவு செய்து நடத்தவில்லை. இந்த பெட்டிங் செய்பவர்களை பிடிக்க முயற்சிக்கும் நேரத்தில் ஜாதி சண்டை போடுபவர்களையும், பிரிவினையை தூண்டுபவர்களையும், தீவிரவாதம் செய்பவர்களையும் பிடித்து தொலைக்க முயற்சி செய்தால் நலம்.

இன்னும் சொல்லப்போனால் புக்கிகளின் பணம் எல்லாம் இந்தியாவிற்குள் வருவது நன்மையே. கொஞ்சமே கொஞ்சம் கருப்பு வெளுப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. இல்லை, இம்மாதிரி சூதாட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்கள் வாதமானால், டாஸ்மாக்கினால் ஏற்படும் பாதிப்பை விட சூதாட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு என்பது எனது பதில்.

Legalize betting and tax the income.


"IPL is the tournament in which the rest of the teams compete among themselves to gain a slot in the final match against Chennai Super Kings." என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் விளையாட்டாக குறிப்பிட்டார். இம்முறையும் அது உண்மையாகிவிடும் போல உள்ளது. சென்ற முறை போல இல்லாமல் இம்முறை தடுமாற்றம் ஏதும் இல்லாமல் சென்னை அரையிறுதிக்கு தேர்வாகி இருக்கிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். டிராவிட் கோப்பையை வெல்வது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் யாராவது ஷில்பா ஷெட்டியினால் தான் நான் ராஜஸ்தானை சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இப்போதெல்லாம் அம்மாவின் அரசியல் சந்தானத்தின் காமெடியை போல இருக்கிறது. ஒரு சில படங்களில் அபாரமாக இருக்கிறது, ஒரு சில படங்களில் செல்ஃப் எடுக்க மறுக்கிறது. அம்மா உணவகம் சூப்பராக இருப்பதாக நான் இந்தியா சென்ற போது ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் சொன்னார்கள். ஒரு டீ 8 ரூபாய் விற்கிற காலத்தில் 10 ரூபாய்க்குள் காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த உணவகம் தொடங்கப்பட இருக்கிறது என்று திருச்சியில் உள்ளவர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதே போல தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் கூடுதலாக கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே. ஆனால் பெயரளவில் ஆங்கில வழி கல்வி என்று இல்லாமல், ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளித்தால் அனைவரும் பயனடைவார்கள். இப்படி நல்லதாக ஒன்றிரண்டு இருக்க, நூறு கோடி ரூபாய் செலவில் தமிழண்ணைக்கு சிலை என்று காமெடி பீஸாக சில நேரம் மாறி விடுகிறார். கலைஞருக்கு வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை என்று இருப்பது போல இவருக்கும் ஏதாவது தேவை படுகிறதோ என்னமோ. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல அரசு பணத்தை எடுத்து செலவழிக்கிறார்.


இம்முறை இந்தியா சென்ற போது வழக்கம் போலவே, எங்கள் குல தெய்வமான குமரமலை முருகன் கோவிலுக்கு சென்றேன். கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை செல்லும் வழியில் இருக்கிறது. இம்முறை சென்ற போது சித்தன்னவாசலுக்கு அருகே வெக்காளியம்மனுக்கும், வேலாங்கன்னிக்கும் கடும் போட்டியே நடந்தது. புதிதாக ஏதோ மதக் கலவரம் என்று நினைத்து விடாதீர்கள். நான் சொல்வது இரண்டு இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் விளம்பர போட்டி. சாலை முழுவதும் தட்டிகள். சித்தன்னவாசலை கடந்து திருச்சி-மதுரை சாலையை தொடும் போது, மஹாத்மா காந்திக்கும் அண்ணை தெரசாவுக்கும் போட்டி. "புற்றீசல் போல" என்று சொல்லுவார்கள். ஆனால் இது அதை விட மோசமாக இருக்கிறது. எனது நண்பர் SRM பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவர் சொன்ன தகவலின் படி நான்கு ஆண்டு இஞ்சினியரிங் படிப்புக்கு 12 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.


நல்ல தமிழ் படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டது போல ஒரு தோற்றம். பரதேசிக்கு பின்னர் எதுவும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியே ஏதாவது பார்த்திருந்தாலும் எனது நினைவில் இல்லை. சூது கவ்வும், நேரம் இரண்டும் பார்க்க ஆவல். ஆனால் இங்கே வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வரையோ அல்லது DVD வரும் வரையோ காத்திருக்க வேண்டும். இப்போது ஆவலுடன் காத்திருப்பது தலைவா மற்றும் சிங்கம் 2 படங்களுக்கு தான்.


ஒரு படத்தின் பெயர் சொன்னால் அப்படத்தின் தொடர்புடைய ஏதாவது ஒன்று, அது நல்லதோ கெட்டதோ, சட்டென்று நமக்கு நியாபகம் வரும். அது அப்படம் பார்த்த போது நடந்த நிகழ்வாக இருக்கலாம் அல்லது அப்படத்தின் காட்சிகளாக இருக்கலாம். அதுபோல ஆண் பாவம் என்றால் எனக்கு உடனே நியாபகம் வருவது இளையராஜாவின் புல்லாங்குழல் இசை. காதுகளில் உடனே ஒலிக்க தொடங்கும். நெட்டில் தேடியபோது கிடைத்தது. உங்கள் காதுகளுக்கு விருந்து.


8 Comments:

வெடிகுண்டு முருகேசன் said...

IPL பெட்டிங் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்னால் ஏற்க முடியவில்லை. ராஜாவின் இசை அற்புதம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Senthil Kumaran said...

Good one and welcome back :-)

திண்டுக்கல் தனபாலன் said...

கிரிக்கெட் பார்க்கும் ஆவல் என்றோ போய் விட்டது...

இனிமையான பாடல்... நன்றி...

நண்பா said...

IPL Betting -- இன்னும் பல அதிர்ச்சிகளை தரும். :!
Super Kings -- பார்ப்போம்..:)
அம்மா அரசியல் -- இது எல்லாம் சாதாரணம் அப்பா.. வள்ளுர்வர் சிலைய எடுத்துட்டு தமிழ் அன்னை சிலைய வைப்பேன்னு சொல்லாத வரையில் சந்தோஷம் :)
college Show!!! -- உண்மை உண்மை.. கலை கல்லூரிக்கு 25 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை.
Movies -- நானும் நேரம், சுது கவ்வும் DVDக்கு waiting
ஆண் பாவம் -- நிறைய நினைவுக்கு வருகிறது. இளையராஜா, "பொட்டி வந்தாச்சு", Actors, கொலங்குடி அவர்கள், "கோவிந்தன்",ஜனகராஜ்/தவக்களை, ரேவதி/சீதா introduction scenes,etc.
In fact each and every scene going thro' in my mind theater as i type.. Thanks for this :)

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெடிகுண்டு முருகேசன், Senthil Kumaran, திண்டுக்கல் தனபாலன் மற்றும் Siva.

@வெடிகுண்டு முருகேசன்,

சட்டத்தை மீறுபவர்களுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் இந்தியாவில் பதுங்கி உள்ள கருப்பு பணம் புழக்கத்துக்கு வர வேண்டும் என்றால் காஸினொக்கள், பெட்டிங் க்ளப்கள் போன்றவை இருந்தால் தான் முடியும். ஆனால் அது ஏழைகளை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அவ்வளவு தான். இது என்னுடைய கருத்து.

@Siva,

நீங்கள் சொன்னது எல்லாமே அப்படத்தின் அட்டகாசமான நினைவுகள். ஆனாலும் நீங்கள் சொன்ன அனைத்தையும் மீறி அவரது இசை தான் எனது நினைவுக்கு வருகிறது. அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும் போதும் அவரது இசை நினைவில் வருவது தான் அவரது வெற்றி என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்ல மறந்த ஒன்று "கார் இடிச்சிடுச்சு" :-)

நண்பா said...

Agreed. :)

நண்பா said...

சத்யா,
என் வலைபதிவில் இளையராஜா பாடல்களின் அடிப்படையில் விகடனில் வந்த ஒரு இனிய தென்றலான கதையை பதிப்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.
நன்றி
சிவா.

நண்பா said...

Happy New Year Sathiyan..
Where are you and How are you?
Take Care