ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று கூறுவார்கள். அதில் ஒன்றான நாடகக்கலையின் பரிணாம வளர்ச்சியான சினிமாவிற்கு ஒரு தனி இடம் உண்டு. சிற்பம், சித்திரம், நடனம், இசை, கவிதை, நாடகம் போன்ற பல கலைகள் ஒன்று சேர்ந்த பெட்டகமே சினிமா எனலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவில், சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்றே குறிப்பிடலாம். நான் பல சமயம் யோசிப்பதுண்டு, "ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி சினிமா நடிகர்கள் மீது ஒரு மோகம்?" என்று. பிறகு தான் அதன் காரணம் புரிந்தது. நமது சமுதாயத்தில், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இந்த பிரச்சனைகளில் இருந்து 3 மணி நேரம் தங்களை மறக்க செய்யும் சாதனமாகவே சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் இதன் மேல் இப்படி ஒரு மோகம். அதில் தவறும் ஒன்றும் இல்லை.
இந்திய சினிமாவின் வளர்ச்சியை பார்த்தோமானால், அது பல்வேறு காலகட்டங்களை கடந்து இன்று ஒரு மிகப்பெரிய தொழிற்துறையாக உள்ளது.
இந்திய சினிமாவை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. வங்காள, மலையாள, மராத்தி திரைப்படங்கள்
2. இந்தி திரைப்படங்கள்
3. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்கள்
இவற்றில், முதலாவதானது ஒன்றுக்கும் உதவாத கலைப்படைப்புக்களை தருவது. ஜெர்மணியிலும், உகாண்டாவிலும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்படுவதற்காகவே தயாராகும் படைப்புகள். மற்ற இரண்டும் தான் பொன் முட்டையிடும் வாத்துக்கள். இதில் இரண்டாவதான இந்தி திரைப்பட உலகம் தாதாக்களின் இரும்பு பிடியில் சிக்கி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு படத்திற்கு தேவையான பணம் தருவதில் இருந்து, நடிகர், நடிகையரை மிரட்டி கால்ஷீட் வாங்குவது, அவர்களை குறைந்த சம்பளத்தில் நடிக்க வைப்பது, படத்தை இந்த விலைக்கு தான் வாங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்களை மிரட்டுவது, பிறகு திரையரங்குகள் வரை இவர்களது இரும்பு பிடி நீண்டு கொண்டே போகிறது. அதனால் தான் ரஜினிக்கு 20 கோடி ரூபாயும், சிரஞ்சீவிக்கு 10 கோடி ரூபாயும், கமலஹாசனுக்கு 6 கோடி ரூபாயும், விஜய்க்கு 4 கோடி ரூபாயும் சம்பளம் தர தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், இவர்களை விட பல மடங்கு அதிகம் வியாபாரம் செய்ய முடிந்த (தகுதியின் அடிப்படையில் நான் கூறவில்லை. நாடு முழுவதும் அவர்களது திரைப்படத்தை பார்க்கும் மக்கள் உள்ளதால் அவர்களது சந்தை பெரிது) அமீர்கானுக்கு 6 கோடியும் , ஷாருக்கானுக்கு 4 கோடியும், அமிதாப்பச்சனுக்கு 3 கோடியும் கொடுக்கிறார்கள். இங்கே இவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வது இவர்களது ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இவர்கள் பெற்றுத்தரும் வெற்றியோ இல்லை. மாறாக நிழல் உலக தாதாக்களே இவர்களது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்த வாத்து இடும் பொன் முட்டைகளை எல்லாம் எடுத்து அனுபவிப்பவர்கள் அடி உலக தாதாக்கள். அதற்கு பிரதிபலனாக நடிகர் நடிகையருக்கு தாதாக்கள் சில உதவிகள் செய்வதும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று இதோ. 2003ம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மீது குற்ற புலனாய்வு போலீசார் ஒரு குற்றச்சாட்டினை பதிவு செய்தனர். நடிகை ஷில்பா ஷெட்டி ப்ரஃபுல் என்ற சேலை நிறுவனத்திற்கு விளம்பர மாடலிங் செய்வதற்கு அந்நிறுவனத்தார் ரூபாய் 80 லகரம் தருவதாக வாக்களித்ததாகவும், ஆனால் அவ்வாறு பணம் தராமல் மோசம் செய்ததாகவும், அதனால் அவரின் தந்தை தாதாக்களை வைத்து மிரட்டி அந்த பணத்தை வசூலித்ததாகவும் அக்குற்றச்சாட்டின் முதல் தகவல் அறிக்கை கூறுகின்றது. இந்நேரம் அது, நம் நாட்டில் நீதிமன்றங்களில் கிடப்பில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஒன்றாகி இருக்கும். இவ்வாறு ஒரு சில உதவிகள் செய்வது சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுக்கும் உத்தி என்பதை அனைவரும் அறிவார்கள். ஹிந்தித்திரைப்பட உலகை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் கையில் உள்ள பணம் கண்டிப்பாக தீவிரவாத / தேச விரோத செயல்களில் ஈடுபட உதவும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
இந்த வகையில் பார்த்தோமானால் தமிழ் சினிமாவின் நிலைமை சற்றே ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. 90களின் இறுதி வரை இங்கே தாதாக்களின் ஆதிக்கம் இல்லை என்றே கூறலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் திரை உலகிலும் தாதாக்களின் பிடி வந்து விட்டது என தோன்றுகிறது. ஜெமினி பிலிம்ஸ், வாசன் க்ரூப், மாடெர்ன் தியேடர்ஸ், விஜய வாகினி போன்ற பல நிறுவனங்களும் வேறு தொழிலுக்கு சென்று விட, இப்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள் குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு படத்தை ஆரம்பித்து விட்டு பின்னர் அதை முடிக்க முடியாமல், இத்தகைய தாதாக்களிடம் பணம் பெற்று முடிக்கிறார்கள். அதற்கு இவர்களுக்கு தறப்படுவதோ பல மடங்கு வட்டி. வட்டி கட்ட தவறினாலோ சொத்து அனைத்தும் போய், உயிரே போய் விடும் நிலை. இத்தகைய தாதாக்களின் ஆட்சி பெருகியதை தொடர்ந்து தான், தயாரிப்பாளர் G.V. அவர்களின் தற்கொலை, தயாரிப்பாளர் காஜா மொஹிதீன் அவர்களின் தற்கொலை முயற்சி, நடிகர் அஜித் மிரட்டப்பட்ட விவகாரம்.
ஏதோ ஒரு மூலையில் ஒரு நடிகர் மிரட்டபட்டார் என்பதற்காக இதை நான் எழுதவில்லை. கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் கலைத்துறையில் உள்ளவர்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் தங்களது படைப்பை உருவாக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்தும், ரௌடீயிஸமும் இதில் குறுக்கிட கூடாது.
இந்த நிலையை சற்றே 'Extrapolate' செய்து பார்போம். இன்று கோடிகணக்கான ரூபாய் புழங்கும் சினிமா துறையை தங்கள் கையில் வைத்து ஆட்டிப்படைபவர்கள் நாளைக்கு வேறொரு துறைக்கு வர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? உதாரணத்திற்கு, வங்கிகள் தனியார் மய மானதால், இவர்கள் வங்கிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வங்கி இன்னாருக்கு தான் கடன் கொடுக்க வேண்டும் என்றும், இன்னாருக்கு இத்தனை வட்டி வீதம் டெபாசிட் தொகையில் பணம் தர வேண்டும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு இவ்வளவுதான் மாதம் சம்பளம் என்றெல்லாம் இவர்கள் நிர்ணயித்தால் எப்படி இருக்கும்? இன்று அந்த துறையை சேர்ந்தவர்கள் மட்டும் பாதிக்க படுவதால், பக்கத்து வீட்டுக்காரன் தானே கஷ்டப்படுகிறான் என்று நாம் பேசாமல் இருந்தால், நாளைக்கு நமக்கும் பாதிப்பு வரும். அப்பொழுது உதவிக்கு எவரும் வர மாட்டார்கள்.
அரசு இதை பல்வேறு சட்டங்களின் மூலம் நிறைவேற்றலாம். குறிப்பாக, ஒரு திரைப்படம் தயாராகும் போதே, தயாரிப்பாளர், படத்தின் பட்ஜெட், தனது சொத்து விவகாரம், படம் எடுக்க பணம் தந்தவர்கள் பட்டியல், வட்டி விகிதம் போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க செய்யலாம். எந்த ஒரு தனி மனிதரும், இவ்வளவு தொகைக்கு மேல் பணம் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற சட்டம் ஏற்ப்படுத்தலாம். கந்து வட்டி தடையை முழுவதுமாக அமுலுக்கு கொண்டு வரலாம். இவற்றை எல்லாம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இல்லாமலில்லை. ஆனால் அரசு தொலை நோக்கு பார்வையுடன் பார்த்து இவற்றை முழுவதுமாக ஒழிக்க ஆவன செய்ய வேண்டும்.
பின்குறிப்பு : சினிமா என்ற ஆங்கில சொல்லின் பொருள் திரையரங்கம் என்பதே ஆகும். ஆனாலும் சினிமா என்பது திரைப்படங்களின் மாற்றுப் பெயராக வழக்கில் வந்துவிட்டதால் அதையே நான் கையாண்டிருக்கிறேன்.
2 Comments:
//பக்கத்து வீட்டுக்காரன் தானே கஷ்டப்படுகிறான் என்று நாம் பேசாமல் இருந்தால், நாளைக்கு நமக்கும் பாதிப்பு வரும்.//
அருமையான வரி. நியாயமான கருத்து.
//எந்த ஒரு தனி மனிதரும், இவ்வளவு தொகைக்கு மேல் பணம் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற சட்டம் ஏர்ப்படுத்தலாம்.//
இந்த வரியில் கருத்து முரண்பாடு வருகிறது என்று சொல்லவில்லை. ஆனால் சந்தேகம் வருகிறது. கோடிகணக்கில் கடன் வாங்கியவர்கள் தான் மிரட்டபடுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 5000 ரூபாய் திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அபாக்கியசாலிகளை பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையோ?
//கந்து வட்டி தடையை முழுவதுமாக அமுலுக்கு கொண்டு வரலாம்.//
காவல் துறை நன்றாக செயல்பட்டால் போதுமே. சம்பந்தபட்டவர்களும் காவல்துறையை அணுக முன் வர வேண்டும். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும். மும்பாயில் இது சம்பந்த்தபட்ட ஒரு வழக்கில் பீரித்தி ஜிந்தா மட்டும் ஒழுங்காக சாட்சி சொல்ல, மற்ற நடிகர்கள் பல்டி அடித்தார்கள்.
மேலும் சம்பந்தபட்ட துறையிலும் ஒழுங்குமுறை கட்டுபாடு போன்றவை வளரவேண்டும். தெலுங்கு சினிமா துறையில் எந்த ஹீரோவுக்கும் 1 லட்சத்திற்கு மேல் அட்வான்ஸ் கொடுப்பதில்லை. இது தயாரிப்பாளர்கள் வைத்து கொண்ட ஒழுங்குமுறை. படப்பிடிப்பு முடிந்த பின்னரே மீதி பணம் வழங்கபடுகிறது.
ஆனால் தமிழ் திரைப்படதுறையில் எல்லாருக்கும் நஷ்டம் வந்தால் தவிர்த்து விட வேண்டும், லாபம் முழுவதும் நமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அது தான் இங்கு பிரச்சினையின் மூலகாரணமாக இருக்கிறது. ஒழுங்கு அந்த துறையில் வர வேண்டும்....
மற்றபடி சிறப்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.தயவு செய்து வேர்ட் ஃவெரிவிகேஷனை தூக்குங்கள்.
கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி பாலசந்தர் கணேசன்.
//இந்த வரியில் கருத்து முரண்பாடு வருகிறது என்று சொல்லவில்லை. ஆனால் சந்தேகம் வருகிறது. கோடிகணக்கில் கடன் வாங்கியவர்கள் தான் மிரட்டபடுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 5000 ரூபாய் திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அபாக்கியசாலிகளை பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையோ?//
கேள்விப்பட்டு இருக்கிறேன் பாலசந்தர் கணேசன். சென்ற ஆட்சியில் கந்து வட்டி தடை ஒரு அளவிற்கு அமுலில் இருந்தது. ஆனாலும் மக்கள் (ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்று பொருள் கொள்க) அதை வரவேற்க வில்லை. இதற்கு காரனம், அவர்களுக்கு பணம் தேவைப்படும் பொழுது எளிதில் கிடைப்பது கந்து வட்டிக்காரர்களிடமிருந்து தான். வங்கிக்கு சென்று அவர்களால் சத்தியமாக கடன் வாங்க முடியாது என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
அதனால் தான் நான் அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இதற்கு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம்மால் விடை காண முடியாது. நன்று ஆராய்ந்து காணப்பட வேண்டியது அது.
மேலும் இந்த பதிவில் நான் தமிழ் சினிமாவில் தாதாக்கள் பிடியை பற்றி மட்டுமே கூற வந்தேன்.
//தயவு செய்து வேர்ட் ஃவெரிவிகேஷனை தூக்குங்கள்//
இப்பொழுது தான் தங்களது பழைய பின்னூட்டத்தையும் பார்த்தேன். ஆங்கிலத்தில் இருந்ததால் படிக்க தவறி விட்டேன். வேர்ட் ஃவெரிவிகேஷனை தூக்கி விட்டேன். :-)
Post a Comment