Monday, November 28, 2011


மயக்கம் என்ன?


படம் கார்த்திக் சுவாமினாதனின் (தனுஷ்) வாய் மொழியிலேயே தொடங்குகிறது. கார்த்திக் ஒரு புகைப்பட கலைஞன். வன விலங்கியல் புகைப்பட கலையில் பெரிய நிபுணனாக வர வேண்டும் என்பது அவனது லட்சியம். அதற்காக அத்துறையில் வல்லுனராக உள்ள மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராக சேர முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் இயலவில்லை. வாழ்வாதாரத்திற்காக வீட்டு விசேஷங்களையும், இரண்டாம் நிலை நடிகர்/நடிகைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நான்கு நண்பர்கள். ஒரு தங்கை. அவர்கள் தான் இவனுக்கு எல்லாம். தனது பெற்றோர்களின் இறப்பிற்கு பின்னர் அவனையும் அவனது தங்கையையும் வளர்த்தவர்கள் அவனது நண்பர்கள் தான். குடியும் கும்மாளமுமாக அவரகள் பொழுதை கழிக்கிறார்கள்.

அப்பொழுது அந்த நண்பர்களுள் ஒருவனின் காதலியாக அறிமுகமாகிறாள் யாமினி (ரிச்சா). முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு. அதை ஊதி பெரிதாக விடாமல் இருவரும் அடக்கப் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் இருவருக்குள்ளும் காதல் வந்து விடுகிறது. நண்பர்களுக்கும் அது தெரிய வர சில பல க்ளீஷேக்களுக்கு பின்னர் அவனது நண்பன் விட்டுக் கொடுக்க திருமணத்தில் முடிகிறது.

இதனிடையே தான் உயிரை கொடுத்து, ஒரு நாள் முழுதும் வனத்தில் இருந்து, எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை "ஆய்" என்று சொல்லி தூக்கி வீசிய மாதேஷ் கிருஷ்ணசாமி அதையே தான் எடுத்ததாக கூறி நேஷனல் ஜியோகிரஃபி இதழுக்கு அனுப்பி பாராட்டும் பின்னர் அதற்கு தேசிய விருதும் பெற்று விடுகிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் மாடியில் இருந்து விழுந்து விடுகிறான். விழுந்த அதிர்ச்சியினாலும், ஏமாற்றத்தினாலும் அவனுக்கு மனச்சிதைவு நோய் வருகிறது.

அது வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி அவனை குடிகாரனாகவும், முரடனாகவும், தனது மனைவியிடம் தனது வக்கிரத்தை காட்டுபவனாகவும் மாற்றி விடுகிறது. யாமினி அதை பல வருடங்கள் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் உடைகிறாள். கார்த்திக் அதிலிருந்து எப்படி வெளிவந்தான்? யாமினியின் காதலை புரிந்து கொண்டானா? மாதேஷின் நிலை என்னவானது? என்பதை வெள்ளித் திரையில் கண்டு மகிழுங்கள்.

முதலில் படத்தில் பாராட்டப் பட வேண்டியவர் ராம்ஜி. என்ன கேமெரா? படம் முழுதும் பிக்சர் பெர்ஃபெக்ட் ஷாட்கள். வன விலங்கு காட்சிகள் அட்டகாசம். அதிலும் இடைவேளைக்கு முந்தைய காட்சியினை அவர் படமாகிய விதம் அருமையிலும் அருமை. சமீபத்தில் இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்களை கொண்ட படத்தினை நான் பார்த்ததாக நினைவு இல்லை.

அடுத்தது தனுஷ். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை படமெங்கிலும் தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டுமே. கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார். அவரது டயலாக் மாடுலேஷனும், பார்வையும், உடலசைவும் சென்ற ஆண்டின் தேசிய விருதிற்கு சரியான தேர்வு அவர் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. நடிகர் தனுஷ் மட்டும் இல்லை, பாடலாசிரியர், பாடகர் தனுஷும் அட்டகாசம். "ஓட ஓட" மற்றும் "காதல் என் காதல்" பாடல்களை நன்றாக பாடியுள்ளார். அதிலும் "கனவிருக்கு கலரே இல்ல, படம் பாக்கறேன் கதையே இல்ல, உடம்பிருக்கு உயிரே இல்ல, உறவிருக்கு பெயரே இல்ல" வரிகள் அம்சம்.

அடுத்தது ரிச்சா. முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. பின்னர் தான் தெரிந்தது அவர் தெலுங்கில் இரண்டு படங்கள் செய்திருக்கிறார் என்று. செல்வராகவனின் முந்தைய நாயகிகள் போலவே மெல்லிய சோகம் ததும்பும் கண்கள். இடைவேளைக்கு முந்தைய காட்சியாகட்டும், கருச்சிதைவு ஏற்பட்ட உடன் அதன் வலியை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும் நண்பனிடம் பேசும் காட்சியாகட்டும் அருமையாக நடித்துள்ளார். செல்வாவின் டச் தெரிகிறது. அவருக்கு தீபா வெங்கட்டின் குரல் அபார பொருத்தம். ஆனாலும் எனக்கு ஏனோ படத்தில் அவரை பார்க்கும் பொழுது சொனியா அகர்வால் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்.

அடுத்தது G. V. ப்ரகாஷ். படத்தில் வசனத்திற்கு ஈடு கொடுத்து பேசுகிறது இவரது பின்னணி இசை. நிச்சயம் மயக்கம் என்ன? G. V. ப்ரகாஷின் உச்சம். இது வரை அவர் அப்படி ஒரு இசையை கொடுத்தது இல்லை. குறிப்பாக கார்த்திக், சுந்தர் மற்றும் யாமினி மூவரும் நடனம் ஆடும் காட்சியில் இவரது இசை அபாரம். அதுவும் பின்பாதியில் பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்துவது இவரது இசை தான்.

இறுதியாக செல்வா. செல்வாவை பற்றி புதிதாக சொல்ல எதுவும் இல்லை. இது வரை அவர் அளித்த படங்களில் அவரது மாஸ்டர் பீஸ் 7G. படத்தின் முதல் பாதியில் அதை சற்று தாண்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம் அவரது வசனங்கள். கூர்மையாகவும் அழுத்தமாகவும் மனதில் பதிகிறது. "மனசுக்கு பிடிச்ச வேலை செய்யனும். இல்லேன்னா செத்துடனும்.", "உன் முன்னாடி அழுதுருக்க கூடாது. ஆம்பிள்ள இல்லையா?", "உன் பொண்டாட்டிய அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட தேடாத" போன்ற வசனங்களுக்கு இடையே "முண்டக்களப்ப" போன்ற இளைஞர்களுக்கான ஆஸ்தான வசங்களும் உள்ளன.

சரி படத்தில் குறைகள் என்ன என்று பார்த்தால் முதல் மட்டும் ஒரே குட்டு செல்வாவிற்கு தான். பெரிதாக அழுத்தம் இல்லாத கதை. காதலும், காதல் சார்ந்த உறவுகளும் தான் செல்வாவின் ஃபோர்டே. படத்தின் முதல் பாதியில் அதை களமாக எடுத்துக் கொண்டவர் பின் பாதியில் அதை களமாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார். காதலையே களமாக எடுத்துக் கொண்டு தனுஷின் கேரியரை படத்தின் பின் புலத்தில் மெல்லிய இழையாக சொல்லி இருந்தால் படம் டாப் க்ளாஸ் ஆகி இருக்கும். தவற விட்டு விட்டார். முதல் பாதியில் ராக்கெட் போல சீறிக் கொண்டு கிளம்பும் திரைக்கதை இரண்டாம் பாதி தொடங்கி முதல் 15 நிமிடங்களுக்குள் புஸ்வானமாகி விடுகிறது. சில காட்சிகள் மிகவும் நீளம். கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நமக்கும் "ஓட ஓட ஓட படம் முடியல" என்று பாட தோன்றுகிறது.

அதே போல கார்த்திக் தனது மனச்சிதைவிலிருந்து மீண்டு வருவதற்கான காரணங்களும் வலுவாக இல்லை. தனது மனைவியின் கர்பத்தையே அறியாதவன், கருச்சிதைவினால் மீண்டு வருகிறான் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளும் படு சொதப்பல். கார்த்திக் தன் முயற்சியால் வெற்றி பெற்றதாக காமிக்காமல், அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெற்றது போல காமிக்கிறார்கள். இம்மாதிரி துறைகளில் வெற்றி பெற அதிர்ஷ்டம் ஓரளவிற்கு முக்கியம் என்றாலும் அதை செல்வா தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.

அறை எண் 302 ல் கடவுள் படத்தில் கடவுள் பேசுவதாக ஒரு வசனம் வரும். "ஒரு படகில் அமர்ந்து நடுக்கடலுக்கு சென்றிருக்கிறீர்களா?, ஆளே இல்லாத மலை உச்சிக்கு சென்றிருக்கிறீர்களா?, அடர்ந்த வனத்தில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா?" என்றெல்லாம் கேட்பார். நிச்சயமாக அந்த வரிசையில் "'மயக்கம் என்ன?' படம் பார்த்திருக்கிறீர்களா?" என்றும் கேட்டிருக்கலாம் ஒரு வேளை செல்வா படத்தின் முன்பாதியை போலவே பின் பாதியையும் எடுத்திருந்தால்.

0 Comments: