Saturday, June 21, 2008


தமிழ் பதிவுலகமும் - கருத்து மோதல்களும்

நான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. "இப்பொழுது ஏன் எழுதுகிறாய்? அரசியலில் சேர முயற்சியா?" என்றால், "இல்லை" என்பது எனது உறுதியான பதில். ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் பதிவுகள் பலவும் ஏதோ ஒரு பதிவிற்கு எதிர் வினையாகவே வருகின்றன. நடுநிலை என்பதே என்னை பொருத்தவரை ஒரு விதமான சப்பை கட்டு தான். நாம் ஒவ்வொருவரும் கம்யூனிஸம், திராவிடம், பார்பணீயம், ஈழம், இஸ்லாம், இந்துத்வா, தமிழ் தேசியம் இன்னும் இது போன்ற பலவற்றில் ஏதோ ஒரு விதமான சார்பு நிலையில் உள்ளவர்கள் தாம். அந்த சார்பு நிலையை உரக்க கூற வலைபதிவை பயன்படுத்துகின்றோம். அதில் தவறொன்றும் இல்லை. உண்மையில் வலை பதிவே அதற்காகத்தான் இருக்கிறது.

ஆனால் பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், "என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்?" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான். தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை.

யாரும் நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு சித்தாந்தங்கங்களின் மீதும் சார்பு நிலை எடுப்பதில்லை. அவரவர் நம்பிக்கைகுறிய சித்தாந்தங்கங்களின் மூலமே மக்களை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு கம்யூனிஸத்தை ஆதரிப்பவர்களும் சரி, உலகமயமாக்கலை ஆதரிப்பவர்களும் சரி இருவருமே தத்தம் சார்பு நிலையில் மிக்க நம்பிக்கை கொண்டவர்கள் தாம். அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது? இதனால் என்ன பயன்?


பத்திரிக்கைகள் தங்களது போட்டி பத்திரிக்கைகள் தரும் செய்திகளுக்கு எதிர் வினை ஆற்றுகின்றனவா? அவர்களுக்கு தேவையான செய்திகளை அவர்களுக்கு தேவையான வகையில் திரித்து தருகின்றன. அவ்வளவே. சித்தாங்கங்களை உருவாக்குபவர்கள் வாதாடலாம், அதனை பின்பற்றுபவர்கள் வாதாட தேவை இல்லை.

இத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது.

உண்மையில் இத்தகைய வாக்கு வாதங்களினால் ஒரு பயனும் இல்லை. அவர் நிலை அவருக்கு; என் நிலை எனக்கு என்று இருந்து விடுவது தான் சரி. ஒரு பதிவர் பக்க சார்புடையவர் என்பதை அறிந்து கொள்வதற்கு அவருடன் குடும்பம் நடத்த தேவை இல்லை. அவரது ஓரிரண்டு பதிவுகளை படித்தாலே போதும். அவரது கருத்தில் உடன்பாடு இல்லையா எதிர்ப்பை அவரது பதிவில் பதிவு செய்யுங்கள். அவர் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.

அதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்.

நாட்டில்/உலகில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை பாதிக்கும் போது அதற்கு எதிர் வினை ஆற்றலாம். நமது கருத்தை கூறலாம். மாறாக ஒரு பதிவிற்கு எதிர் வினை ஆற்றுவது அந்த பதிவும் அதன் உட்கருத்தும் நம்மை பாதிக்கிறது என்ற நமது vulnerablity ஐ மட்டுமே காட்டும் என்பது எனது கருத்து.

அவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறைகளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே.

பின்குறிப்பு : 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் வலையுலக சூழ்நிலையை பார்த்து மனம் நொந்து எழுதி பின் பதிய வேண்டாம் என்று முடிவு செய்து சேமிப்பிலேயே வைத்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது. பல புதிய பதிவர்களின் வருகையும், வலையுலகை மற்ற அச்சு ஊடகங்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளதும், சண்டை சச்சரவுகள் குறைந்துள்ளதும், ஆரோக்கியமான விவாதங்கள் அதிகரித்துள்ளதும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

'சரி, இப்பொழுது எதற்கு இதனை பதிந்தாய்?' என்று நீங்கள் கேட்டால் அதற்கு

'பழையதை ஆவணப்படுத்தும் முயற்சி' என்று politically correct ஆன பதிலை கூறலாம்.

அல்லது

'எழுதுவதற்கு சரக்கு தீர்ந்து விட்டது. அதனால் சேமிப்பில் இருந்ததை எடுத்து தூசி தட்டி பதிந்து விட்டேன்.' என்று உண்மையையும் கூறலாம்.

18 Comments:

வடுவூர் குமார் said...

2006 திரும்பாமல் இருந்தால் சரி.

Unknown said...

thanks

மோகன் கந்தசாமி said...

பதிவிற்கு எதிர் வினையாற்றுவது பதிவரின் மனநிலையை மாற்றுவதற்கு அல்ல. பதிவை படிப்பவர்களில் முடிவுகள் எதுவும் எடுக்காமல், அல்லது எடுக்க முடியாமல் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க உதவவே. பதிவரின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை அம்பலப் படுத்தி, மற்றவரை அவரது (பொய்)கருத்துக்களில் உடன்பாடு கொள்வதில் இருந்து தடுக்கவே. எனவே எதிர் வினையாற்றுவது மிக முக்கியம். குறிப்பாக வலைப்பூக்களில். சேது சமுத்திர திட்டம் பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்த என்னை ஒரு முடிவை நோக்கி நகர்த்தியது வலைப்பூக்களில் விரவிக்கிடந்த பதிவுகளும் எதிர்வினைகளுமே.

மங்களூர் சிவா said...

"சித்தாங்கங்களை" u mean சித்தாந்தங்களை?????

மங்களூர் சிவா said...

/
நான் பல நாட்களாக எழுத நினைத்து பதிவுலக அரசியலில் சிக்கி கொள்ள விரும்பாததால் எழுதாமல் விட்டது தான் இது. "இப்பொழுது ஏன் எழுதுகிறாய்? அரசியலில் சேர முயற்சியா?"
/

எஸ்க்கேப்பு!?!?

பிடிங்கடா சத்யாபிரியனை!!!!
:)))))

மங்களூர் சிவா said...

கருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க!!

:))))

கிரி said...

//பிரச்சனை எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், "என்னுடைய சார்பு நிலையே சரி. நீ எப்படி வேறு நிலை எடுக்கலாம்?" என்று நினைத்து அடுத்தவர் நிலையை மாற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் போது தான்//

சரியா சொன்னீங்க

//தமக்கு ஒரு சார்பு நிலை எடுக்க உரிமை இருப்பதை போல அடுத்தவர்களுக்கும் வேறொரு சார்பு நிலை எடுக்க உரிமை இருக்கிறது என்பதை பலர் புறிந்து கொண்டதாக தெரியவில்லை//

100% உண்மை

//அவ்வாறான நம்பிக்கையையெல்லாம் அவ்வளவு இலகுவாக வாக்கு வாதங்களினால் மாற்றி விட முடியாது. அப்படி இருக்க எதற்கு தேவையற்ற இத்தகைய வாக்கு வாதங்கள். சரி அத்தகைய வாக்கு வாதங்களினால் அடுத்தவர் நிலை மாற்றப்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. வாக்கு வாதத்தின் முடிவில் அவரவர் தத்தம் நிலையிலேயே இருக்கிறார்கள். பின் எதற்கு இது? இதனால் என்ன பயன்?//

என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

//இத்தகைய வாக்கு வாதங்களே ஒரு விதமான Ego - Alter Ego போட்டியினால் ஏற்படுவது தான். வாக்கு வாதத்தின் முடிவில் ஒரு சாராருடைய Ego பாதிக்கப்படும் போது மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர் வினை இன்னும் தீவிரமாக வருகிறது. சில நேரங்களில் அவை அநாகரீகமாகவும் வெளிப்படுகிறது//

கலக்கிட்டீங்க

//அவர் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்கிறாரா, அவரது அடுத்தடுத்த பதிவுகளை தவிருங்கள்.//

சரியான யோசனை மற்றும் தீர்வு

//அதை செய்வதை விட்டு விட்டு, அவரது வலைப்பூவை book mark செய்து அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர் வினை செய்து கொண்டிருந்தால் நாம் comedian ஆகிவிடுவோம்//

:-))

//அவ்வளவு தான் நான் கூற வந்தது. இதனால் எல்லாம் பதிவுலகம் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தத்தம் முறைகளிலேயே பதிவு எழுதிக்கொண்டும், எதிர் வினை ஆற்றிக் கொண்டும் இருக்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். அவ்வளவே//

சர வெடியா போட்டு நொறுக்கறீங்க போங்க.

//சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் இப்பொழுது பார்த்தால் பதிவுலக சூழல் மிகவும் நன்றாகவே இருக்கின்றது.//

எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சத்யப்ரியன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//மங்களூர் சிவா said...
கருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க!!
:))))//

ஹா ஹா ஹா ஹா ஹா

Athisha said...

நல்லா சொன்னீங்க நாக்க புடுங்கிக்கிற மாதிரி .....

இது போன்ற கருத்து மோதல்களை பார்த்தே ஒரு பயலும் பதிவெழுத வரமாட்டேன்றான்..

மீறி வந்தாலும்.....!!!

Kalaiyarasan said...

மோகன் கந்தசாமி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.

-கலையரசன்
http://kalaiy.blogspot.com

துளசி கோபால் said...

சரி சரி, இது உங்க முறையா?

சங்கை ஊதுவதற்கு:-)))))

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பதிவு...

SathyaPriyan said...

//
வடுவூர் குமார் said...
2006 திரும்பாமல் இருந்தால் சரி.
//
நிச்சயம் திரும்பாது என்றே நம்புவோம்.

//
mumu said...
thanks
//
Thank you.

//
மோகன் கந்தசாமி said...
பதிவிற்கு எதிர் வினையாற்றுவது பதிவரின் மனநிலையை மாற்றுவதற்கு அல்ல. பதிவை படிப்பவர்களில் முடிவுகள் எதுவும் எடுக்காமல், அல்லது எடுக்க முடியாமல் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க உதவவே. பதிவரின் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை அம்பலப் படுத்தி, மற்றவரை அவரது (பொய்)கருத்துக்களில் உடன்பாடு கொள்வதில் இருந்து தடுக்கவே. எனவே எதிர் வினையாற்றுவது மிக முக்கியம். குறிப்பாக வலைப்பூக்களில்.
//
மோகன் நான் கூற வந்ததை தெளிவு படுத்த தவறி விட்டேன் என்று நினைக்கிறேன். ஆரோக்கியமான விவாதங்கள் வேறு, எதிர் வினை
என்ற பயரில் தனி மனித தாக்குதல்களும் அநாகரீகமான விமர்சனங்களும் எழுவது வேறு. அதனை தான் நான் குறிப்பிட்டேன்.

//
சேது சமுத்திர திட்டம் பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்த என்னை ஒரு முடிவை நோக்கி நகர்த்தியது வலைப்பூக்களில் விரவிக்கிடந்த பதிவுகளும் எதிர்வினைகளுமே.
//
கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை போன்று எத்தனையோ குழப்பமான விழயங்களை எனக்கு தெளிவு படுத்தியது தமிழ் பதிவுலகே.

//
மங்களூர் சிவா said...
"சித்தாங்கங்களை" u mean சித்தாந்தங்களை?????
//
திருத்தி விட்டேன் சிவா. பிழையை சுட்டியதற்கு நன்றி.

//
பிடிங்கடா சத்யாபிரியனை!!!!
:)))))
//
என்னிடம் ஒன்னும் தேறாது சிவா. கடன் தான் இருக்கிறது :-)

//
கருத்து கந்தசாமி வாழ்க அப்படினு வந்து 4 பேர் கமெண்டு போடப்போறாங்க!!
//
வேணாங்க. "கருத்து தளபதி" ன்னு பட்டம் கொடுத்தா வேணா வாங்கிக்கறேன்.

SathyaPriyan said...

//
கிரி said...
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சத்யப்ரியன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி கிரி.

//
அதிஷா said...
நல்லா சொன்னீங்க நாக்க புடுங்கிக்கிற மாதிரி .....

இது போன்ற கருத்து மோதல்களை பார்த்தே ஒரு பயலும் பதிவெழுத வரமாட்டேன்றான்..

மீறி வந்தாலும்.....!!!
//
நன்றி அதிஷா.

//
KALAIYARASAN said...
எல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.
//
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒரு அரைகுறை ஆள் தான் நானும். பதிவுலகே பல நேரங்களில் என்னை தெளிவு படுத்துகிறது.

//
துளசி கோபால் said...
சரி சரி, இது உங்க முறையா?

சங்கை ஊதுவதற்கு:-)))))
//
ஏன் டீச்சர் அவ்வளவு பெரிய ஆளா நான்?

//
தமிழன்... said...
நல்ல பதிவு...
//
நன்றி தமிழன்.

Kalaiyarasan said...

SathyaPriyan said...
//
//
KALAIYARASAN said...
எல்லோருக்கும் தமக்கென அரசியல் சார்பு இருந்த போதிலும், ஒரு சிலர் மட்டுமே அதைப்பற்றிய தெளிவுடன் இருக்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு தாம் கதைப்பது அரசியல் என்ற விடயம் கூட தெரியாது.
//
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒரு அரைகுறை ஆள் தான் நானும். பதிவுலகே பல நேரங்களில் என்னை தெளிவு படுத்துகிறது.

//
நன்றி, சத்யப்பிரியன், உங்களுடைய நேர்மையை மெச்சுகிறேன். நான் கூறிய பருத்தி பலர் வீம்பிற்கு ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் போடும் "அரசியல் - அப்பாவி" வேடம் கலைந்து விடும் என்ற பயமாக இருக்கலாம்.

நல்லதந்தி said...

நல்லபதிவு!.வருங்காலத்தை எண்ணி அப்போதே சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது! :)

Thekkikattan|தெகா said...

சத்யப்ரியன்,

மோகன் கந்தசாமி கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அதுவே உண்மையும் கூட. அரைகுறைகள் தனக்குத் தெரிந்ததை இங்கு முன் வைக்கும் பொழுது அதற்கு நாகரீகமான எதிர் கருத்துக்கள் வரும் பொழுது, அந்த வயதிற்கும், புரிவிற்கும், தெளிவிற்கும் எதிர் கருத்துக்களில் உள்ள நியாயம் புரியாமல் போனால் கூட காலம் கடந்து "பிடித்த முயல்" நிலையிலிருந்தவர் மீண்டும் வந்த பாதையை திரும்பிப் பார்த்தால்(அதாவது தான் எழுதிய பதிவுகளையே மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்கும் நிலையில்...) எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்பதற்கு ஒரு அளவுகோலாக அமையலாம்.

மனித வளர்ச்சி மாறிக் கொண்டே இருப்பது, வெளி அளவிற்கு பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது போலவே தெரிந்தாலும், உள்ளளவில் மாற்றம் நடக்க வாய்ப்பு அதிகமே.

ஒத்துக் கொள்கிறேன், வரட்டு பிடிவாதகாரர்களுக்கு இந் நிலையில் தான் சொல்வது சரியாகவே தோன்றும், அவர்களவில் தோல் எந்தளவிற்கு சூட்டைத் தாங்குமோ அந்தளவிற்கு...

ஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றம் வலையுலகில் சொழித்தோங்க, வாழ்த்துக்கள்!!

கோவை விஜய் said...

நல்ல பதிவாளர்கள் நற் பணி ஆற்றவேண்டும் எனும் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது

SathyaPriyan said...

//
KALAIYARASAN said...
நன்றி, சத்யப்பிரியன், உங்களுடைய நேர்மையை மெச்சுகிறேன்.
//
நேர்மையும் உண்மையும் பல நேரங்களில் நமக்கு கை கொடுக்கும். இதனை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.

உண்மை பேசுபவனை விட பொய் பேசுபவனுக்கு அசாத்தியமான நியாபக சக்தியும், திறமையும் வேண்டும். அதெல்லாம்ம் எனக்கு இல்லாததால் உண்மை பேசுவதே எனக்கு வசதியாக உள்ளது.

எனது சுயநலமே காரணம் :-)

//
நல்லதந்தி said...
நல்லபதிவு!.வருங்காலத்தை எண்ணி அப்போதே சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது! :)
//
வருகைக்கு நன்றி நல்லதந்தி.

//
Thekkikattan|தெகா said...
ஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றம் வலையுலகில் சொழித்தோங்க, வாழ்த்துக்கள்!!
//
தெகா விளக்கமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். அதுவே எனது விருப்பமும் ஆகும்.

//
கோவை விஜய் said...
நல்ல பதிவாளர்கள் நற் பணி ஆற்றவேண்டும் எனும் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது
//
நன்றி விஜய்.