Monday, October 31, 2011


ஏழாம் அறிவு

இது வரை இப்படி நடந்ததே இல்லை. அமெரிக்கா வந்ததிலிருந்து இங்கே திரையரங்கில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை நான் பார்க்காமல் இருந்ததே கிடையாது. இம்முறை வேலாயுதம், ஏழாம் அறிவு இரண்டுமே வெளியிடப்பட கை குழந்தையை வைத்துக் கொண்டு இருவரும் இரண்டு படங்களையும் மாற்றி மாற்றி பார்ப்பது இயலாதென்பதால் விஜய் ரசிகையான எனது மனைவி வேலாயுதமும், நான் ஏழாம் அறிவும் பார்க்க முடிவு செய்தோம்.


அட்டகாசமான படத்தை கடைசி 20 நிமிடங்களில் நல்ல படமாக மாற்ற முடியுமா? முடியும் என்பதை தமிழ் கஜினி மூலம் நிரூபித்தார் முருகதாஸ். ஏழாம் அறிவிலும் அதே தவறை செய்திருக்கிறார். அருமையான கரு. சிறிது எடிட்டிங்கிலும் திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டியது, சறுக்கி விட்டது.

படம் தொடங்கிய உடன் முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ஆவணப்படம் போல ஏதோ ஒன்று ஓடுகிறது. அதில் பல்லவ இளவரசனான போதி தர்மன் பற்றி சொல்லுகிறார்கள். பல்லவ இளவரசன் போதி தர்மன் தனது குருவின் கட்டளையின் பேரில் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து சீனா சென்று அங்கு உள்ள மக்களை நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுகிறான். பின்னர் அவர்களுக்கு மருத்துவ மற்றும் தற்காப்பு கலைகளை பற்றி பாடம் நடத்துகிறான். பின்னர் ஒரு நாள் தான் இந்தியா திரும்ப விருப்பத்தை தெரிவிக்க, சீன மக்கள் அவனை விஷம் கொடுத்து கொன்று புதைக்கிறார்கள்.

பின்னர் கதை நிகழ் காலத்திற்கு வருகிறது. ஜெனிடிக்ஸ் இஞ்சினியரிங் மாணவியான ஷ்ருதி ஹாசன் போதி தர்மனின் DNA ஆராய்ச்சி செய்கிறார். போதி தர்மனின் பதப் படுத்திய உடலை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்து அவரது DNA சாம்பிளை வெளியிட, போதி தர்மனின் பரம்பரையில் வந்த சூர்யாவின் DNA போதி தர்மனின் DNA உடன் என்பது சதவிகிதம் பொருந்த, சூர்யாவின் DNA வை தூண்டி விடுவதன் மூலம் போதி தர்மனின் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும் என்று ஷ்ருதி நம்புகிறார்.

அவரது ஆராய்ச்சியை அவர் சீனாவிற்கு அனுப்ப, அவர்கள் போதி தர்மனின் திறமைகள் மீண்டும் ஒருவருக்கும் வரக் கூடாது என்பதால் ஆபரேஷன் ரெட் என்ற ஒன்றை செயல்படுத்த ஒரு சீனாக்காரனை அனுப்புகிறார்கள். அவன் ஷ்ருதியையும், சூர்யாவையும் கொல்லப் பார்க்கிறான். பின்னர் சூர்யா, ஷ்ருதி மற்றும் அந்த சீனாக்காரன் மூவருக்கும் இடையே நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் படத்தின் பின் பாதி. நிச்சயம் பின் பாதி படு சுறுசுறுப்பு.

படத்தின் முதல் பாராட்டு கேமராவிற்கு தான். போதி தர்மனின் சீன பயணத்தை இதை விட அழகாக யாராலும் காட்ட முடியாது. அட்டகாசம். பாடல்கள் நன்றாகவே இருந்தன. சண்டை காட்சியும் அட்டகாசம். படத்தின் கருவும், கதையும் அருமை. அதற்கு முருகதாஸை பாராட்டியே ஆக வேண்டும். மொத்தத்தில் இது நிச்சயம் ஒரு நல்ல படம்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. எடிட்டிங்கும் திரைக்கதையும் மோசம். முதல் 15 நிமிடங்களும், போதி தர்மன் பற்றிய குறிப்பும் தான் கதையின் மூலக் கரு என்றால் அதனை சிறிது சஸ்பென்ஸாக வைத்து பின்னர் கூறி இருக்க வேண்டாமா? ஸ்ருதி ஹாசன் வாயிலாக அதனை கூறி இருக்கலாம்.

அதே போல முன் அந்தி பாடல் முடிந்த பின்னர் வரும் கட் ஷாட்டில் சூர்யா ஏலேலம்மா படலை முனுமுனுக்கிறார்.

தமிழ் நடிகைகள் தமிழை ஒழுங்காக பேச வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, நானும் த்ரிஷாவின் தமிழை இதற்கு முன்னர் விமர்சித்ததில்லை. அதனால் நடிகை ஷ்ருதி ஹாசனின் தமிழை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை.

ஆனால் கமலின் மகள் ஷ்ருதி ஹாசனின் தமிழை இங்கே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன பெண்களுக்கு "ச" வராது. அவர்கள் "ஷாப்டேளா?" என்று தான் கேட்பார்கள் என்று தமிழுணர்வுடன் முன்பு கூறியவர் தனது மகளின் லகர, ளகர, ழகரங்களை சிறிது கவனித்திருக்கலாம். தமிலை பற்றியும் தமில் உணர்வை பற்றியும் அழகாக பேசுகிறார். "சொல்லாமலே உல்லம் துல்லுமா?" என்று இனிமையாக பாடுகிறார். கமல் சுயவிமர்சனம் என்று தமிழில் ஒரு சொல் இருக்கிறது.

மற்றபடி அனைவரும் கூறுவதை போல தமிழ், தமிழுணர்வு என்று தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எனக்கு இல்லை. ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்ட வேண்டும். தமிழ் ஜெயிக்கும் என்பதால் அதில் கட்டி இருக்கிறார்கள். தமிழர்களுக்காக படம் எடுக்கும் பொழுது பிரெஞ்சு வாழ்க என்றா கூற முடியும்?

மொத்தத்தில் கஜினியை போலவே ஒரு அட்டகாசமான படத்தை கடுமையாக உழைத்து நல்ல படமாக மாற்றி இருக்கிறார் முருகதாஸ்.

0 Comments: