Monday, May 14, 2007

உன்னாலே! உன்னாலே!


பொதுவாகவே இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் திரைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சேது, காதல், பிதாமகன், பருத்தி வீரன் போன்ற படங்களை விட என் மனதை அதிகம் பிசைவன அவரின் திரைப்படங்கள். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை, என்னால் அவரது படங்களை எனது வாழ்க்கைக்குள் புகுத்தி பார்க்க முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.



அவரது 12B பார்த்து விட்டு ப்ரியாவை நினைத்து வருந்தி இருக்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தினால் எனது அனுபவத்தில் ப்ரியாவைப் போன்றவர்களை நான் பார்த்ததில்லை என்றாலும் ஜோ, சக்திவேல் போன்றவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் என்னால் வேறொரு சந்தர்பத்தில் அருகில் இருந்து பார்க்கப்பட்டவை.



உள்ளம் கேட்குமே இறுதிக் காட்சியில் பூஜாவுடன் ஷ்யாம் இணையும் பொழுது என்னை அறியாமல் ஒரு பெரு மூச்சு வந்தது உண்மை. கல்லூரி முடிந்த பிறகு பார்த்த அந்த திரைப் படம் அந்த வாழ்வின் நினைவுகளை பசுமையாக முன்னிறுத்தியது. கல்லூரி நண்பர்களில் பூஜா யார்? இமான் யார்? ஷ்யாம் யார்? ப்ரியா யார்? ஐரின் யார்? என்றெல்லாம் மனம் கேள்வி கேட்டது. அதற்கு மனமே ஒவ்வொரு நண்பர்களாக அடையாளமும் காட்டியது.



இதோ நேற்று நான் பார்த்த உன்னாலே உன்னாலே படம் மீண்டும் என் மனதை பிசைந்து விட்டது. மனம் ஜான்ஸியை நினைத்து வருந்துகிறது. அவளது முடிவு சரியா? இல்லை தவறா? என்ற கேள்வியையும் தாண்டி நான் பார்த்து பழகிய, நான் அறிந்த ஜான்ஸிகள் நிலைமையும் அதுதானோ? என்று கேள்வி எழுகிறது. காதலில் Obsessive என்பது ஒருவகை, Over Possessive என்பது இன்னொரு வகை. தமிழ் சினிமா பொதுவாகவே முதல் வகை காதலைதான் (வாலி, படையப்பா, வல்லவன், உயிர் வரை) அதிகம் காட்டி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் இரண்டாம் வகை காதலை அழகாக ஜீவா காட்டி இருக்கிறார்.



படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. தமிழ் சினிமா முன்னரே பலமுறை மென்று துப்பிய சாதாரன முக்கோண காதல் கதை. ஆனால் இதற்கு அழகு சேர்ப்பது சம்பவங்களின் தொகுப்பாக அழகாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே யதார்த்தம் என்ற பெயரில் அதீத சோகங்களையே அதிகம் காட்டும் தமிழ் சினிமா இயக்குனர்களிடையே, நகரத்து மேல்தட்டு மக்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.



படத்தில் இயக்குனர் ஜீவாவை விட அதிகம் பாராட்டு பெறுபவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. கண்ணுக்கு குளிர்ச்சியான சென்னையையும், ஆஸ்திரேலியாவையும் அழகாக காட்டுகிறது அவரின் கேமரா.



புதுமுகம் விணய், தனூஜா இருவரும் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி அருமையாக நடித்திருக்கிறார்கள். விணயின் முக பாவங்களும், தனூஜாவின் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. சதாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக தனூஜாவின் காரில் விணய் சென்ற உடன் அமைதியாக உட்கார்ந்து உணர்ச்சிகளை வார்த்தைகள் இல்லாமல் அவர் வெளிப்படுத்தும் காட்சி, simply out of the world. Keep up the good work Sada.



அடுத்ததாக படத்தில் அதிகம் என்னை கவர்ந்தது ராஜூ சுந்தரத்தின் நகைச்சுவை. மொழி படத்தில் பிரகாஷ் ராஜின் நகைச்சுவை போன்றே அழகாக கதையுடன் கலந்து வந்து சிரிப்பூட்டுகிறார். ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் உன்னாலே உன்னாலே, ஜூலை காற்றே பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. பின்னனி இசையும் அபாரம். படத்தில் வசனங்களும் நன்றாக இருக்கின்றன. "முகம் மாறினால் மனம் மாறும், மனம் மாறினால் அவன் வருவான்" இது என்னை மிகவும் கவர்ந்த வசனம்.



மொத்தத்தில் மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தை அளித்தமைக்கு ஜீவா அவர்களுக்கு நன்றி. ஆனாலும் இந்த படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஜான்ஸி செய்த தவறு என்ன? காதலில் possesiveness என்பது தவறா? Possesiveness என்பது அன்பின் வெளிப்பாடு தானே? அவ்வாறு இருப்பவர்களுக்கு எல்லாம் இது தான் முடிவா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவதில் பயன் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கோ இல்லை வேறொரு நல்ல படத்தை பார்க்கும் வரையிலோ இந்த கேள்விகள் தானே எதிரொலித்து பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.

Sunday, May 06, 2007

8. இந்தியப் போர்கள் - இறுதிப் பகுதி

சியாச்சின் போர் (1982)


சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் -50 டிக்ரீ செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது. அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்ததால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான். அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.





இதனை அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி "Operation Meghdoot" என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாதுகாப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.




நான் முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குறிய அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அப்பகுதியினை மீண்டும் மீட்க பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 (லாகூர் ஒப்பந்தத்திற்கு முன்னர்) ஆம் ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.



கார்கில் போர் (1999)


சியாச்சின் பனிமலை பிரதேசத்தை இந்தியா மீண்டும் அடைந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியது தான் கார்கில் ஊடுறுவல். கார்கில் போரினை பற்றி பார்ப்பதற்கு முன் அப்பகுதியின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். கார்கில் பகுதி காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பகுதி. அதனால் எல்லையை கடந்து அப்பகுதிக்கு செல்வது எளிது. ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் சாலை கார்கில் வழியாகத்தான் செல்கிறது. அதனால் அப்பகுதியை கைப்பற்றினால் ஸ்ரீ நகரை எளிதாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட முடியும். மேற்கூறிய காரணங்களினால் சர்வதேச எல்லையை தாண்டி ஊடுறுவி கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது பாகிஸ்தான் இராணுவம்.






அணுகுண்டு சோதனைகளால் சீர் கெட்டிருந்த இரு நாட்டு உறவை புதுப்பிக்கும் நல்லெண்ணத்துடன் வாஜ்பாய் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டு முன்னால் புன்னகையுடன் கை குலுக்கி பின்னால் கொலை வெறியுடன் முதுகில் குத்தும் ஈன செயலை கார்கிலில் செய்தது பாகிஸ்தான். அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர். அவர்களுடன் காஷ்மீர் தீவிரவாத குழுக்களை சேர்ந்த சுமார் 1000 தீவிரவாதிகளும் இணைந்தனர். நான் முன்னரே குறிப்பிட்ட ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் NH-1A சாலையை ஒட்டியுள்ள மலை சிகரங்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றினர். அதனால் அந்த சாலையில் பல பகுதிகள் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.





இதனை அறிந்த இந்தியப் படையினர் அங்கு விரைந்தனர். "Operation Vijay" என்ற அவர்களின் திட்டப்படி முதலில் அந்த சாலையை மீட்க முனைந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தானியர்கள் கண்ணிவெடிகளை புதைத்திருந்தனர். இந்தியர்கள் முதலில் அவைகளை கண்டுபிடித்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 9000 கண்ணிவெடிகள் அப்புரப்படுத்தப் பட்டன. பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த ஒவ்வொரு சிகரமாக மீண்டும் கைப்பற்றி அந்த சாலையை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.




அதன் பிறகு ஊடுறுவிய பாகிஸ்தானியர்களை முழுவதுமாக எல்லைப் பகுதியில் இருந்து துரத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று சர்வதேச எல்லையை இம்முறை எக்காரணம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. இந்திய விமான படையினர் வான் வழி தாக்குதலை தொடங்கினர். அதே நேரத்தில் இந்திய பீரங்கி படையினர் போஃபர்ஸ் மற்றும் ஹோவிட்ஸர் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தானியர் வசம் இருந்த தளங்கள் ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினர்.



சர்வதேச எல்லையை கடக்க கூடாது என்று முடிவு செய்தமையால் அவர்களை சுற்றி வளைப்பது இயலாமல் போனது. தாக்குதலினால் அவர்களை பின்வாங்க செய்வதே அவர்களை விரட்ட ஒரே வழியாகவும் இருந்தது. அதற்கு பெரிதும் உதவின இந்திய பீரங்கிகள். ஒரு சில தளங்களை எளிதாகவும், வேறு சிலவற்றை போராடியும் மீட்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு Tiger Hill என்ற மலை சிகரத்தை கடினமான போராட்டத்தின் பின்னரே இந்தியர்களால் அடைய முடிந்தது.



அதன் தொடர்ச்சியாக நடந்த சண்டையில் இந்தியா மூன்று விமானங்களை இழந்தது. MiG-27 விமானம் இயந்திரப்ப கோளாரினால் கீழே விழுந்து நொறுங்கியது. MiG-21, Mi-8 ஆகிய விமானங்கள் பாகிஸ்தனியர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்திய வான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானங்களை அவர்கள் சுட்டது மிகவும் கேவலமான செயலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினர் காராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்து அதனை மற்ற கடல் பகுதிகளில் இருந்து துண்டித்தனர். இதுவும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்தே நடைபெற்றது.



இந்தியர்கள் சுமார் 80 சதவிகித பகுதிகளை மீட்டெடுத்த நேரம், இன்னும் 6 நாள் போருக்கு தேவையான தளவாடங்களே பாகிஸ்தானியர்கள் வசம் இருந்தது. இதனால் பாகிஸ்தானியர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீட்டிய திட்டம் அமெரிக்க உளவுத்துறையினரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கிளின்டன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு விடுத்தார். அந்த எச்சரிக்கையினால் வேறு வழி இல்லாமல் தனது படையினரை இந்தியப் பகுதிகளில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார் ஷெரிஃப்.



ஷெரிஃப் அவர்களின் இந்த முடிவு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இராணுவ தலைவரான முஷாரஃப், ஷெரிஃப் அவர்களை பதவியிலிருந்து இறக்கி இராணுவ ஆட்சி அமைக்க வித்திட்டதும் இதுவே.



பாகிஸ்தான் இராணுவத்தினர் வெளியேறினாலும், அவர்களுடன் சேர்ந்து ஊடுறுவிய United Jihad Council என்ற தீவிரவாதக் குழு வெளியேற மறுத்து போரை தொடர்ந்தது. அவர்கள் மீது இந்தியர்கள் நடத்திய தாக்குதலினால் ஒரே வாரத்தில் அவர்கள் முழுவதுமாக ஒழிக்கப் பட்டனர்.



அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி 527 இந்திய உயிர்களையும், சுமார் 4000 பாகிஸ்தானிய உயிர்களையும் குடித்த பிறகு ஒரு வழியாக கார்கில் போர் முடிவிற்கு வந்தது. அப்பொழுது பாகிஸ்தான் ஊடுறுவிய இந்திய பகுதிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது. போரில் சிறைக் கைதிகளை கண்ணியமாக நடத்த தவறிய பாகிஸ்தானின் செயல் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் லாகூர் நல்லினக்கப் பயனத்தையும், அவர் இந்திய பாகிஸ்தான் பேரூந்து போக்குவரத்து தொடங்கியதையும் மீறி சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தானியர்களின் செயல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுத்தது. இதைப் பற்றி அமெரிக்க அதிபர் கிளின்டன் தனது சுயசரிதையில் "Sharif’s moves were perplexing" என்கிறார். ஒரு வேளை சர்வதேச எல்லையை கடப்பது என்று நாம் முடிவு செய்திருந்தால் இந்தியத் தரப்பில் நேர்ந்த உயிரிழப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம். ஆனாலும் அந்த முடிவினால் அணுகுண்டு சோதனையின் பிறகு நாம் இழந்திருந்த வல்லரசு நாடுகளின் நன்மதிப்பை மீண்டும் பெற்றது இந்தியா. இதுவே இந்தியா சந்தித்த கடைசி போர் ஆகும். அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.




நண்பர்களே! போர் ஓய்ந்து விட்டாலும் முழூ அமைதி எல்லை பகுதிகளில் நிலவவில்லை. ஆங்காங்கே பல சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இது தொடர வேண்டாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். கார்கிலில் நடந்த போரே இந்தியா சந்தித்த இறுதிப் போராக இருக்கட்டும். பணி படர்ந்த அக்ஸாய் சின், சியாச்சின் பகுதிகளில் காவலில் இருக்கும் நமது இராணுவ வீரனை நினைத்து பாருங்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அவனது வாழ்வை நினைத்து பாருங்கள். இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள். அவன் இறந்தால் அவனது உடலை கூட பார்க்க உத்திரவாதம் இல்லாத அவனது குடும்பத்தினரின் நிலையை நினைத்து பாருங்கள். தனது ஒப்பந்தம் முடிந்து வந்தால் அவனுக்கு காத்திருக்கும் செக்யூரிட்டி வேலையிலோ இல்லை காண்ஸ்டபிள் வேலையிலோ காலம் தள்ள வேண்டிய அவனது சூழ்நிலையை நினைத்து பாருங்கள். போரில் மட்டும் இல்லாமல் தினமும் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதிலும் அவன் தான் முதன்மையில் நிற்கிறான். மேலும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் இராணுவ வீரனின் உதவி மகத்தானது. இத்தகையவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்க இங்கே யாரும் இல்லை. அவன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இட ஒதுக்கீடு கேட்கப் போவதும் இல்லை. அவனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வரும் மனித உரிமை காப்பாளர்கள் தீவிரவாதியினால் அவன் கொல்லப்படும் போது வருவதில்லை. அந்த மனித உரிமை காப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கூட அவன் தான் காப்பாற்றுகிறான். அவன் தனது உயிரை பனையம் வைத்து தமக்கு அளிக்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராக சுலபமாக ஒரு சிலரால் செயல்பட முடிகிறது. அவன் அளிக்கும் அதே பாதுகாப்பினை அனுபவிக்கும் மற்றவர்கள் கை கட்டி, கண் மூடி, வாய் பொத்தி, செவி அடைத்து காந்தியின் குரங்குகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


வாழ்க சமூக நீதி. வளர்க பாரதம்.


முற்றும்!


முடிவுரை: இத்தொடரை தொடர்ந்து படித்து வரும் வலையுலக அன்பு நெஞ்சங்கள் இந்நாட்டுக்காகவும், இந்நாட்டு மக்களுக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்த நமது இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்ய விருப்பப்பட்டால் "Army Central Welfare Fund" என்ற பெயருக்கு வங்கி காசோலை எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலதிக தகவல்களுக்கு "Army Central Welfare Fund" என்று கூகிளாண்டவரிடம் முறையிடுங்கள்.


Army Central Welfare Fund,
Deputy Director (CW-8),
Adjutant General's Branch, Army Headquarters,
West Block-III, RK Puram,
New Delhi 110 066,
India


இத்தொடர் கட்டுரை அமைய உதவிய தளங்கள்:



Friday, May 04, 2007

7. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971) தொடர்ச்சி...


இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.




இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார்.


அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.


இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.


ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.


இன்னும் வரும்...


Thursday, May 03, 2007

6. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971)


ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம் அண்டைய நாட்டை பாதித்து போருக்கு இழுக்க முடியுமா? முடியும் என்கிறது 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஏற்பட்ட அனுபவம்.


1970 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 169 இடங்களில், 167 இடங்களை கைப்பற்றியது கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அவாமி லீக் கட்சி. அக்கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் அவர்கள். மேலும் மொத்தம் உள்ள 313 இடங்களில் 167 இடங்களை கைப்பற்றியதால் தனிப்பெரும்பான்மையும் அக்கட்சிக்கே கிடைத்தது. அதனால் ஆட்சி அமைக்க தனது கட்சியை அழைக்குமாறு அதிபர் யாஹ்யா கான் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் முஜிபுர் ரெஹ்மான்.


அந்நாட்களில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மேற்கு பாகிஸ்தானில் மட்டுமே இருந்தார்கள். இராணுவத்திலும் அவ்வாறே. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே தங்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணம் வளரத்தொடங்கியது.



அதற்கு தூபம் போடும் விதமாக, ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்த அவாமி லீக் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அக்கட்சி தடை செய்யப் பட்டது. மேலும் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஏற்படும் கலவரங்களை அடக்க மேற்கு பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் கொண்ட இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள வங்காள இஸ்லாமியர்கள் பல துயரங்களுக்கு ஆளானார்கள். அவாமி லீக் கட்சியினர், மற்றும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் சுதந்திரம் மட்டுமே இத்தகைய அவலங்களுக்கு தீர்வு என்ற முடிவிற்கு வந்தனர். பாகிஸ்தான் படையின் ஒரு சிறு பிரிவிற்கு தலைமை தாங்கிய கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஸியௌர் ரெஹ்மான் அவர்கள் தன்னிடம் இருந்த அந்த சிறு படையினைக் கொண்டு 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சித்தகாங் பகுதியில் ஒரு வானொலி நிலையத்தை கைப்பற்றி சுதந்திர பங்களாதேஷை பிரகடனம் செய்தார். மேலும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை போராட்டத்தில் ஈடுபடவும் தூண்டினார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்த அவாமி லீக் கட்சி தலைவர்கள் இந்தியாவில் இருந்தபடியே ஒரு தற்காலிக அரசையும் ஏற்படுத்தினார்கள்.



அதன் தொடர்ச்சியாக கிழக்கு பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு முக்திபாஹிணி என்ற படையை உருவாக்கினர். அவர்கள் பல இடங்களில் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக கொரில்லா தாக்குதல்களை நடத்தினர். நாளாக நாளாக அவர்களின் எண்ணிக்கை கூடி, அவர்கள் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்தனர்.


அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் இந்திரா அவர்கள் பங்களாதேஷின் விடுதலைக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் 20 ஆண்டு இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவையும், சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு இராணுவ தளவாடங்களை அளிக்க முன் வந்தது. இதனால் புதிய தளவாடங்களை கொண்ட பாகிஸ்தானியரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முக்திபாஹிணி படையினர்கள் பலர் இந்தியாவிற்கு தப்பி வந்தனர். அவர்களுக்கு தளவாடங்களும், அயுதப் பயிற்சியும் இந்தியா அளித்தது.


ஆனாலும் அமெரிக்காவின் ஆதரவினால் இந்தியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு நிலையில் 1 கோடி அகதிகளுக்கு அதரவளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஒருவருக்கு ஒரு நாள் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கான செலவு இரண்டு ரூபாய் என்ற வகையில், இந்தியாவிற்கு ஒரு நாள் செலவு கிட்ட தட்ட இரண்டு கோடி ரூபாய் ஆனது. இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் மேலும் தளவாடங்களை பாகிஸ்தானிற்கு அளிக்க முன்வந்தது. இதனால் ஐரோப்பிய வல்லரசு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இந்திரா. அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது. பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் அமெரிக்காவின் இச்செயலை கண்டித்தன. அமெரிக்காவும் தனது ஆதரவை குறைத்துக் கொண்டது.


ஆனாலும் அதனால் இந்தியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்ததே அன்றி இருக்கும் அகதிகளை சமாளிப்பது கடினமாக இருந்தது இந்தியாவிற்கு. போரில் இந்தியா ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாமல் இருந்த போதிலும், இது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனை என்பதால் அமைதி காத்தது இந்தியா.


ஒரு பக்கம் போரில் தலையிட்டால் அமெரிக்காவின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை. போரில் ஈடுபடாமல் இருந்தாலோ இந்திய பொருளாதாரம் சீர்கெட்டு நிமிறவே முடியாத நிலை ஏற்படும். இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது அவரின் வயிற்றில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் வயிற்றிலும் பால் வார்த்தது போன்ற அந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவும் வரலாறு படைக்க தயாரானது.


இன்னும் வரும்...

Wednesday, May 02, 2007

5. இந்தியப் போர்கள்

இரண்டாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1965)


சீனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் படு தோல்வியினால் உற்சாகம் அடைந்த பாகிஸ்தானியர்கள் இந்தியா மீது மீண்டும் போர் தொடுக்க முயற்சி செய்தனர். அதன் ஆரம்பமாக 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "Rann Of Kutch" பகுதியில் சுமார் 3500 சதுர மைல்கள் தனது எல்லையில் வருகிறது என்று பாகிஸ்தான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர்களுகிடையே நடந்த சண்டையில் பாகிஸ்தானியர்கள் கை ஓங்கியது. இதனால் எல்லாம் இந்தியர்களை குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தானியர்கள் "Operation Gibraltar" என்ற திட்டத்தினை செயல்படுத்தினர்.



அத்திட்டத்தின் படி அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆயுதம் தாங்கிய சுமார் 600 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுறுவினர். அந்த ஊடுறுவலை தடுக்க, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இரண்டாவது போர் தொடங்கியது.



போர் தொடங்கிய முதல் இரு வாரங்களில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவை சேர்ந்த Tithwal, Uri மற்றும் Punch பகுதிகளை பாகிஸ்தானும், POK பகுதியில் மூன்று முக்கியமான இராணுவத் தளங்களை இந்தியாவும் கைபற்றின. மேலும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜம்முவை சேர்ந்த Akhnoor பகுதியை நோக்கி பாகிஸ்தான் முன்னேறியது. பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போகவே, இந்திய விமானப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே பாகிஸ்தானியர்களும் தங்கள் விமானப் படையை போரில் ஈடுபடுத்தினர். ஆனாலும் இந்திய விமானப் படையின் தாக்குதலினால் பாகிஸ்தானியர் Akhnoor பகுதியை கைப்பற்ற முடியாமல் திரும்பினர்.



அதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்தியப் படையினர் சர்வதேச எல்லையை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி கடந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் பிரஸாத் தலைமையில் ஒரு சிறு படையினர் Ichhogil கால்வாயின் வடக்கு கரையில் பாகிஸ்தானியர்களை முறியடித்தனர். அதன் பிறகு Barki மற்றும் Batapore பகுதிகளையும் கைப்பற்றினர். லாகூருக்கு மிக சமீபத்திய பகுதிகளை கைப்பற்றியதால் அவர்கள் லாகூர் சர்வதேச விமான நிலையத்தையும் கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில் அமெரிக்கா லாகூர் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் வரை அவகாசம் அளிக்குமாறு இந்தியாவை வேண்டியது. இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்தது.


அதே நாளில் பாகிஸ்தான விமானப் படையினர் Pathankot பகுதியில் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதே போன்றதொரு தாக்குதலை Halwara பகுதியிலும் நடத்த முயன்று தோல்வி அடைந்தன. பாகிஸ்தான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பின்னர் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி Beas நதியைக் கடந்து இந்தியாவில் Amristar பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான பீரங்கிப் படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் எல்லையில் உள்ள Khemkaran பகுதி வரை மட்டுமே வர முடிந்தது. இந்தியப் படையினர் சுற்றி வளைத்ததால் சுமார் 100 Patton Tanks எனப்படும் அமெரிக்கா அளித்த பீரங்கிகளை விட்டு விட்டு அவர்கள் ஓட நேர்ந்தது.



அதுவரை இப்போரினால் இந்தியத்தரப்பில் 3000 உயிரிழப்புக்களும், பாகிஸ்தான் தரப்பில் 3800 உயிரிழப்புக்களும் நேர்ந்தன. மேலும் பாகிஸ்தானின் சுமார் 20 விமானங்கள் மற்றும் 200 பீரங்கிகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் வட பகுதியில் சுமார் 210 சதுர மைல்கள் இந்தியப் பகுதிகளையும், இந்தியா சுமார் 810 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளையும் கைப்பற்றின.



அந்நிலையில் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்கே திரும்பபெற முடிவு செய்தனர்.


புயலுக்கு பின் அமைதி என்பது போல போர் முடிந்த அடுத்த 6 ஆண்டுகளுக்கு அமைதி நிலவியது. அந்த 6 ஆண்டுகளில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் 585 முறை மீறியது என்று இந்தியாவும், இந்தியா 450 முறை மீறியது என்று பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனாலும் அத்தகைய சிறு சிறு சலசலப்புகளைத் தவிர எல்லைப் பகுதி அமைதியாகவே இருந்தது 1971 வரை.


இன்னும் வரும்...