Thursday, April 26, 2007

3. இந்தியப் போர்கள்

இந்திய - சீன போர் (1962)


ஆம். 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிர்பாராத பொழுதில் சீனாவின் வடிவில் வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு. அதற்கு காரணம் திபெத். 1914 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் திபெத் இந்திய அரசால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் சீனா அதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்பொழுது மூன்று நாடுகளுக்கு இடையே எல்லை கோடாக "மக் மோஹன் எல்லை" தீர்மானிக்கப் பட்டது.




இந்தியாவை பொருத்தவரை அது சீனாவை என்றுமே ஒரு எதிரியாக நினைத்தது இல்லை. 1949 ஆம் ஆண்டு சீனா ஒரு தனி குடியரசாக உருவானதை தொடர்ந்து அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தில் சீனா தலையிட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றின் அதிருப்திக்கு ஆளானது. ஆனால் அந்நிலையிலும் இந்தியா சீனாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தது. 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொரிய யுத்தத்தை நிறுத்த நடந்த அமைதி பேச்சு வார்த்தையை சீனா அழைக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கனித்தது.




இந்த அளவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவையும் நட்பையும் வெளிப்படுத்திய இந்தியாவிற்கு சீனா செய்தது பச்சையான நம்பிக்கை துரோகம். 1950 ஆம் ஆண்டு சீனா திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளுக்கு இடையே சுமார் 1200 கிலோமீட்டர் நீளமான சாலை ஒன்றை இட்டது. அச்சாலை இந்திய எல்லைப் பகுதியில் (அக்ஸாய் சின்) சுமார் 180 கிலோமீட்டர் சென்றது. 1954 ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட தனது நாட்டு மேப்பில் சுமார் 120000 சதுர கிலோமீட்டர்கள் இந்தியப் பகுதிகளை தனது பகுதிகளாக காட்டி இருந்தது. காஷ்மீரை சேர்ந்த அக்ஸாய் சின் பகுதியையும், அருணாச்சல பிரதேசத்தையும் தனது நாட்டின் பகுதிகளாக காட்டியது. மேலும் அக்ஸாய் சின் பகுதியில் சில இடங்களை தனது இராணுவத்தைக் கொண்டு முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டது சீனா. அப்பொழுதும் இந்திய அரசு அது சீனாவின் தவறால் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சி என்று தான் நம்பியது. மேலும் இந்திய அரசு இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவுபடுத்தி "இந்தி - சீனி பாய் பாய்" என்றது. சீனாவின் மீது அதீத நம்பிக்கை வைத்து சீனப் பிரதமர் எடுத்து வைத்த பஞ்சசீலக் கொள்கைகளில் கையெழுத்திட்டது இந்திய அரசு. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 1959 ஆம் ஆண்டு இந்திய அரசு தலாய் லாமா அவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தது சீனாவின் கோபத்தை தூண்டியது.


1961 ஆம் ஆண்டு கோவாவை போர்த்துகீஸியர்களிடமிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவியை நாடியது இந்திய அரசு. "சீனா தனது படையினரை இந்தியப் பகுதிகளிடமிருந்து திரும்பப் பெறவில்லை என்றால் கோவாவில் நடந்தது மீண்டும் நடக்கும்" என்று அந்நாளைய இந்திய உள்துறை அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி சீனாவிற்கு கிடைத்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் சீர்கெட்டது. உலக நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் பேச்சு வார்த்தை நடத்த தூண்டினர். இந்தியாவோ சீனா இந்தியப் பகுதிகளில் இருந்து தனது படையினரை முழுவதுமாக விலக்கி கொள்ளாத வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று தெளிவாக அறிவித்து விட்டது.


இதன் உச்ச கட்டமாக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி எல்லை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50 இந்தியப் படையினரை 1000 பேர் கொண்ட சீனப்படை சுத்தி வளைத்து படு கொலை செய்தது. அதில் இந்திய இராணுவத்தினர் சுமார் 25 பேர் இறந்தனர். மீதம் இருந்த 25 பேர் சிறைபடுத்தப் பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து நடத்திய எதிர் தாக்குதலில் 33 சீனர்கள் கொல்லப்பட்டனர். அதுவரை இந்தியா சீனா தன் மீது போர் தொடுக்காது என்று உறுதியாக நம்பியது. மேலும் அணி சேரா நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கியதால் அமெரிக்காவும், ரஷ்யாவும், பிரிட்டனும் தனது பாதுகாப்பிற்கு வரும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தது. அதனால் போருக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் அதே பொழுதில் கியூபாவில் தனது அணு அயுதக்கிடங்கை ரஷ்யா எழுப்பியதால் தொடர்ந்த சர்ச்சையில் உலக நாடுகளின் கவனம் திசை திருப்பப்பட்டது.

இந்தியாவும், சீனாவும் ஒன்றினைந்து மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக பெரும் வல்லரசுகளாக உருவாகலாம் என்று நினைத்து கொண்டிருந்த நேருவின் நம்பிக்கை சுவர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழ வேறு வழி இல்லாமல் ஆசியாவின் மிகப் பெரிய வலிமை வாய்ந்த படையுடன் இந்தியா மோத முடிவு செய்தது. ஆசியாவின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்ள தயாராயின.


இன்னும் வரும்...



Monday, April 23, 2007

2. இந்தியப் போர்கள்

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948) தொடர்ச்சி...

சுதந்திரம் பெற்ற மூன்றே மாதங்களில் தனது முதல் போருக்கு தயாரானது இந்திய இராணுவம். இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய கால கட்டத்தில் இந்திய இராணுவத்திலாகட்டும் இல்லை பாகிஸ்தான் இராணுவத்திலாகட்டும் அவர்களிடம் இருந்த யுத்த தளவாடங்கள் ஆங்கிலேயர்களால் விட்டு செல்லப்பட்டவையே ஆகும். மேலும் இருபக்க இராணுவத்திலும் வெகு சிலரே அத்தளவாடங்களை இயக்க போதுமான பயிற்சி பெற்றவர்கள்.

சுதந்திரம் பெற்று மூன்று மாதங்களே ஆன நிலை, பிரிவினை மற்றும் உள் நாட்டு மதக்கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இரண்டாம் உலகப் போரில் ஈடுபட நமது கஜானாவை முற்றிலும் சுரண்டிவிட்ட ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பலவற்றிற்க்கு இடையே தான் இரு நாடுகளும் இப்போரை சந்தித்தன.

ஆக்கிரமிப்பை தடுக்க காஷ்மீர் பகுதிகளுக்கு இந்திய இராணுவம் சென்ற பொழுது பாகிஸ்தான் படையினர் முன்னரே 40 சதவிகித காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றி இருந்தனர். காஷ்மீரின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டதோடு மட்டுமல்லாது பாகிஸ்தானிய படை ஸ்ரீ நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. Uri, Baramulla பகுதிகளை கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்படையினருக்கு ஸ்ரீ நகருக்கான பாதை திறந்தது [பார்க்க படம் 1 மற்றும் 2].


மேலும் அப்படை வீரர்களால் காஷ்மீரத்தில் உள்ள இந்துக்கள் பலர் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். Mirpur பகுதியை சேர்ந்த இந்துக்கள் ஒட்டு மொத்தமாக கொலை செய்யப்பட்டார்கள். அந்நிலையில் இந்தியப் படையினர் முதலில் பாகிஸ்தானப் படையினர் ஸ்ரீ நகரை அடையும் வழியை தடுக்க முனைத்தனர். Gulmarg, Uri, Baramulla பகுதிகளை மீண்டும் கைப்பற்றி ஸ்ரீ நகரை பாதுகாத்தனர். பாகிஸ்தான் படையினர் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் மீண்டும் கைப்பற்றினர் [பார்க்க படம் 3].

அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் Naoshera பகுதியை பாகிஸ்தானியரும், Chamb பகுதியை இந்தியரும் கைப்பற்றினர் [பார்க்க படம் 4]. இந்தியர்கள் தென் பகுதியில் Jhanger மற்றும் Rajauri பகுதியையும் கைப்பற்றினர்.



இந்தியப் படையினர் காஷ்மீரின் தென் பகுதியில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க முனைந்து கொண்டிருந்த போது காஷ்மீரின் வட பகுதியில் அருமையாக திட்டமிட்டு Skardu (14-Aug-1948), Dras (06-Jun-1948), Kargil (22-May-1948), Khalatse (19-Jul-1948), Ladakh (26-Jun-1948) என்று வரிசையாக இந்தியா வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றினர் பாகிஸ்தானியர்கள். இதுவே அப்போரில் அவர்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும் [பார்க்க படம் 5, 6 மற்றும் 7].


இடி மேல் இடி விழுந்த கதையாக 5-Sep-1948 அன்று இந்தியப் படையினர் Dras பகுதியை மீட்க முயன்று தோல்வி தழுவினர். மேலும் அதுவரை நம் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் பாகிஸ்தானியர்கள் கைப்பற்றினர். அதுவரையில் இந்தியர்கள் இந்திய பீரங்கிப் படையினரை பெரிதும் பயன் படுத்த வில்லை. அவ்வளவு உயரத்தில் அக்காலத்தில் அவர்களை இயங்க வைக்க சாத்தியங்கள் இல்லை என்பது கண்கூடு. அந்நிலையில் தான் அவர்களின் உதவி இல்லாமல் போனால் நாம் காஷ்மீரை இழந்து விடுவோம் என்ற நிலையில் அவர்கள் களத்தில் இறங்கினர்.


பாகிஸ்தானியர்கள் சுமார் 12 மாதங்கள் போராடி கைப்பற்றிய Dras, Kargil, Khalatse, Ladakh பகுதிகள் மற்றும் Punch பள்ளத்தாக்கு பகுதி போன்ற அனைத்தையும் இரண்டே மாதங்களில் இந்தியப் படையினர் கைப்பற்றினர். மேலும் Ladakh வரையில் முன்னேறிய பாகிஸ்தானியர்கள் படுதோல்வி அடைந்து பின்வாங்கினர் [பார்க்க படம் 8, 9 மற்றும் 10].


அதே நிலை தொடர்ந்து இருந்தால் ஒரு வேளை இந்தியாவால் காஷ்மீர் பகுதிகள் முழுவதையும் எளிதாக பிடித்திருக்க முடியும். ஆனால் இந்தியர்களிடம் பீரங்கிப் படையினருக்கு தேவையான தளவாடங்கள் இல்லை. அவை வரும் வரை அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை விட்டு விடாமல் பாதுகாக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்நேரத்தில் ஏதோ காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர முடிவு செய்தது நேரு அரசு. அதற்கு பொது மக்களிடத்தில் மட்டும் அல்லாது அவர்கள் அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இந்திய அரசு தனது முடிவில் பின்வாங்க வில்லை. போரை தற்காலிகமாக நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது. பின்னர் இருதரப்பினருக்கும் அவர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், அப்பொழுது அவர்கள் வசம் உள்ள பகுதிகளுடன் கூடிய ஒரு தற்காலிகமான எல்லை நிறுவப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தான் தனது படையினரை முற்றிலுமாக காஷ்மீரப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இந்தியா தேவையான அளவு குறைந்தபட்ச படையினரை அப்பகுதியில் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியத் தரப்பில் 3000 உயிர்களையும், பாகிஸ்தான் தரப்பில் 5000 உயிர்களையும் பலிவாங்கிய முதல் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் ஒரு வழியாக 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முடிவிற்கு வந்தது. காஷ்மீரை சேர்ந்த 101387 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்தியாவும் 85793 சதுர கிலோமீட்டர் பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றிக் கொண்டன. இந்திய வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகள் 1957 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. தற்காலிக எல்லையாக அன்று நிர்னயிக்கப் பட்ட எல்லைதான் இன்றும் இந்திய எல்லையாக இருக்கிறது. நமது இராணுவத்தினர் வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு பெரும் வரலாற்றுப் பிழையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.


போர் ஒய்ந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரம். எல்லை பாதுகாப்பு பிரச்சனை என்பது நாட்டின் வட மேற்கு பகுதியில் பாகிஸ்தானால் மட்டுமே வர முடியும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்க, முதல் இந்திய - பாகிஸ்தான் போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் வட கிழக்கு பகுதியில் சீனாவின் வடிவில் இந்தியாவிற்கு வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு.


இன்னும் வரும்...

Friday, April 20, 2007

அழகுகள் ஆறு!

அழகைப் பற்றி பதிவிட வேண்டுமென்று ப்ரியா உத்தரவிட்டு விட்டார். மீற முடியுமா? நான் அழகைப் பற்றி சொல்வதற்கு முன், அழகைப் பற்றி ஔவைப்பாட்டி என்ன அழகாக கொன்றை வேந்தனில் சொல்லியிருக்கிறார் என்று முதலில் பாருங்கள். "மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு". ஆஹா! ஔவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.


இனி நமது அழகிற்கு வருவோம். ப்ரியா சொல்லியது போல், வாழ்வில் அழகான மூன்று பருவங்கள், குழந்தை பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம் அனைத்துமே திருச்சியில் தான் என்னிடம் வந்தடைந்தன (இப்போவும் இளமையா தாங்க இருக்கேன். தங்கமணி தான் ஒத்துக்க மாட்டேங்கராங்க.). அதனால் எனக்கு அழகென்றால் அது திருச்சி தான்.


1. பின் மாலை நேர மலைக் கோட்டை


திருச்சியில் இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். சிலு சிலு வென்ற காற்று, ஊரைச் சுற்றி ஓடும் காவிரி, அதன் மேல் காவிரிப் பாலம், கார்த்திகை விளக்கை ஏற்றி வைத்தது போன்று பாலத்தின் மீது வரிசையாக வாகனங்கள், மலைக் கோட்டையை சுற்றி சிறு சிறு பொம்மைகளாய் வீடுகள், அவற்றின் அருகில் மனித நடமாட்டங்கள். ஆஹா என்ன அருமையான காட்சி. சட்டென்று அவற்றின் முன் நாம் உயர்ந்து விட்டது போன்ற ஒரு மாயத் தோற்றம். அழகு என்றால் எனது முதல் ஒட்டு பின் மாலை நேர மலைக் கோட்டைக்கு தான்.


2. இரவு நேர காவிரிப் பாலம்


திருச்சியிலே இருப்பவர்களுக்கு இது தான் மெரினா பீச். மாலையும், இரவும் கை கோர்க்கும் வேளையில் இங்கு வந்து விட்டால் போதும். கீழே அகண்ட காவிரிப் பிரவாகம். இங்கும் 'உள்ளேன் ஐயா!' என்று அட்டென்டன்ஸ் குடுக்க வரும் சிலு சிலு காற்று. இங்கும் அங்கும் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகள். ஆனால் சென்னை மெரினாவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இங்கே யாரும் தனிமை தேடி அலைவதில்லை. அதனால் தனிமை தரும் அநாகரீக அத்துமீறல்கள் இங்கு இல்லை. அதே நேரம் யாரும் அடுத்தவரின் சுவருகளில் அநாகரீகமாக நுழைவதில்லை. அடுத்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களை எளிதாக நீங்கள் அங்கே கேட்க முடியும். ஆனால் விரும்பி அவைகளை கேட்பவர்கள் குறைவு. காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.


3. திருச்சியில் நான் பிறந்து வளர்ந்த இல்லம்


திருச்சியில் உடையாண்பட்டி என்ற நகரத்து வாசம் முழுதும் வீசாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். திருச்சியில் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்த எனது தந்தை சதுர அடி 10 பைசாவிற்கு கிடைக்க அந்த கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி விட்டார். இது நடந்தது 1973 ஆம் ஆண்டு. நான்காயிரம் சதுர அடி நிலத்தில் கிட்டதட்ட 2000 சதுர அடி வீடு (இரு தளங்கள்). வீட்டை சுற்றி ஐந்து தெண்ணை மரங்கள், மூன்று வேப்ப மரங்கள், இரு மா மரம், ஒரு கொய்யா மரம். ஒரு கிணறு. வீட்டிற்கு சமீபத்தில் ஓடும் காவிரியின் கிளை ஆறான கோரையாறு. விடுமுறை நாட்களில் அங்கு குளிக்க சென்று விடுவோம். ஆழம் இல்லாத பகுதிகளில் குளிப்போம். நீச்சல் நன்கு தெரிந்தவர்கள் இக்கரையிலிருந்து அக்கரை செல்வார்கள். சில நேரங்களில் அருகில் இருக்கும் சாத்தனூர் ஏரிக்கும் செல்வதுண்டு. எனது குழந்தை பருவ நினைவுகளை அரவணைத்து பாதுகாக்கும் இந்த இல்லமும் எனக்கு அழகு தான்.


4. தஞ்சை பெரிய கோவில்


தஞ்சையில் கல்லூரியில் படித்த காரணத்தினால் பல நேரங்களில் எனக்கு புகலிடம் அளித்த இடம். வழிபடுவதற்காக இல்லாவிட்டாலும் பல நேரங்களில் மன அமைதிக்காக நான் செல்லும் இடம். இதைப் பற்றி புதியதாக சொல்ல என்ன இருக்கிறது? It is an Architectural Marvel.


5. பெங்களூர் இரவு வாழ்க்கை


வாரத்தில் ஐந்து நாட்களும் ஆணி புடுங்கிவிட்டு வெள்ளி மற்றும் சனி இரவுகள் வந்தால் காதலியிடம் செல்லும் காதலனைப் போல எனது மனம் திரையரங்கை நோக்கி செல்லும். 10:30 மணிக்கு தொடங்கும் இரவு காட்சி முடிந்து இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பி, இரவின் எஞ்சிய பொழுதை சீட்டுடன் கழிக்கும் வாழ்க்கை இருக்கிறதே, அதற்கு ஈடு சொல்ல இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.


6. கிங்ஸ்


கல்லூரியில் மூன்று ஆண்டுகள், பின்னர் நான்கு ஆண்டுகள் ஆக மொத்தம் ஏழு ஆண்டுகள் எனது வலது கையில் ஆறாம் விரலாய் என்னுடன் இருந்த எனது உற்ற நண்பன். ஒரு நாளில் ஒன்று என்று தொடங்கி, ஒரு பாக்கெட் என்று வளர்ந்து, இன்று என்னால் முழுவதுமாக விரட்டியடிக்கப் பட்டவன். எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.


இப்போ நான் அழக அழகா சொல்ல கூப்பிடறது,

1.Syam (பாவம் நயன்தாராவ யாரும் சொல்லலேன்னு வருத்தப் பட்டாரு. அதான். ஆமா, ஏன் அவர யாரும் இன்னும் டேக் பன்னலே?)

2.Radha Sriram (நம்ம ஊரு. மாட்டிவிடாம இருந்தா எப்படி?)


இவங்க இரண்டு பேரும் தான். நான் கூப்பிட நினைத்த பலரும் எழுதி விட்டதால், மூணாவது யாரும் இல்லை.


மக்கா நாம சொன்னத மட்டும் எடுத்துக்காதீங்க. "ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு" என்றும் கூட ஔவைப்பாட்டி சொல்லி இருக்கிறார்.

Tuesday, April 17, 2007

1. இந்தியப் போர்கள்

முன்னுரை: சுதந்திரம் கிடைத்து இன்று வரை பல போர்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. அப்போர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவே இப்பதிவு. அப்போர்கள் நடந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாகவே பதிவுகளை பதிய இருக்கிறேன். இப்பதிவிற்கான content களை பல தளங்களில் இருந்து பெற்றிருக்கிறேன். அவை என்ன என்பதை இறுதியில் குறிப்பிடுகிறேன். இப்பதிவுகளை "Compilation & Translation" என்ற அளவில் மட்டுமே நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நிகழ்வுகளை இந்தியாவின் நிலையிலிருந்தே விளக்கி இருக்கிறேன். பாகிஸ்தானிய தளங்களுக்கோ, இல்லை சீனத் தளங்களுக்கோ சென்றால் அவைகளில் போருக்கான காரணமாக இந்தியாவின் தவறுகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் நான் இந்தியன் என்பதால் எனது தார்மீகக் கடமையாக அத்தளங்களில் கூறப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை பதிந்துள்ளேன்.

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா முன் எப்பொழுதும் காணாத மாற்றங்களை கண்டது. முன்னூறு ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் ஆளப்பட்ட இந்திய நாட்டு இந்துக்கள் இஸ்லாமியர்களின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தாங்கள் ஆங்கிலம் கற்பது தங்கள் மத நம்பிக்கைக்கு புறம்பானது என்று கருதினார்கள் இஸ்லாமியர்கள். இதனை மாற்ற சர் சையது அஹமது கான் அவர்கள் MAO கல்லூரியை (Muhammedan Anglo-Oriental College) 1875 ஆம் ஆண்டு அளிகாரில் தொடங்கினார். அது 1920 ஆம் ஆண்டு இஸ்லாமிய பல்கலைகழகமானது (Aligarh Muslim University). இவ்வளவு இருந்தும் இஸ்லாமியர்களின் நிலை குறிப்பிடதக்க அளவு மாறவில்லை. அதனால் அரசு அலுவலகங்களில் இந்துக்களே அதிகம் பணியாற்றினர். இது இஸ்லாமியர்களிடையே இந்துக்களுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியது. ஆங்கிலேயர்களின் "Divide & Rule" கொள்கை, அதற்கு தூபம் போட்டது. இஸ்லாமியர்களுக்காக வென்று ஒரு தனி அமைப்பு 1906 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு வங்காளத்தில் உள்ள தாக்காவில் உருவானது. அதற்கு வெளிப்படையாகவே ஆங்கிலேயர்கள் ஆதரவளித்தனர். அந்நிலையில் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் "Quit India Movement" ஆரம்பித்தது. ஆனால் அதை மறுத்த முஸ்லிம் லீக் "Divide & Quit" என்று முழங்கியது.



குவாத் ஈ ஆஸாம் முகம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீகில் அல்லாமா இக்பால், லியாகத் அலி கான், சவுத்ரி நாசர் அஹமத், ஃபாத்திமா ஜின்னா, ஹுசேன் ஷாஹீத், ஃபாஸுல் ஹக், அப்துர் ரப் நிஷ்தார் போன்ற பல தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடாக பாகிஸ்தான் அமைவதில் முனைப்புடன் செயல்பட்டனர்.



அதே நேரத்தில் இரண்டாம் உலகப் போரினால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து ஆசியாவில் தனது மாகாணங்களை இனி நிற்வகிக்க முடியாது என்று உணர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேய இந்தியாவில் இருந்த 565 மாகாணங்களின் தலைமைக்கும் அவர்கள் இந்தியாவிலோ இல்லை பாகிஸ்தானிலோ இணைய அவர்களையே முடிவெடுக்க விட்டனர் ஆங்கிலேயர். பஞ்சாப் இரண்டாக பிரிந்து மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானிலும், கிழக்கு பஞ்சாப் இந்தியாவிலும் இணைந்தன. அதே போன்று வங்காளம் இரண்டாக பிரிந்து மேற்கு வங்காளம் இந்தியாவிலும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிலும் இணைந்தன. அவ்வாறு நடந்த பிரிவினையின் போது அப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாயினர். எல்லை பகுதி என்பதால் கலவரம் வெடித்து ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.

அம்மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிவினையின் போது எல்லையை கடந்தனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 14.5 மில்லியன் மக்கள் எல்லையை கடந்தனர். 7.226 மில்லியன் இஸ்லாமியர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், 7.249 மில்லியன் இந்துக்களும், சீக்கியர்களும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் குடிபெயர்ந்தனர். தாங்கள் பிறந்த ஊர், தங்களது அசையா சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு தங்களால் சுமக்க முடிந்தவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எல்லையை கடந்த அவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.


பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் நடந்ததை போன்றே மற்ற மூன்று மாநிலங்களில் பிரிவினை அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அவை ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர்.

இஸ்லாமிய மன்னரால் ஆளப்பட்ட ஜுனாகத் (இன்றைய குஜராத்) பாகிஸ்தானில் இணைய விருப்பம் தெரிவிக்க, அம்மாநிலத்தில் பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். இதனால் கலவரம் வெடித்தது. அதனை அடக்க முடியாமல் ஜுனாகத் மன்னர் பாகிஸ்தானிற்கு ஓடிவிட, ஜுனாகத் இந்திய பகுதியானது. ஹைதராபாத்திலும் அதே நிலவரம். ஆளும் இஸ்லாமிய மன்னரோ பாகிஸ்தானில் இணைய விரும்ப, பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். அங்கும் கலவரம் வெடித்து, இந்திய படையினர் சென்று கலவரத்தை அடக்கி ஹைதராபாத்தையும் இந்தியாவில் இணைத்தனர்.



காஷ்மீரை பொருத்த வரை இந்த நிலையில் சற்றே மாற்றம். அம்மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். ஆளும் மன்னரோ ஹரி சிங். அவர் ஒரு இந்து. அவர் இந்தியாவிலும் அல்லாமல், பாகிஸ்தானிலும் அல்லாமல் தனி நாடாக இருக்க விரும்பினார். மக்களிலோ ஒரு பகுதியினர் (இவர்களில் பல இஸ்லாமிய தலைவர்களும் அடக்கம்) இந்தியாவில் இணைய விருப்பம் தெரிவிக்க, மற்றொரு பகுதியினர் பாகிஸ்தானில் இணைய விரும்பினர்.



இந்நிலையில் காஷ்மீரில் உள்ள 48 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல (இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர்) என்பதாலும், காஷ்மீரில் உள்ள ஷேக் அப்துல்லா போன்ற இஸ்லாமியத் தலைவர்கள் இந்தியாவில் இணைவதையே விரும்பியதாலும் காஷ்மீரும் இந்தியாவில் இணைந்து விடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் வட மேற்கு பகுதி வாழ் பழங்குடியினரை தூண்டி காஷ்மீரின் மீது படை எடுக்க செய்தது. அவர்களுடன் தங்கள் இராணுவத்தையும் இணைத்தது. அவர்கள் காஷ்மீரத்தில் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இந்த படையெடுப்பை கண்டு அஞ்சிய காஷ்மீர இந்து மன்னர், இந்திய அரசாங்கத்திற்கு செய்தி அனுப்பினார். அதில் காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களுக்கு அல்லாத சில சிறப்பு சலுகைகள் அளித்து தனி அந்தஸ்து அளிப்பதாயின் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அப்பொழுது நடக்கும் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் முறியடிக்க இந்திய இராணுவத்தின் உதவியையும் வேண்டினார்.



அதற்கு சம்மதம் அளித்தது நேரு அரசு. அதுவரை காஷ்மீரின் மீதான பாகிஸ்தான படையெடுப்பாக இருந்த அந்த நிகழ்வு, அதற்கு பிறகு இந்தியா மீதான பாகிஸ்தான படையெடுப்பாக மாறியது. சுதந்திரம் பெற்று மூன்றே மாதங்கள் ஆன நிலையில் தனது முதல் போரை சந்திக்க தயாரானது இந்திய இராணுவம்.


இன்னும் வரும்...

Wednesday, April 11, 2007

"உடம்பொடு உயிரிடை"

பேராசிரியர் திரு.சத்யசீலன் அவர்களின் மேடை பேச்சு சிறு வயதிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நான் படித்த பள்ளியின் தாளாளரின் நெருங்கிய நண்பர் அவர் என்பதால் இரண்டு மூன்று முறை எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றி இருக்கிறார். நகைச்சுவையுடன் கலந்து நல்ல கருத்துக்களை கூறுவார்.


இன்று பட்டிமன்றங்களில் கொடி கட்டி பறக்கும் திரு. சாலமன் பாப்பையா, திரு. திண்டுக்கல் லியோணி போன்றவர்கள் அவரது பள்ளியிலிருந்து வந்தவர்கள் தாம். திரு. சத்யசீலன் நடுவராக இருக்க, திரு. அறிவொளி, திரு. பாப்பையா, திருமதி. காந்திமதி போன்றோர் இருதரப்பிலும் வாதம் செய்யும் பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும் அந்நாளில் திருச்சி மற்றும் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள். அதையெல்லாம் நாள்தோரும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.


இல்வாழ்க்கையை பற்றி அவர் உரையாற்றிய ஒரு சொற்பொழிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் சில பகுதிகள் கீழே.


கணவன், மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது?


உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொரு எம்மிடை நட்பு
[3. காமத்துப்பால் --> 3.1 களவியல் --> 3.1.5 காதற்சிறப்புரைத்தல் --> குறள் : 1122]


அதாவது "உடம்பொடு உயிரிடை" என்கிறார் வள்ளுவர். அதன் பொருள் கணவன், மனைவி உடலும் உயிரும் போல இருக்க வேண்டும். என்ன ஒரு அழகான உவமை பாருங்கள். இதனை ஒரு சாதாரன உவமையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த உவமைக்கு பின்னால் இருக்கும் கருத்தை பார்க்க வேண்டும். உடலும் உயிரும் என்றால், ஒரு உடலுக்கு ஒரு உயிர் தான் இருக்க முடியும். ஒரு உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உயிரோ அல்லது ஒரு உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உடலோ இருக்க முடியாது. இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் முதல் கருத்து.


அடுத்ததாக உடலும் உயிரும் தனித்தனியாக ஒன்றன் துணை இல்லாமல் ஒன்று இயங்க முடியாது. ஒரு உடலும், உயிரும் இனைந்தால் தான் மனிதன். உடல் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பிணம். உயிர் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பேய். இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் அடுத்த கருத்து.


என்ன அழகாக கூறி இருக்கிறார் பாருங்கள். ஒரு கணவனுக்கு பல மனைவியரும், ஒரு மனைவிக்கு பல கணவர்களும் இருக்கவே முடியாது. மேலும் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரை விட்டு மற்றவர் நீங்கவே கூடாது என்பதை "உடம்பொடு உயிரிடை" என்ற ஒரே உவமையில் கூறி இருக்கிறார்.

இனி இதை பார்த்ததும் எனக்கும் எனக்குள் இருக்கும் எனது இம்சைக்கும் (அதாங்க எனது மனசாட்சி) நடந்த உரையாடல்.


எ.ம.:டேய்! இத பாத்ததுல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்குடா.
நான்:எதுக்கு மச்சி? இவ்வளோ சந்தோஷப் பட இதுலே அப்படி என்ன சொல்லிட்டாரு?
எ.ம.:என்ன சொல்லிட்டாரா? டேய் ஆப்ப சட்டி தலையா! அவரு புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கனும்னு சொன்னாரு இல்லே.
நான்:ஆமாம் அதுக்கு என்ன?
எ.ம.:நீயும் உன்னோட பொண்டாட்டியும் எப்படி இருக்கீங்களோ அதையே சொல்லிட்டாருடா. சந்தோஷப் படாம இருக்க முடியுமா?
நான்:நிஜமாவா மச்சி? குறளுக்கு இலக்கணமாவா நாங்க வாழறோம்?
எ.ம.:பின்ன நான் உன் கிட்ட பொய் சொல்வேனா?
நான்:எப்படி மச்சி?
எ.ம.:அப்படி கேளுடா மைக்ரோவேவ் மண்டையா. அவரு என்ன சொன்னாரு? ஒரு பேய் கூட ஒரு பொணம் குடித்தனம் நடத்தறது தான் இல்வாழ்கைன்னு. அதே மாதிரி.........
நான்:டேய்! @#$%^&*!


என்று அவனை அடிக்க கை ஓங்க அதற்குள் அவன் சங்கத்தை கலைத்து விட்டு அப்பீட்டாகி விட்டிருந்தான். அவன விடுங்க மக்கள்ஸ். நம்ம கூடவே சுத்திகிட்டு திரியரதால அப்படிதான் அளவுக்கதிகமா நக்கல் விடுவான். சரி உங்க இல்வாழ்க்கை எப்படி? எங்கே வரிசையா வந்து சொல்லிட்டு போங்க. ரெடி ஸ்டார்ட் 1..2.....3..............