Sunday, October 16, 2011


பொடிமாஸ் - 10/16/2011


நேற்று முன் தினம் உத்திரபிரதேசத்தின் முதலமைச்சரான மாயாவதி சுமார் 685 கோடிகளில் உருவான ஒரு நினைவுச்சின்னத்தை நொய்டாவில் திறந்து வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 6000 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. மாயாவதி இந்தியாவின் முதலமைச்சர்களிலேயே பணக்கார முதலமைச்சர் என்று கூறுகிறார்கள். இது வரை சுமார் 2500 கோடிகளுக்கு மேல் நினைவுச்சின்னங்களுக்காக செலவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர் அமைத்திருக்கும் நினைவுசின்னங்களில் அவரின் முழு உருவ சிலைகள் பல வைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க ஜனநாயகம்.



பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்பவர்கள் அவர்களின் திறமை மாயக்கண்ணாடியில் தெரிவது போல தனக்கு முன்பே தெரிந்தது என்று பீலா விடுவார்கள். ஆனால் நேற்று "கமல் 50 - உலகநாயகன் பார்வையில்" என்ற நிகழ்ச்சியில், கமலை பற்றிய கேள்விக்கு ஏவிஎம் சரவணன் அவர்கள் பதிலளித்தது எனக்கு வியப்பளித்தது. களத்தூர் கண்ணம்மா படத்தின் போஸ்டரில் குழந்தை கமலை பெரிதாகவும் ஜெமினி மற்றும் சாவித்திரியை சிறியதாகவும் போட்டு வடிவமைத்ததற்கு கமலின் பிற்கால வளர்ச்சி பற்றிய நுண்ணறிவு காரணமா? என்ற கேள்விக்கு, படம் வெளியான பிறகு மக்களுக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடித்து விட, அவரின் புகழை பயன்படுத்தி படத்தின் வசூலை அதிகரிக்கவே அதனை செய்தோம் என்று நேர்மையாக அவர் குறிப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



சென்ற மாதம் இந்தியாவில் இருந்த எனது நண்பர்கள் ஐவர் ஏற்காடு சென்று வந்தார்கள். மனைவி, குழந்தைகள் யாரும் இல்லாமல் அவர்கள் மட்டும் சென்று வந்தார்கள். ஆண்கள் மட்டும் சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பயணம். புகைப்படங்களை பார்க்கும் பொழுது எனக்கு பெருமூச்சு மட்டுமே வந்தது. அமெரிக்க வாசத்தில் நான் பெரிதும் இழந்தது இது போன்ற பல அனுபவங்கள். காலம் எனக்கு என்ன விட்டு வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



சமீபத்தில் நான் படித்து வியந்த ஒரு சிந்தனை.

தலாய் லாமாவிடம் மனித குலத்தின் வியப்பூட்டும் அம்சமாக அவர் கருதுவது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அவர் அளித்த விடை, "மனிதன். ஏனென்றால், அவன் தனது ஆரோக்கியத்தை தொலைத்து பணத்தை சேகரிக்கிறான். பின்னர் தான் சேகரித்த பணத்தினை செலவு செய்து தொலைத்த ஆரோக்கியத்தை மீண்டும் அடைய முயல்கிறான். தனது எதிர்காலத்தை பற்றிய கவலையினால் பீடிக்கப்பட்டு நிகழ்காலத்தினை மகிழ்ந்தனுபவிக்க மறுக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. தனக்கு வாய்த்தது இறப்பே இல்லாத வாழ்வென்று நினைக்கிறான், முடிவில் வாழ்க்கை முழுதும் வாழாமலே இறக்கிறான்.

ஆங்கிலத்தில்:

The Dalai Lama, when asked what surprised him most about humanity, answered “Man. Because he sacrifices his health in order to make money. Then he sacrifices money to recuperate his health. And then he is so anxious about the future that he does not enjoy the present; the result being that he does not live in the present or the future; he lives as if he is never going to die, and then dies having never really lived.”



எனக்கு புரட்சி தலைவரின் திரைக்கதை அமைப்பும், அவரின் இயக்கமும் மிகவும் பிடிக்கும். தனக்கு எது வருமோ, தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதனை தெளிவாக புறிந்து கொண்டு அதனை அளிப்பவர். உங்களுக்கு அமிதாப் பச்சன் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த ஸண்ஸீர் (Zanjeer) திரைப்படத்தை பற்றி தெரிந்திருக்கலாம். அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வித்திட்டது இப்படம் தான். அதனை தான் புரட்சி தலைவர் தமிழில் சிரித்து வாழ வேண்டும் படமாக எடுத்துள்ளார். இந்த தகவல் எனக்கு சமீபத்தில் தான் கிடைத்தது. முன்னரே ஸ்ண்ஸீர் திரைப்படத்தை பார்த்திருந்தாலும், சிரித்து வாழ வேண்டும் படத்தை நான் பார்த்தது இல்லை. அங்கே இங்கே என்று அலைந்து வட்டதகடு வாங்கி ஒரு வழியாக சமீபத்தில் தான் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது அசத்தி விட்டார் தலைவர். திரைக்கதை மற்றும் இயக்கம் திரு. எஸ். எஸ். பாலன் அவர்களாக இருந்தாலும், சர்வ நிச்சயமாக புரட்சி தலைவரின் தலையீடு பல மடங்கு இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

ஸண்ஸீர் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு நிகரான ஒருவராக வருபவர் ஷேர் கான் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரான். அதிலும் ஒரு முக்கியமான காட்சியில் அமிதாபை எதிரிகளின் பிடியில் இருந்து அவர் காப்பாற்றுவார். ஆனால் இங்கே புரட்சி தலைவருக்கு நிகர் வேறு யார்? மேலும் அவரையாவது வேறொருவர் காப்பாற்றுவதாவது. அதனால் அந்த பாத்திரத்திலும் புரட்சி தலைவரே தமிழில் நடித்து விட்டார்.

மேலும் ஸண்ஸீர் திரைப்படத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது கடமையா? இல்லை குடும்பமா? என்று காவல் துறை ஆய்வாளரான அமிதாப் தவிப்பார். மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் கடமையை தேர்ந்தெடுப்பார். ஆனால் இங்கே, மூச். புரட்சி தலைவருக்கு கடமைக்கு முன் குடும்பமா முக்கியம்? சடார் என்று முடிவெடுத்து எதிரிகளை பந்தடுவார்.

ஆனால் எப்படி பார்த்தாலும், நிச்சயம் புரட்சி தலைவரின் screen presence மற்றும் charisma இரண்டும் அட்டகாசம். மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமாக சிரித்து வாழ வேண்டும் அமைந்தது.

0 Comments: