Thursday, May 08, 2008


அன்னையர் தினத்தில் தந்தையின் நினைவு



    "அப்பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய இலவச கடவுச்சீட்டு அளித்தது. அதனை பெறுவதற்கு நான் விண்ணப்பத்தில் எனது தந்தையின் கையொப்பத்தை பெற முயன்றேன். அதற்கு எனது தந்தை 'அது ஏழை மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகை. பேரூந்து பயணத்திற்கு பணம் செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இல்லை. நமக்கு அது வேண்டாம்.' என்று கூறி விட்டார். அதனால் தொடர்ந்து தனியார் பேரூந்திலேயே பயணிக்க தொடங்கினேன்."


இது கடந்த ஆண்டு எனது பேரூந்துப் பயணங்களின் சில நினைவுகள் பதிவில் நான் எழுதியது. படித்துவிட்டு பின்னூட்டமிட்ட சீமாச்சு அவர் சிறந்த தந்தை என்று குறிப்பிட்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த பின்னூட்டங்களில் அது முதன்மையானது.

இந்த நேரத்தில் அவரை பற்றிய ஒரு சிறு முன்னுரை அவசியம் என்று கருதுகிறேன். எனது தந்தை சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். சிறு வயது என்றால் பிறந்த 40 நாட்களில். அந்த இளம் வயதில் தனது கணவனை இழந்த எனது பாட்டி, தனது கைப்பிள்ளையை (எனது தந்தையை) தனது சகோதரியின் வீட்டில் விட்டு விட்டு தான் தொடராமல் விட்ட கல்வியினை தொடர சென்று படித்து முடித்து திருச்சியில் முதன்மை கல்வி நிறுவனங்களுள் ஒன்றான E.R. தொடக்க பள்ளியில் (இப்பொழுது அந்த பள்ளி இல்லை. மேல்நிலை பள்ளி மட்டுமே இருக்கிறது.) ஆசிரியையாக சேர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஓய்வு பெற்றவர். ஆனால் அவர் தனது கல்வியை முடிக்கும் வரை எனது தந்தை, தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் வேறொருவர் வீட்டில் வேலைக்காரனை போல வளர்ந்து வந்தார். நல்ல உணவு கிடையாது, உடைகள் கிடையாது. உணவும் அந்த வீட்டில் அனைவரும் உண்ட உடன் மீதம் உள்ளதே உண்ண வேண்டும். அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் குதிரை வண்டியில் பள்ளிக்கு செல்ல இவர் சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்வார். ஒரு முறை இவர் நடந்து வருவதை பார்த்து பொறுக்க முடியாமல் இவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த ஜட்கா வண்டிக்காரருக்கு கிடைத்தது பணி நீக்கம்.

என்ன திரைப்படத்தில் பார்ப்பது போல இருக்கிறதா? அது தான் உண்மை.

சிறு வயதில் பாசத்திற்காக அவர் ஏங்கியதினாலோ என்னவோ எங்களை அவர் எதற்கும் ஏங்க வைத்ததே இல்லை. போதும் போதும் என்ற அளவிற்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து வளர்த்தார். ஆனால் நான் எனக்குள் இருக்கும் எனது தந்தை பாசத்தை உணர்ந்தது கல்லூரியில் படிக்கும் பொழுது மட்டுமே. அதுவரை நான் ஒரு "அம்மா செல்லம்" தான். எனக்கு எது வேண்டும் என்றாலும் அது என் அம்மாவின் மூலமே அப்பாவிற்கு கோரிக்கையாக வைக்கப்படும்.

என்னை சிறு வயதில் "Primary Complex" எனப்படும் ஒரு வித நோய் தாக்கியது. சிறிது அழுதாலும் கூட எனக்கு சளி, இருமல், ஜுரம் என்று தொடர்ச்சியாக பாதிப்பு வந்து விடும். பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். அதனாலேயே கண்டிப்பிற்கு பெயர் போன எனது தந்தை என்னை அடித்ததோ கடிந்து கொண்டதோ மிகவும் குறைவு. மற்றபடி எனது அண்ணன்கள் அவரிடம் வாங்கிய அடிகளை நான் பதிவிட்டால் அவரை "குழந்தைகள் வதை சட்டத்தில்" கைது செய்து விடுவார்கள். அவ்வளவு கண்டிப்பானவர்.

அதனாலேயே அந்த வயதில் எனக்கு எனது தந்தையை விட எனது தாயாரிடமே ஒட்டுதல் அதிகம் இருந்தது. சிறிது வளர்ந்து உலக விஷயங்கள் புறியத்தொடங்கிய கால கட்டங்களில் தான் அவரது கண்டிப்புகள், திட்டுகள், அடிகள் அனைத்தும் "தேன் தடவப்பட்ட மாத்திரைகள்" என்று புறிந்தது.

அது நான் எட்டாம் வகுப்பிலோ அல்லது ஒன்பதாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு முறை எனது பாடப் புத்தகங்களுக்கு நடுவில் "சரோஜா தேவி" கதை புத்தகம் ஒன்றை அவர் பார்த்து விட்டார். பார்த்து விட்டு என்னை கடிந்து கொள்ளவில்லை, திட்டவில்லை. புத்தகத்தை கூட இருந்த இடத்திலேயே வைத்து விட்டார்.

மறுநாள் எனது தாயார் என்னிடம் வந்து படிக்கும் வயதில் மனதை அலையவிடாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு மட்டும் அறிவுரை கூறினார். அதன் பிறகு நான் தனி அறைகளில் இருக்கும் நேரங்களில் கதவினை தட்டி விட்டே உள்ளே நுழையும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பிறகும் அவர் என்னிடம் பழகுவதில் எந்த மாற்றமும் காட்டியதில்லை என்றாலும் சிறிது நாட்களுக்கு நான் அவரை பார்க்கவே கூசினேன்.

வங்கியில் வேலை காரணமாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வரும் இட மாற்றத்தை அவர் எங்கள் மீது சுமத்தியதே இல்லை. எங்கள் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் மட்டுமே செல்வார். வார இறுதிகளில் மட்டுமே வருவார். சிறிது காலம் தொடர்ந்த இது பின்னர் அவருக்கு திருச்சிக்கு இடமாற்றம் கிடைத்த உடன் முடிவிற்கு வந்தது.

அவரிடம் என்னை மிகவும் கவர்ந்தது அவரது நேரம் தவறாமை. எனது மாமா விளையாட்டாக இவ்வாறு கூறுவார், "உங்க அப்பா போய் தான்டா ரயில ஷெட்டிலிருந்து ப்ளாட்பார்ம்க்கு கூட்டிக்கிட்டு வரனும்." என்று. மேலும் உறவினர் வீட்டு விழாக்களுக்கு முதலில் செல்வது நாங்களாகத்தான் இருக்கும். ஒரு வேளை எங்களால் செல்ல முடியவில்லை என்றால் முதலில் அவர்களுக்கு கிடைப்பது எங்களின் வாழ்த்து அட்டையாகத்தான் இருக்கும்.

அதே போன்று அவரது ஒழுக்கமும் குறிப்பிட்டு சொல்லக் கூடியது. எந்த பொருளும் வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். 1974 இல் அவர் கட்டிய வீட்டு வரி ரசீது இப்பொழுதும் அவரிடம் இருக்கும். அவர் அப்படி இருப்பது போலவே நாங்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவ்வளவு விளையாடினாலும், எங்கு சென்றாலும் மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் இரவு உணவு கிடையாது.

அதே போன்று அவர் அடிக்கடி சொல்லும் கருத்து ஒன்று, "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பது. ஒரு முறை கல்லூரித் தேர்வுக் கட்டணம் (சுமார் 500 ரூபாய் என்று நினைவு) கட்ட ஏதோ நல்ல நாள் என்று பேராசிரியர் ஒருவர் என்னை கட்டாயப்படுத்தி அவரே பணம் கொடுத்து ரசீதும் பெற்றுக் கொடுத்தார். அதனை அறிந்த எனது தந்தை அன்று இரவே அவரது வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி அளிக்கும் படி என்னை அனுப்பிவைத்தார். ஒரு ரூபாய் கூட தேவை இல்லாமல் கடன் வாங்குவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் தவறாமல் வழிபாடு செய்பவர். அவரை திருநீறு, சந்தனம், குங்குமம் இல்லாமல் பார்க்கவே முடியாது. மாலையில் அலுவல் முடிந்து வரும் பொழுதும் அவை அவர் நெற்றியில் அழியாமல் இருக்கும். ஆனாலும் எங்கள் மீது அவர் இறை நம்பிக்கையை திணித்ததே இல்லை.

படிப்பை பொருத்த வரை எனது அண்ணன்கள் இருவரும் படு சுட்டி. எனது பெரிய அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். ஆனால் நானோ பன்னிரண்டாம் வகுப்பில் ஊர் சுற்றி குறைந்த மதிப்பெண்களே பெற்றேன். அந்த நேரத்தில் சில உறவினர்களும் நண்பர்களும் என்னை எனது சகோதரர்களுடன் ஒப்பிட்டு என்னை வருத்தப்படுத்திய போதும் அவர் ஒரு நாளும் என்னை யாரிடமும் விட்டுக் கொடுத்ததே இல்லை. "அவன் கடுமையாக உழைத்தான். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் மதிப்பெண்களாக கிடைக்கவில்லையென்றால் வேறு விதத்தில் கிடைக்கும்." என்று தான் அவர்களிடம் அவர் கூறுவார்.

இப்பொழுதும் இந்த வயதிலும் எனக்கு ஏதாவது வேண்டும் என்று கூறினால் ஓடிப் போய் செய்கிறார். ஆனால் அவருக்கு நான் ஒன்றுமே செய்தது கிடையாது. அவரை நான் பார்த்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நேற்று கணிணியில் பழைய புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எனது தந்தையின் புகைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. அது சென்ற ஆண்டு எனது மனைவி இந்தியா சென்ற பொழுது எடுத்தது.

நான் முன்னர் பார்த்ததை விட இப்பொழுது தலையில் நரை கூடி இருக்கிறது. முகத்தில் சுருக்கங்களும் அப்படியே. வயதாகி விட்டது. இந்த ஓராண்டு காலத்தில் அவை இன்னும் அதிகமாகியிருக்கக் கூடும். அவரது மடியில் தலை சாய்த்து படுக்க மனம் விழைகிறது.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஜெயராம் கூறுவது மனதில் எதிரொலிக்கிறது, "எந்த விதமான வலுவான காரணிகளும் இல்லாமல் உறவுகளை எதற்கு உடைக்க வேண்டும்?" இந்தக் கேள்வி என்னை பலவாறு சிந்திக்க வைக்கிறது. "எனது வசதி; எனது வாழ்க்கை." என்ற சுயநல சிந்தனையிலிருந்து நான் என்று வெளி வருவேன் என்பது தெரியவில்லை.

"அப்பா! எங்கிருந்து வந்தது எனக்கு இந்த சுயநலம்? உங்களிடமிருந்தோ இல்லை அம்மாவிடமிருந்தோ வந்திருக்க வாய்ப்பில்லையே. யார் கொடுத்த சீதனம் இது?"

கேள்வி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. பதில் இல்லை.

16 Comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கு இந்தப் பதிவு. ஆனால் கொஞ்சம் எழுத்துப் பிழைகள்தான் அங்க அங்க தடுக்குது. முக்கியமா னகர ணகரங்கள். கொஞ்சம் சரி பண்ணுங்க. இன்னும் ஒரு உதாரணம் - பன்னிரெண்டாம்.

SathyaPriyan said...

//
இலவசக்கொத்தனார் said...
நல்லா இருக்கு இந்தப் பதிவு.
//
நன்றி கொத்ஸ். ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க. நன்றி.

//
ஆனால் கொஞ்சம் எழுத்துப் பிழைகள்தான் அங்க அங்க தடுக்குது. முக்கியமா னகர ணகரங்கள். கொஞ்சம் சரி பண்ணுங்க. இன்னும் ஒரு உதாரணம் - பன்னிரெண்டாம்.
//
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழைகளை திருத்தி விட்டேன். ஒவ்வொரு முறையும் எழுதும்பொழுது தவிர்க்க முயல்கிறேன். ஆனாலும் வந்து விடுகின்றன.

சின்னப் பையன் said...

நெகிழ வைத்த பதிவு. கண்களில் ஏனோ கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.

நானும் என் தந்தையைப் பற்றி எழுதணும்னு நினைக்கிறதுதான். அவர் 'மேலேயிருந்து' பார்த்து ரசிப்பார்.

கோபிநாத் said...

தல

அருமையான பதிவு...சில இடத்தில் நீங்களும் நானும் ஒரே மாதிரி ;))

\\அதே போன்று அவரது ஒழுக்கமும் குறிப்பிட்டு சொல்லக் கூடியது. எந்த பொருளும் வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார். 1974 இல் அவர் கட்டிய வீட்டு வரி ரசீது இப்பொழுதும் அவரிடம் இருக்கும். அவர் அப்படி இருப்பது போலவே நாங்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவ்வளவு விளையாடினாலும், எங்கு சென்றாலும் மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் இரவு உணவு கிடையாது.

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் தவறாமல் வழிபாடு செய்பவர். அவரை திருநீறு, சந்தனம், குங்குமம் இல்லாமல் பார்க்கவே முடியாது. மாலையில் அலுவல் முடிந்து வரும் பொழுதும் அவை அவர் நெற்றியில் அழியாமல் இருக்கும். ஆனாலும் எங்கள் மீது அவர் இறை நம்பிக்கையை திணித்ததே இல்லை.
\\\

இது அப்படியே என்னோட அப்பாக்கிட்டையும் இருக்கு..;)

நிறைய யோசிக்க வச்சிட்டிங்க.

SathyaPriyan said...

//
ச்சின்னப் பையன் said...
நெகிழ வைத்த பதிவு. கண்களில் ஏனோ கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.
//
நன்றி ச்சின்னப் பையன்.

//
நானும் என் தந்தையைப் பற்றி எழுதணும்னு நினைக்கிறதுதான். அவர் 'மேலேயிருந்து' பார்த்து ரசிப்பார்.
//
மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் பதிவுகளை படித்து மனதை தேற்றிக் கொள்கிறேன்.

//
கோபிநாத் said...
அருமையான பதிவு...சில இடத்தில் நீங்களும் நானும் ஒரே மாதிரி ;))

இது அப்படியே என்னோட அப்பாக்கிட்டையும் இருக்கு..;)

நிறைய யோசிக்க வச்சிட்டிங்க.
//
நன்றி தலைவா.

CVR said...

:-)
இந்தியாவிற்கு வந்துடுங்க அண்ணாச்சி!!

இதை தவிர நான் வேறு எது
சொன்னாலும் I will be a hypocrite!!

எனக்கு இதை தவிர வேறு எதுவும் சொல்லத்தோணல.
To be frank...நீங்கள் இவ்வளவு பெரிதும் மதிக்கும் அன்பு செலுத்தும் தந்தையோடு அவருக்கு தேவையான சமையத்தில் பக்கத்தில் இல்லாமல் அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.. :)

Divya said...

என் அப்பாவின் குணங்களை, இயல்புகளை நீங்கள் அப்படியே பட்டியலிட்டிருக்கிறீர்கள்,

என் அப்பாவின் நினைவில்.....கண்ணீருடன் மூழ்கிப்போனேன்.

சத்யா, உங்கள் சூழ்நிலை என்னவென்று எனக்குத்தெரியாது,ஆனால் சிரமம் பார்க்காமல்...வருடத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் அப்பாவை பார்க்க இந்தியா செல்லுங்கள்,சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

நினைத்தாலும் பார்க்க முடியாத இடத்திற்கு என் அப்பா சென்றபின்.....நான் படும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இதற்குமேல் எழுதும் மனநிலையில் இப்போது நானில்லை.......

SathyaPriyan said...

//
CVR said...
:-)
இந்தியாவிற்கு வந்துடுங்க அண்ணாச்சி!!

இதை தவிர நான் வேறு எது
சொன்னாலும் I will be a hypocrite!!

எனக்கு இதை தவிர வேறு எதுவும் சொல்லத்தோணல.
//
:-)

//
To be frank...நீங்கள் இவ்வளவு பெரிதும் மதிக்கும் அன்பு செலுத்தும் தந்தையோடு அவருக்கு தேவையான சமையத்தில் பக்கத்தில் இல்லாமல் அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.. :)
//
முற்றிலும் உண்மை CVR. சமீப காலங்களில் அந்த எண்ணம் வலுப்படத் தொடங்கியுள்ளது. பார்க்கலாம்.

//
Divya said...
சத்யா, உங்கள் சூழ்நிலை என்னவென்று எனக்குத்தெரியாது,ஆனால் சிரமம் பார்க்காமல்...வருடத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் அப்பாவை பார்க்க இந்தியா செல்லுங்கள்,சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.
//
உண்மை Divya. கூடிய விரைவில் தற்காலிக விடுப்பிலோ இல்லை நிரந்தரமாகவோ சென்றாலும் சென்று விடுவேன்.

//
என் அப்பாவின் குணங்களை, இயல்புகளை நீங்கள் அப்படியே பட்டியலிட்டிருக்கிறீர்கள்,

என் அப்பாவின் நினைவில்.....கண்ணீருடன் மூழ்கிப்போனேன்.

நினைத்தாலும் பார்க்க முடியாத இடத்திற்கு என் அப்பா சென்றபின்.....நான் படும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இதற்குமேல் எழுதும் மனநிலையில் இப்போது நானில்லை.......
//
மிக்க வருத்தமாக இருக்கிறது. உங்கள் வளர்ச்சியை அவர் மேலே இருந்து பார்த்து மகிழ்ந்து ஆசீர்வதிப்பார். மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

Vino உங்கள் தனி மடல் கிடைத்தது. We both are sailing in the same boat.

Karthika said...

Very well written post Sathya....I always wonder how our parents are so disciplined and why we are not able to imbibe 10% of such goodness. Ella NRI polayum inga maatikitom....enna solluratho....

- Karthika

SathyaPriyan said...

//
Karthika said...
Very well written post Sathya....
//
Thank you.

//
I always wonder how our parents are so disciplined and why we are not able to imbibe 10% of such goodness.
//
True.

//
Ella NRI polayum inga maatikitom....enna solluratho....
//
:-(

Ramya Ramani said...

சத்யப்ரியன்,

நான் இந்த பதிவ எப்படி படிக்காம தவற விட்டேன்? Better Late than Never.நல்லா சொன்னீங்க! திரை கடல் ஒடியும் திரவியம் தேடினாலும்,தாய்நாட்டில் தந்தை தாய் அருகே இருப்பது போல வராதுங்க. வீட்ட விட்டு வந்து இங்க இருந்த கொஞ்ச நாட்களில் இதை நல்லா புரிஞ்சுகிட்டேன்.

எங்க அம்மா டீச்சராக இருந்ததுனால ரொம்ப கண்டிப்பு.அப்பா tour போயிட்டு வரும் நாள் எல்லாம் எனக்கும் என்னோட தங்கைக்கும் பயங்கர குஷி!என்னால யாருகிட்டயாவது வெளிப்படைய்யா யோசனை இல்லாம சொல்ல முடியும்னா அது அப்பா தான்.அவர நான் ரொம்ப மிச்ச் பன்றேன்!

வருஷத்துல ஒரு தரம் இந்தியா போயிட்டு வந்துருங்க.அப்ப இவ்வளோ கஷ்டமா இருக்காது. அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க.

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
நல்லா சொன்னீங்க! திரை கடல் ஒடியும் திரவியம் தேடினாலும்,தாய்நாட்டில் தந்தை தாய் அருகே இருப்பது போல வராதுங்க. வீட்ட விட்டு வந்து இங்க இருந்த கொஞ்ச நாட்களில் இதை நல்லா புரிஞ்சுகிட்டேன்.
//
சத்தியமான வார்த்தைகள் Ramya.

//
வருஷத்துல ஒரு தரம் இந்தியா போயிட்டு வந்துருங்க.அப்ப இவ்வளோ கஷ்டமா இருக்காது. அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க.
//
ஆமாங்க. சில பல காரணங்களால் என்னால் அது கடந்த ஆண்டு முடியவில்லை. இந்த ஆண்டு அவசியம் செல்ல வேண்டும்.

நீங்களும் விரைவில் உங்கள் பெற்றொர்களை பார்க்க வாழ்த்துகிறேன்.

Aruna said...

எப்பிடி இப்பிடி.....அப்பாக்கள் எல்லாம் இவ்வ்ளோ டிஸிப்ளினா இருக்காங்க??மனதைத் தொட்ட பதிவு
அன்புட அருணா

ஜோசப் பால்ராஜ் said...

நான் சிங்கப்பூர்ல இருந்து 6 மாதத்துக்கு ஒரு தடவை, 10 நாள் ஊருக்கு போயிட்டு வந்தாலும் நானும் உங்க நிலையிலத்தான் இருக்கேன். என்னங்க செய்யிறது? எனக்கு ஒரு நல்ல வேலை இந்தியாவுல கிடைக்காததாலத்தான் இங்க வந்தேன். உங்கள மாதிரி இன்போசிஸ்ல வேலை கிடைச்சுருந்தா கட்டாயம் இங்க வந்துருக்க மாட்டேன்.

Anonymous said...

hi sathyan,

en kangalil neer, unmayileye manathai thotta pathivu.

kalai

இயற்கை விவசாயம் said...

வாழும் தெய்வம் உடன் கூட்டி சென்று வைத்துக்கெள்ளவும்