Thursday, May 03, 2007


6. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971)


ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம் அண்டைய நாட்டை பாதித்து போருக்கு இழுக்க முடியுமா? முடியும் என்கிறது 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஏற்பட்ட அனுபவம்.


1970 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 169 இடங்களில், 167 இடங்களை கைப்பற்றியது கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அவாமி லீக் கட்சி. அக்கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் அவர்கள். மேலும் மொத்தம் உள்ள 313 இடங்களில் 167 இடங்களை கைப்பற்றியதால் தனிப்பெரும்பான்மையும் அக்கட்சிக்கே கிடைத்தது. அதனால் ஆட்சி அமைக்க தனது கட்சியை அழைக்குமாறு அதிபர் யாஹ்யா கான் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் முஜிபுர் ரெஹ்மான்.


அந்நாட்களில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மேற்கு பாகிஸ்தானில் மட்டுமே இருந்தார்கள். இராணுவத்திலும் அவ்வாறே. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே தங்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணம் வளரத்தொடங்கியது.



அதற்கு தூபம் போடும் விதமாக, ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்த அவாமி லீக் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அக்கட்சி தடை செய்யப் பட்டது. மேலும் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஏற்படும் கலவரங்களை அடக்க மேற்கு பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் கொண்ட இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள வங்காள இஸ்லாமியர்கள் பல துயரங்களுக்கு ஆளானார்கள். அவாமி லீக் கட்சியினர், மற்றும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் சுதந்திரம் மட்டுமே இத்தகைய அவலங்களுக்கு தீர்வு என்ற முடிவிற்கு வந்தனர். பாகிஸ்தான் படையின் ஒரு சிறு பிரிவிற்கு தலைமை தாங்கிய கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஸியௌர் ரெஹ்மான் அவர்கள் தன்னிடம் இருந்த அந்த சிறு படையினைக் கொண்டு 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சித்தகாங் பகுதியில் ஒரு வானொலி நிலையத்தை கைப்பற்றி சுதந்திர பங்களாதேஷை பிரகடனம் செய்தார். மேலும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை போராட்டத்தில் ஈடுபடவும் தூண்டினார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்த அவாமி லீக் கட்சி தலைவர்கள் இந்தியாவில் இருந்தபடியே ஒரு தற்காலிக அரசையும் ஏற்படுத்தினார்கள்.



அதன் தொடர்ச்சியாக கிழக்கு பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு முக்திபாஹிணி என்ற படையை உருவாக்கினர். அவர்கள் பல இடங்களில் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக கொரில்லா தாக்குதல்களை நடத்தினர். நாளாக நாளாக அவர்களின் எண்ணிக்கை கூடி, அவர்கள் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்தனர்.


அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் இந்திரா அவர்கள் பங்களாதேஷின் விடுதலைக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் 20 ஆண்டு இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவையும், சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு இராணுவ தளவாடங்களை அளிக்க முன் வந்தது. இதனால் புதிய தளவாடங்களை கொண்ட பாகிஸ்தானியரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முக்திபாஹிணி படையினர்கள் பலர் இந்தியாவிற்கு தப்பி வந்தனர். அவர்களுக்கு தளவாடங்களும், அயுதப் பயிற்சியும் இந்தியா அளித்தது.


ஆனாலும் அமெரிக்காவின் ஆதரவினால் இந்தியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு நிலையில் 1 கோடி அகதிகளுக்கு அதரவளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஒருவருக்கு ஒரு நாள் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கான செலவு இரண்டு ரூபாய் என்ற வகையில், இந்தியாவிற்கு ஒரு நாள் செலவு கிட்ட தட்ட இரண்டு கோடி ரூபாய் ஆனது. இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் மேலும் தளவாடங்களை பாகிஸ்தானிற்கு அளிக்க முன்வந்தது. இதனால் ஐரோப்பிய வல்லரசு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இந்திரா. அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது. பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் அமெரிக்காவின் இச்செயலை கண்டித்தன. அமெரிக்காவும் தனது ஆதரவை குறைத்துக் கொண்டது.


ஆனாலும் அதனால் இந்தியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்ததே அன்றி இருக்கும் அகதிகளை சமாளிப்பது கடினமாக இருந்தது இந்தியாவிற்கு. போரில் இந்தியா ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாமல் இருந்த போதிலும், இது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனை என்பதால் அமைதி காத்தது இந்தியா.


ஒரு பக்கம் போரில் தலையிட்டால் அமெரிக்காவின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை. போரில் ஈடுபடாமல் இருந்தாலோ இந்திய பொருளாதாரம் சீர்கெட்டு நிமிறவே முடியாத நிலை ஏற்படும். இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது அவரின் வயிற்றில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் வயிற்றிலும் பால் வார்த்தது போன்ற அந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவும் வரலாறு படைக்க தயாரானது.


இன்னும் வரும்...

11 Comments:

CVR said...

நடத்துங்க!!!
இப்பவும் கூட கிரிக்கெட் வரைக்கும் நம்மளுக்கு பங்களாதேஷினால் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிறது ;-).
நாம் அவர்கள் சுதந்திரத்துக்கு உதவி செய்த நாடாக இருந்தாலும் இந்திய விரோத செயல்களின் ஏவுகளமாக பங்களாதேஷ் இருந்து வருவதாக செய்திகளில் பார்க்கிறோம்.
இதை பற்றி உங்களின் கருத்து என்ன?? :-)

Thirumozhian said...

நான் இந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடாதீர்கள். நல்ல பதிவுகளைத் தந்தளித்தமைக்கு நன்றி.

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்,

திருமொழியான்.

SathyaPriyan said...

//
CVR said...
நாம் அவர்கள் சுதந்திரத்துக்கு உதவி செய்த நாடாக இருந்தாலும் இந்திய விரோத செயல்களின் ஏவுகளமாக பங்களாதேஷ் இருந்து வருவதாக செய்திகளில் பார்க்கிறோம்.
இதை பற்றி உங்களின் கருத்து என்ன?? :-)
//
உண்மை தான். வட மேற்கில் பாகிஸ்தான், வட கிழக்கில் சீனா மற்றும் பங்களாதேஷ் என்று மூன்று பக்கமும் ஆபத்து இருந்து கொண்டு தான் இருக்கிறது.

//
Thirumozhian said...
நான் இந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடாதீர்கள். நல்ல பதிவுகளைத் தந்தளித்தமைக்கு நன்றி.
//
மிக்க நன்றி Thirumozhian. தங்களது பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Geetha Sambasivam said...

mmmmmm oru vithathil perumai than antha sandaiyal Indiyavukku, enralum athan impact still continues till today. Hope you are aware of it. :(

Cheranz.. said...

நான் ரொம்ப எதிர்பார்த்த பகுதி.இந்தியா..வின் சரித்திரத்தை மாற்றிய போர்... (CVR கூறியது போல..cricket சேர்த்து தான்).

Kissinger & Nixon நம்மை விமர்சித்ததையும் பார்க்கவும்..
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4640773.stm

~சேரன்

SathyaPriyan said...

//
கீதா சாம்பசிவம் said...
mmmmmm oru vithathil perumai than antha sandaiyal Indiyavukku, enralum athan impact still continues till today. Hope you are aware of it. :(
//
ஆனாலும் போரை நாம் தவிர்த்திருக்க முடியாதே மேடம். தவிர்த்திருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார நெருக்கடியினால் நாம் பின் தங்கி இருப்போம். மேலும் போரை நாம் தொடங்க வில்லையே. (Ho! I killed the suspense :-0)

//
Cheran Parvai said...
நான் ரொம்ப எதிர்பார்த்த பகுதி.
//
உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறேனா என்பதை சொல்லவில்லையே.

//
Kissinger & Nixon நம்மை விமர்சித்ததையும் பார்க்கவும்..
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4640773.stm
//
சுட்டிக்கு நன்றி சேரன். தரம் தாழ்ந்த கருத்துக்களுக்கு இந்திரா அளித்த பதில் உலகுக்கே தெரியுமே.

-L-L-D-a-s-u said...

நான் இந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடாதீர்கள். நல்ல பதிவுகளைத் தந்தளித்தமைக்கு நன்றி.
Repeat

ACE !! said...

உங்கள் தொடர் நன்றாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்... :) :)

SathyaPriyan said...

//
-L-L-D-a-s-u said...
நான் இந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடாதீர்கள். நல்ல பதிவுகளைத் தந்தளித்தமைக்கு நன்றி.
Repeat

சிங்கம்லே ACE !! said...
உங்கள் தொடர் நன்றாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்... :) :)
//
தொடரை பலர் அமைதியாக படித்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி தாஸ், ACE, Thirumozhian.

jeevagv said...

//மேலும் அவர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் 20 ஆண்டு இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவையும், சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு இராணுவ தளவாடங்களை அளிக்க முன் வந்தது. //
பனிப்போர் காலம் மட்டும் தொடர்ந்திருந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் - வட கொரியா, தென் கொரியா போல - அமெரிக்க, ரஷ்ய மேதல்களில் கொழுந்து விட்டு எரிந்திருக்கும் போலும்!

//இதனால் ஐரோப்பிய வல்லரசு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இந்திரா. அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது. பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் அமெரிக்காவின் இச்செயலை கண்டித்தன.//
அமெரிக்காவை கண்டிக்க பிரிட்டனுக்கு அன்று இருந்த துணிவில்லாம் இப்போது எங்கே போனதென்பது தெரியவில்லை.

நல்ல தொடர், பாராட்டுக்கள்!

SathyaPriyan said...

//
ஜீவா (Jeeva Venkataraman) said...
பனிப்போர் காலம் மட்டும் தொடர்ந்திருந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் - வட கொரியா, தென் கொரியா போல - அமெரிக்க, ரஷ்ய மேதல்களில் கொழுந்து விட்டு எரிந்திருக்கும் போலும்!
//
இருந்திருக்கலாம். கடவுள் காப்பாற்றினார் :-)

//
அமெரிக்காவை கண்டிக்க பிரிட்டனுக்கு அன்று இருந்த துணிவில்லாம் இப்போது எங்கே போனதென்பது தெரியவில்லை.
//
இன்று அமெரிக்காவை கண்டிக்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை கூட வெள்ளை மாளிகை வாசலில் காவல் காக்கிறது :-(

//
நல்ல தொடர், பாராட்டுக்கள்!
//
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.