Thursday, June 26, 2008

பொடிமாஸ் - 06/26/2008

எனது தமிழ்மண நட்சத்திர வாரம் முடிவிற்கு வந்து விட்டது. அதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசிய நண்பர் ஒருவர் ஏமாற்றமாக இருந்ததாகவும் அதனை நான் இன்னும் அதிகம் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அது அவர் என் மீது கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. ஆனாலும் நான் என்ன செய்வது?, "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?"



அமெரிக்க மக்களின் ஒழுங்கு முறை பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள். நேரில் பார்க்காத மக்களுக்கு தான் இதனை எடுத்து சொல்ல இருக்கிறார்களே வெளி நாட்டு மாப்பிள்ளைகளும், மகன்கள்/மகள்கள் வீட்டிற்கு அமெரிக்கா வந்து திரும்பும் ரிட்டையர்டு பெரிசுகளும். ஆனால் சென்ற மாதம் இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.

Washington, DC மற்றும் Virginia இடையிலான பாதாள ரயில் போக்குவரத்தில் ஏதோ பிழை ஏற்பட்டு அதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஒரு பக்கம் வரும் ரயில்கள் பயணிகளை ஒரு நிலையத்தில் இறக்கிவிட, அங்கிருந்து அவர்களை பேரூந்தில் மற்றொரு ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு ரயிலில் வரும் பயணிகள் அனைவரையும் ஒரு பேரூந்தில் ஏற்றவா முடியும். அதனால் சுமார் 3000 அல்லது 4000 பயணிகள் வரை ஒரு நிலையத்தில் காத்திருக்க பயணிகளை ஏற்ற வரும் பேரூந்தோ நெடுநேரம் சென்றும் வரவே இல்லை.

அப்பொழுது அங்கே இருந்த தள்ளு முள்ளுவை பார்க்க வேண்டுமே. ஆஹா கண்கொள்ளா காட்சி.

Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.



இந்த ஹிந்திக்காரர்களிடம் பழகுவது என்பது தனி கலை என்றே நினைக்கிறேன். முன்பு இந்தியாவில் இருந்த பொழுது எனக்கிருந்த வட நாட்டு நண்பர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. May be we did not talk anything other than cricket and movies then.

இங்கும் நான் வந்த புதிதில் அவ்வளவாக வடநாட்டினர் எனது அலுவலகத்தில் இல்லை (சரியாக சொன்னால் இல்லவே இல்லை). ஆனால் இப்பொழுது திடீரென்று நான்கைந்து வட நாட்டினரை வேலைக்கு எடுத்துவிட்டார்கள்.

10 நிமிடம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் 9 முறை 'பணம்' வந்து விடுகிறது. இது எனக்கு எரிச்சலையே தருகிறது. "டேய்! சாகும் போது அள்ளிக்கிட்டாடா போகப்போறீங்க?" என்று கத்த வேண்டும் போல் உள்ளது.

அடுத்தது மொழி. எனக்கு ஹிந்தி தெரியாது என்று நாளிதழில் தான் விளம்பரம் செய்யவில்லை. அவ்வளவு முறை கூறியாகி விட்டது. இனி என்னிடம் ஹிந்தியில் பேசினால் தமிழில் பதில் கூறுவதாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம்.

இதனை எழுதும் பொழுது நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது நடந்தது தான் நினைவிற்கு வருகிறது. வேலைக்கு சேர்ந்த புதிதில் Swapnil என்ற ஒரு ***** என்னிடம் ஹிந்தியில் ஏதோ கேள்வி கேட்டான். அதற்கு நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் மரியாதையாக பதில் கூறினேன். அதற்கு அவன்,

"Why the fuck you are in India when you don't know Hindi?" என்றான். எனக்கு வந்ததே கோபம். நான் "Do you dare to send me your question in email? I will show you why the fuck I am here." என்றேன். அதை கேட்டு வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சென்றவன் தான். அதன் பிறகு என்னிடம் வருவதில்லை.



இந்த தசாவதார மோகம் என்று முடிவிற்கு வரும் என்றே தெரியவில்லை. சீக்கிரம் குசேலனை வெளியிட்டால் பரவாயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

"பேப்பரை கிழித்து துகள்களை தூக்கி வீசி விசிலடிக்கும் முன்வரிசை ரசிகர்களுக்காக படமெடுத்து விட்டு உலகத்தரம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்....." என்றெல்லாம் வரும் கருத்துக்களை பார்க்கும் பொழுது ஒன்றே ஒன்று தான் கூறத் தோன்றுகிறது.

அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறு இருக்கவே முடியாது. இந்தியா போன்ற சமூகத்தில் தனிப்பட்ட, அரசியல், சமூக பிரச்சனைகள் பலவற்றை நாள் தோறும் சந்திக்கும் முன்வரிசை ரசிகனை மகிழ்விப்பதை விட வேறு உயரிய வேலை ஒரு கலைஞனுக்கு இல்லை.

அதே காரணத்திற்காகவே கமலை நான் எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு ரஜினியையும் மதிக்கிறேன்.

மற்றபடி முன் வரிசை ரசிகனின் ரசனையை மட்டம் தட்டும் அறிவு ஜீவிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் கூற்றுப்படி அவன் மட்டமான ரசனையுடன் இருப்பதினால் தான் உங்களால் "அறிவு ஜீவி" பட்டத்தை எளிதில் பெற முடிகிறது. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்பது முன்வரிசை ரசிகர்களுள் ஒருவனான எனது தாழ்மையான கருத்து.

Sunday, June 22, 2008

நட்சத்திர நன்றி

பதிவெழுத தொடங்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். இரண்டாண்டுகளில் சரியாக 62 பதிவுகள் பதிந்துள்ளேன். ஆனாலும் உண்மையில்

"கண்களையும் காதுகளையும் அதிகம் பயன்படுத்து
வாயின் பயன்பாட்டினை குறைத்துக்கொள்"

என்று எங்கேயோ ஆட்டோவின் பின்னால் படித்த வாசகத்தினை பின்பற்றி இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. நான் எழுதியது 62 தான் என்றாலும், பல நூறு பதிவுகளை இத்துனை காலம் படித்து இருக்கிறேன். அதன் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். பல சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை வலுப்பட்டிருக்கின்றது. பல சித்தாந்தங்களின் மீது நான் வைத்த நம்பிக்கை குறைந்துள்ளது. சிந்தனை தெளிவு அதிகமாகி இருக்கிறது. ஒரு நிகழ்வை பல பரிமாணங்களில் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

இவ்வளவு இருந்தும் இன்னும் சிறிது சுயமோகமும், விளம்பர இச்சையும் மீதம் இருப்பதால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்ற அடிப்படையில் எனது பதிவுகளில் நான் மிகவும் விரும்பிய பதிவுகளை தொகுத்து தந்துள்ளேன். இந்த பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் மன நிறைவை தந்தவை.

1. குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!

நேதாஜியை பற்றி நான் எழுதிய பதிவு. அவரது வரலாற்றை படிக்கும் பொழுது தான் நமது சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் சிந்திய குருதியும், இன்று இந்த சுதந்திரத்தை அனுபவிக்க நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

2. இந்தியப் போர்கள்

இந்தியப் போர்களை பற்றிய எனது தொடர் பதிவு. உண்மையில் இதனை எழுது பொழுது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கடைசி பகுதிக்கு வந்திருந்த பின்னூட்டங்களின் மூலம் இதனை இத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வலைபதிவில் மட்டும் இல்லாது தனிப்பட்ட முறையில் பல நண்பர்களிடமிருந்தும் நான் பாராட்டு பெற்றேன். இந்த தொடரினை எழுதும் பொழுது தொடர்ந்து படித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய கேமரா கவிஞர் CVR மற்றும் சேரன் பார்வை இருவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3. அழகுகள் ஆறு!

திருச்சியை பற்றிய எண்ணமே எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கும் ஒன்று. அப்படி இருக்கும் பொழுது முதல் முறையாக திருச்சியின் மலைக் கோட்டையை பற்றியும் காவிரி பாலத்தினை பற்றியும் எழுதிய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் இருப்பதில் வியப்பென்ன? பின்னாளில் திருச்சியினை பற்றிய முழூ பதிவொன்று எழுதுவதற்கு இந்த பதிவே ஊக்கமாக அமைந்தது.

4. கமல் - ஒரு சகாப்தம்

நான் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு. தமிழ் சினிமாவினை passion ஆக கொண்டிருக்கும் சராசரி தமிழனான எனக்கு நான் மிகவும் விரும்பும் கலைஞனின் சிறந்த படங்களை தொகுத்து அளிப்பது சவாலான ஒரு செயலாக இருந்தது. எனக்கும் கமல் மீது பல விமர்சனங்கள் உண்டு என்ற போதும் அவரது திரைபடங்களின் தாக்கம் அதிகம் என் மீது இருப்பதால் வந்த விளைவே இந்தப் பதிவு.

இத்துடன் விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன். எனது நட்சத்திர வாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பினால் பல பதிவர்கள் முதன்முறை எனது பதிவுகளுக்கு வருகை தந்துள்ளனர். பல பழைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்துள்ளன. அது எனது மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது.

இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேனா?, இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என்றாலும், ஓரளவு அனைவரையும் ஏமாற்றாமல் இருந்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மண நிற்வாகத்தினர்களுக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்த வார தமிழ்மண நட்சத்திர பதிவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

Saturday, June 21, 2008

தமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்

நான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. "இப்பொழுது ஏன் எழுதுகிறாய்? அரசியலில் சேர முயற்சியா?" என்றால், "இல்லை" என்பது எனது உறுதியான பதில். ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் பதிவுகள் பலவும் ஏதோ ஒரு பதிவிற்கு எதிர் வினையாகவே வருகின்றன. நடுநிலை என்பதே என்னை பொருத்தவரை ஒரு விதமான சப்பை கட்டு தான். நாம் ஒவ்வொருவரும் கம்யூனிஸம், திராவிடம், பார்பணீயம், ஈழம், இஸ்லாம், இந்துத்வா, தமிழ் தேசியம் இன்னும் இது போன்ற பலவற்றில் ஏதோ ஒரு விதமான சார்பு நிலையில் உள்ளவர்கள் தாம். அந்த சார்பு நிலையை உரக்க கூற வலைபதிவை பயன்படுத்துகின்றோம். அதில் தவறொன்றும் இல்லை. உண்மையில் வலை பதிவே அதற்காகத்தான் இருக்கிறது.

ஆனால் பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், "என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்?" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான். தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை.

யாரும் நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தங்கங்களின் மீதும் சார்பு நிலை எடுப்பதில்லை. அவரவர் நம்பிக்கைகுறிய சித்தாந்தங்கங்களின் மூலமே மக்களை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு கம்யூனிஸத்தை ஆதரிப்பவர்களும் சரி, உலகமயமாக்கலை ஆதரிப்பவர்களும் சரி இருவருமே தத்தம் சார்பு நிலையில் மிக்க நம்பிக்கை கொண்டவர்கள் தாம். அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது? இதனால் என்ன பயன்?


பத்திரிக்கைகள் தங்களது போட்டி பத்திரிக்கைகள் தரும் செய்திகளுக்கு எதிர் வினை ஆற்றுகின்றனவா? அவர்களுக்கு தேவையான செய்திகளை அவர்களுக்கு தேவையான வகையில் திரித்து தருகின்றன. அவ்வளவே. சித்தாங்கங்களை உருவாக்குபவர்கள் வாதாடலாம், அதனை பின்பற்றுபவர்கள் வாதாட தேவை இல்லை.

இத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது.

உண்மையில் இத்தகைய வாக்கு வாதங்களினால் ஒரு பயனும் இல்லை. அவர் நிலை அவருக்கு; என் நிலை எனக்கு என்று இருந்து விடுவது தான் சரி. ஒரு பதிவர் பக்க சார்புடையவர் என்பதை அறிந்து கொள்வதற்கு அவருடன் குடும்பம் நடத்த தேவை இல்லை. அவரது ஓரிரண்டு பதிவுகளை படித்தாலே போதும். அவரது கருத்தில் உடன்பாடு இல்லையா எதிர்ப்பை அவரது பதிவில் பதிவு செய்யுங்கள். அவர் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.

அதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்.

நாட்டில்/உலகில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை பாதிக்கும் போது அதற்கு எதிர் வினை ஆற்றலாம். நமது கருத்தை கூறலாம். மாறாக ஒரு பதிவிற்கு எதிர் வினை ஆற்றுவது அந்த பதிவும் அதன் உட்கருத்தும் நம்மை பாதிக்கிறது என்ற நமது vulnerablity ஐ மட்டுமே காட்டும் என்பது எனது கருத்து.

அவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறைகளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே.

பின்குறிப்பு : 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் வலையுலக சூழ்நிலையை பார்த்து மனம் நொந்து எழுதி பின் பதிய வேண்டாம் என்று முடிவு செய்து சேமிப்பிலேயே வைத்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது. பல புதிய பதிவர்களின் வருகையும், வலையுலகை மற்ற அச்சு ஊடகங்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளதும், சண்டை சச்சரவுகள் குறைந்துள்ளதும், ஆரோக்கியமான விவாதங்கள் அதிகரித்துள்ளதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

'சரி, இப்பொழுது எதற்கு இதனை பதிந்தாய்?' என்று நீங்கள் கேட்டால் அதற்கு

'பழையதை ஆவணப்படுத்தும் முயற்சி' என்று politically correct ஆன பதிலை கூறலாம்.

அல்லது

'எழுதுவதற்கு சரக்கு தீர்ந்து விட்டது. அதனால் சேமிப்பில் இருந்ததை எடுத்து தூசி தட்டி பதிந்து விட்டேன்.' என்று உண்மையையும் கூறலாம்.

Friday, June 20, 2008

பொய்யர்கள் ஆளும் பூமி

பொதுவாக நான் பிற தளங்களில் இருந்து செய்திகளை அப்படியே எனது பதிவுகளில் தருவதில்லை. இருந்தாலும் நட்சத்திர வாரத்தில் பலரும் எனது பதிவுகளை படிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் நான் படித்து என்னை மிகவும் பாதித்த சில கட்டுரைகளை இந்தப் பதிவில் தொகுத்து தருகிறேன்.

தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்."

மீனா போன்ற பல துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.



தலித்துகள் தலைவர்களானால் அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் நிற்கும் என்ற நம் நம்பிக்கை தவறு என்று கூறுகிறது இந்தக் கட்டுரை.

பஞ்சாயத்து தலைவரான பிறகும்கூட சேர்வாரன், பஞ்சாயத்து அலுவலகத்தைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்யும் துப்புரவுப் பணி யாளராகவே இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வட்டார ஊராட்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தபோது, சனவரி மாதம் நடந்த கூட்டத்தில்தான் ஒரே ஒருமுறை மட்டும் அவர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேட்காமல் முடிவெடுப்பதால் உதவி தலைவரும், அவருடைய கணவரும், 'ஏண்டா சக்கிலியப் பயலே உனக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணுமோ, நீ கையெழுத்துப் போட்டாதான் நாங்க வேலை செய்யணுமா, இருலே உன்ன என்ன செய்யறேன்னு பாரு' என்று தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.



இரட்டைக் குவளை மற்றும் இரட்டை இருக்கை முறைகளுக்கு எதிராக திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய பிரச்சாரத்தில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளை பற்றிய கட்டுரை.

"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"

என்பது போன்ற கேள்விகள் தான் மிஞ்சின. முடிவில் பிரச்சாரத்தை முடிக்காமலே உயிருக்கு பயந்து திரும்பி வந்து விட்டனர் என்கிறது கட்டுரை.

சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண்டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?

என்று முடிக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

முழுதும் படிக்க இங்கே செல்லவும்.



ஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பு குத்தி பார்வையிழந்தவர்கள், உப்பு மீது முட்டிக்கால் போட வைத்ததால் கால் ஊனமான மாணவர்கள், ‘ஸ்குரு டிரைவர்' கொண்டு அடித்ததால் மண்டை உடைந்த மெக்கானிக் சிறுவர்கள்...

எனப் பள்ளிகளில், பணியிடங்களில், குடும்பங்களில் மற்றும் பல இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

இந்தியாவில் இந்து மதம் மேல் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; இந்து மதத்தில் சாதியப்படி நிலைகளில் பார்ப்பனர்கள் மேல் மற்றவர் அனைவரும் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; அதேபோல் பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ். எப்படி தலித் மக்களை ஒடுக்க சாதி இந்துக்கள் ஒன்று கூடுகிறார்களோ, பெண்களை அடக்க மதம், சாதி வேறுபாடுகளின்றி ஆண்கள் ஒன்று கூடுகிறார்களோ - அதைப் போலவே குழந்தைகளை சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒடுக்குகிறார்கள். இது, மூத்தோர் ஆதிக்க உலகம் (Adult Chauvinism).

என்று அதற்கான காரணங்களையும் அழகாக பட்டியலிடுகிறார் கட்டுரை ஆசிரியர்.

மேலும்

இந்தியா, தனது மொத்த வருவாயில் வெறும் 3.5 சதவிகிதமே குழந்தைகளின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுகிறது.

போன்ற புள்ளி விபரங்களும் உள்ளன.

நீங்களும் படியுங்களேன்.



சண்டையா இருந்ததால நா புள்ளைங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். அப்போ திருநா மாதிரி வாட்டமா எதிர்க்க ஒரு கும்பல் வந்திச்சி. வழியில மாட்ன என்ன அவங்க அடிக்க வந்தாங்க. நா இந்துன்னு சொன்னா உட்டுடுவாங்கன்னு நெனச்சி, 'நான் இந்துங்க' ன்னு சொன்னேன். அப்போ கூட என்ன விடல அடிச்சாங்க. என் ஊட்டு ஓட்டயெல்லாம் கடப்பாறையால அடிச்சி நொறுக்கிட்டாங்க

என்று எறையூரில் மதம் மாறிய தலித் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.



இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நண்பர் ஆழியூரானின் சாதி சூழ் உலகு பதிவினை படியுங்கள்.



தலித் முரசு தளம் முழுவதும் HTML வடிவிலிருந்து PHP வடிவிற்கு மாறிவிட்டதால் எனது சேமிப்பில் இருந்த பல சுட்டிகள் வேலை செய்யவில்லை. அதனால் மீண்டும் தேடி எடுத்து சில சுட்டிகளை மேலே தந்துள்ளேன். இவை வெகு சிலவே.

"இந்தியாவில் சாதிக் கொடுமைகளெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றது? வலைபதிவில் தான் எதற்கெடுத்தாலும் சாதி சாதி என்று கூறி கும்மியடிக்கிறார்கள்" என்று கூறுபவர்கள் அவசியம் மேலே உள்ள கட்டுரைகளை படித்து விட்டு வாருங்கள். உங்கள் மனதிற்குள் விவாதித்து தெளிவான முடிவெடுங்கள். நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்.

Thursday, June 19, 2008

Asterix & Obelix - Part 2

முதல் பகுதி இங்கே.

1961 - Asterix the Gaul: நான் முன்னரே குறிப்பிட்டது போல இதுதான் இந்த கதை வரிசையில் முதல் கதை. Gauls உடன் போரிட்டு தோல்வியடைந்த ரோமானியர்கள் தோல்விக்கான காரணங்களை அறிய முற்படுகின்றனர். அவர்களுக்கு Getafix ன் மந்திரக் கூழை பற்றிய செய்தி ஒற்றர்கள் மூலமாக கிடைக்கின்றது. உடனே அவரை கடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். கடத்தியும் விடுகிறார்கள். Asterix எப்படி அவரை மீட்கிறான் என்பது தான் கதை. எனக்கு தெரிந்தவரையில் Obelix இல்லாமல் Asterix மட்டும் இத்தகைய மீட்புப்பணிகளில் ஈடுபடுவது இந்தக் கதையில் மட்டும் தான் என்று நினைக்கிறேன். மற்றபடி Obelix இல்லாமல் போனாலும் நிறைய ரோமானியர்கள் இருப்பதினால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.

1962 - Asterix and the Golden Sickle: Getafix "Mistletoe" என்ற ஒரு வகை இலைகள் கொண்டே தனது மந்திரக் கூழை காய்ச்சுவார். அந்த இலைகளை கொய்வதற்கு தங்கத்தால் ஆன அருவாள் ஒன்றை பயன்படுத்துவார். அந்த அருவாள் உடைந்து போக புதிய அருவாள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் நமது கதாநாயகர்கள். அந்நேரம் அருவாள் சந்தையில் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. 'நமது நாயகர்கள் என்ன செய்தார்கள்?; ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது?' என்பது தான் கதை.

1963 - Asterix and the Goths: Goths என்பவர்கள் Gauls போலவே மற்றொரு பழங்குடியினர். அவர்கள் ரோமானியர்களை வெற்றி கொள்ள Getafix ஐ கடத்துகிறார்கள். நமது நாயகர்கள் எப்படி அவரை மீட்கிறார்கள் என்பது தான் கதை. கதையின் கரு முதற்கதையினை போலவே இருந்தாலும் நகைச்சுவை இதிலும் அதிகம். குறிப்பாக Getafix பேசுவதை Goths ன் தலைவருக்கு மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்த்து சொல்லும் காட்சிகள் மிகவும் அருமை.

1964 - Asterix, the Gladiator: இதன் கருவும் முந்தைய கருவினை ஒத்தது தான். ஜூலியஸ் ஸீஸர் அவர்களுக்கு ஒரு Gaul ஐ பரிசாக அளித்து பதவி உயர்வு பெற நினைக்கிறான் ஒரு சிப்பாய். இருப்பதிலேயே ஆபத்து அதிகம் இல்லாத Gaul யார் என்று பார்த்து Cocofonix என்ற இசை கலைஞனை தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறான். ஸீஸரோ இவனது கர்ண கொடூரமான பாடலை கேட்டு இவனை சிங்கத்திற்கு இரையாக அளிக்குமாறு உத்தரவு கொடுக்கிறார். அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது. நமது நாயகர்கள் தாங்களே Gladiator களாக முன்வந்து Cocofonix ஐ மட்டும் அல்லாது அவனுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களையும் எவ்வாறு விடுவிக்கிறார்கள் என்பது தான் கதை.

1967 - Asterix, the Legionary: உள்நாட்டுக் குழப்பங்களினால் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் ஸீஸர் மீது படையெடுக்கிறார்கள் மற்றொரு பிரிவு ரோமானியர்கள். இதனால் ஸீஸர் தனது படையினை அதிகரிக்க நேரிடுகிறது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் படையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கிறார். நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள Panacea என்ற பெண்ணின் வருங்கால கணவனும் அதில் அடக்கம். அவனை மீட்க ரோமானியர்களின் படையில் சேருகிறார்கள் நமது நாயகர்கள்.

நமது நாயகர்கள் சேர்ந்த படையின் பிரிவில் பல நாட்டு/இன மக்களும் இருப்பதும், அவர்கள் பேசுவதையெல்லாம் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளன் முயலுவதும், இவர்கள் அனைவரையும் வைத்து சமாளிக்க முடியாமல் பிரிவின் தலைவன் அவஸ்தை படுவதும் உச்சகட்ட நகைச்சுவை.

1969 – Asterix and the Cauldron: கடும் பணப்பஞ்சத்தால் பீடிக்கப்படும் ரோமானியர்கள் தங்கள் ஆட்சியில் உள்ள Gauls அனைவரிடமும் அதிக வட்டி வசூலிக்க, அதிலிருந்து தப்பிக்க நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தில் தனது பணத்தை பாதுகாப்பாக வைக்க முயலுகிறார் மற்றொரு கிராமத்தலைவர். பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு Asterix இடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும் கடுமையான காவலின் இடையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

நமது நாயகனுக்கு பணத்தையும் இழந்த நம்பிக்கையையும் மீட்கும் பொறுப்பு வந்தடைகிறது.

1971 – The Mansions of the Gods: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தை வெற்றிகொள்ள அங்கிருந்து மக்கள் அனைவரையும் ரோமபுரிக்கு இடம் பெயர்ப்பதே சரியான தீர்வு என்று நினைக்கிறார் ஸீஸர். அதன் படி அவர்களை நாகரீகத்தின் ஆசை வலையில் விழவைக்க அவர்கள் கிராமத்தினை சுற்றி அழகிய குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. அதில் சில ரோமானியர்களும் குடி வைக்கப்படுகின்றனர். ஸீஸர் எதிர்பார்த்த படியே சில குழப்பங்களும் நேர்கின்றன. அதனை நமது நாயகர்கள் எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பது தான் கதை.

இதன் பின்னர் வருபவை அனைத்தும் Uderzo எழுதிய கதைகள்.

1980 – Asterix and the Great Divide: நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்தின் நட்பு கிராமத்தின் தலைவர் இறக்க அடுத்த தலைவர் யார் என்பதில் குழப்பம் நேரிடுகிறது. தலைவராக இருவர் போட்டியிட கிராமம் இரண்டாக பிரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இருவரையும் விரட்டிவிட்டு கிராமத்தின் ஒரே தலைவனாக ஒருவன் ரோமானியர்களுடன் சேர்ந்து திட்டமிட நமது நாயகர்கள் உதவிக்கு அழைக்கப்படுகிறார்கள். அட்டகாசமான நகைச்சுவை. நமது நாயகர்களிடம் மாட்டிக் கொண்டு ரோமானியர்கள் படும் பாடு வயிற்றை பதம் பார்க்கும்.

1981 – Asterix and the Black Gold: Getafix தனது மந்திரக் கூழுக்கு பயன்படுத்தும் Rock Oil என்ற ஒரு வகை Petrol தீர்ந்து போய்விட நமது நாயகர்களின் கிராமத்திற்கு அபத்து வருகிறது. ஒரு குடுவை மந்திரக் கூழ் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், Mesopotamia வில் மட்டுமே கிடைக்கும் அந்த Rock Oil ஐ தேடி புறப்படுகிறார்கள் நமது நாயகர்கள்.

1983 – Asterix and Son: ஒரு அமைதியான அதி காலையில் Asterix இருக்கும் குடிசைக்கு வெளியில் இருக்கிறது ஒரு கை குழந்தை. குழந்தையின் தந்தை யாரென்று தெரியாமல் போக வேறு வழியின்றி அதனை வளர்க்கும் பொறுப்பு அவனிடமே வருகிறது. அதே நேரத்தில் ப்ரூடஸ் தலைமையில் ஒரு ரோமானியர்களின் படை நாடெங்கும் அந்தக் குழந்தையை தேடுகின்றது. குழந்தை நமது நாயகனிடம் வளர்வதை அறிந்து குழந்தையை கடத்த முயலுகிறார்கள்.

இந்தக் கதையும் அட்டகாசமான நகைச்சுவை கொண்டது. குறிப்பாக மாறுவேடத்தில் வரும் கடத்தல் காரர்களை குழந்தை மந்திரக் கூழை பாலென்று நினைத்து குடித்து விட்டு பந்தாடுவது உச்ச கட்ட நகைச்சுவை.

1987 – Asterix and the Magic Carpet: நமது கிராமத்தில் வசிக்கும் இசைக் கலைஞன் Cocofonix தனது இசைக் கருவியில் ஒரு புதிய தந்தியை சேர்க்க அதன் பலனாக அவன் பாடும் போதெல்லாம் மழை வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் கடுமையான பஞ்சம் வர; அதனை போக்க வேண்டுமென்றால் அரச குமாரியை பலியிட வேண்டும் என்று வஞ்சகமான ராஜகுரு கூற; வேறு வழி இல்லாமல் அதற்கான நாளும் முடிவு செய்யப்படுகின்றது.

ராஜகுருவின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட மற்றொரு குரு தனது மந்திர சக்தியால் பறக்கும் பாயில் நமது நாயகர்கள் இருக்கும் கிராமத்திற்கு அவர்கள் உதவி வேண்டி வருகிறார்.

நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்ற பொழுதும் புத்தகத்தின் விலை காரணமாக நண்பர்களை ஒன்றோ இரண்டோ நூலகத்திற்கு சென்று படித்து விட்டு வாங்க அறிவுரை கூறுகிறேன்.

Wednesday, June 18, 2008

தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்

மதிப்பிற்குறிய திரு. கமலஹாசன் அவர்களுக்கு,

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய இந்தப் பதிவை படித்தவர்கள் புறிந்து கொள்வார்கள் நான் உங்களின் தீவிர ரசிகன் என்று. "எதிலுமே 'தீவிரம்' என்பது இருக்கவே கூடாது." என்ற தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் நல்ல கலையை ரசிப்பதில் அது இருந்தால் தவறில்லை என்று நான் கருதுவதால் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறேன். தங்களின் பல திரைப் படங்களை பார்த்து, ரசித்து, மகிழ்ந்திருக்கிறேன்.

திரைக்குள் உங்களின் அற்பணிப்பு, விடா முயற்சி, எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற தங்களின் அவா, நடிப்பை தாண்டிய தங்கள் திறமைகள் அனைத்தையும் பார்த்து வியந்ததை போலவே திரைக்கு வெளியே தங்களின் முகமூடி அணியாத நேர்மையையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நேற்று தமிழ் சினிமாவின் "மைல் கல்" என்று தங்களால் கூறப்பட்ட தசாவதாரம் திரைப்படத்தை பார்த்து விட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். முதல் மாதிரிக் காட்சிக்கு பின்னர் (Preview Show) திரைத் துறை வித்தகர்கள் பலரும் இத்திரைப்படத்தை "திரைக் காவியம்" என்று தங்களிடம் கூறி இருப்பார்கள். அது அவர்கள் கருத்தாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் எனக்கு இது ஒரு சாதாரண திரைப் படமாகவே தோன்றியது. ஒரு வேளை எனக்கு ரசிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்னவோ?

மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் போன்ற படங்களில் தங்களின் திரைக்கதை நேர்த்தியையும், ஹே ராம்! மற்றும் விருமாண்டியில் தங்களிடம் மறைந்து இருந்த மிக சிறந்த இயக்குனரையும், எத்தனையோ படங்களில் தங்கள் நடிப்பு திறமையையும், "யார் யார் சிவம்?" போன்ற எத்தனையோ பாடல்களில் தங்கள் வசீகரிக்கும் குரல் வளத்தையும் மற்றும் நடிகர்களுக்கு தேவையான நடனத்திறமை, உடலழகை பேணுதல் போன்ற பல வற்றையும் மீண்டும் மீண்டும் நிரூபித்து தாங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்பதை பறைசாற்றி இருக்கிறீர்கள்.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக தங்களை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நடிகர் திலகமே தங்களின் ரசிகர் என்பது இன்னும் முத்தாய்ப்பு.

நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக உங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை போல தங்களின் கலையுலக வாரிசு இன்னும் உருவாக வில்லை என்பது கவலை அளிக்கும் ஒரு விஷயம். சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு நடிப்பு திறமை அதிகமாக இருக்கின்றது. எதிலும் புதுமை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் நடனத்திறமை இல்லை. விஜய் அசத்தலாக நடனம் ஆடுகிறார். சுமாராக நடிக்கிறார். ஆனால் புதுமைகளை செய்ய அவர் விழைவதில்லை. அஜித் நடனம் மற்றும் வசன உச்சரிப்பு போன்ற எதிலும் சோபிக்கவில்லை. ஆனால் மக்களை கவரும் வசீகரம் அவரிடம் அதிகம் உள்ளது. ஆனால் இவர்கள் அனைவரிடத்திலும் இல்லாத ஒன்று நகைச்சுவை நடிப்பு. இரண்டரை மணிநேர முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இவர்களால் கொடுத்து ஜெயிக்க முடியுமா? என்பதில் எனக்கு சந்தேகமே. மாறாக இவர்கள் அவ்வாறான முயற்சி மேற்கொண்டாலும் இவர்களுக்கு விவேக்/வடிவேலு/சந்தானம்/கருணாஸ் போன்றவர்கள் உதவி வேண்டும்.

மேலும் இவர்களில் விக்ரம் மற்றும் சூர்யா தவிர்த்து வேறு யாருமே தங்கள் நாற்காலிக்கு ஆசை படுவதாக தெரியவில்லை. இளைய தளபதி முதல் புரட்சித் தளபதி, சின்னத் தளபதி வரை அனைவரும் விரும்பும் இடம் "சூப்பர் ஸ்டார்" நாற்காலி மட்டுமே. நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ? சூப்பர் ஸ்டார் அரசியலில் சோபிக்க வில்லை. ஒரு வேளை அவர் தமிழக முதல்வராக ஆகி இருந்தால் இவர்கள் "Little Chief Minister" என்றெல்லாம் தலைப்பு அட்டை (Title Card) போட்டு நம்மை சாகடித்திருப்பார்கள்.

ஆக இவர்களைப் போன்றவர்களுக்கு நடுவே, சுமார் கால் நூற்றாண்டு காலமாக தமிழ் திரையுலகை தங்களின் தோளில் சுமந்து கொண்டு இருந்து விட்டீர்கள்/இருக்கிறீர்கள். பல புதுமைகளை புகுத்தியுள்ளீர்கள். அதற்கெல்லாம் எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்களை பாராட்டி இருப்பார்கள். என்னுடையதையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

இனி இக்கடிதத்தின் மைய கருத்திற்கு வருவோம்.

கலைஞானி அவர்களே!, தங்களின் எந்த ஒரு திறமையையும் யாருக்கும் நிரூபிக்க இனியும் அவசியமோ, தேவையோ இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி இருக்க எதற்கு இந்த தசாவதாரம்? இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதன் மூலம் புதிதாக என்ன சாதித்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?

சுமார் 100 கோடி பொருட்செலவில் இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த திரைப்படத்தை விட நல்ல பல திரைப் படங்களை தாங்கள் முன்னரே எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள். அப்படி இருக்க இந்த திரைபடத்திற்கான தேவை என்ன?

தங்களின் மிகப்பெரிய பலமே தங்களின் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென்று ஒரு பிம்பம் இல்லாமல் இருப்பது தான். நீங்கள் அமெரிக்காவில் இருந்து 200 கோடி ரூபாயுடன் வரும் 25 வயது திருமணம் ஆகாத இளைஞனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகற்ற 60 வயது ஏழை பிச்சைக்காரனாக நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். 200 கிலோ எடையுள்ள மாமிச மலைகளை தூக்கி எறியும் வீரனாக நடிக்க தேவை இல்லை. பேரூந்தில் ஜேப்படி அடித்து விட்டு மக்களிடம் அடிவாங்கும் திருடனாக நடிக்கலாம். மக்களுக்கு நல்லது செய்யும் புனித பிம்பமாக நடிக்க தேவை இல்லை. கொடூரமான வில்லனாக நடிக்கலாம். மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டிய தேவை இல்லை. பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கலாம்.

இப்படி எந்த விதமான பிம்பமும் இல்லாமல் இருந்த தங்களின் மீது 'புதுமை' என்ற பிம்பத்தை பத்திரிக்கைக்காரர்கள்/சக திரையுலகினர்/ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்றி விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவ்வாறு நீங்கள் வலிந்து சேர்க்கும் புதுமை கதையை தூக்கி விழுங்கி விடுகிறது. கதைக்காகத்தான் திரைப்படமே அல்லாது புதுமைக்காக அல்ல என்பதை நான் தங்களுக்கு கூற தேவை இல்லை.

ஒரு ரசிகனாக உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்று தான். வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை வைத்து அதில் புதுமையான திரைக்கதை அமைத்து, அதில் எந்தவிதமான ஒப்பனை புதுமையோ இல்லை தொழில் நுட்ப புதுமையோ வலிந்து புகுத்தாமல் திரைப்படமாக எடுங்கள். Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவை எல்லாம் ஒப்பனையிலோ அல்லது தொழில் நுட்பத்திலோ எந்த வித புதுமைகளையும் வலிந்து புகுத்தாமல் கதையை நம்பி எடுத்து வெற்றி பெற்ற திரைப் படங்கள். இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன். இதற்கு முன் எத்தனையோ நல்ல ஆங்கில படங்களை தழுவி நல்ல தமிழ் படங்களை கொடுத்த நீங்கள், இத்தகைய நல்ல ஹிந்தி படங்களை தழுவி ஏன் நல்ல படங்களை கொடுக்க முயற்சிக்க கூடாது?

தங்களின் மிகப் பெரிய வெற்றிப் படமாக வேட்டையாடு விளையாடு திரைப்படம் அமைய காரணம் என்ன தெரியுமா? எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் ஒரு இயக்குனரின் கதாநாயகனாக (Director's Hero) நீங்கள் அப்படித்தில் நடித்ததே.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் திரையுலகில் இப்பொழுது பல அருமையான இயக்குனர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள். கௌதம் மேனன், அமீர், பாலா, செல்வராகவன், ராதா மோகன், பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், விஷ்னு வர்தன், மிஷ்கின் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களின் திரைபடங்களில் நீங்கள் எந்த விதமான கமலிஸமும் இல்லாமல் நடித்தால் அருமையாக இருக்கும்.

மாறாக புதுமை செய்தே ஆக வேண்டும் என்றால் "செங்கிப்பட்டி" அல்லது "எச்சிகாமலபட்டி" என்று தலைப்பிட்டு பேரரசு டைப் படங்களில் நீங்கள் நடிக்கலாம். ரசிகர்களுக்கு உங்களை அத்தகைய திரைப்படங்களில் பார்ப்பதும் புதுமையாகத்தான் இருக்கும்.

இவன்,
சத்யப்ரியன்

பின்குறிப்பு : படத்தினை பார்த்துவிட்டு இப்படி ஒரு கடிதத்தைதான் எழுதுவேன் என்று நினைத்திருந்தேன் படத்தை பார்க்கும் வரை. பார்த்த பிறகு ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Hats-off Mr. Kamal Haasan!

Tuesday, June 17, 2008

Asterix & Obelix - Part 1

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக் கொண்டு இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் காமிக்ஸ் என்றும் சொல்ல முடியாமல் ஃபிக்க்ஷன் என்றும் சொல்ல முடியாமல் இருந்த இந்த கதைகள் என்னை படிக்கும் பொழுதே மிகவும் கவர்ந்தன.

எந்த புத்தகத்தையும் விலைக்கு வாங்கியே படிக்கும் பழக்கம் உடைய எனக்கு 200 ரூபாய் கொடுத்து நாற்பது பக்க படக்கதை ஒன்று வாங்கும் அளவிற்கெல்லாம் வசதி இல்லாததால் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்க முடியவில்லை.

வளர்ந்து வேலைக்கு சென்ற கால கட்டங்களில் அந்த புத்தகத்தை மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்த பொழுது 200 ரூபாய் என்பது 600 ரூபாயாக பெங்களூர் Landmark ல் உயர்ந்து விட்டது. 20 புத்தகங்களுக்கு 12000 ரூபாய் என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத தொகை. அந்த ஆசை நிறைவேறாமலேயே மனதின் மூலையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த புத்தகங்கள் முழூ தொகுப்பாக நண்பன் ஒருவன் மூலம் CD வடிவில் கிடைக்க நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கணினியில் அதனை படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பின்னர் அதனை புத்தகமாக வாங்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து வாங்காமல் விட்டது பிறந்த நாளன்று மனைவி மூலம் கை கூடியது. குழந்தையின் குதூகலத்துடன் இரண்டே நாட்களில் அனைத்து புத்தகங்களையும் மீண்டும் படித்து முடித்தேன்.

இக்கதையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு.

இக்கதையின் ஆசிரியர் Goscinny. ஓவியங்கள் வரைந்தவர் Uderzo. 1961 ஆம் ஆண்டு தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 33 புத்தகங்களில் முதல் 24 புத்தகங்களை எழுதியவர் Goscinny. அவரின் மரணத்திற்கு பிறகு Uderzo அடுத்த 9 புத்தகங்களை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் வெளியிட்டார்.

1961 ஆம் ஆண்டு முதலில் வெளிவந்த "Asterix the Gaul" கதையில் அனைத்து பாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும். அதில் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கதா பாத்திரங்கள் ஒரே மாதிரி வரையப்படாமல் சிறிது சிறிதாக மாறுவதை கவனிக்கலாம். கதையின் இறுதியில் Uderzo ஒரு முடிவான சட்டத்திற்குள் (Frame) பாத்திரங்களை கொண்டு சென்று அதன் பின்னர் அனைத்து கதைகளிலும் ஒரே மாதிரி வரைந்திருப்பார்.

அடுத்து வெளிவந்த கதைகளை படித்து விட்டு இந்த கதையை பின்னர் படிப்பவர்கள் இதனை எளிதாக கண்டுணரலாம்.

இனி இக்கதையின் முக்கிய கதா பாத்திரங்களுக்கு வரலாம்.

Asterix: Asterix ஒரு போர் வீரன். எல்லா கதையின் நாயகர்களைப் போலவே இவனும் மிகுந்த அறிவுக் கூர்மை உடையவன்.

Getafix: இவர் ஒரு Druid (மந்திர சக்தி வாய்ந்த மருத்துவர் என்று வைத்துக் கொள்ளலாம்). இவர் ஒரு விதமான மந்திரக் கூழை தயார் செய்வதில் வல்லவர். அதனை அருந்தும் அனைவருக்கும் சிறிது காலம் உடல் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

Obelix: இவன் Asterix ன் உயிர் நண்பன். இக்கதையின் இரண்டாம் நாயகன். அறிவுக் கூர்மை சற்று குறைச்சலாக கொண்டவன். Wild Boar எனப்படும் ஒரு வகை பன்றிகளை வேட்டையாடி புசிப்பதும், ரோமானியர்களை பந்தாடுவதும் இவன் விருப்பத்துடன் செய்யும் செயல்கள். Getafix காய்ச்சிய மந்திரக்கூழ் அடங்கிய பாத்திரத்தில் சிறு குழந்தையாக இருந்த பொழுது இவன் விழுந்து விட்டான். அதனால் அதன் சக்தி இவன் மீது நிரந்தரமாக பதிந்து விட்டது.

மற்றும் சிறிதும் பெரிதுமாக பல பாத்திரங்கள். இவர்கள் Gauls என்ற பழங்குடியினர். இவர்கள் அனைவரும் வசிப்பது ஒரு கிராமத்தில்.

Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் ரோமானிய படையெடுப்பை இந்த கிராமத்தினர் முறியடிக்கிறார்கள். அவர்களின் மந்திர சக்தியை அறிந்து கொண்ட ஜூலியஸ் ஸீஸர் போரின் மூலம் அவர்களை வெல்ல முடியாது என்று முடிவு செய்து பல சதி திட்டங்கள் செய்கிறார். Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் Asterix மற்றும் Obelix இருவரும் எவ்வாறு அந்த சதிகளை முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சதி. ஒவ்வொரு கதைக் களம்.

கதாபாத்திரங்களின் தன்மையை நன்கு உணர்ந்து படிப்பவர்கள் வரிக்கு வரி நகைச்சுவை தூவப்பட்டு இருப்பதை படித்துணரலாம்.

அடுத்த பகுதியில் நான் படித்த மற்றும் நான் பரிந்துரை செய்யும் கதைகள்.

Monday, June 16, 2008

ராமாயணம் - திருவிளையாடல்

சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் இந்த இரு தொடர்களும் வெளி வருகின்றன. முதல் தொடர் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. பின்னது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகிறது.

ராமாயணம் தொடர் ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றத்துடன் வெளிவருகின்றது. இவ்வாறு மொழி மாற்றம் செய்வதை முதலில் தொடங்கியது சென்னை தொலைக்காட்சிதான் என்று நினைவு. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டங்களில் ஜுனூன், கானூன், இம்திஹான், அலிப் லைலா, சந்திரகாந்தா போன்ற பல தொடர்களை தமிழில் மொழி மாற்றத்துடன் ஒளிபரப்பினார்கள். தமிழ் மொழிமாற்றம் படு காமெடியாக இருக்கும். "ஜுனூன் தமிழ்" என்றே அதனை பலர் குறிப்பிடுவது உண்டு.

இந்த ராமாயணம் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. எனக்கு சிறு வயதில் இருந்தே ராமாயணம், மஹாபாரதம் இருகதைகளில் மஹாபாரதம் கதையே மிகவும் பிடித்த கதை. ராமாயணம் என்பது என்னை பொருத்த வரை பெரிய போர். ராமர், கிருஷ்ணர் இருவரில் எனக்கு பிடித்தவர் கிருஷ்ணரே. கவனிக்கவும், நான் இங்கு ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரு கதாபாத்திரங்களைத் தான் குறிப்பிடுகிறேன். மற்றபடி எனக்கு மச்ச, கூர்ம, வராஹ, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, கிருஷ்ண, பலராம மற்றும் இனி வரப்போகும் கல்கி ஆகிய அனைத்து அவதாரங்களும் ஒன்றுதான்.

கிருஷ்ணர் என்னை பொருத்த வரை ஒரு "larger than life" கதாபாத்திரம். ஆனால் ராமர் அப்படி எதுவும் இல்லாமல் இருப்பதும் ராமாயணம் எனக்கு படு போராக தெரிவதற்கு காரணம். ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது சுந்தர காண்டம் மட்டுமே. அதற்கு அனுமாரின் heroics ஒரு முக்கிய காரணம்.

இருந்தாலும் ராமாயணம், அலிப் லைலா, விக்ரம் ஔர் வேதாள் போன்ற வெற்றித் தொடர்களை தயாரித்த சாகர் நிறுவனத்தில் இருந்து வரும் புதிய ராமாயணம் என்பதால் 'என்னதான் புதியதாக செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போமே.' என்ற சிந்தனை என்னுள் தொடர் தொடங்குமுன் இருந்தது.

இது என்ன Don படத்தின் remake ஆ? கதையிலும் திரைக்கதையிலும் மாறுதல் செய்வதற்கு? நான் மாறுதல் என்று குறிப்பிட்டது Graphics மற்றும் பிரம்மாண்டம் இரண்டையும் தான். ஆனால் தொடர் தொடங்கி சில வாரங்களிலேயே படு மோசம் என்று தெரிந்து விட்டது. கதாபாத்திரங்களின் தேர்வும் படு மோசம்.

'ஞாயிறு காலை இந்த தொடரை பார்க்கலாமா? அல்லது தங்கமணியுடன் shopping செல்லலாமா?' என்று கேட்டால் எனது விடை இரண்டாவது தான். 'கல்யாணம் ஆகாதவர்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்டால் விரைவில் திருமணம் செய்துகொண்டு தங்கமணியுடன் shopping செல்லுங்கள் என்பேன்.

ஆனால் அதே நேரத்தில் சித்தி, செல்வி, அரசி என்று தொடர்ந்து மெகா போர்களை தயாரிக்கும் ராடான் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் திருவிளையாடல் தொடர் மீது எனது எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. திருவிளையாடல் புராணத்தினை முழுவதும் நான் படித்தது இல்லை. நடிகர் திலகத்தின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர் போன்ற படங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகளே எனக்கு தெரிந்தவை.

தொடர் தொடங்கு முன் திருமதி. ராதிகா சரத்குமாரின் பேட்டியை குங்குமத்தில் படித்தேன். அதில் 64 திருவிளையாடல்களையும் தொகுத்து படம் பிடித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டதால், 'அப்படி என்னதான் இருக்கிறது?' என்று அறிந்து கொள்வதற்காக அதிக எதிர்பார்ப்பில்லாமலேயே இந்தத் தொடரினை பார்க்க தொடங்கினேன்.

ஆனால் எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விஞ்சிவிட்டது இந்தத் தொடர். குறிப்பாக தொடரின் பிரம்மாண்டம் மற்றும் Grapics அருமையாக இருக்கின்றன.

கதாபாத்திரங்களின் தேர்வு மிகவும் அருமை. அதிலும் நடிகர் திலகத்தையும், நடிகையர் திலகத்தையும் பார்த்த கண்களுக்கு வேறு நடிகர்/நடிகைகளை அதே கதாபாத்திரங்களாக பார்ப்பதில் எந்த நெருடலும் இல்லை. அதுவே அந்த நடிகர்களின் சிறப்பை காட்டுகிறது. "ஆடல் திருவிளையாடல்" என்ற தொடக்கப் பாடலும் திருமதி. சுதா ரகுனாதன் மற்றும் திரு. மாணிக்க வினாயகம் இருவரின் குரலில் இனிமையாக இருக்கிறது.

வசனங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் சில கதாபாத்திரங்கள் தூய தமிழை உச்சரிக்கும் விதம் நகைச்சுவையாக இருக்கிறது. உச்சரிப்பு சரி இல்லாதவர்களுக்கு டப்பிங் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும். குறிப்பாக நாரதராக வரும் 'நவரசவேள்' திரு. ராதா ரவி அவர்களின் வசன உச்சரிப்பு ஏனோ பாத்திரத்துடன் ஒட்டவில்லை. நாரதர் என்ற பாத்திரத்தின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் சிறிது நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத கட்டமைப்பு. சரஸ்வதி சபதம் திரைப் படத்தில் நாரதராக நடிகர் திலகம் சக்கை போடு போட்டிருப்பார். அதிலும் முப்பெரும் தேவியர்களிடம் அவர் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சி அருமையிலும் அருமை. அதே காட்சி இந்தத் தொடரில் ஒட்டவே இல்லை. மற்றபடி குறிப்பிட்டு சொல்லக் கூடிய குறைகள் வேறு எதுவும் இத்தொடரில் இல்லை.

மொத்தத்தில் தமிழகத்தில் பக்தியை காசாக்கும் விளையாட்டில் வெற்றிபெற்றது ராடான் நிறுவனத்தினர் மட்டுமே.

நட்சத்திர வணக்கம்

வலையுலக நண்பர்களே!

வணக்கம்.

ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடியும் இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமாக இருக்க என்னை தமிழ்மண நிர்வாகத்தினர் அன்புடன் அழைத்துள்ளார்கள். சென்ற ஆண்டே இந்த வாய்ப்பு எனக்கு வந்தபோது அலுவல் காரணமாக என்னால் அதனை ஏற்க முடியவில்லை.

இப்பொழுது சரியாக நான் பதிவெழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடியும் நேரத்தில் மீண்டும் அன்புள்ளம் கொண்டு அவர்கள் வாய்ப்பு அளிக்கும் பொழுது அதனை உடனே உவப்புடன் ஏற்றுக் கொண்டேன்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் (சரியாக ஜனவரி மாதம் 2006 ஆம் ஆண்டு) நான் அமெரிக்கா வந்த பின்னரே தமிழில் வலைப்பதிவுகள் இருப்பதை அறிந்தேன்.

இணையத்தில் தமிழினை பார்த்த உடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் முதலில் படிக்கத் தொடங்கியது டுபுக்கு அவர்களின் பதிவினை மட்டுமே. அவரின் பள்ளி கல்லூரி நாட்களின் நினைவுகள் என்னை எனது பள்ளி கல்லூரி நாட்களுக்கு கொண்டு சென்றன. அவரின் எழுத்து நடை அமரர்.சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுத்து நடையை நினைவுபடுத்தின. காவிரிக்கரையில் பிறந்த நான் தாமிரபரணி மீது காதல் கொண்டேன்.

டுபுக்கு அவர்களின் பதிவிலிருந்து அங்கே இங்கே என்று அலைந்து பின்னர் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ்மணம். சுமார் ஆறு மாத காலம் தமிழ்மணம் மூலமாக பல பதிவுகளை படித்துக் கொண்டிருந்துவிட்டு 'நாமும் ஏன் பதிய கூடாது?' என்ற கேள்வி என்னுள் எழ ஒரு சுபயோக சுபதினத்தில் உதயமானதுதான் எனது பதிவுகள். நினைவு தெரிந்த நாள் முதல் நண்பர்கள் புடை சூழ வாழ்ந்து பழகிய என்னை அமெரிக்கா தந்த தனிமையின் பிடியிலிருந்து காப்பாற்றியது தமிழ் வலையுலகே. எனது 30 ஆண்டுகால வாழ்வின் நினைவுகளை எனது பதிவுகள் நெடுகிலும் தூவி இருக்கிறேன். இல்லையென்றால் அந்த நினைவுகளின் சுமை என்னை அழுத்தி பிசைந்து பாடாய் படுத்தி இருக்கும்.

இந்த நேரத்தில் நான் பதிவெழுத முதற்காரணமாக இருந்த டுபுக்கு அவர்களுக்கும், எனது முதல் பதிவில் வந்து முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய குமரன் அவர்களுக்கும், தொடர்ந்து எனது பதிவுகளை எல்லாம் படித்து வாழ்த்திய/வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகளின் இடப்பக்கத்தில் இருக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 5200 க்கு சற்று அதிகம் காட்டுகிறது (எனது அலுவலக மற்றும் இல்ல IP முகவரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது). இது சென்ற ஆண்டு எனது "முதலாம் ஆண்டு நிறைவு" பதிவிற்கு முன்னர் நான் சேர்த்தது. அந்தக் கணக்கின் படி ஒரு பதிவினை சுமார் 200 பேர் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கை எனக்கு மிகவும் அதிகம். இது இந்த இரண்டு திரட்டிகளினால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

ஒரு மாதம் முன்னதாகவே தமிழ்மண நிர்வாகத்தினர் எனக்கு இந்த நட்சத்திர வாரத்தினை பற்றி தெரியப்படுத்தி இருந்தாலும், எனது வழக்கமான சோம்பல் காரணமாக பதிவுகளை எழுதி வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறு குற்றங்குறைகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தாது என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது நட்சத்திர வாரத்தினை இன்றுடன் தொடங்குகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்.