Wednesday, July 12, 2006


ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்


நாள்:புதன்கிழமை, ஜூலை 12, 2006
நேரம்:மாலை 5:51
இடம்:அவசர சிகிச்சை பிரிவு, கருணா மருத்துவமனை, மும்பை

காட்சி 1 :

தேற்றவே முடியாத சோகத்தில் இருக்கும் ஒரு தாய் கைகளில் மலர்கொத்துடன் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். விக்ராந்த் கன்வில்க்கர் அவர்களது ஒரே மகன். 18 வயதே ஆன, மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மைக்ரோ பையாலஜி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன். மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பினால் படுகாயமுற்று அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான். அதிகாலை இரண்டு மணியிலிருந்து தனது கணவர் சதீஷுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு தியானம் செய்து வருகிறார். அவரது கணவர் சதீஷ் ஒரு மராத்தி பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை பார்ப்பவர். குண்டு வெடிப்பை பற்றிய செய்தி கேட்டவுடன் தனது மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஏனெனில் விக்ராந்த் மாலை அவ்வேளையில் தான் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் விக்ராந்தை கண்டு பிடிக்க முடியவில்லை ஆகையால் அவர்களது கவலை அதிகமாயிற்று. இரவு அவர்களுக்கு வந்த இரண்டு செய்திகள் அவர்களை பீதி கொள்ள செய்தன.

1. அவர்களது இல்ல வளாகத்தில் யாரோ ஒருவர் மரணமடைந்து விட்டார். யாரென்று அடையாளம் தெரியவில்லை.

2. விக்ராந்தை குண்டு வெடித்த வண்டிகளில் ஒன்றில் பார்த்ததாக அவனது நண்பன் கூறிய செய்தி.

பீதியுடனும், கவலையுடனும் மேலும் அவர்கள் விக்ராந்தை தேடி, கடைசியில் பாக்வதி மருத்துவமனையில் அவனை கண்டு கொண்டனர். பலமான காயத்துடன், உருத்தெரியாமல் மாறி இருந்த அவனை கருணா மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்துக் கொண்டிருகின்றனர். அவன் முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அவனது தாயாரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மகனின் முகத்தை பார்த்த அவனது தந்தையோ, பித்து பிடித்த நிலையில் யாருடனும் ஒன்றுமே பேசாமல் இருக்கிறார்.

காட்சி 2 :

அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே தனது கணவனின் நிலைமையை நினைத்து அழுகையுடன் அமர்ந்து இருக்கிறார் திருமதி. இந்திரா தாக்ரே. மாலை 5 மணிக்கு வண்டி ஏறுவதற்கு முன் கணவருடன் பேசியவர் இனிமேல் அவருடன் பேசவே முடியாமல் போய் விடுமோ? என்ற அச்சத்துடன் காணப்படுகிறார். அவரது கணவர் மும்பை போலீஸ் இலாகாவில் பணிபுரிபவர்.


காட்சி 3 :

கைத்தொலைப்பேசியில் பதற்றத்துடன் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் ரமேஷின் சகோதரர் தினேஷ், குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்து அவசர சிகிச்சைப் பிறிவில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். வெளியூருக்கு சென்றிருந்த தினேஷ் அதற்கு முன்தினம் தான் மும்பைக்கு வந்திருக்கிறார். தினமும் வீட்டிற்கு இரவு நேரம் கழித்து வருபவர், அன்று சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விட்டார். கிளம்பியவர் வீட்டை சென்றடைவதற்கு முன்னரே விதியானது மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி விட்டது.

மும்பையில் நேற்று நடந்த விதியின் கோர தாண்டவத்தில் மாட்டி சீறழிந்தவர்களில், மூன்றே மூன்று குடும்பங்களின் நிலை தான் மேலே நான் குறிப்பிட்டுள்ளது. [நன்றி : Rediff.com]

இதைப்போல் ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமடைந்து, உயிரிழந்து, சொந்த, பந்தங்களை இழந்து தவிக்கிறார்கள். இதற்கு காரணம் உலகெங்கிலும் ஊடுறுவி உள்ள தீவிரவாதமே. மொழி, இனம், மதம், நாடு என்ற எதன் அடிப்படையில் தீவிரவாதம் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. ஆனால் தீவிரவாதிகளை கண்டிக்கும் நிலையில் இப்பொழுது நான் இல்லை. "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் நியாபகத்திற்கு வருவதால், அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது,

"எங்களை விட்டு விடுங்கள். உங்களது கோபத்திற்கு நாங்கள் அருகதை அற்றவர்கள். உங்களது கோபத்தை சந்திக்கும் வளு எங்களது மனதிலும், உடலிலும் இல்லை."

1 Comments:

Kathir said...

ரொம்ப உண்மைங்க.. ஒவ்வொரு தடவை இந்த மாதிரி ஏதாவது படிக்கும்போதும் மனச என்னமொ பண்ணுதுங்க..