போன வாரம் ஒஹையோவில் உள்ள ஒரு தனியார் வனவிலங்கு பூங்காவிலிருந்து சுமார் 54 வனவிலங்குகள் தப்பித்துவிட அதில் 49 விலங்குகள் கொல்லப்பட்டன. 20 சிங்கங்கள், 18 புலிகள், 6 கரடிகள் அவற்றுள் அடங்கும். அந்த வனவிலங்கு பூங்காவின் உரிமையாளர் டெர்ரி தாம்ஸன் 54 விலங்குகளையும் திறந்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் 49 விலங்குகளையும் உயிருடன் பிடிக்க முயற்சி செய்யாமல் கொன்றதை சிலர் கண்டித்தாலும் ஒஹையோ போலீஸ் தலைவர் அதனை நியாயப்படித்தியுள்ளார். மனித உயிருடன் ஒப்பிடுகையில் வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்றும், அதனால் அவைகளை கொன்றது தவறு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் எனக்கு அந்த விலங்குகளின் பிணங்கள் குவிக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் பொழுது கண் கலங்கிவிட்டது. ஒன்றா? இரண்டா? 49. யாரோ செய்த தவறுக்கு அவைகள் தண்டிக்கப்பட்டன.
ஒஹையோ மாநிலத்தில் வன விலங்குகளை வளர்க்க போதுமான சட்ட திட்டங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு வேளை சரியான சட்ட திட்டங்கள் இருந்திருந்தால் 49 வன விலங்குகளை காப்பாற்றி இருக்கலாம்.
நம் ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும் பல நேரங்களில் கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது.
சன் டிவிக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. கடந்த இரு வாரங்களில் சன் டிவி மற்றும் கே டிவியில் 7 முறை முத்து திரைப்படம் ஒளிபரப்பிவிட்டார்கள். வேறு படங்கள் இல்லையா? இல்லை வேறு எதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. நல்ல வேளை தீபாவளிக்கும் முத்துவை ஒளிபரப்பாமல் வேட்டைக்காரனையும், சிங்கத்தையும் ஒளிபரப்புகிறார்கள். இம்முறை சரியான மசாலா வேட்டைதான். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் விஜய் டிவி தவிர்த்து வேறு எதுவும் அதிகம் பார்ப்பது இல்லை.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிகவின் உண்மை பலத்தை அனைவரும் அறிந்து கொண்டார்கள். தமிழக அரசியலை பொருத்தவரை ஒன்று திமுக அல்லது அதிமுக. மற்றதெல்லாம் 2016 ஆட்சி, 2021 ஆட்சி என்று கூவிக்கொண்டிருக்க வேண்டியது தான்.
சென்ற வாரம் எனது மனைவியின் பெரியம்மாவிடம் மடிப்பாக்கத்தில் ஐந்து சவரன் சங்கிலி களவாடப்பட்டுவிட்டது. யாரோ ஒருவன் தான் காவல் துறையை சேர்ந்தவன் என்றும், எனது மனைவியின் பெரியம்மாவை இரு திருடர்கள் தொடர்வதாகவும் கூறியிருக்கிறான். பின்னர் என்ன நடந்தது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து பார்த்த பொழுது அவர்களின் நகை களவாடப்பட்டதை அறிந்திருக்கிறார்கள். நல்ல வேளை நகையுடன் போனது. வேறு எதுவும் விபரீதமாக நடக்கவில்லை.
வடிவேலுவை திரைத்துறை ஓரங்கட்டியது நிச்சயம் வருந்த தக்கது. கடந்த ஆறு மாதங்களாக அவரின் ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. மிக சிறந்த நகைச்சுவை நடிகர் அவர். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது போல அவர் தனக்கு தானே குழி தோண்டி விட்டார்.
0 Comments:
Post a Comment