Tuesday, November 29, 2011

பொடிமாஸ் - 11/29/2011

கொலவெறி பாடல் ஹிட்டானதில் யாருக்கு நன்மையோ இல்லையோ மருந்து விற்பனையாளர்களுக்கு நன்மையே. பலருக்கு ஜெலூஸில் தேவை படுகிறது. சமீபத்திய சேர்க்கை எழுத்தாளர் ஞாநி. பாடல் வெளியான 15 நாட்களுக்குள் ஒரு கோடி முறைக்கும் மேல் இணையத்தில் பார்க்கப்பட்டு இருக்கிறது. போகிற போக்கில் அதெல்லாம் பொய், இவர்களே செட் அப் செய்தது என்று சேற்றை வாரி இறைத்து விட்டு போயிருக்கிறார். மக்களை கவரும் கலை படைப்பே உன்னதமான படைப்பு. இக்கால ரசிகர்களுக்கு இது தான் பிடித்திருக்கிறது. இதை கூட புரிந்து கொள்ளாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். ஒப்பாரி வைப்பவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் கொண்டு ஒரு வெண்பா எழுதி, இசையமைத்து இணையத்தில் வெளியிடுங்களேன், இதற்கு போட்டியாக. யார் வேண்டாம் என்று உங்களை தடுத்தது? நன்றாக இருந்தால் அதையும் கொண்டாடிவிட்டு போகிறோம்.



சச்சினின் நூறாவது நூறு கடைசியில் இந்த தொடரில் நடக்கவில்லை. எனக்கு அதை பற்றிய பெரிய எதிர் பார்ப்புகள் ஒன்றும் இல்லை. நடக்கும் பொழுது அது நடக்கும். ஆனால் ரோஜர் ஃபெடரர் அமைதியாக தனது நூறை செயல்படுத்தி முடித்து விட்டார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நூறாவது இறுதி ஆட்டத்தை ஆடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். வாழ்த்துக்கள் ஃபெடரர்.



சென்ற வாரம் தேங்க்ஸ் கிவிங் நல்ல படியாக சென்றது. நெடு நாட்களுக்கு பின்னர் நான்கு நாட்கள் விடுமுறை. நல்ல ஓய்வு. வியாழக் கிழமை அன்று முழு வான் கோழியை சுட்டு வயிறு புடைக்க சாப்பிட்டேன். சமைத்தது எனது மனைவியின் சகோதரியின் கணவர். நாவில் சுவை இன்னும் அப்படியே இருக்கிறது. முழு வான் கோழியை வெட்டுவதற்கு முன்பு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. அதனால் என்ன? அடுத்த முறை எடுத்து விட்டால் போகிறது.



அடுத்தது விக்ரமின் ராஜபாட்டைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சரியான மசாலா வேட்டையாக இருக்கும் என்று நம்புகிறேன். பீமாவை இப்படி நம்பி சென்று தான் ஆப்பு வாங்கினேன். சுசீந்திரன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவரின் நான் மஹான் அல்ல எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒஸ்தி, வேட்டை யெல்லாம் எனது லிஸ்டிலேயே இல்லை. பார்ப்பேனா என்று தெரியவில்லை. விமர்சனங்களை படித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று இருக்கிறேன்.



225,000. நம்பரை பார்த்துவிட்டு ஏதோ ஒரு புதிய ஊழல் என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் அமெரிக்கா வந்த இந்த ஆறு வருடங்களில் எங்களின் கார்களில் பயணம் செய்த தொலைவின் கிலோமீட்டர் எண்ணிக்கை தான் இது. எவ்வளவு லிட்டர் பெட்ரோலை குடித்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது பெருமூச்சு வருகிறது. நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அமெரிக்க தலை நகரான வாஷிங்டன் டிசி 36 மைல் தொலைவு. மெட்ரோ ரயில் தடம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது. அதன் பின்னராவது காரை வீட்டிலேயே வைத்து விட்டு இளைய நிலா கேட்டுக்கொண்டோ, ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்துக்கொண்டோ, இல்லை தூங்கிக்கொண்டோ பயணம் செய்யலாம்.



சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்த பொழுது ஒரு ஸ்லோகத்தை கண்டேன். மனதில் சட்டென்று வந்து பதிந்து விட்டது.

சத்யம் ப்ருயாத்; ப்ரியம் ப்ருயாத்;
மத் ப்ருயாத் சத்யம் அப்ரியம்;
ப்ரியம்ச நா அன்ருதம் ப்ருயாத்;
ஈஷா தர்ம சனாதனா

உண்மையை பேசுங்கள்; இனிமையாக பேசுங்கள்;
உண்மையாக இருந்தாலும் கடுமையான சொற்களை பேசாதீர்கள்;
இனிமையாக இருந்தாலும் பொய் பேசாதீர்கள்;
இதுவே இறைவனடியை அடையும் வழி



தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் நடித்த காட்சி. கூர்மையான வசனங்கள். ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், வசன உச்சரிப்பு, ஸ்டைல் மற்றும் ஆளுமை அபாரம். கமல் சிறிது அன்டர் ப்ளே செய்திருப்பார். காட்சியை பார்த்துவிட்டு கமல் நாயகன்; ரஜினி வில்லன் என்று நினைத்து விடாதீர்கள். படத்திலேயே அருவருப்பான பாத்திரம் கமலுடையது. நான் கமலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது இம்மாதிரி பாத்திரங்களில் விசனமில்லாமல் நடித்ததற்காகத்தான்.

Monday, November 28, 2011

மயக்கம் என்ன?


படம் கார்த்திக் சுவாமினாதனின் (தனுஷ்) வாய் மொழியிலேயே தொடங்குகிறது. கார்த்திக் ஒரு புகைப்பட கலைஞன். வன விலங்கியல் புகைப்பட கலையில் பெரிய நிபுணனாக வர வேண்டும் என்பது அவனது லட்சியம். அதற்காக அத்துறையில் வல்லுனராக உள்ள மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராக சேர முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் இயலவில்லை. வாழ்வாதாரத்திற்காக வீட்டு விசேஷங்களையும், இரண்டாம் நிலை நடிகர்/நடிகைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நான்கு நண்பர்கள். ஒரு தங்கை. அவர்கள் தான் இவனுக்கு எல்லாம். தனது பெற்றோர்களின் இறப்பிற்கு பின்னர் அவனையும் அவனது தங்கையையும் வளர்த்தவர்கள் அவனது நண்பர்கள் தான். குடியும் கும்மாளமுமாக அவரகள் பொழுதை கழிக்கிறார்கள்.

அப்பொழுது அந்த நண்பர்களுள் ஒருவனின் காதலியாக அறிமுகமாகிறாள் யாமினி (ரிச்சா). முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு. அதை ஊதி பெரிதாக விடாமல் இருவரும் அடக்கப் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் இருவருக்குள்ளும் காதல் வந்து விடுகிறது. நண்பர்களுக்கும் அது தெரிய வர சில பல க்ளீஷேக்களுக்கு பின்னர் அவனது நண்பன் விட்டுக் கொடுக்க திருமணத்தில் முடிகிறது.

இதனிடையே தான் உயிரை கொடுத்து, ஒரு நாள் முழுதும் வனத்தில் இருந்து, எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை "ஆய்" என்று சொல்லி தூக்கி வீசிய மாதேஷ் கிருஷ்ணசாமி அதையே தான் எடுத்ததாக கூறி நேஷனல் ஜியோகிரஃபி இதழுக்கு அனுப்பி பாராட்டும் பின்னர் அதற்கு தேசிய விருதும் பெற்று விடுகிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் மாடியில் இருந்து விழுந்து விடுகிறான். விழுந்த அதிர்ச்சியினாலும், ஏமாற்றத்தினாலும் அவனுக்கு மனச்சிதைவு நோய் வருகிறது.

அது வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி அவனை குடிகாரனாகவும், முரடனாகவும், தனது மனைவியிடம் தனது வக்கிரத்தை காட்டுபவனாகவும் மாற்றி விடுகிறது. யாமினி அதை பல வருடங்கள் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் உடைகிறாள். கார்த்திக் அதிலிருந்து எப்படி வெளிவந்தான்? யாமினியின் காதலை புரிந்து கொண்டானா? மாதேஷின் நிலை என்னவானது? என்பதை வெள்ளித் திரையில் கண்டு மகிழுங்கள்.

முதலில் படத்தில் பாராட்டப் பட வேண்டியவர் ராம்ஜி. என்ன கேமெரா? படம் முழுதும் பிக்சர் பெர்ஃபெக்ட் ஷாட்கள். வன விலங்கு காட்சிகள் அட்டகாசம். அதிலும் இடைவேளைக்கு முந்தைய காட்சியினை அவர் படமாகிய விதம் அருமையிலும் அருமை. சமீபத்தில் இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்களை கொண்ட படத்தினை நான் பார்த்ததாக நினைவு இல்லை.

அடுத்தது தனுஷ். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை படமெங்கிலும் தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டுமே. கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார். அவரது டயலாக் மாடுலேஷனும், பார்வையும், உடலசைவும் சென்ற ஆண்டின் தேசிய விருதிற்கு சரியான தேர்வு அவர் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. நடிகர் தனுஷ் மட்டும் இல்லை, பாடலாசிரியர், பாடகர் தனுஷும் அட்டகாசம். "ஓட ஓட" மற்றும் "காதல் என் காதல்" பாடல்களை நன்றாக பாடியுள்ளார். அதிலும் "கனவிருக்கு கலரே இல்ல, படம் பாக்கறேன் கதையே இல்ல, உடம்பிருக்கு உயிரே இல்ல, உறவிருக்கு பெயரே இல்ல" வரிகள் அம்சம்.

அடுத்தது ரிச்சா. முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. பின்னர் தான் தெரிந்தது அவர் தெலுங்கில் இரண்டு படங்கள் செய்திருக்கிறார் என்று. செல்வராகவனின் முந்தைய நாயகிகள் போலவே மெல்லிய சோகம் ததும்பும் கண்கள். இடைவேளைக்கு முந்தைய காட்சியாகட்டும், கருச்சிதைவு ஏற்பட்ட உடன் அதன் வலியை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும் நண்பனிடம் பேசும் காட்சியாகட்டும் அருமையாக நடித்துள்ளார். செல்வாவின் டச் தெரிகிறது. அவருக்கு தீபா வெங்கட்டின் குரல் அபார பொருத்தம். ஆனாலும் எனக்கு ஏனோ படத்தில் அவரை பார்க்கும் பொழுது சொனியா அகர்வால் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்.

அடுத்தது G. V. ப்ரகாஷ். படத்தில் வசனத்திற்கு ஈடு கொடுத்து பேசுகிறது இவரது பின்னணி இசை. நிச்சயம் மயக்கம் என்ன? G. V. ப்ரகாஷின் உச்சம். இது வரை அவர் அப்படி ஒரு இசையை கொடுத்தது இல்லை. குறிப்பாக கார்த்திக், சுந்தர் மற்றும் யாமினி மூவரும் நடனம் ஆடும் காட்சியில் இவரது இசை அபாரம். அதுவும் பின்பாதியில் பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்துவது இவரது இசை தான்.

இறுதியாக செல்வா. செல்வாவை பற்றி புதிதாக சொல்ல எதுவும் இல்லை. இது வரை அவர் அளித்த படங்களில் அவரது மாஸ்டர் பீஸ் 7G. படத்தின் முதல் பாதியில் அதை சற்று தாண்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம் அவரது வசனங்கள். கூர்மையாகவும் அழுத்தமாகவும் மனதில் பதிகிறது. "மனசுக்கு பிடிச்ச வேலை செய்யனும். இல்லேன்னா செத்துடனும்.", "உன் முன்னாடி அழுதுருக்க கூடாது. ஆம்பிள்ள இல்லையா?", "உன் பொண்டாட்டிய அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட தேடாத" போன்ற வசனங்களுக்கு இடையே "முண்டக்களப்ப" போன்ற இளைஞர்களுக்கான ஆஸ்தான வசங்களும் உள்ளன.

சரி படத்தில் குறைகள் என்ன என்று பார்த்தால் முதல் மட்டும் ஒரே குட்டு செல்வாவிற்கு தான். பெரிதாக அழுத்தம் இல்லாத கதை. காதலும், காதல் சார்ந்த உறவுகளும் தான் செல்வாவின் ஃபோர்டே. படத்தின் முதல் பாதியில் அதை களமாக எடுத்துக் கொண்டவர் பின் பாதியில் அதை களமாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார். காதலையே களமாக எடுத்துக் கொண்டு தனுஷின் கேரியரை படத்தின் பின் புலத்தில் மெல்லிய இழையாக சொல்லி இருந்தால் படம் டாப் க்ளாஸ் ஆகி இருக்கும். தவற விட்டு விட்டார். முதல் பாதியில் ராக்கெட் போல சீறிக் கொண்டு கிளம்பும் திரைக்கதை இரண்டாம் பாதி தொடங்கி முதல் 15 நிமிடங்களுக்குள் புஸ்வானமாகி விடுகிறது. சில காட்சிகள் மிகவும் நீளம். கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நமக்கும் "ஓட ஓட ஓட படம் முடியல" என்று பாட தோன்றுகிறது.

அதே போல கார்த்திக் தனது மனச்சிதைவிலிருந்து மீண்டு வருவதற்கான காரணங்களும் வலுவாக இல்லை. தனது மனைவியின் கர்பத்தையே அறியாதவன், கருச்சிதைவினால் மீண்டு வருகிறான் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளும் படு சொதப்பல். கார்த்திக் தன் முயற்சியால் வெற்றி பெற்றதாக காமிக்காமல், அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெற்றது போல காமிக்கிறார்கள். இம்மாதிரி துறைகளில் வெற்றி பெற அதிர்ஷ்டம் ஓரளவிற்கு முக்கியம் என்றாலும் அதை செல்வா தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.

அறை எண் 302 ல் கடவுள் படத்தில் கடவுள் பேசுவதாக ஒரு வசனம் வரும். "ஒரு படகில் அமர்ந்து நடுக்கடலுக்கு சென்றிருக்கிறீர்களா?, ஆளே இல்லாத மலை உச்சிக்கு சென்றிருக்கிறீர்களா?, அடர்ந்த வனத்தில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா?" என்றெல்லாம் கேட்பார். நிச்சயமாக அந்த வரிசையில் "'மயக்கம் என்ன?' படம் பார்த்திருக்கிறீர்களா?" என்றும் கேட்டிருக்கலாம் ஒரு வேளை செல்வா படத்தின் முன்பாதியை போலவே பின் பாதியையும் எடுத்திருந்தால்.

Wednesday, November 23, 2011

Why this கொலவெறிடி?

அது 2003 ஆம் ஆண்டு. காதல் கொண்டேன் பார்த்து விட்டு இருபது வயதே ஆன தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தேன். தனுஷ் யாரென்று சட்டென்று தெரியாத நிலையில், துள்ளுவதோ இளமையின் மஹேஷ் தான் இவர் என்று புரிந்தது. அடுத்து வந்தது திருடா திருடி. திருச்சியில் எடுத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே ஏழு முறை ஒரே வார இடைவெளியில் பார்த்தேன்.

அடுத்தடுத்து அவர் கொடுத்த மொக்கைகளால் இவர் ஒரு டம்மி பீஸ் என்று கருதிய பொழுது அவரது திருமண அறிவிப்பு வந்தது. அடடா! சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளை ஒரு சப்பை ஸ்டாரா? என்று நினைத்தேன். அதன் பிறகு கூட தொடர்ந்து மொக்கை படங்களையே கொடுத்து வந்தார். பாலு மஹேந்திராவின் "அது ஒரு கணா காலம்" மற்றும் செல்வராகவனின் "புதுப்பேட்டை" ஆகிய படங்கள் கூட இவருக்கு கமர்ஷியலாக கை கொடுக்க வில்லை. ஆனால் இவரின் நடிப்பு திறமை மட்டும் தெளிவாக தெரிந்தது.

பின்னர் வந்தது திருவிளையாடல் ஆரம்பம். கமர்ஷியல் சரவெடி. பின்னர் பொல்லாதவன். அட்டகாசமான படம். குறிப்பாக திரைக்கதை அட்டகாசம். அதன் பின்னர் இவருக்கு ஏறுமுகம் தான். சென்ற ஆண்டு ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்று விட்டார். மிகக் குறைந்த வயதில் இதை பெற்ற நடிகர் இவரே.

இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது இவர் ஒரு இயக்குனரின் நாயகன் என்பதே. இவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் மறுமுறை இவரையே வைத்து இயக்க யோசித்தது இல்லை. அது செல்வராகவனாக இருக்கட்டும், மித்ரன் ஜவஹராக இருக்கட்டும், சுப்ரமணியம் சிவாவாக இருக்கட்டும், பூபதி பாண்டியனாக இருக்கட்டும், வெற்றி மாறனாக இருக்கட்டும் அனைவரும் இவரை வைத்து இரு படங்களாவது இயக்கி இருக்கிறார்கள்.

இப்பொழுது மயக்கம் என்ன படத்தில் பாடல்கள் எழுதுவதுடன், பாடவும் செய்கிறார். இந்த நேரத்தில் இவர் முதலில் பாடிய "நாட்டு சரக்கு" பாடல் படு திராபை என்பதை பதிவு செய்கிறேன்.



இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு புயல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அது "Why this கொலவெறிடி?" புயல். பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பாடல் வரிகளை பற்றிய விமர்சனமெல்லாம் எனக்கு இல்லை. இவர்கள் என்ன தொல்காப்பியமா படைக்கிறார்கள்? பாடல் கேட்டால் பிடிக்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க வேண்டும். சில நேரங்களில் போதை ஏற்ற வேண்டும். மார்கழி குளிரில், பின்னிரவில், பகார்டியை லெமன் ஜூஸ் கலந்து நாலு ரவுண்டு அடித்து விட்டு, வென்னிலா ஃப்ளேவர்டு சுருட்டை பற்ற வைத்து இழுத்தால் ஒரு போதை வருமே, அப்படி ஒரு போதை இதில் வருகிறது.

நன்றி தனுஷ். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Friday, November 18, 2011

பொடிமாஸ் - 11/19/2011

பெட்ரோல் விலை ஏறியது ஏறியது என்று கூவி ஒரு வழியாக நேற்று தான் இறங்கியது. இப்பொழுது பேரூந்து கட்டணமும், பால் விலையும் ஏறி விட்டது. மின்சாரமும் உயரும் என்று சொல்கிறார்கள். விலைவாசி உயர்வை ஒரு நிலைக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அரசு தேவை இல்லாமல் அளிக்கும் மானியங்களை தவிர்த்தாலே போதுமானது. சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சமையல் எரிவாயு நானூறு ரூபாய்க்கு அளிக்கப் படுகிறது. மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவனுக்கு எதற்கு இந்த மானியம்? ஒரு லேத்து பட்டறை வைத்திருபவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஐந்து ரூபாய். மூன்று கோடி ரூபாய் அபார்ட்மென்டில் பத்து டன் ஏசியை நாள் முழுதும் ஓடவிடும் ஒருவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஒரு ரூபாய் பத்து காசுகள். இந்த முட்டாள் தனத்தை நிறுத்துவதை விட்டு விட்டு ஏழைகள் உபயோகிக்கும் பாலிலும், பேரூந்திலும் கை வைக்கிறார்கள். கேட்க நாதி இல்லை.



நவம்பர் 22 ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கிடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக மும்பை கிரிக்கெட் வாரிய தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்துள்ளார். முன்னரே வங்காள கிரிக்கெட் வாரியமும் கொல்கத்தாவில் கடந்த வாரம் நடந்த போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக அறிவித்திருந்தது. மாநில கிரிக்கெட் வாரியம் தனியார் வாரியமா இல்லை அரசு வாரியமா என்று தெரியவில்லை. தனியார் வாரியமாக இருந்தால் இதில் தவறொன்றுமிலை. அரசு வாரியமாக இருந்தால் நமது மக்களை உம்மாச்சி தான் காப்பாற்ற வேண்டும்.



சமீப காலமாக விஜய் டிவியில் வரும் கணா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை தொடரை விரும்பி பார்த்து வருகிறேன். கல்லூரி நாட்களுக்கு மீண்டும் சென்றது போலவே இருக்கிறது. பாத்திரங்களுக்கு பொருந்துவது போல சரியான நடிகர்/நடிகை களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன வழக்கம் போல திடீர் திடீர் என்று சிலர் காணாமல் போய் விடுகிறார்கள். தொடர் தொடங்கும் முன்னரே நடிப்பவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது இந்தியாவில்.



இந்த வோல்க்ஸ்வேகன் கார்களில் அப்படி என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அமெரிக்க பெண்கள் அனைவரும் ஒன்று வோல்க்ஸ்வேகன் ஜெட்டா வைத்திருக்கிறார்கள் இல்லை வோல்க்ஸ்வேகன் பீட்டில் வைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ அது சரியான மொக்கை காராகவே தோன்றுகிறது. ஜெர்மன் கார்களில் படு மொக்கையானது வோல்க்ஸ்வேகன் தான். உரிமையாளர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள். இது எனது கருத்து.



வெர்ஸடாலிட்டி என்றால் கவிஞர் வாலி தான். "நான் ஆணை இட்டால்", "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" எழுதிய கைகள் தான் "முக்காலா முக்காபுலா", "ஓ மாரியா", "காதல் வெப்சைட் ஒன்று" போன்ற பாடல்களை எழுதின என்றால் நம்ப முடிகிறதா? இதனை போன்ற பாடல்களுக்கு நடுவே "வைகாசி நிலவே" போன்ற பாடல்களை அவரால் மட்டுமே கொடுக்க முடியும். பொதுவாக ஒரு கால கட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரால் ரசிக்கப்படுவது கடினம். பாலசந்தர், பாரதி ராஜா போன்றவர்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவ்வளவு ஏன்? நமது ராஜாவை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கரடியாக கத்தினாலும் எனக்கு தெரிந்த இன்றைய கல்லூரி மாணவர்கள் ரெஹ்மான் ரெஹ்மான் என்று தான் கூவுகிறார்கள். ராஜாவின் இசை கேட்டால் தூக்கம் தான் வருகிறது என்கிறார்கள். ஆனால் வாலி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.



ஹம் ஆப்கே ஹைன் கௌன் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. படம் பார்த்து விட்டு எனது அண்ணிக்கு ஒரு தங்கை இல்லையே என்று வருந்தி இருக்கிறேன். பல முறை பார்த்து இருக்கிறேன். எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது மாதுரியின் அழகா? படத்தின் கதையா?, திரைக்கதையா?, வசனங்களா?, SPB குரலில் ஒலிக்கும் அருமையான பாடல்களா? தெரியவில்லை. கீழே உள்ள காட்சியை பாருங்கள். சல்மான் மாதுரியிடம் தன் காதலை சொல்லாமல் சொல்லும் காட்சி. உங்களுக்கும் பிடிக்கும்.


Wednesday, November 16, 2011

புழுவும், சிரங்கும், இலக்கியவாதியும் பின்னே நானும்

சமீபத்தில் விமலாதித்த மாமல்லன் அவர்கள் எழுதிய இந்த நக்கல் பதிவை படிக்க நேர்ந்தது. இந்த எழுத்தாளர்களுக்கே இதுதான் பிரச்சனை. தங்கள் தலையில் தாங்களே கிரீடத்தை வைத்துக் கொள்கிறார்கள். கிரீடத்தினால் தலையில் புண், சொறி, சிரங்கு எது வந்தாலும் கவலை படுவதில்லை. அந்த சிரங்குகளை சொறிந்து விடுபவர்களுக்கு தான் அவர்கள் தங்களது நட்புவட்டம், வாசகர் சதுரம் என்று எல்லாவற்றிலும் இடம் கொடுக்கிறார்கள். முகம் சுளிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன இம்மாதிரி நக்கல் பதிவுகள்.

ஒரு டம்மி பீஸ் என்னிடம் வந்து தான் கணிப்பொறியில் பெரிய தில்லாலங்கடியாக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் எனக்கு இம்மியும் கோபம் வரப்போவதில்லை. உண்மையாக சொன்னால் எனக்கு அதனால் மகிழ்ச்சியே அதிகம் ஏற்படும். என்னையும் மதித்து கேள்வி கேட்கிறானே என்று. இவர்களுக்கு மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? "அனைவரும் இணையத்திலேயே ஓசியில் படித்துவிட்டால் தொழில் முறை எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்கிறார். நியாயம் தான். சுமார் நூறு திரை விமர்சனப் பதிவுகள் வந்தால் ஒரு புத்தக விமர்சனப் பதிவு வருகிறது. இது தான் இவர்களது உண்மையான கவலையா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

இல்லை இலக்கியம் படைப்பதும் பொட்டி தட்டுவதும் ஒன்றில்லை என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் உங்களுக்கு வருணாஸ்ரமத்தின் மூலத்தினை நினைவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. வசதியாக பார்பனர்களையும், வருணாஸ்ரமத்தினையும் திட்டிக் கொண்டே இலக்கியம் படைப்பது உயர்ந்தது பொட்டி தட்டுவது தாழ்ந்தது என்று கூறிக் கொண்டிருக்கலாம். அதனை பொட்டி தட்டுபவர்கள் உருவாக்கிய இணையத்தில் வெட்கமே இல்லாமல் எழுதவும் செய்யலாம்.

"எழுத முயற்சிக்கையில், புதியவர்களில் நன்றாக எழுதுபவர்களைவிட மொக்கையாய் எழுதுபவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு நாம் அவ்வளவு மோசமில்லை என்று தேற்றிக்கொள்வது, உற்சாகம் அளிக்கவல்ல நல்ல உத்தி." இது பகடியே அல்ல. பகடி என்று நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கருத்தையே உளறி இருக்கிறார். எனக்கு மேலே உள்ள ஆயிரம் பேரை கண்டு பெருமூச்சு விடுவதையோ அல்லது பொறாமை படுவதையோ விட எனக்கு கீழே உள்ள நூறு பேரை நினைத்து மகிழ்வது சிறந்ததே. இல்லை, இது பகடி தான் என்று நினைப்பவர்கள் கீழே Alan Kay சொல்லி இருப்பதை படியுங்கள்.

Anybody in his right mind should have an inferiority complex every time he looks at a flower. - Alan Kay

அடுத்தது அதை விட மொக்கை. "தேடித்திரிந்துத் தெருவில நிற்பதுதான் தீவிர எழுத்து. தெருவில் நின்றதை உண்மையாக எழுதினால் இலக்கியமாகலாம்." எதற்கு தெருவில் நிற்க வேண்டும்? நின்றபின், எதற்கு இலக்கியம் படைக்க வேண்டும்? ஒரு பள்ளி ஆசிரியர் மாதம் 50 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் மாதம் 1500 ரூபாய் சம்பளம் தந்த கல்கத்தா கார்பரேஷன் தலைவர் பதவியை தூக்கி வீசி விட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று, வெள்ளையனால் நாடு கடத்தப் பட்டு, பிறந்து இரண்டு வயதே ஆன தனது மகளை நாட்டின் சுதந்திரத்திற்காக வெளிநாட்டில் விட்டு விட்டு மீண்டும் இங்கு வந்து போராடி உயிர் விட்ட நேதாஜி அவர்களுக்கு இந்தியா அளித்த பரிசு 1992 ஆம் ஆண்டு அளித்த பாரதரத்ணா விருது. MGR அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1988 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1991 ஆம் ஆண்டு, நேதாஜிக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு. இதுதான் இன்றைய இந்தியாவின் யதார்த்த நிலை. இங்கே வாழும் பொழுதே வாழ்ந்து விட வேண்டும் இறந்தபின் புதைக்க நிலம் கூட கிடைக்காது. இப்படி இருக்கும் ஊரில் தெருவில் நிற்க வேண்டுமாம், இலக்கியம் படைக்க வேண்டுமாம்.

இவரை போன்ற இலக்கியவாதிகள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிரங்குகளின் வாழும் புழுக்கள் தான் சிரங்குகளை பார்த்து அருவருப்பு கொள்வதில்லை. ஏனென்றால் சிரங்குகள் தான் அவைகள் வாழும் இல்லம். அவைகள் பிறப்பதும், உண்பதும், உறங்குவதும், புணர்வதும், இறப்பதும் அந்த சிரங்குகளில் தான். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சிரங்குகள் அருவருப்பாகத்தான் இருக்கும்.

Tuesday, November 15, 2011

பொடிமாஸ் - 11/15/2011

சச்சின் இந்திய கிரிக்கெட் டீமில் சேர்ந்து விளையாட தொடங்கி நேற்றுடன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. அவர் முதலில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தொடங்கிய பொழுது தற்பொழுது அவருடன் விளையாடும் சுரேஷ் ரெய்னாவிற்கு மூன்று வயது, விராத் கோலிக்கு ஒரு வயது, நம்ம ஊர் அஷ்வினுக்கு மூன்று வயது. அவர்களுடன் இன்றும் விளையாடுகிறார் என்றால் அதற்கு அவரது திறமையும், விடா முயற்சியுமே காரணம். அவர் மீது பல விமர்சனங்கள் கூறப்பட்டாலும் எனக்கு அவர் என்றுமே மாஸ்டர் தான். "Take a bow master!"



டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. PF ஊழல் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியில் தவறுதலாக நீதிபதி P.B.சவந்த் அவர்களை சுமார் பதினைந்து நொடிகள் காட்டியது டைம்ஸ் தொலைக்காட்சி. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி மன்னிப்பு கேட்க கோரி ஒரு கடிதத்தை அனுப்பினார். அதனை உதாசீனப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் பூனா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதனையே இப்பொழுது உச்ச நீதி மன்றமும் அளித்துள்ளது. இது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தால் மகிழ்ச்சி.



கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிலைமை கவலை அளிக்கிறது. சென்ற முறை இந்தியா சென்ற பொழுது சென்னையிலிருந்து மும்பை மற்றும் சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் சென்னையிலிருந்து திருச்சி என்று ஐந்து முறை இதில் பயணம் செய்தோம். ஜெட் ஏர்வேஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும் உபசரிப்பு மற்றும் பராமரிப்பு இரண்டுமே நன்றாக இருந்தன. விரைவில் கடனிலிருந்து மீண்டு வர வாழ்த்துக்கள்.



வர வர இந்த நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பேசுபவர்களின் அலம்பல் தாங்க முடியவில்லை. ஒரு பெண் மறுக்கிறேன் என்பதற்கு ஆமோதிக்கிறேன் என்கிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கு "துடுப்பு" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை. சரி தமிழுக்கு தான் இந்த கதி என்றால் ஆங்கிலம் பேசுபவர்களும் ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசுகிறார்கள். ஒருவர் பயங்கர ஸ்டைலாக அமெரிக்க உச்சரிப்பில் "between three of us" என்கிறார். மற்றொருவர் "My wife and me went there" என்கிறார். காது கொடுத்து கேட்க முடியவில்லை. தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத ஒரு சமூகத்தை தான் இந்த நூற்றாண்டில் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதில் கொடுமை ஆங்கிலம் தவறாக பேசும் பொழுது வருவது வெட்கம். தமிழை தவறாக பேசும் பொழுது வருவது பெருமை.



உங்களில் பலர் ஸ்டீஃபென் கோவே எழுதிய சக்தி வாய்ந்தவர்களின் ஏழு பழக்கங்கள் (7 Habits of Highly Effective People) என்ற நூலை படித்திருப்பீர்கள். அவர் அந்த புத்தகம் படிக்கும் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கிறார். உங்கள் மரணத்திற்கு பின்னர் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதனை யோசித்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ சொல்கிறார். சில நாட்களாகவே நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வாழ முடியுமா என்று பார்க்க வேண்டும்.



நடிகர் விஜயின் படங்கள் முன் பின் இருந்தாலும் அவரது பட பாடல்களுக்கு நான் பெரிய விசிறி. இப்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் யூத், ஷாஜஹான் போன்ற மொக்கை படங்களை கூட பாடல்களுக்காகவே பார்ப்பேன். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் தவிர்த்து வேறு யாரும் விஜய் அளவிற்கு ஹிட் பாடல்கள் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன். யூத் படத்தில் "சகியே! சகியே!" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் இது தான் எனது ஃபேவரைட். பார்த்து கேட்டு மகிழுங்கள்.



Friday, November 11, 2011

Monty

வாழ்வில் சில நேரங்களில் நாம் சிறிதும் விரும்பாமல் நம்மிடம் வரும் சில உறவுகள் நம்மை அப்படியே ஆட்கொண்டு விடுகின்றன. நான் கடந்த இரு ஆண்டுகளாக அதனை உணர்ந்து வருகிறேன். திருமணம் முடிந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக என் மனைவி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு நாய் குட்டி.

சிறு வயதில் இருந்தே எனது மனைவிக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் எனக்கோ நாய் என்றாலே அலர்ஜி. சிறு வயதில் என் வீட்டின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் ரெக்ஸி என்றொரு நாய் வளர்த்தார்கள். கன்று உயரத்தில் இருக்கும் அதனை பார்த்தாலே எனக்கு சிறுநீர் வந்து விடும்.

ஒரு கட்டத்தில் இனி இதனை தள்ளி போடுவது இயலாத செயலாக தோன்றவே, தங்கமணி திருமண சட்டத்தின் படி நாய் வாங்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகே என்ன நாய் என்ற கேள்வி வந்தது. எனது மனைவிக்கு ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது லாப்ரடார் வகை நாய்களே அதிகம் பிடித்தது. எனக்கோ அவைகளை கண்டால் ஜன்னி வந்து விடுகிறது. சரி மீண்டும் தொலைகிறது என்று நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் ரிச்மண்ட் என்ற ஒரு இடத்தில் இருந்த ஒரு ப்ரீடரிடம் சென்று ஒரு லாப்ரடார் குட்டியை பார்த்தோம். கருப்பு நிறத்தில் இரண்டு மாதங்களே ஆன அழகான ஒரு குட்டி. அதனை பார்த்ததும் எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன், சிறிது நடுக்கத்துடன். சிறிது நேரம் கழித்து அந்த குட்டியின் தந்தையை பார்க்கும் ஆசையை எனது மனைவி வெளியிட வந்தான் Goose.

கருப்பு சிங்கம் போல் இருந்தான். அவனின் வயது ஒன்று. சரி நமது குட்டி இவன் உயரம் வளர எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அவன் வளர்ந்து விடுவான் என்று கூற எடுத்தேன் ஓட்டம். வீட்டிற்கு வந்து தான் நின்றேன்.

அதன் பிறகு எனது மனைவியுடன் பேசி குட்டியாகவே இருக்கும் நாய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று உதார் விட்டேன். சத்தியமாக எனக்கு அப்பொழுது தெரியாது, பிறந்தது முதல் இறக்கும் வரை குட்டியாகவே இருக்கும் நாய்கள் பல உண்டு என்று.

உடனே என் மனைவி பல வகை நாய்களை பார்த்து கடைசியில் மால்டீஸ் வகை நாய் ஒன்றை வாங்கலாம் என்று முடிவு செய்தார். இம்முறை செல்ல வேண்டிய இடம் இன்னும் சற்று தொலைவு. டெலவேர் என்ற ஒரு இடம். பரீட்சைக்கு செல்லும் ஒரு விதமான மன நிலையுடனேயே நாய் வாங்க சென்றேன். மனதில் சொல்ல முடியாத ஒரு பயம் இருந்தது. வாங்கப் போவது ஒரு உயிர். பிடிக்கவில்லை என்றால் தூக்கி வீச முடியாது. காலையும், மாலையும், இரவிலும் மூன்று வேளையும் வெளியில் அழைத்து செல்ல வேண்டும். குளிர், மழை பார்க்க முடியாது. குடும்பத்துடன் நினைத்த நேரத்தில் வெளியூர் செல்ல முடியாது. அலுவல் முடிந்ததும் நேராக வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இங்கே சுற்ற முடியாது. இப்படி முடியாதுகள் பல. இதெல்லாம் என்னால் முடியுமா என்ற கேள்வியே மனதில் தொக்கி நின்றது.

ஆனாலும் மனதில் லேசாக ஒரு நப்பாசை. அந்த லாப்ரடார் குட்டியை வேண்டாம் என்று சொன்னது போலவே இதனையும் வேண்டாம் என்று கூற ஒரு காரணம் கிடைக்காதா என்பது தான் அது.

ஒரு வழியாக டெலவேர் சென்று அந்த குட்டியை பார்த்தோம். மூன்று மாதங்கள் ஆன குட்டி. உள்ளங்கை அளவே இருந்தான். பார்த்த உடன் பிடித்து எனது மனைவி வாங்கி விட்டார். காற்று போன பலூன் போல் ஆகி விட்டேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அந்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

அவனுக்கு Monty என்று பெயர் வைத்தோம். முதல் இரு வாரங்களுக்கு எனக்கும் சரி, அவனுக்கும் சரி புதிய இடம்/உறவு என்பதால் சிறிது பயமும் படபடப்பும் இருந்தன. எனது மனைவிதான் அலுவலகத்திற்கு இரு வாரங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டார். பின்னர் அவனை மெதுவாக தடவுதலில் தொடங்கி, வெளியில் அழைத்து செல்லுதல், குளிப்பாட்டுதல், பல் துலக்கி விடுதல், விளையாடுதல், கொஞ்சுதல் என்று படிப் படியாக உயர்ந்து இன்று என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டான் Monty.

இன்று Monty யையும் எனது மகனையும் என்னால் வேறுபடுத்தி பார்க்கவே இயலவில்லை. எனது மகனை எனக்கு அளித்ததற்காக எனது மனைவிக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேனோ அதே அளவிற்கு Monty யை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காகவும் கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். Monty - ஒரு அருமையான அனுபவம்.

வீட்டிற்கு வந்த முதல் வாரத்தில்:



இப்பொழுது: