Monday, October 20, 2008


சினிமா சினிமா சினிமா தான்

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அழகு பதிவொன்று எழுதும் போது நம்ம ஊர் காரர் தானே என்று நம்பி ஆட்டையில் இழுத்து போட்டு விட்டேன். அதை மனதில் வைத்துக் கொண்டு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் ராதா ஸ்ரீராம்.

சரி எவ்வளவோ செய்து விட்டோம் இதை செய்ய மாட்டோமா என்ன? நாமும் ஆட்டையில் கலந்தாச்சு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சிறு வயதில் எப்பொழுது படம் பார்க்க தொடங்கினேன் என்று நினைவில்லை. ஆனால் அப்பொழுது எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. அதனால் அப்பொழுது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பும் படங்களே நான் முதலில் பார்த்த படங்கள். சாந்தா சக்குபாய், தாய் சொல்லை தட்டாதே, ஸ்ரீ வள்ளி போன்ற படங்கள் நினைவில் இருக்கின்றன.

அரங்கில் சென்று பார்த்த படம் "திறமை" என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியிலிருந்து எனது மாமா வந்திருந்தார். அவருடன் சென்றேன்.

பெரிதாக ஒன்றும் உணரவில்லை. தமிழ் சினிமா என்பது பின்னாளில் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தினை பிடித்துக் கொள்ளும் என்பதெல்லாம் எனக்கு அப்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா எது?

குசேலன். படம் படு திராபை. ஆனாலும் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஏனென்றால் தொடர்ந்து பீமா, அழகிய தமிழ் மகன், குருவி என்று இங்கே அரங்கில் சென்று படம் பார்த்து ஆப்புகள் வாங்கி பழக்கமாகி விட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்ற வாரம் முன்னரே பல முறை பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை மைக்கேல் மதன காமராஜன் படம் பார்த்தேன். வீட்டிலேயே தொலைக் காட்சியில் பார்த்தேன்.

எல்லோரும் பாக்யராஜ் அவர்களையே திரைக்கதை வித்தகர் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் கமலின் திரைக் கதை நேர்த்தி என்னை அதிசயிக்க வைத்தது. ஒவ்வொரு கமலாக கதைக்குள் நுழைத்த விதம், பிசகில்லாமல் பிசகு நடக்கும் நிகழ்வுகள், நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை என்று ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு அனுபவம் தரும் படம் அது.

மற்றபடி இங்கே அரங்கில் வெளியிடப்படும் படங்களை எக்காரணம் கொண்டும் இணையத்திலோ அல்லது DVD யிலோ பார்ப்பது இல்லை.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

எவ்வளவோ இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அன்பே சிவம். கம்யூனிஸம் என்றால் ஏதோ கொடி பிடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு உணர்வு என்பதை புறிய வைத்த படம்.

தமிழ் அல்லாமல் ஹிந்தி சினிமாவில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது Rang De Basanthi. இன்றைய இந்திய சமூகத்தை தோலுரித்து காட்டிய படம்.

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. சொன்னால் பதிவு தொடர் பதிவாகி விடும்.


5 (அ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பூ கற்பு பற்றி சொன்ன கருத்திற்கு வந்த எதிர்ப்புகள். அவர் சொன்னதை முழுதும் புறிந்து கொள்ளாமல் அவருக்கு வந்த எதிர்ப்புகள் என்னை மிகவும் வருத்தமடைய செய்தன.

ஒருவனுக்கு ஒருத்தி, தமிழ் கலாசாரம் என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் நாம் வசதியாக தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு AIDS இருப்பதை மறந்து விடுகிறோம்.


5 (ஆ). உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரம். பல காட்சிகளை சொல்லலாம். உதாரணத்திற்கு பல்ராம் நாயுடு கோவிந்தை விசாரணை செய்யும் காட்சியில், "இங்க என்ன first night ஆ நடக்குது light போடுடா." என்று சொல்லும் அந்த ஒரு காட்சிக்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

அதே போல பல்ராம் நாயுடுவும் கிருஷ்ணவேனியும் காரில் பயணிக்கும் பொழுது கோவிந்த் பின்னால் ஓடி வருவார். அப்பொழுது கிருஷ்ணவேனியின் கையில் தண்ணீர் புட்டி இருக்கும். பல்ராம் நாயுடு ஓட்டுனரை பார்த்து "ஆக்ஸிலரேட்டர் இருக்குல்ல அழுத்து" என்பார். அப்பொழுது சரியாக கிருஷ்ணவேனியின் கையில் உள்ள புட்டி பின்னால் செல்லும், அதே நேரத்தில் கோவிந்தை விட்டு கார் வெகு வேகமாக அகலும். கோவிந்தின் உருவம் சிறியதாகும்.

இப்படி பல இடங்களில் அதிசியத்து போனேன். Simply amazing.


6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வேறு வேலை. தினமலர், குமுதம், குங்குமம் என்று எதை எடுத்தாலும் முதலில் படிப்பது அது தான். முன்பு கிசு கிசுக்களையும் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலமாக நடிக நடிகைகளும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்ற எண்ணம் மேலோங்க அத்தகைய செய்திகளை இப்பொழுது விரும்பி படிப்பதில்லை.

7.தமிழ் சினிமா இசை?

அதனை தவிர்த்து வேறு இசையை நான் அறியேன். சிறு வயது முதல் தமிழ் திரை பாடல்கள் தான் எனக்கு உற்சாக டானிக்.

ரஹ்மான் தவிர்த்து, ஹாரிஸ், யுவன், வித்யாசாகர் என்று பலரும் கலக்கிக் கொண்டிருந்தாலும் எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜா தான்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கில மொழி படங்கள் அதிகம் பார்ப்பது இல்லை. ஹிந்தி படங்கள் அதிகம் பார்ப்பேன்.கடந்த மூன்றாண்டுகளில் நான் பார்த்த பல ஹிந்தி படங்கள் என்னை மிகவும் பாதித்தன.

Black, Cheeni Kum, Rang De Basanthi, Tare Zameen Par, Swades, Kabhi Alvida Na Kehena என்று எத்தனையோ படங்கள், சமீபத்திய Rock On வரை.

இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு என்னையும் அறியாமல் பெருமூச்சு வருகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வராமல் இல்லை. ஆனால் அமிதாப், ஷாருக், ஆமீர் போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இவை. தமிழில் கமல் தவிர்த்து ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் இது போன்ற படங்களை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கமலும் கூட 100 கோடி, 200 கோடி என்று கோடிகளின் விளையாட்டில் இறங்குவதை பார்க்கும் பொழுது வருத்தமே மேலோங்குகிறது.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

சத்தியமாக இல்லை. ஒரு வாடிக்கையாளனுக்கும், பொருள் தயாரிப்பாளனுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவின் நடிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தமிழக அரசியலில் தேடிக் கொண்டிருக்கும் வரை, தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் எதிர் காலத்தை தங்கள் அபிமான நடிகர்களின் கட்-அவுட் மீது பாலாய் கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும் வரை தமிழ் சினிமாவின் எதிர் காலம் ஒன்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா ஒன்றும் அத்தியாவசிய சேவை கிடையாது. ஒரு வருடம் மருத்துவத்தையோ, கல்வியையோ, போக்குவரத்தையோ, காவல் துறையையோ செயல் படாமல் செய்தால் ஏற்படும் விளைவுகளுடன் ஒப்பிடுகையில் சினிமாவை தடை செய்தால் ஏற்படும் விளைவுகள் துச்சம்.

தமிழ் சினிமாவை தொழிலாக கொண்ட பலர் வேலை வாய்ப்பை இழப்பார்கள். நேரடி மற்றும் பெரிய பாதிப்பு அவர்களுக்கு தான்.

ஊடகங்களுக்கு மறைமுக பாதிப்பு இருக்கும். அவர்கள் வேறு celebrity க்களை தேடி செல்வார்கள். அவர்களின் செய்திப் பசிக்கு பலியாக பலர் காத்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை.

என்னை போன்ற வாடிக்கையாளனுக்கு தமிழ் சினிமாவில் பொழுது போக்கு கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது ஹிந்தி சினிமா அல்லது ஆங்கில சினிமா. பொழுது போக்கிற்கு பஞ்சமா என்ன?

அதிலும் அமெரிக்காவில் Whitewater Rafting, Skiing, Kayaking, Trekking, Biking என்று எவ்வளவோ பொழுது போக்குகள் உள்ளன. பொழுது போக்குகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. நமக்கு தான் நேரம் குறைவு.


"கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி மாமா!, பதில் சொல்லி பாருங்க அப்போதான் அதோட கஷ்டம் புறியும்." என்று பஞ்சதந்திரத்தில் கமல் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பது இந்தப் பதிவினை எழுதும் பொழுது தான் புறிந்தது.

எப்படியோ பத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். மற்றபடி இந்தப் பதிவு என்னை எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பினை அசை போட வைத்தது. பல படங்களை பார்க்கும் பொழுது நடந்த நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நண்பர்கள் பலரை மீண்டும் நினைவூட்டியது. மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமானது.

அதனை ஏற்படுத்தி கொடுத்த ராதா ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் மீண்டும் அழைக்கப் போவதில்லை. பதிவினை படிப்பவர்கள் யாருக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் எழுதுங்கள்.

மீண்டும் நன்றி.

6 Comments:

Radha Sriram said...

நல்ல தெளிவான பதிவு சத்யா..உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே எப்ப எழுதினாலும் ஒரு சிரத்தையோட எழுதரதுதான்.:):) ஏனோதானோவே கிடையாது....இதே மாதிரி தொடருங்க.:)

அட ஆமாம் அன்பே சிவம் என்னையும் ரொம்ப யோசிக்க வச்ச சினிமாதான்....நான் பதிவு போடரச்செ இதெல்லாம் நியாபகத்துக்கு வரவே இல்ல.:):)

SathyaPriyan said...

//
Radha Sriram said...
நல்ல தெளிவான பதிவு சத்யா..உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே எப்ப எழுதினாலும் ஒரு சிரத்தையோட எழுதரதுதான்.:):) ஏனோதானோவே கிடையாது....இதே மாதிரி தொடருங்க.:)
//
மிக்க நன்றி. இந்தப் பதிவும் ஒரு விதமான nostalgic அனுபவமாகவே இருந்தது.

//
அட ஆமாம் அன்பே சிவம் என்னையும் ரொம்ப யோசிக்க வச்ச சினிமாதான்....நான் பதிவு போடரச்செ இதெல்லாம் நியாபகத்துக்கு வரவே இல்ல.:):)
//
நல சிவத்தின் மனிதநேய கருத்துக்களே இன்றைய அவசர உலகத்திற்கு தேவையான வேத பாடங்கள்.

கயல்விழி said...

//எவ்வளவோ இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அன்பே சிவம். கம்யூனிஸம் என்றால் ஏதோ கொடி பிடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு உணர்வு என்பதை புறிய வைத்த படம். //

எனக்கும் இதே கருத்து தான், நிறைய பேர் இப்படி எழுதியதை பார்த்து வியப்பாக இருக்கிறது.

நல்ல பதிவு. :)

thamizhparavai said...

நல்ல பதிவு.எத்தனையோ தொடர்பதிவுகள் இத்தலைப்பில் படித்தாலும், இது கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு. காரணம் ஒத்த ரசனையாகக்கூட இருக்கலாம்.

SathyaPriyan said...

//
கயல்விழி said...
/எவ்வளவோ இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அன்பே சிவம். கம்யூனிஸம் என்றால் ஏதோ கொடி பிடிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு உணர்வு என்பதை புறிய வைத்த படம்./

எனக்கும் இதே கருத்து தான், நிறைய பேர் இப்படி எழுதியதை பார்த்து வியப்பாக இருக்கிறது.
//
நானும் இப்பொழுது தான் அதனை கவனித்தேன். தனிப் பதிவொன்று அதனை பற்றி எழுதி விட்டேன்.

//
நல்ல பதிவு. :)
//
மிக்க நன்றி கயல்விழி. முதல் வருகைக்கு நன்றி.

//
தமிழ்ப்பறவை said...
நல்ல பதிவு.எத்தனையோ தொடர்பதிவுகள் இத்தலைப்பில் படித்தாலும், இது கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு. காரணம் ஒத்த ரசனையாகக்கூட இருக்கலாம்.
//
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ்ப்பறவை. தொடர்ந்து வாருங்கள்.

jas said...

romba thelivaa eluthi irukkeenga priyan....nerayya views ennoda views oda match aahudhu.... infact..naan kooda nenaichirukken...communism naa etho romba araajakam nu... but anbe sivam andha view ai odaichadhu... and more over naanum ilayaraja music ku oru theeeevira visiri....totally....priyan....rombave azhagaa unga views ai express panni irukkeenga....