Sunday, January 15, 2012


நண்பன்


பொதுவாக ஒரு படத்தை ஒரு மொழியில் நாம் முதலில் பார்த்து விட்டால் அதை பிற மொழியில் மீண்டும் பார்க்கும் பொழுது அது எவ்வளவு நன்றாக இருந்தாலும் நமக்கு அவ்வளவாக பிடிக்காது. இது இயல்பு. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் தமிழில் அலைபாயுதே பார்த்து விட்டு ஹிந்தியில் சாத்தியா பார்த்த பொழுது தியேட்டரில் என்னால் உட்கார முடியவில்லை. இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இதை முதலில் உடைத்தது யுவா என்கிற ஆயுத எழுத்து.

முதலில் நான் பார்த்தது யுவா. யுவா பார்த்து விட்டு ஒரு வாரம் கழித்து தான் என்னால் ஆயுத எழுத்து பார்க்க முடிந்தது. ஆனால் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது ஆயுத எழுத்தின் அருகில் கூட வர முடியாது யுவாவினால் என்று.

ஆயுத எழுத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களது பாத்திரத்தை ஹிந்தியில் செய்தவரை விட நன்றாக செய்திருப்பார்கள். விவேக் - கரீனாவின் கெமிஸ்ட்ரியை விட சித்தார்த் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும். ஓம் பூரியின் வில்லத்தனத்தை விட பாரதி ராஜாவின் வில்லத்தனம் நன்றாக இருக்கும். மாதவன் அபிஷேக் பச்சனை தூக்கி சாப்பிட்டிருப்பார். ராணி முகர்ஜியை அடித்து துவைத்து காயப் போட்டிருப்பார் மீரா ஜாஸ்மின். உண்மையில் அந்த படத்தில் இரண்டு வெர்ஷன்களிலுமே சுமாராக நடித்திருந்தது ஈஷா டியோல், நன்றாக நடித்திருந்தது சூர்யா மற்றும் அஜய் தேவ்கன். இப்படி எல்லாமே நன்றாக இருந்ததினால் எனக்கு முதலில் பார்த்த யுவாவை விட பின்னர் பார்த்த ஆயுத எழுத்து மிகவும் பிடித்திருந்தது.

என்னடா இவன் நண்பன் விமர்சனம் என்று எதையோ கூறிக்கொண்டிருக்கிறானே என்று பார்க்கிறீர்களா? 2004 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து தந்த அதே அனுபவத்தை 2012 ஆம் ஆண்டு ஷங்கரின் நண்பன் அளித்தது. ஆம், 3 இடியட்ஸை விட எனக்கு பல மடங்கு அதிகம் நண்பன் பிடித்திருந்தது.

காரணம் 3 இடியட்ஸில் அமீர் மற்றும் மாதவன் இருவரின் வயதும் நன்கு தெரியும். கல்லூரி மாணவர்களாக அவர்களை ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் இங்கு மூவரும் நன்கு தங்களது பாத்திரங்களில் பொருந்தினார்கள். அருமையான காஸ்டிங். விஜய், ஜீவா, சத்யராஜ், ஸ்ரீ காந்த், இலியானா மற்றும் குறிப்பாக சத்யன் அனைவரும் நூல் பிடித்தது போல அருமையாக நடித்திருந்தார்கள். வேறு யாரையும் அந்த பாத்திரங்களில் நினைத்து கூட பார்க்க இயலவில்லை.

இவ்வளவு இளமையான விஜய்யை பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன. ஃப்ரெஷாக இருக்கிறார். இமேஜை பற்றிய கவலை இல்லாமல் சத்யராஜ், அனூயா, இலியானா, ஜீவா, ஸ்ரீ காந்த் என்று அனைவரிடமும் சகட்டு மேனிக்கு அடியும் உதையும் வாங்குகிறார். இலியானா இவரை பார்த்து நீ ஆண்மையற்றவனா? என்று கேட்கிறார். மாஸ் ஒபனிங் இல்லை, கேமராவை பார்த்து அறிவுரை கூறவில்லை, பஞ்ச் டயலாக் பேசவில்லை, நூறு குண்டர்களை ஒற்றைக் கையினால் தூக்கி வீசவில்லை, இவ்வளவு ஏன்? விஜய்யின் அக்மார்க் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கூட இல்லை, ஆனாலும் படம் முழுதும் விஜய்யின் மாஸ் தெரிகிறது.

அடுத்தது ஜீவா. ஷர்மான் ஜோஷியை தூக்கி அடித்துவிட்டார். "நண்பன் போல யாரு மச்சான்" பாடலில் கண் கலங்கும் போது நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பவர், நண்பனை விட்டுக் கொடுக்க முடியாமல் தற்கொலைக்கு முயலும் போது விதிர்க்க வைக்கிறார், கடைசியில் உங்கள் வேலையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனது ஆட்டிட்யூடை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறும் பொழுது பெருமூச்சு விட வைக்கிறார்.

ஸ்ரீ காந்துக்கு இது ஒரு முக்கியமான படம். அலட்டிக் கொல்லாமல் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு படு மொக்கையாக இருக்கும். வசன உச்சரிப்பு அதை விட மொக்கை. ஆனால் இந்த படத்தில் அடித்து ஆடி இருக்கிறார்.

சத்யராஜுக்கு அவர் வயது நடிகர்கள் எல்லாம் பொறாமை படும் வேடம். தனது மகனின் தற்கொலைக்கு தனது பிடிவாதம் தான் காரணம் என்று இலியானா குற்றம் சாட்டும் காட்சியில் மனுஷன் கண் பார்வையிலேயே நம்மை கொல்லுகிறார். அற்புதமான நடிப்பு.

இலியானா இடுப்பாட்டுவதை தவிர்த்து இப்படத்தில் ஒன்றும் புதிதாக செய்யவில்லை. க்ளோஸ் அப் காட்சிகளில் முகத்தில் முதிர்ச்சியும், பருக்களும் தெரிகின்றன.

கடைசியாக சத்யன். "நிசப்தம் ப்ரான சங்கடம்". படத்தில் விஜய்க்கு நிகரான பாத்திரம். வசன உச்சரிப்பு, முக பாவம், பாடி லாங்குவேஜ், என்று அனைத்திலும் அசத்தி இருக்கிறார். சரியான தேர்வு. சத்யனின் கேரியரில் இது ஒரு முக்கியமான படம்.

இப்படி ஒரு ரீமேக் படத்திற்கு ஷங்கர் தேவையா? என்ற கேள்வி எனது மனதிற்குள் படம் பார்க்கும் முன்னர் இருந்தது. பார்த்த பிறகு தான் தெரிந்தது மூலப் படத்தின் கருவை உள்வாங்கி அதை தமிழ்படுத்துகிறேன் என்று சிதைக்காமல் கொடுக்க ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தான் வேண்டும் என்று. படத்தை காட்சிக்கு காட்சி காப்பி அடித்து எடுத்துவிட்டு திரைக்கதை என்று தங்களது பெயரை போடும் இயக்குனர்கள் மத்தியில் வெறும் இயக்கம் என்று தனது பெயரை போட்டு, இப்படம் வெற்றி பெற்றால் அதன் பெருமை ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று கூறிய ஷங்கர் எனது மனதில் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்தது மதன் கார்க்கி. பெரும்பாலான வசனங்கள் மூலப் படத்தின் பொழி பெயர்ப்பு என்றாலும், ஓரிரு வசனங்களில் நம்மை அசத்துகிறார். "திருக்குறள் சைஸில் ப்ளாஷ் பேக்" ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு. ஆசிரியர்கள் தினத்தில் சத்யன் பேசும் உரை அட்டகாசம். சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது.

அடுத்தது கேமரா. மனோஜ் பரமஹம்ஸா நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறார். ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இசையை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. மனதை உறுத்தாமல் இருக்கிறது. நண்பன் போல மற்றும் அஸ்குலஸ்கா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

மொத்தத்தில் இமேஜ் பார்க்காமல் ஒரு அருமையான படத்தில் நடித்ததற்கும், இமேஜ் பார்க்காமல் ஒரு அற்புதமான படத்தை இயக்கியதற்கும் விஜய்க்கும் ஷங்கருக்கும் எனது நன்றிகள்.

விஜய் ஒரு ஃப்ரீ அட்வைஸ். அடுத்தது திமிங்கிலம், சேட்டைக்காரன் என்று படங்களில் நடிக்காமல் இது போன்ற படங்கள் கொடுங்கள். ப்ளீஸ்.

2 Comments:

Anonymous said...

arumaiyana vimarsanam.. neenkal sonna mathiri thiminkalam mathiri padankalil nadikkamal irunthal sari..

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Annbhu. தொடர்ந்து வாருங்கள்.