Monday, October 31, 2011

ஏழாம் அறிவு

இது வரை இப்படி நடந்ததே இல்லை. அமெரிக்கா வந்ததிலிருந்து இங்கே திரையரங்கில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை நான் பார்க்காமல் இருந்ததே கிடையாது. இம்முறை வேலாயுதம், ஏழாம் அறிவு இரண்டுமே வெளியிடப்பட கை குழந்தையை வைத்துக் கொண்டு இருவரும் இரண்டு படங்களையும் மாற்றி மாற்றி பார்ப்பது இயலாதென்பதால் விஜய் ரசிகையான எனது மனைவி வேலாயுதமும், நான் ஏழாம் அறிவும் பார்க்க முடிவு செய்தோம்.


அட்டகாசமான படத்தை கடைசி 20 நிமிடங்களில் நல்ல படமாக மாற்ற முடியுமா? முடியும் என்பதை தமிழ் கஜினி மூலம் நிரூபித்தார் முருகதாஸ். ஏழாம் அறிவிலும் அதே தவறை செய்திருக்கிறார். அருமையான கரு. சிறிது எடிட்டிங்கிலும் திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டியது, சறுக்கி விட்டது.

படம் தொடங்கிய உடன் முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ஆவணப்படம் போல ஏதோ ஒன்று ஓடுகிறது. அதில் பல்லவ இளவரசனான போதி தர்மன் பற்றி சொல்லுகிறார்கள். பல்லவ இளவரசன் போதி தர்மன் தனது குருவின் கட்டளையின் பேரில் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து சீனா சென்று அங்கு உள்ள மக்களை நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுகிறான். பின்னர் அவர்களுக்கு மருத்துவ மற்றும் தற்காப்பு கலைகளை பற்றி பாடம் நடத்துகிறான். பின்னர் ஒரு நாள் தான் இந்தியா திரும்ப விருப்பத்தை தெரிவிக்க, சீன மக்கள் அவனை விஷம் கொடுத்து கொன்று புதைக்கிறார்கள்.

பின்னர் கதை நிகழ் காலத்திற்கு வருகிறது. ஜெனிடிக்ஸ் இஞ்சினியரிங் மாணவியான ஷ்ருதி ஹாசன் போதி தர்மனின் DNA ஆராய்ச்சி செய்கிறார். போதி தர்மனின் பதப் படுத்திய உடலை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்து அவரது DNA சாம்பிளை வெளியிட, போதி தர்மனின் பரம்பரையில் வந்த சூர்யாவின் DNA போதி தர்மனின் DNA உடன் என்பது சதவிகிதம் பொருந்த, சூர்யாவின் DNA வை தூண்டி விடுவதன் மூலம் போதி தர்மனின் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும் என்று ஷ்ருதி நம்புகிறார்.

அவரது ஆராய்ச்சியை அவர் சீனாவிற்கு அனுப்ப, அவர்கள் போதி தர்மனின் திறமைகள் மீண்டும் ஒருவருக்கும் வரக் கூடாது என்பதால் ஆபரேஷன் ரெட் என்ற ஒன்றை செயல்படுத்த ஒரு சீனாக்காரனை அனுப்புகிறார்கள். அவன் ஷ்ருதியையும், சூர்யாவையும் கொல்லப் பார்க்கிறான். பின்னர் சூர்யா, ஷ்ருதி மற்றும் அந்த சீனாக்காரன் மூவருக்கும் இடையே நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் படத்தின் பின் பாதி. நிச்சயம் பின் பாதி படு சுறுசுறுப்பு.

படத்தின் முதல் பாராட்டு கேமராவிற்கு தான். போதி தர்மனின் சீன பயணத்தை இதை விட அழகாக யாராலும் காட்ட முடியாது. அட்டகாசம். பாடல்கள் நன்றாகவே இருந்தன. சண்டை காட்சியும் அட்டகாசம். படத்தின் கருவும், கதையும் அருமை. அதற்கு முருகதாஸை பாராட்டியே ஆக வேண்டும். மொத்தத்தில் இது நிச்சயம் ஒரு நல்ல படம்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. எடிட்டிங்கும் திரைக்கதையும் மோசம். முதல் 15 நிமிடங்களும், போதி தர்மன் பற்றிய குறிப்பும் தான் கதையின் மூலக் கரு என்றால் அதனை சிறிது சஸ்பென்ஸாக வைத்து பின்னர் கூறி இருக்க வேண்டாமா? ஸ்ருதி ஹாசன் வாயிலாக அதனை கூறி இருக்கலாம்.

அதே போல முன் அந்தி பாடல் முடிந்த பின்னர் வரும் கட் ஷாட்டில் சூர்யா ஏலேலம்மா படலை முனுமுனுக்கிறார்.

தமிழ் நடிகைகள் தமிழை ஒழுங்காக பேச வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, நானும் த்ரிஷாவின் தமிழை இதற்கு முன்னர் விமர்சித்ததில்லை. அதனால் நடிகை ஷ்ருதி ஹாசனின் தமிழை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை.

ஆனால் கமலின் மகள் ஷ்ருதி ஹாசனின் தமிழை இங்கே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன பெண்களுக்கு "ச" வராது. அவர்கள் "ஷாப்டேளா?" என்று தான் கேட்பார்கள் என்று தமிழுணர்வுடன் முன்பு கூறியவர் தனது மகளின் லகர, ளகர, ழகரங்களை சிறிது கவனித்திருக்கலாம். தமிலை பற்றியும் தமில் உணர்வை பற்றியும் அழகாக பேசுகிறார். "சொல்லாமலே உல்லம் துல்லுமா?" என்று இனிமையாக பாடுகிறார். கமல் சுயவிமர்சனம் என்று தமிழில் ஒரு சொல் இருக்கிறது.

மற்றபடி அனைவரும் கூறுவதை போல தமிழ், தமிழுணர்வு என்று தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எனக்கு இல்லை. ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்ட வேண்டும். தமிழ் ஜெயிக்கும் என்பதால் அதில் கட்டி இருக்கிறார்கள். தமிழர்களுக்காக படம் எடுக்கும் பொழுது பிரெஞ்சு வாழ்க என்றா கூற முடியும்?

மொத்தத்தில் கஜினியை போலவே ஒரு அட்டகாசமான படத்தை கடுமையாக உழைத்து நல்ல படமாக மாற்றி இருக்கிறார் முருகதாஸ்.

Sunday, October 23, 2011

பொடிமாஸ் - 10/23/2011


போன வாரம் ஒஹையோவில் உள்ள ஒரு தனியார் வனவிலங்கு பூங்காவிலிருந்து சுமார் 54 வனவிலங்குகள் தப்பித்துவிட அதில் 49 விலங்குகள் கொல்லப்பட்டன. 20 சிங்கங்கள், 18 புலிகள், 6 கரடிகள் அவற்றுள் அடங்கும். அந்த வனவிலங்கு பூங்காவின் உரிமையாளர் டெர்ரி தாம்ஸன் 54 விலங்குகளையும் திறந்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸார் 49 விலங்குகளையும் உயிருடன் பிடிக்க முயற்சி செய்யாமல் கொன்றதை சிலர் கண்டித்தாலும் ஒஹையோ போலீஸ் தலைவர் அதனை நியாயப்படித்தியுள்ளார். மனித உயிருடன் ஒப்பிடுகையில் வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்றும், அதனால் அவைகளை கொன்றது தவறு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் எனக்கு அந்த விலங்குகளின் பிணங்கள் குவிக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் பொழுது கண் கலங்கிவிட்டது. ஒன்றா? இரண்டா? 49. யாரோ செய்த தவறுக்கு அவைகள் தண்டிக்கப்பட்டன.

ஒஹையோ மாநிலத்தில் வன விலங்குகளை வளர்க்க போதுமான சட்ட திட்டங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு வேளை சரியான சட்ட திட்டங்கள் இருந்திருந்தால் 49 வன விலங்குகளை காப்பாற்றி இருக்கலாம்.

நம் ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும் பல நேரங்களில் கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது.



சன் டிவிக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. கடந்த இரு வாரங்களில் சன் டிவி மற்றும் கே டிவியில் 7 முறை முத்து திரைப்படம் ஒளிபரப்பிவிட்டார்கள். வேறு படங்கள் இல்லையா? இல்லை வேறு எதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. நல்ல வேளை தீபாவளிக்கும் முத்துவை ஒளிபரப்பாமல் வேட்டைக்காரனையும், சிங்கத்தையும் ஒளிபரப்புகிறார்கள். இம்முறை சரியான மசாலா வேட்டைதான். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் விஜய் டிவி தவிர்த்து வேறு எதுவும் அதிகம் பார்ப்பது இல்லை.



தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிகவின் உண்மை பலத்தை அனைவரும் அறிந்து கொண்டார்கள். தமிழக அரசியலை பொருத்தவரை ஒன்று திமுக அல்லது அதிமுக. மற்றதெல்லாம் 2016 ஆட்சி, 2021 ஆட்சி என்று கூவிக்கொண்டிருக்க வேண்டியது தான்.



சென்ற வாரம் எனது மனைவியின் பெரியம்மாவிடம் மடிப்பாக்கத்தில் ஐந்து சவரன் சங்கிலி களவாடப்பட்டுவிட்டது. யாரோ ஒருவன் தான் காவல் துறையை சேர்ந்தவன் என்றும், எனது மனைவியின் பெரியம்மாவை இரு திருடர்கள் தொடர்வதாகவும் கூறியிருக்கிறான். பின்னர் என்ன நடந்தது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து பார்த்த பொழுது அவர்களின் நகை களவாடப்பட்டதை அறிந்திருக்கிறார்கள். நல்ல வேளை நகையுடன் போனது. வேறு எதுவும் விபரீதமாக நடக்கவில்லை.



வடிவேலுவை திரைத்துறை ஓரங்கட்டியது நிச்சயம் வருந்த தக்கது. கடந்த ஆறு மாதங்களாக அவரின் ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. மிக சிறந்த நகைச்சுவை நடிகர் அவர். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது போல அவர் தனக்கு தானே குழி தோண்டி விட்டார்.


Sunday, October 16, 2011

பொடிமாஸ் - 10/16/2011


நேற்று முன் தினம் உத்திரபிரதேசத்தின் முதலமைச்சரான மாயாவதி சுமார் 685 கோடிகளில் உருவான ஒரு நினைவுச்சின்னத்தை நொய்டாவில் திறந்து வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 6000 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. மாயாவதி இந்தியாவின் முதலமைச்சர்களிலேயே பணக்கார முதலமைச்சர் என்று கூறுகிறார்கள். இது வரை சுமார் 2500 கோடிகளுக்கு மேல் நினைவுச்சின்னங்களுக்காக செலவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர் அமைத்திருக்கும் நினைவுசின்னங்களில் அவரின் முழு உருவ சிலைகள் பல வைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க ஜனநாயகம்.



பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்பவர்கள் அவர்களின் திறமை மாயக்கண்ணாடியில் தெரிவது போல தனக்கு முன்பே தெரிந்தது என்று பீலா விடுவார்கள். ஆனால் நேற்று "கமல் 50 - உலகநாயகன் பார்வையில்" என்ற நிகழ்ச்சியில், கமலை பற்றிய கேள்விக்கு ஏவிஎம் சரவணன் அவர்கள் பதிலளித்தது எனக்கு வியப்பளித்தது. களத்தூர் கண்ணம்மா படத்தின் போஸ்டரில் குழந்தை கமலை பெரிதாகவும் ஜெமினி மற்றும் சாவித்திரியை சிறியதாகவும் போட்டு வடிவமைத்ததற்கு கமலின் பிற்கால வளர்ச்சி பற்றிய நுண்ணறிவு காரணமா? என்ற கேள்விக்கு, படம் வெளியான பிறகு மக்களுக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடித்து விட, அவரின் புகழை பயன்படுத்தி படத்தின் வசூலை அதிகரிக்கவே அதனை செய்தோம் என்று நேர்மையாக அவர் குறிப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



சென்ற மாதம் இந்தியாவில் இருந்த எனது நண்பர்கள் ஐவர் ஏற்காடு சென்று வந்தார்கள். மனைவி, குழந்தைகள் யாரும் இல்லாமல் அவர்கள் மட்டும் சென்று வந்தார்கள். ஆண்கள் மட்டும் சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பயணம். புகைப்படங்களை பார்க்கும் பொழுது எனக்கு பெருமூச்சு மட்டுமே வந்தது. அமெரிக்க வாசத்தில் நான் பெரிதும் இழந்தது இது போன்ற பல அனுபவங்கள். காலம் எனக்கு என்ன விட்டு வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



சமீபத்தில் நான் படித்து வியந்த ஒரு சிந்தனை.

தலாய் லாமாவிடம் மனித குலத்தின் வியப்பூட்டும் அம்சமாக அவர் கருதுவது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அவர் அளித்த விடை, "மனிதன். ஏனென்றால், அவன் தனது ஆரோக்கியத்தை தொலைத்து பணத்தை சேகரிக்கிறான். பின்னர் தான் சேகரித்த பணத்தினை செலவு செய்து தொலைத்த ஆரோக்கியத்தை மீண்டும் அடைய முயல்கிறான். தனது எதிர்காலத்தை பற்றிய கவலையினால் பீடிக்கப்பட்டு நிகழ்காலத்தினை மகிழ்ந்தனுபவிக்க மறுக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. தனக்கு வாய்த்தது இறப்பே இல்லாத வாழ்வென்று நினைக்கிறான், முடிவில் வாழ்க்கை முழுதும் வாழாமலே இறக்கிறான்.

ஆங்கிலத்தில்:

The Dalai Lama, when asked what surprised him most about humanity, answered “Man. Because he sacrifices his health in order to make money. Then he sacrifices money to recuperate his health. And then he is so anxious about the future that he does not enjoy the present; the result being that he does not live in the present or the future; he lives as if he is never going to die, and then dies having never really lived.”



எனக்கு புரட்சி தலைவரின் திரைக்கதை அமைப்பும், அவரின் இயக்கமும் மிகவும் பிடிக்கும். தனக்கு எது வருமோ, தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதனை தெளிவாக புறிந்து கொண்டு அதனை அளிப்பவர். உங்களுக்கு அமிதாப் பச்சன் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த ஸண்ஸீர் (Zanjeer) திரைப்படத்தை பற்றி தெரிந்திருக்கலாம். அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வித்திட்டது இப்படம் தான். அதனை தான் புரட்சி தலைவர் தமிழில் சிரித்து வாழ வேண்டும் படமாக எடுத்துள்ளார். இந்த தகவல் எனக்கு சமீபத்தில் தான் கிடைத்தது. முன்னரே ஸ்ண்ஸீர் திரைப்படத்தை பார்த்திருந்தாலும், சிரித்து வாழ வேண்டும் படத்தை நான் பார்த்தது இல்லை. அங்கே இங்கே என்று அலைந்து வட்டதகடு வாங்கி ஒரு வழியாக சமீபத்தில் தான் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது அசத்தி விட்டார் தலைவர். திரைக்கதை மற்றும் இயக்கம் திரு. எஸ். எஸ். பாலன் அவர்களாக இருந்தாலும், சர்வ நிச்சயமாக புரட்சி தலைவரின் தலையீடு பல மடங்கு இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

ஸண்ஸீர் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு நிகரான ஒருவராக வருபவர் ஷேர் கான் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரான். அதிலும் ஒரு முக்கியமான காட்சியில் அமிதாபை எதிரிகளின் பிடியில் இருந்து அவர் காப்பாற்றுவார். ஆனால் இங்கே புரட்சி தலைவருக்கு நிகர் வேறு யார்? மேலும் அவரையாவது வேறொருவர் காப்பாற்றுவதாவது. அதனால் அந்த பாத்திரத்திலும் புரட்சி தலைவரே தமிழில் நடித்து விட்டார்.

மேலும் ஸண்ஸீர் திரைப்படத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது கடமையா? இல்லை குடும்பமா? என்று காவல் துறை ஆய்வாளரான அமிதாப் தவிப்பார். மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் கடமையை தேர்ந்தெடுப்பார். ஆனால் இங்கே, மூச். புரட்சி தலைவருக்கு கடமைக்கு முன் குடும்பமா முக்கியம்? சடார் என்று முடிவெடுத்து எதிரிகளை பந்தடுவார்.

ஆனால் எப்படி பார்த்தாலும், நிச்சயம் புரட்சி தலைவரின் screen presence மற்றும் charisma இரண்டும் அட்டகாசம். மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமாக சிரித்து வாழ வேண்டும் அமைந்தது.

Wednesday, October 05, 2011

Steve Jobs




"Apple has lost a visionary and creative genius, and the world has lost an amazing human being. Those of us who have been fortunate enough to know and work with Steve have lost a dear friend and an inspiring mentor. Steve leaves behind a company that only he could have built, and his spirit will forever be the foundation of Apple."


-Apple's board of directors


1976 ஆம் ஆண்டு Steve Jobs தனது நண்பர்களான Steve Wozniak, Mike Markkula இருவருடனும் சேர்ந்து தொடங்கியது தான் Apple, Inc. உலகின் முதல் Personal Computer இவர்கள் கண்ட கனவினால் நிஜமானது. தனது 26 ஆம் வயதில் Time இதழின் அட்டையை அலங்கரித்தார் அவர். அதன் பின்னர் இவரின் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள். 1984 ஆம் ஆண்டு Apple நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் NeXT Computers நிறுவனத்தை தொடங்கினார். Pixar Animation Studios நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். பின்னர் அதனை Walt Disney நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து Disney நிறுவனத்தின் Board of Director களுள் ஒருவரானார்.

1996 ஆம் ஆண்டு Apple நிறுவனம் NeXT Computers நிறுவனத்தை சுமார் 429 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதை தொடர்ந்து மீண்டும் Apple நிறுவனத்தில் சேர்ந்தார் Steve Jobs. 1997 ஆம் ஆண்டு அதன் CEO ஆனார். அதன் பின்னர் Apple நிறுவனத்திற்கு ஏறுமுகம் தான்.

2001 ஆம் ஆண்டு iPod ஐ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இசையுலகில் நுழைந்தது Apple நிறுவனம். iTunes Music Library தொடங்கி மக்கள் குறைந்த செலவில் பாடல்கள் வாங்க வித்திட்டார். மக்கள் CDs, Walkman, Discman போன்றவற்றை வாங்குவதை தவிர்த்தனர். Walking, Jogging, Working Out, Travelling என்று மக்கள் எந்த வேலையை செய்யும் பொழுதும் அவர்களுடன் iPod ஒரு அங்கமானது. It became a sensation overnight.

அதனுடன் நின்று விடாது 2007 ஆம் ஆண்டு iPhone ஐ வெளியிட்டு அதிகாரப் பூர்வமாக கைத்தொலைப்பேசி வர்த்தகத்தில் ஈடுபட்டது Apple. iPhone ஐ முதலில் வெளியிட்டவுடன் அதனை பற்றி அவர் சொன்னது கீழே.

Every once in a while a revolutionary product comes along that changes everything. It's very fortunate if you can work on just one of these in your career. ... Apple's been very fortunate in that it's introduced a few of these.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு iPad ஐ வெளியிட்டது Apple நிறுவனம். சுமார் 500 டாலர்களுக்கு அதனை எப்படி தருவது என்ற குழப்பத்தில் HP உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறிவிட முடி சூடா மன்னனாக விலங்குகிறது iPad.

2011 ஆம் ஆண்டு Apple நிறுவனம் Microsoft நிறுவனத்தை முந்தி உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது. இவை அனைவற்றுக்கும் காரணம் Steve Jobs, Steve Jobs, Steve Jobs மட்டுமே.

iPhone, iPad, iPod, iMac மற்றும் iTunes போன்றவற்றின் பின்னால் இருந்த மூளை இன்று இல்லை என்பது பெரிதும் வருத்தம் கொள்ள வைக்கிறது. 56 வயது சாகும் வயதா? Pancreatic Cancer என்கிறார்கள். இயற்கை சில நேரங்களில் காட்டும் கொடூர முகங்களில் இதுவும் ஒன்று. மரணம் பலரை உலகில் இருந்து வெளியேற்றினாலும் சிலர் மரணத்தை தங்கள் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறார்கள். Steve Jobs நிச்சயம் அவர்களுள் ஒருவர்.

RIP Steve Jobs. உங்களுக்கு மரணம் என்றுமே கிடையாது.